வேழாம்பல் தவம் : தர்மு பிரசாத்தின் பதில்கள்

வேழாம்பல் தவம் செவ்வி தொடர்பில் ப. பார்த்தீ அனுப்பியிருந்த கேள்விகளுக்கு தர்மு பிரசாத் தன் தளத்தில் பதில்களை அளித்திருக்கிறார். 

கிரிசாந்

*

“…அதனால் இங்கே எழுத்தாளன் ஒரு பொருட்டே இல்லை. அவனது சொற்கள் காதுகொடுத்துக் கேட்கப்படுவதில்லை. அது எப்போதாவது, ஒரு நல்ல எழுத்தாளனை இனம் கண்டு அவனைத் தன் பண்பாட்டின் முகமாக பெருமையுடன் முன்வைத்திருக்கிறதா? தமிழகச் சூழலைக் கவனித்துப் பாருங்கள். பாரதி, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி என அவர்களின் இலக்கிய முகங்களாக இருப்பவர்களின் பண்பாட்டு இடம் சமூகத்தில் எவ்வளவு பெரியது. ஒவ்வொரு வருடமும் அவர்களைப் பற்றிய நூல்கள், எழுத்துகள் உரையாடல்கள் பல தளங்களிலும் நிகழ்கின்றன. அவர்கள் எப்போதும் இலக்கியத்தின் மைய உரையாடலில் இருக்கிறார்கள். உதிரியான பல நிகழ்வுகள். தனிநபர் முயற்சி என்று பல வழிகளிலும் அவர்கள் விரிவாகப் படிக்கப்படுகிறார்கள். விவாதிக்கப் படுகிறார்கள். தமிழகப் பண்பாட்டின் முகங்களாக ஏற்பும் மறுப்புமான உரையாடலில் எப்போதும் அவர்கள் சொற்கள் இருக்கின்றன. மேற்கோள் காட்டப்படுகின்றன. இத்தகைய இடம் முதன்மைப் படைப்பாளிகளுக்கு மட்டும் என்றல்ல. படைப்பூக்கத்தின் அடுத்த அடுத்த படிகளில் இருக்கும் படைப்பாளிகளுக்கும் நடக்கிறது. அவர்களது இடங்கள் வரையறுக்கப் படுகின்றன. அவர்களின் படைப்புகள் குறித்த கவனமும் உரையாடல்களும் நிகழ்கின்றன. அப்ப அப்ப அவர்களின் வரிசைகள் குலைத்து அடுக்கப்படுகின்றன. பலரும் புதிய ஒளியில் மறு கண்டுபிடிக்கப் படுகிறார்கள். ப.சிங்காரம் எழுந்து வந்தது போல. ஆனால் அத்தகைய செயல்களும் கூடப் போதவில்லை என்பதே அங்கிருந்து வரும் கோரிக்கை. நமது நிலை இன்னும் பாதாளம். அதன் கீழ் ஒன்றே இல்லை எனும் அளவிற்குப் பாதாளம்.

ஒரு அரசியல் கருத்து, சமூகப் பிரச்சனை குறித்து பல் துறைசார் விவாதங்கள் நிகழ்கின்றன. நமக்கு அப்படி பொதுச் சூழலே விவாத மரபே இல்லை. நம் ஆள், நமக்கு ஆதரவானர், நமது அரசாங்கம், நமது இயக்கம் என்பது மட்டுமே எங்களுடைய கணக்கு. இப்போது கூடப் பாருங்கள் இது கே.டானியலின் நூற்றாண்டு. அவரளவுக்கு யாழ்ப்பாணப் பண்பாட்டுக் கூறுகளை எழுதியெடுத்த இன்னொருத்தர் எஸ்.பொ. ஆனால் இந்த இரட்டையர்களுக்கு  எங்காவது ஒரு சிறு சலனம், நினைவு கூரல் நிகழ்ந்திருக்கிறதா? அவரது மகன் நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதைக் கேட்கவில்லை. பொது சமூகத்தைக் கேட்கிறேன். பொதுச் சமூகத்தால்? பிறரால் எங்காவது நம் பண்பாட்டின் அடையாளமாக முன்வைக்கப்படுகிறார்களா? இல்லை எதிர்காலத்தில் வைக்கப்படுவார்களா? இல்லை ஒரு போதும் இல்லை. 

இலங்கை அரசின் புத்தகத் தடையைக் கண்டித்து நேரடி ஆர்ப்பாட்டம் யாழில் பஸ் நிலையம் முன் நிகழ்ந்தது. அதற்கு இலக்கியத்திற்கு வெளியில் இருந்து வந்த ஒரே ஒருவர் அருண் சித்தார்த்தன் மட்டுமே தான். அவருக்கு மட்டுமே அரசியலுக்கு அப்பாலான பண்பாட்டுச் செயல்களின் மீது கரிசனை உண்டு எனப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் சமகால யாழ்ப்பாண நிலைமை. நமக்கு நல்லூர் கந்தன் தான் அடையாளம் என்று வெளிநாடுகளில் இருந்து படையெடுத்துச் செல்லும் கும்பலை என்ன செய்வது? அதை பண்பாட்டுச் செயற்பாடு என்று நம்பும் அசட்டுக் கூட்டத்தை யார் நோவது? சரி அடுத்த கட்டம் கொஞ்சம் வாசிப்பில், எழுத்தில் இருக்கும் யாராவது எதாவது செய்திருக்கிறார்களா, சிறு குறிப்பு எதுவும் இல்லை.  இது எத்தனை பெரிய அநீதி. அரசு புத்தகங்களை தடுப்பது மிக அடிப்படைக் கருத்துச் சுதந்திரப்  பிரச்சனை. சர்வதேச சமூகம், சிந்தனையாளர் எல்லாம்  சேர்ந்து எதிர்க்க வேண்டியது. இதனைக் குறித்து பொதுவெளியில் தன்னுடைய கோணத்தை, சிந்தனையை எழுதியவர்கள் என ஒருவரையாவது சுட்ட முடியுமா? சிங்களவர்கள் திரண்டிருக்கும் அளவிற்குக் கூட தமிழ்ச் சமூகத்தில் புத்தகத் தடை பொருட்படுத்தப்படவில்லை. ஏதோ நல்ல அரசின் சிறிய நிர்வாகப் பிரச்சினையாக அல்லது எழுத்தாளர்களின் மலினமான விளம்பர உத்தியாக விளங்கிக் கொள்ளும் சிறுமதியர்களை என்ன செய்வது?..”

தர்மு பிரசாத்

தர்மு பிரசாத் வழங்கிய முழுமையான பதில்களுக்கான இணைப்பு : வேழாம்பல் தவம் : சில பதில்கள்

வேழாம்பல் தவம் – மேலும் சில கேள்விகள் – கிரிசாந்

வேழாம்பல் தவம் – செவ்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *