வரலாற்று நாவல் குறித்த என் சில குழப்பங்களை ஜெயமோகனுக்கு எழுதியிருந்தேன். விரிவாக (மோகனாங்கி – ஒரு வரலாற்று நாவலா?) பதிலளித்திருக்கிறார். கீழே எனது கேள்வியின் ஒரு பகுதி. அதன் கீழே முழுமையான கேள்வி – பதிலின் இணைப்பு.
*
“மோகனாங்கியை தமிழின் முதல் வரலாற்று நாவல் என அதன் வெளியீட்டாளர்களும் தமிழ் விக்கி பதிவின் சில குறிப்புகளிலும், உங்களது சில பதிவுகளிலும் வாசித்தேன். நாவலையும் வாசித்துப் பார்த்தேன்.
முதல் முயற்சி என்பதற்கு அப்பால் அதை வரலாற்று நாவல் என மதிப்பிட்டு இன்று வாசிக்க என்ன தேவையிருக்கிறது எனத் தோன்றியது. கல்விப்புலம் சார்ந்த ஆய்வாளர்களோ அல்லது அதன் வெளியீட்டாளர்களோ மோகனாங்கியின் இடம் தொடர்பில் மிகையான மதிப்புக் கொண்டிருக்கலாம். அவர்கள் எளிய சிறு அட்டைக் காலைத் தூக்கி வரலாற்று நாவல் எனும் பெரிய லாடத்திற்குள் நுழைக்க முயலலாம். ஆனால் ரசனை விமர்சனம் சார்ந்த தரப்பாகிய நீங்களும் அவர்களது மதிப்பீட்டில் உருவாகியிருக்கும் முதல் வரலாற்று நாவல் எனும் கருத்துடன் உடன்படுகிறீர்களா?
என் வாசிப்பில் மோகனாங்கி ஒரு எளிய ராஜா – ராணிக் கதை. மேடை நாடகங்களின் மனப்பதிவை அளித்தது.
முதன் முதலாக வரலாற்றின் சில தகவல்களை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட கதையாக உரைநடையில் அச்சில் வந்த ஒரு எளிய கதைக்கு வரலாற்று நாவல் எனும் இடத்தை அளிப்பது சரியா?
புறச்சித்திரமாக அதன் காலகட்டத்தின் எந்த அம்சங்களும் வரலாற்று புனைவுக்கானவையாக கருத முடியவில்லை. ஆனால் வெளியீட்டாளர்கள் மோகனாங்கி மறைக்கப்பட்டது சதித்திட்டம் என்பது போலச் சித்தரிக்கிறார்கள்.
இரண்டு வகையில் அவர்கள் தங்கள் முன்னுரைகளில் அதை வாதிடுகிறார்கள். ஒன்று, அது ஈழம், குறிப்பாக திருகோணமலையில் இருந்து வந்ததனாலேயே அப்படி நிகழ்ந்தது என்று கருதுகிறார்கள். யாழ்ப்பாணம் அதைக் கண்டு கொள்ளவில்லை என்பது மேலும் அதற்குச் சான்றாக சொல்கிறார்கள்.
ஆனால் அந்தக் கதையில் இருக்கும் எளிமையாலும் பொருட்டற்ற வாழ்க்கைப் பார்வையினாலும் இன்று அதற்கு எந்த மதிப்பும் இல்லையென்றே நான் கருதுகிறேன். இதில், நாயக்கர் கால வரலாற்றை அறிய மாணவர்கள் இதை வாசிக்க வேண்டுமென்று வெளியீட்டாளர்கள் பரிந்துரையும் செய்கிறார்கள். இந்தக் கதை அதிலிருக்கும் நாயக்கர் எனும் பின்னொட்டுகளை எடுத்துவிட்டால் எந்த அரச கதையுடனும் ஒட்டிவிடக் கூடியது. அல்லது அரச கதையென்று பொது வாசிப்பிற்கு வைக்கும் “டெம்ளெட்” வகையறாவிற்குள் வரக்கூடியது.

இரண்டாவதாக அதை ஒரு பார்ப்பன சதியென முன்வைக்கிறார்கள். அதில் பார்ப்பனர்கள் பற்றிய விமர்சனங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். சரவணமுத்துப்பிள்ளைக்கே அது இருந்ததா எனத் தெரியவில்லை. அவர் கதையிலுள்ள ராசாவை உலக மகா யோக்கியனாகவும் நல்ல பிள்ளையாகவும் சித்தரிக்கிறார். மோகனாங்கியை ஒரு எளிய அரசியாகவே சித்தரிக்கிறார். தான் யாரை மணம் புரிய வேண்டுமென்ற தீர்மானம் எடுப்பதே பெண்ணியக் கருத்தென நினைக்கிறார்கள். இந்த வகை பார்வைகளை அந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் தங்களது ஊரின் பெருமைகளை மிகையாக்கி காட்ட உருப்பெருப்பிப்பதை புரிந்து கொள்கிறேன்..”
கிரிசாந்

