ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் அடங்கிய பொதிகள் தபால் வழியாக இலங்கைக்கு வரும்போது, இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் சில பொதிகள் தடுத்து வைக்கப்படுகின்றன. அந்த நூல்களில் உள்ள சில சொற்கள் அல்லது அட்டைப்படம் போன்றவை அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுவதே இதற்கான காரணமாகச் சுங்க அலுவலர்களால் கூறப்படுகிறது. நூல்களை மீளப் பெறுவதற்குப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை எனச் சுங்க அலுவலர்கள் தெரிவித்து, நூல் பிரதிகளைப் பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனைக்கு அனுப்புகிறார்கள். ஆனால், அவ்வாறு அனுப்பப்படும் நூல்கள் பாதுகாப்பு அமைச்சால் பரிசீலிக்கப்பட்டு பதில் வழங்கப்படாமலும், வேறெந்த நடவடிக்கை இல்லாமலும் நிரந்தரமாகக் கிடப்பில் போடப்படுகின்றன. தடுத்துவைக்கப்பட்ட நூல்கள் உரியவர்களிடம் ஒருபோதும் திரும்ப வந்து சேர்வதில்லை.

அரச இயந்திரத்தின் இந்த அநீதியான, வெளிப்படைத்தன்மையற்ற நடைமுறைக்கு எதிராகப் பல்வேறு முறையீடுகளும் கவனயீர்ப்புகளும் முன்னெடுக்கப்பட்டும், அரசிடமிருந்து பொறுப்பான பதில் ஏதும் கிடைக்கவில்லை. தடுத்து வைக்கப்பட்ட நூல்கள் விடுவிக்கப்படவில்லை; அவற்றை விடுவிப்பதற்கான தெளிவான வழிமுறையும் அரசால் எங்கும் வழங்கப்படவில்லை.
இதுவரை அப்படித் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூல்களில் தீபச்செல்வனின் ‘எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்’, ‘இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்தான்’, ஷோபாசக்தியின் ‘1990 : லைடன்தீவு – மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும்’, டிலுக்சன் மோகனின் ‘படுபட்சி’, இரயாகரனின் ‘அரசியல் அநாதைகள்’ ஆகிய நூல்கள் அடங்கும். அண்மையில் வெளிவந்த எழுத்தாளர் யதார்த்தனின் ‘தோறை’ நாவலும் சுங்கத் திணைக்களத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.
தீபச்செல்வன் தனது நூல்களை விடுவிக்க ஏழு மாதங்களாகப் பல்வேறு நடைமுறைகளூடாக அலைக்கழிக்கப்பட்டு வருகிறார். அந்த நூல்களை விடுவிக்குமாறு ‘இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு’ பரிந்துரைத்துள்ளது. ஆனால் அரசிடம் தெளிவான பதில் ஏதும் இல்லை. நூல்கள் விடுவிக்கப்படவில்லை.

யாழ்ப்பாணச் சுங்கத் திணைக்களம் நூல்களைத் தடுத்து வைக்கும்போது, அரசியல் பின்னணியைக் கொண்ட நூல்கள் குறிவைக்கப்படுகின்றன. ‘போர்’, ‘இராணுவம்’, ‘துப்பாக்கி’, ‘புலிகள்’ ‘புதைகுழி’ போன்ற சொற்களைக் கண்டதும் அவர்கள் அந்த நூல்களைத் தடுத்துவைக்கிறார்கள். சில சொற்கள், அட்டைப்படம் என்பவற்றைக் கொண்டு புத்தகங்கள் மொத்தமாகத் தடுக்கப்படுவது அரசின் பொறுப்பின்மையையும், எழுத்தாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியையுமே வெளிப்படுத்துகிறது. இத்தகைய பொறுப்பற்ற அநீதியான தடுத்து வைப்பு நடவடிக்கை எழுத்துச் சுதந்திரம் மீதான அரசின் நேரடியான அடக்குமுறையே.
ஒரு ஜனநாயக அரசு, நூலொன்றைத் தடை செய்வது அரிதிலும் அரிதாக நிகழக்கூடியது. ஆனால், அவ்வாறு அரசு தடைசெய்தால் அதை எதிர் கொள்வதற்கான உள்ளூர், சர்வதேசச் சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. அந்தத் தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கும், தடையை எதிர்த்துப் போராடுவதற்கும் தெளிவான வழிகள் இருக்கின்றன.
ஆனால், இங்கே பாதுகாப்பு அமைச்சகம் பொறுப்பின்றியும், அலட்சியத்துடனும் நூல்களைத் தடுத்து வைக்கின்றது. முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது, அலைக்கழிப்பது என எழுத்தாளரின்மீது மனவுளைச்சலும் பொருளாதாரச் சுமையும் ஏற்றப்படுகின்றன.
குறிப்பிடப்பட்ட நூல்கள் ‘இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானவை’ என்றோ, ‘பயங்கரவாதத்தைத் தூண்டுகின்றன’ என்றோ தெளிவாகக் குறிப்பிட்டு, விளக்கி, அவற்றைத் தடை செய்ததாக அரசோ, பாதுகாப்பு அமைச்சகமோ எங்கும் இதுவரை அறிவிக்கவில்லை. அதேவேளையில், அந்த நூல்களை மீட்க எந்த வழிமுறைகளுமற்று, அவை காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
ஒரு ஜனநாயக அரசின் அடிப்படைப் பண்பு கருத்துச் சுதந்திரத்தையும் எழுத்துச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதிலேயே தங்கியிருக்கிறது. கருத்துகளையும், எழுத்துகளையும் சுதந்திரமாக வெளியிடக் கூடிய வெளியை உருவாக்கிக் கொடுப்பது அதன் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. அது ஒருபோதும் பொறுப்பின்றியும், அலட்சியத்துடனும், மீட்க வழிகள் இன்றியும் நூல்களைத் தடுத்து வைக்கக்கூடாது.
இந்தத் தடையானது வெறும் நிர்வாகச் சிக்கல் அல்லது அலுவலர்களின் பொறுப்பற்ற செயல் அல்ல. அலுவலர்கள் அரசின் வழிகாட்டலில் இயக்குகிறார்கள். அரசே இந்த அநீதியான நடைமுறைக்குப் பொறுப்பு ஏற்கவேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ள நூல்களை உடனடியாக விடுவிக்கவும், இத்தகைய தடுப்புகள் மீண்டும் நிகழாத வகையில் வெளிப்படையான மற்றும் நியாயமான நடைமுறையை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தக் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டிருக்கும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
கூட்டறிக்கையின் பிரதிகள் :
இலங்கை ஜனாதிபதி.
இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்.
இலங்கை சுங்கத் திணைக்களம்.
ஊடகங்கள்.
கையொப்பங்கள்
- கருணாகரன்
- ஷோபா சக்தி
- சேரன்
- சயந்தன்
- பேராசிரியர் சி. ஜெயசங்கர்
- மல்லியப்பு சந்தி திலகர்
- ஓய்வு பெற்ற பேராசிரியர். சுமதி சிவமோகன்
- பா. அ. ஜயகரன்
- தீபச்செல்வன்
- தமிழ் நதி
- என். எம். சிராஜ் மஷூர்
- த. அகிலன்
- ஹரி ராஜலட்சுமி
- தாமரைச் செல்வி
- பானுபாரதி
- எஸ். ஏ. உதயன்
- தாட்சாயணி
- இயல்வாணன்
- ச. மணிசேகரன்
- என். சரவணன்
- வேலணையூர் தாஸ்
- வடகோவை வரதராஜன்
- யதார்த்தன்
- மெலிஞ்சி முத்தன்
- லெ. முருகபூபதி
- தர்மு பிரசாத்
- அசுரா நாதன்
- மிஹாத்
- கிரிசாந்
- அனுஷா சிவலிங்கம்
- ரயாகரன்
- செ. அன்புராசா
- சு. தவச்செல்வன்
- தி. லலிதகோபன்
- நவரட்ணம் சத்தியவேந்தன்
- நோயல் நடேசன்
- கு. றஜீவன்
- ம.சாந்தி
- கலாநிதி. தேனருவி மாரிமுத்து
- மு. ராதாகிருஷ்ணன்
- எஸ். கிருஷ்ணமூர்த்தி
- வி. உதேஷ்
- யுகசேனன்
- விவேகனந்தனூர் சதீஸ்
- ஜெயக்குமரன் சந்திரசேகரம்
- நவராசா பிரதீப்
- க. விஜயசேகரன்
- கலாநிதி ரமேஸ்
- ராகவன்
- ப. தயாளன்
- நவமகன் கேதீஸ்
- மு. தமிழ்ச்செல்வன்
- குமணன் கணபதிப்பிள்ளை
- யாத்திரீகன்
- முல்லை கோணேஸ்
- வசிகரன்
- ரஜிதா
- க. வாசுதேவன்
- வை. ஜெயமுருகன்
- விமலா வேல்தாஸ்
- அழ. பகீரதன்
- வேணி கிருபாகரன்
- தேவதாஸ்
- கணபதி சர்வானந்தா
- இளவாலை விஜயேந்திரன்
- அமரதாஸ்
- கஸ்ரோ பொன்னுத்துரை
- திருக்கோவில் கவியுவன்
- தானா விஷ்ணு
- தெ. மதுசூதனன்
- தனுஜன்
- கிருஸ்ணகுமார்
- பொ. கருணாகரமூர்த்தி
- எம். பெளசர்
- ஜவாத் மரைக்காயர்
- ப.தெய்வீகன்
- ரஞ்சகுமார்
- பி. கெளதமன்
- பத்திநாதன் பர்ணாந்து
- ஸப்றி
- செல்வராஜா ராஜசேகர்
- பிரிந்தா குலசிங்கம்
- சதீஷ்குமார் சீனிவாசன்
- கற்சுறா
- பத்மநாதன் பார்த்தீபன்
- நெடுந்தீவு நேதாமோகன்
- றஷ்மி
- தர்மினி
- ஹிம்சானா
- உமா வரதராஜன்
- கறுப்பி சுமதி
- சி. கதன்
- எம். ஆர்.ஸ்டாலின் ஞானம்
- ஆதி பார்த்திபன்
- கமலாபரன் பரராஜசேகரன்
- ஒளவை விக்னேஸ்வரன்
- சித்தாந்தன்
- ஏ.பி. எம். இத்ரீஸ்
- கலாவதி கலைமகள்
- சந்திரசேகர்
- க. பரணீதரன்
- வி.ரி.இளங்கோவன்
- நிரூபா ஆயிலியம்
- வ.ஐ.ச.ஜெயபாலன்
- அனோஜன் பாலகிருஷ்ணன்
- வேல் நந்தன்
- வரதராஜன் மரியாம்பிள்ளை

