Arun Ambalavanar அவர்களுக்கு,
நீங்கள் பொதுவில் எழுதியதால், பொதுவில் பதில்.
நான் ஐரோப்பாவில் இருப்பது தற்செயலானது. அந்தச் சூழலில், ஓர் இலக்கிய நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதில் கலந்துகொள்கிறேன். இதற்குப் பின்னால் நீங்கள் கற்பிக்கும் எந்த ரகசிய நிகழ்ச்சி நிரலும் இல்லை. யாருக்கும் நற்சான்றிதழ் வழங்குவதற்காகவோ, யாருடைய கடந்தகாலத்தையும் கழுவித் தூய்மைப்படுத்துவதற்காகவோ நான் இந்த மேடையில் ஏறவில்லை.
ஒரு இலக்கிய நிகழ்வில் பங்கேற்பதற்கு முன், அதன் ஏற்பாட்டாளர்களின் வாழ்க்கை வரலாறையும், அவர்கள்மீது முன்வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் விசாரித்து, அதன் பிறகே ஒரு பெண் மேடையேற வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? அப்படியானால், பெண்களின் பங்கேற்பு குறித்த உங்கள் அளவுகோல்கள் என்ன என்பதை முதலில் விளக்குங்கள்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த குற்றச்சாட்டுகள் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் குரல்கள் மதிக்கப்பட வேண்டும். அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஒரு நபர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதே நிகழ்வில் பங்கேற்கும் மற்ற பெண்களையும் விசாரணைக் கூண்டில் நிறுத்துவது எந்த வகையான அறம்?
எல்லாவற்றையும்விட அருவருப்பானது, பெண்கள் பங்கேற்கும் ஓர் இலக்கிய நிகழ்வை “Strip Tease விழா” என்று வர்ணிப்பது. பாலியல் வன்முறைக்கு எதிராகப் பேசுவதாகச் சொல்லிக்கொண்டு, பெண்களின் பங்கேற்பையே பாலியல் இழிவுச் சொல்லாடலால் கொச்சைப்படுத்துவது என்ன வகையான பெண்ணியம்? பெண்களின் உடலையும் கண்ணியத்தையும் இழிவுபடுத்தும் மொழியைப் பயன்படுத்திவிட்டு, பெண்களின் உரிமைக்காகப் பேசுவதாகச் சொல்ல முடியுமா?
என் முடிவுகளை எடுப்பதற்கு எனக்கு மனசாட்சியும் சிந்திக்கும் திறனும் இருக்கின்றன. யாருடைய அரசியல் அல்லது இலக்கிய நிலைப்பாட்டையும் கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதேபோல, நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் என்னுடைய ஒவ்வொரு பங்கேற்புக்கும் உங்களிடம் விளக்கமளிக்க வேண்டிய கடமையும் எனக்கில்லை.

ஒரு பெண் எந்த மேடையில் ஏற வேண்டும் என்பதைவிட, அந்த மேடையில் அவள் என்ன பேசுகிறாள் என்பதைக் கேளுங்கள். அவளுடைய கருத்தை மறுக்கலாம், விவாதத்துக்கு உட்படுத்தலாம். ஆனால் அவளைக் கொச்சைப்படுத்தி, அவளுடைய கண்ணியத்தைச் சிதைக்க உங்களுக்கு உரிமை இல்லை.
பெண்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுவது என்பது பெண்களைத் தங்கள் விருப்பப்படி வாழவும், சிந்திக்கவும், முடிவெடுக்கவும் அனுமதிப்பதும்கூடத்தான்.
என் பங்கேற்பு என் தேர்வு. அதற்கு நீங்கள் கற்பிக்கும் அர்த்தம் என்னுடையதல்ல.
காயத்திரி

