அசட்டு நூல்கள் எனும் ஈழத்தமிழ் ஊழல்

அண்மையில் நண்பரொருவர் வன்னியூர் செந்தூரன் என்பவரின் வரலாற்று நூல்களை இருநூறு புத்தகங்கள் வாங்கப் போகிறேன், என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்டார். வன்னியூர் செந்தூரன் எனும் பெயரில் ஒருவர் இருக்கிறார் எனத் தெரியும். சில புத்தகங்களை எழுதியிருக்கிறார். ஆனால் வெகுசனத் தளம் சார்ந்த எழுத்தாளர். தீவிர அறிவு மற்றும் இலக்கியம் பற்றிய உரையாடல்களிலோ விவாதங்களிலோ பொருட்படுத்தத்தக்க ஒருவர் அல்ல. வைரமுத்து வகையறாக்களின் போட்டோ கொப்பி அவர். அவரது முகநூலைப் போய் பார்த்தேன்.

அவரது ஈழத்தமிழர் வரலாறு எனும் நூல் இவ்வருடம் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் விருது பெற்றதென ஒவ்வொரு பதிவிலும் எச்சில் போட்டு ஒட்டி ஒட்டி எழுதியிருந்தார். அவரது நூல் பற்றிய எல்லாப் பதிவுகளிலும் கலை இளவரசன், தேசியக் கவிஞர், முனைவர் என அவரது தோள்கள் வலிக்குமளவு தூக்க முடியாத அளவு பட்டங்கள் இருக்கின்றன. பாவம், அவற்றையும் சுமந்து கொண்டு நம் அசட்டுத் திணைக்களங்கள் அறிவீனமாக அளிக்கும் புழுக்கை விருதுகளையும் சேர்த்து காவியபடி, அடிக்கிற வெக்கைக்கு எல்லாக் கூட்டங்களுக்கும் கோர்ட், டை சகிதம் சென்று மாணவர்களை ஊக்குவிக்கும் பேச்சுகளை பேசுகிறார். 

அவரது பேச்சுகளையும் அவரைப் பற்றிய பேச்சுகளையும் கேட்டேன். அவர் ஒரு வரலாற்று ஆய்வாளர் என பல பாடசாலை அதிபர்கள் சொல்கிறார்கள். அதை அவர்கள் முகநூல் வாயிலாக அறிகிறார்கள். அவர்கள் அறிந்த முகநூல் பதிவென்பது சாட்சாத் நம் வன்னியூர் செந்தூரனே எழுதியவை. அவரது உலகம் அது. அவர் அங்கு அவரை அனுரவாகக் கூடச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் வாசிப்பென்றால் சுக்கா மிளகா எனக் கேட்கும் நம் சமூகம், அவரது ஹீரோயிட்டிக் படங்களுக்கும் பட்டிமன்றத் தனமான பாமரப் பேச்சுகளுக்கும் விசில் அடிக்கிறது. அது கூட அவரவர் அறிவு மட்டமென விட்டுவிடலாம். ஆனால் மாணவர்களுக்கு இவர் எழுதுவது வரலாறு என்றும், இவர் ஒரு சிந்தனையாளர் என்றும் செல்வது போல அயோக்கியத்தனமான செயல் வேறில்லை. ஏற்கெனவே அடுத்த தலைமுறையில் பெரும்பகுதியினர் வாசிப்புக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். ரீல்ஸ் அறிஞர்களாக திகழ்கிறார்கள். 

அண்மையில் இன்னொருவரின் பாடசாலை உரையையும் பார்த்தேன். VK கரிகாலன் எனும் வாலிபர். மதன் கெளரி வகையறா. இணையத்தில் தேடிய தகவல்களை திரட்டி தொகுப்பாக்கி அதை வீடியோவாக முகநூலில் பேசி அதில் வருமானமீட்டுபவர். அதில் குறையில்லை. ஆனால் ஏதோ ஒரு பாடசாலை அவரை விருந்தினராக அழைத்து மாணவர்களை ஊக்கப்படுத்த பேச வைக்கிறார்கள். கல்விச் சமூகமென்று சொல்லி ஒன்று இங்கு இருக்கிறது. அது சேற்றில் பன்றிக் கூட்டமென முகநூலிலேயே வாழ்கிறது. அதற்கு அப்பால் நிகழும் அறிவுச் செயற்பாடுகளை எவரும் அறிவதில்லை. அந்த வாலிபர் ஒரு சிந்தனையாளரோ கற்றவரோ அல்ல. அவர் ஒரு தகவல் திரட்டி, ஒரு தொகுப்பாளர். அதுவும் வெகுசனத்தை தீவிர உளநிலையிலேயே வைத்திருக்க வேண்டிய தொனியில் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் வயிறு அவர் பாடு. அதற்கே அந்தக் கூப்பாடு. ஆனால் மாணவர்களுக்கு அத்தகைய முகநூல் இன்புளுவென்சர்கள், வெட்டிப் பிரபலங்கள் முன்மாதிரியாக ஆகுவது தமிழ்நாட்டில் தற்குறிகள் வாக்கு பலம் அடைந்ததைப் போன்ற எதிர்காலத்தை நோக்கியே நம்மை நகர்த்தும். ஏற்கெனவே பெரும்பகுதி மாணவர்கள் ஆசிரியர்களையும் கல்விச் சூழலையும் மதிப்பதில்லை. அறமோ விழுமியமோ தெரிவதில்லை. நான் சமீபமாக அவதானிக்கும் ஒன்றுள்ளது. இன்றுள்ள இளம் தலைமுறை, மூத்தவரை மதிப்பதை மிக வேகமாக இழந்து வருகிறது. மூத்தோர் சொல்லை விட இந்த முகநூல் அசடர்களின் குரலை இளம் தலைமுறை கேட்கிறது. இந்த அசடர்களுக்கோ வாழ்க்கையென்றால் என்ன, அறிவென்றால் என்னவென வடக்கும் கிழக்கும் தெரியாது. 

வன்னியூர் செந்தூரனின் நூல்களை வாங்கப் போகிறேன் எனச் சொன்ன நண்பரிடம் அதை விட முக்கியமாக அவர்கள் வாங்க வேண்டிய நூல்களின் பட்டியலை அளித்தேன். வரலாறு தான் வாங்கிக் கொடுக்கப் போகிறேன் என்றால், மு. திருநாவுக்கரசுவின் இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படைகள், முருகர் குணசிங்கத்தின் இலங்கையில் தமிழர், கா. இந்திரபாலாவின் நூல்கள், பொ. இரகுபதியின் நூல்கள், குமாரி ஜெயவர்த்தனவின் நூல்கள் என நீண்ட பட்டியல் உண்டு. அண்மையில் வெளிவந்த மு. மயூரநாதனின் யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு, பண்பாட்டு அறிவை வளர்த்துக் கொள்ள, நம் நாட்டார் தெய்வங்களை அறிய, தி. செல்வமனோகரனின் ஈழத்து நாட்டார் தெய்வங்கள் போன்ற நூல்கள் கூட மாணவர்களுக்கு விரிவான வரலாற்று, பண்பாட்டுப் பார்வையை ஆய்வு அடிப்படையில் அளிக்கக் கூடியவை. எழுநா பல ஆய்வு நூல்களை வெளியிட்டு வருகிறது. வன்னியூர் செந்தூரன் போன்றவர்கள் பல்வேறு நூல்களைத் தொகுத்து இன்னொன்றை உருவாக்குகிறார்கள். அவற்றை ஊன்றி நிறுத்த வேண்டிய ஆய்வு நடுநிலமையோ, புறப்பார்வையோ, வரலாற்று நோக்கோ அவர்களுக்கு இல்லை. அவரை முன்வைப்பவர்களுக்கு அப்படியென்றால் என்னவென இதுவரையிலும் தெரியாது. இனியும் தெரிய வாய்ப்பு இல்லை.  

ஆனால் அசல் நூல்களிலேயே வரலாற்றுணர்வு இருக்கும். செந்தூரனின் பேச்சுகளில் அவரிடம் தொனிக்கும் இனப்பற்று என்பது இனவாதமே, அது வரலாற்றுணர்வுக்கு எதிரானது. அவர் பேசுவது பெருமித வரலாறு. அது நீதியுணர்ச்சிக்கு எதிரானது. 

ஈழத்தமிழர் வரலாறு எனும் பெயரில் இவர்கள் முன்வைக்கும் பார்வை பெருமிதமாகவோ ஆக்ரோஷமாகவோ முஷ்டியை மடித்துப் பிடித்தபடி எழுவதால் புலம்பெயர் தமிழர்களும் உள்ளூர் நலன் விரும்பிகளும் ஆயிரக்கணக்கில் இவர்களின் அசட்டு நூல்களை வாங்கி விழலுக்கு இறைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் மாணவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாக இருந்தால் அது நல்லதா? சத்தானதா? சிறந்ததா? எனப் பார்த்துப் பார்த்துத் தானே கொடுக்கிறோம்? புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதும் அத்தகையது தான். மாணவர்களின் மூளைக்கும் இதயத்துக்கும் சோறளிப்பது. அதையும் நல்லதா? சத்தானதா? சிறந்ததா? எனப் பார்த்துப் பார்த்தே கொடுக்க வேண்டுமென்பதை இந்தச் சமூகத்தில் நுண்ணுணர்வும் அறிவும் கொண்ட ஒருசிலரேனும் உணர்ந்தாக வேண்டும். 

தமிழ்நாட்டில் நூலகம் சார்ந்து ஒரு பெரிய ஊழல் அண்மையில் வெளிவந்திருந்தது. செயற்கை நுண்ணறிவுக்கு ப்ரொம்ப்ட் கொடுத்து உருவாக்கிய நூல்கள் அவை. அறிவுலகம் செயற்கை அறிவுடன் மோதிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் ஈழத்தமிழர்கள் தம் அசட்டுத்தனத்துடன் மோதிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் கற்கவும் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கற்கவும் என்று எழுத்தாளர்கள் சொல்வதைக் கெட்ட வார்த்தையாக மாற்றியிருக்கிறார்கள் முகநூல் சராசரிகள். அவர்களது அறிவுக்கு மேலே அடுத்த தலைமுறை வளரக் கூடாது என நினைக்கும் மந்தர்கள். மந்தத்தனத்தை ஒரு தகுதியாகச் சொல்லும் இனக்குழுக்கள் உலகில் உண்டா எனத் தெரியாது. ஆனால் நம்மளவு இருக்க முடியாது என்பதை ஐயம் திரிபறச் சொல்ல முடியும்.  

அசட்டு நூல்களுக்கு விருதுகளைக் கொடுப்பதும், அவற்றை விளம்பரப் பதாதைகளாகக் காவுவதையும் விட்டுவிடலாம். வெள்ளத்தனையது தானே மலர் நீட்டம். ஆனால் ஆயிரக்கணக்கில் இந்த நூல்களை வாங்கி நூலகங்களுக்கும் மாணவர்களுக்கும் திணிப்பதை, இத்தகைய வெகுசன எழுத்தளர்கள் மாணவர்களுக்கு அறிவாளிகளாக அறிமுகப்படுத்தப்படுவதை யாரால் நிறுத்த முடியும்? கோர்ட்டும் டையும் போட்டு கலைச்சக்கரவர்த்தி என்றோ தேசிய சக்தியென்றோ சொல்லிக் கொண்டு வருபவர்களைப் பார்த்து ஏமாறாதே என்று எப்படி நம் ஈழத் தமிழ்ச் சமூகத்துக்குச் சொல்ல முடியும்? 

அறிவுடமை என்பதே பிம்பச் சாகசம் என நினைக்கும் முகநூல் மந்தர்களுக்கு, அதிலும் குறிப்பாக சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்து, வாளெடுத்துப் போர் புரிந்து நாடு பிடித்து பேரெடுத்து கல்பொறித்து வாழ்ந்த கடும் வரலாறு கொண்ட ஈழத்தமிழ்ச் சமூகத்துக்கு இது எக்காலத்திலாவது விளங்குமா! மயிர் சுட்டுக் கரியாகாது என்று நினைத்து விட்டுப் போக வேண்டியது தான். 

எழுநாவின் நூல்களுக்கான இணைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *