யதார்த்தனின் புதிய நாவலான தோறை காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வெளிவந்து ஒரு கிழமை இருக்கும். வெளிவந்து இரண்டாவதோ மூன்றாவது நாள் யதார்த்தன் தனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றை பகிர்ந்திருந்தார். தோறை நாவலை அடிப்படையாகக் கொண்டு முனைவர் பட்டம் செய்யவிருப்பதாக இந்தியாவிலிருந்து ஒருவர் அதற்கு உதவி கேட்டு அனுப்பியிருந்தார்.
இப்போது நாவல் வரவிருக்கும் சுவிசில் நிகழும் வெள்ளி வீதியில் கிடைக்கவிருக்கிறது. இலங்கைக்கான புத்தகங்கள் நேற்றே கிடைத்துவிடும் எனச் சொல்லி உற்சாகமாக இருந்தார். ஒவ்வொரு நூலும் வெளிவந்து கையில் ஒருமுறை புத்தகமாகத் தவழ்ந்த பின்னரே அதை முழுமையாக விட்டு அடுத்ததற்குள் செல்லும் முழுமையான மனநிறைவு வாய்க்கும். அது ஒரு தனியின்பம். கொஞ்சிக் கொஞ்சிக் குழந்தைகள் வளர்ந்து பின்னர் அகல்வதைப் போன்ற ஒரு உணர்ச்சி.
இலங்கைக்கான புத்தகங்களை யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தடுத்து அவற்றை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியிருக்கிறார்கள். இனி அவர்களின் உத்தரவின் பெயரிலேயே பார்சல் விடுவிக்கப்படலாம். இனிமேல் தபாலகமூடாக அனுப்பும் நூல்களை இயன்றவரை தவிர்ப்பதே நல்லதென்று தோன்றுகிறது. தத்வமசியையும் அதே தபாலகமூடாகத் தான் அனுப்பியிருக்கிறார்கள். நல்ல வேளையாக தத்வமசியில் வரும் போர்க்காட்சிகள் முந்நூறு வருடங்களுக்கு முந்தையவை என்பதால் புத்தகம் அவர்களைக் கடந்து வந்துவிடும் என நம்புகிறேன். ஆனால் டச்சு ராணுவம் வேறு இலங்கை ராணுவம் வேறு என விளக்கம் விசாரணை ஏதும் வருமா தெரியவில்லை. படிப்பறிவில்லாத பாமரக் கூட்டமொன்று அலுவலகக் கதிரைகளில் குந்திக்கொண்டு நூற்றாண்டுகளாக அரசுகளுக்கு அடிமைச் சேவகம் செய்து பழகி விட்டார்கள். இந்தத் தடுப்புப் பற்றி யதார்த்தன் தனது அனுபவத்தையும் தரப்பையும் நிலையையும் விரிவாக எழுதியிருக்கிறார்.
தோறை நாவல் தடுப்பு – அசட்டுத்தனத்தின் அநீதி
சுங்கத்தின் புத்தகத் தடுப்புத் தொடர்பான இந்தத் தொடர் சிக்கலை அரசாங்கம் சீர்திருத்தியாக வேண்டும். ஊழியர்களுக்கு தெளிவான உத்தரவுகள் அளிக்கப்பட வேண்டும். அண்மையில் யாழ்ப்பாணம் வந்த தர்மு பிரசாத் பாஸ்போர்ட் அலுவலகம் சிறப்பாக இயங்குவாதகத் தன் அவதானத்தைச் சொன்னார். அரசு வந்ததில் நிர்வாக அளவில் சில மாற்றங்கள் வந்திருக்கின்றன பாஸ் என்றார். எனக்கு இத்தகைய மேலோட்டமான மாற்றங்களில் பெரிய மதிப்பில்லை என்றாலும், மனிதர்களை கண்ணியத்துடனும் அக்கறையுடனும் அணுகும் அலுவலகச் சூழல் இருப்பதை பாராட்டத் தான் செய்கிறேன். அத்தகைய சூழல் ஒரு தமிழ் எழுத்தாளருக்கும் வேண்டும். சுங்கத் திணைக்களத்தில் சகட்டு மேனிக்குத் திரிவோரெல்லாம் ஒரு எழுத்தாளரை விசாரணை செய்யவும் இழிவுப் பார்வை காட்டவும் கூடுமென்றால் அது கண்டிக்கத்தக்கது. ஒரு எழுத்தாளர் சமூகத்தின் நுண்ணுணர்வு மிக்க உறுப்பு. அதற்கு கொடையளிப்பவர். பண்பாட்டில் பங்களிப்பாற்றுபவர். ஷோபா சக்தி, தீபச் செல்வன், ரயாகரன் என பல எழுத்தாளர்களின் புத்தகங்களில் சிக்கலிருப்பதாகச் சொல்லி மேலிடத்துக்கு முறைப்பாடு குடுக்கும் நல்ல பிள்ளை குமாஸ்த்தாக்களை அரசாங்கம் கொஞ்சம் அதட்டி வைக்க வேண்டும்.
என்னுடைய நிலைப்பாடும் ஏறக்குறைய யதார்த்தனுடையது தான். இதைப் பற்றி அவரிடம் கதைத்த பொழுது சொன்னேன். நானாயிருந்தால் ஒருமுறை கூடக் கொழும்புக்குச் சென்று என் புத்தகங்களை விடுவியுங்கள் என்று அமைச்சின் முன் நிற்க மாட்டேன் என்று சொன்னேன். அவர்கள் வாசித்து சிக்கலிருப்பின் அதைத் தடை செய்யட்டும். இல்லையென்றால் விடுவிக்கப்படாத ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எந்தப் பூச்சிகளால் சுங்கத்தின் களஞ்சியங்ளில் உண்ணப்பட்டு அழிகின்றனவோ அங்கேயே போய்த் தொலையட்டும். இந்த நாட்டில் ஒரு எழுத்தாளனாக வாழ்வதே அவமானகரமானது. சமூகத்திற்கும் அவன் யார் என்று தெரியாது. அரசுக்கும் தெரியாது.
சுங்கத்திணைக்களம் எதிர்காலத்திலும் இத்தகைய அவமதிப்புகளை அலைக்கழிப்புகளை எழுத்தாளர்களுக்கு கொடுக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கம் மாத்திரமே.

