எழுத்தாளர் யதார்த்தனின் ‘தோறை’ நாவல்கள் வந்த பொதி, யாழ்ப்பாணம் தபால் நிலையத்திலுள்ள சுங்கப் பிரிவால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. நாவலில் இராணுவம் குறித்த சில சொற்கள் உள்ளதுவே காரணம் எனச் சாட்டுச் சொல்லப்பட்டுள்ளது. நாவலின் பிரதிகள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கிருந்து அனுமதி கிடைத்த பின்பே புத்தகப் பொதியை விடுவிக்கலாம் எனச் சுங்கப் பிரிவு யதார்த்தனிடம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்ட புத்தகப் பிரதி குறித்து அந்த அமைச்சு எதுவுமே சொல்லாது. புத்தகப் பொதியும் திரும்பக் கிடைக்காது. இதுவே இலங்கையில் வழமை. சுங்கப் பிரிவும் வெட்கமின்றி இதை யதார்த்தனிடம் தெரிவித்தார்களாம்.
ஏற்கனவே தீபச்செல்வன், ரயாகரன், மற்றும் என்னுடைய புத்தகங்கள் இவ்வாறே பாதுகாப்பு அமைச்சால் அமுக்கி வைக்கப்பட்டுள்ளன. தன்னுடைய நூல்களைத் திரும்பப் பெற தீபச்செல்வன் சளைக்காத போராட்டத்தை நடத்துகிறார். விஷயம் ‘இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு’ வரை சென்றது. தீபச்செல்வனின் இரண்டு நூல்களையும் விடுவிக்குமாறு ஆணைக்குழு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நூல்கள் விடுவிக்கப்படவில்லை.

இந்தப் புத்தகத் தடை விஷயம் குறித்து அரசாங்கத்தினதும், பிரதமரதும், பாதுகாப்பு அமைச்சினதும், கலாசார அமைச்சினதும் கவனத்திற்குப் பலமுறை கொண்டு சென்றாகிவிட்டது. சர்வதேச ஊடகங்கள் இது குறித்துச் செய்திகளை வெளியிட்டன. இத்தகைய புத்தகத்தடைக்கு எதிராக இலங்கை வீதிகளில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால், நூல்கள் விடுவிக்கப்படவில்லை.
இந்த நூல் தடைக்குச் சுங்கப் பிரிவு ஊழியர்களைக் குற்றம் சாட்டுவது பொருத்தமற்றது. அவர்கள் அரசாங்க இயந்திரத்தின் தேய்ந்துபோன பற்கள். இந்த நூல் தடைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது இலங்கை அரசாங்கமே.

ஒரு புத்தகம் அரசாங்கத்தால் தடை செய்யப்படுகிறது என அறிவித்தால் மேற்கொண்டு சட்ட நடவடிக்கையை எழுத்தாளரோ பதிப்பகமோ மேற்கொள்ளலாம். ஆனால், இங்கே நடப்பது புத்தகங்களை அமுக்கிவைப்பது, அது குறித்து எந்த எதிர்வினையுமில்லாமல் அரசு மவுனித்து இருப்பது மட்டுமே.
சிறுபான்மை இனிங்களின் பிரச்சினைகள், மாகாணசபைத் தேர்தல், அரசியல் சட்டச் சீர்த்திருத்தம் போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் மவுனமே அரசாங்கத்தின் பதிலாக இருக்கிறது. அந்த மவுனத்தை எழுத்தாளர்கள் மீதும் எழுத்துச் சுதந்திரத்தின் மீதும்கூட அரசு ஏற்றி வைக்கிறது.
இந்தப் கற்பாறை மவுனத்தை எளிய எழுத்தாளானால் சுமக்க முடியாது. இலங்கை அரசு இந்தக் கருத்துச் சுதந்திர அடக்குமுறை குறித்து வாய் திறந்து பதிலளிக்க வேண்டும். ‘இடதுசாரி அரசு’ என வாயடித்தால் போதாது. எழுத்துச் சுதந்திரத்தை உறுதி செய்து அதை நிரூபணம் செய்ய வேண்டும்.
ஷோபா சக்தி

