2008, கள்ளிவாய்க்கால், மாலை ஐந்து மணி. சூரியன் கவனமாக மேகங்களுக்குள் ஒளிந்து கொண்டது. கள்ளி வாய்க்காலின் கரையில் ஏனென்று தெரியாமல் போன மாமிக்காரர்களைப் பார்த்து மனிதர்கள் எல்லாம் மகிழ்ச்சியின் உச்சியில் கைகால்கள் இழுபட, முகங்களும் தசைகளும் உணர்ச்சிக் கொந்தளிப்பை தாங்க முடியாமல் துடிக்க கண்ணிலிருந்து திரவம் சிந்த கடற்கரை மணலில் கிடந்தனர். தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைக்க வந்த காவலர்களே என ஒரு முதிய கிழவி மண்டியிட்டு அமர்ந்து வானத்தைப் பார்த்து பெருங்குரலில் கூவி கைகளிலிருந்த மலர்களை வீசியெறிந்தாள். சுப்பர் கப்பில் போய்க்கொண்டிருந்த மாமிக்காரர் ஒருவர் முதலைத் தோல் போன்ற தடிப்புக் கொண்ட அழகிய கறுப்பு வண்ணச் சப்பாத்தின் அடிப்பக்கத்தால், போவோர் வருவோரின் மார்புகளில் தொட்டுப் பார்த்துக் கொண்டே போனார். தனது கையிலிருந்த சிறிய ஒரு கருவியை எடுத்து அழுத்தினார். எதிரில் நின்ற மனிதர்களின் ஆடைகளில் சிவப்பு நிற வண்ணச்சாறு தோன்றியது. இலங்கை போன்ற அமைதியான நாட்டில் இந்தச் சிறிய கருவிகள் அழகிய சிவப்பு நிறத்தை உருவாக்க பயன்படும் தூரிகை போன்றவை. அதனால் பச்சை குத்துவதைப் போல தலையில் நெஞ்சில் முதுகில் காலிலென எங்கும் செவ்வண்ணம் பூச முடியும்.
மாமிக்காரர்களை அவ்வகையில் பூனைக்குட்டி அண்ணாக்களும் அக்காக்களும் சிவப்புச் சாயம் பூசி விளையாடுவதுண்டு. கடலில் நட்சத்திரங்கள் பறப்பது போல சிறிய கருவிகளால் ஒருவரை இன்னொருவர் பூரிஸ்விட்டு விளையாடுவார்கள். கரையில் ஓடிக் கொண்டிருந்த மனிதர்களுக்கிடையில் வானத்திலிருந்து வண்டு விழுந்தது. நாலாப் பக்கமும் வண்டுச் சில்லுகள் தெறித்து மனிதர்களின் கழுத்துகளில் சிவப்பு நிறமாக எதையோ ஊற்றியிருந்தது.
மாமிக்காரர்களும் பூனைக்குட்டிகளும் விளையாடும் பொழுது மாமிக்காரர்கள் கடைசியில் வென்று விட்டார்கள். நிறையப் பூனைக்குட்டிகள் மடிந்து விட்டன.
அதைப்பற்றி ஒருநாள் ஒருவன் கதையெழுதப் போகிறேன் எனச் சொன்னான். மாமிக்காரரும் பூனைக்காரரும் இல்லை. நானொரு எழுத்துக்காரன் என்றான். அப்பொழுது லெப்ட் ஹாண்டேர்ஸின் புதிய ஆட்சி நடந்து கொண்டிருந்தது. மாமிக்காரரும் பூனைக்காரரும் கையில் வைத்திருந்த சிறிய கருவியிலிருந்து வரும் அழகிய சிவந்த வண்ணத்தை தம் நிறமாகக் கொண்ட லெப்ட் ஹாண்டேர்ஸின் காலத்தில் மாதம் மும்மாரி பொழிவதாக தமிழ் மக்கள் கள்ளி வாய்க்கால் கரையிலிருந்து எடுத்து வந்த முதிய தாயின் மலர்களால் அதே போல மண்டியிட்டபடி வீசினர். லெப்ட் ஹாண்டேர்ஸ் சிரித்தபடி, “பயப்படாங். எல்லாம் வெத்தலாம்” எனக் கூறிக் கை குலுக்கினர். அடடே! கையைக் கையாலேயே பிடித்துக் குலுக்குகிறார்களே லெப்ட் ஹாண்டேர்ஸ் என்று தமிழ் மக்கள் ஏக மகிழ்ச்சியில் கூத்தாடினர். லெப்ட் ஹாண்டேர்ஸின் கொடுப்புச் சிரிப்பைப் பார்த்த ஒரு சிறுவன் கீழேயிருந்த பேப்பரொன்றை எடுத்து கசக்கி அவர்களை நோக்கி வீசினான். அவர்கள் அவன் தலையைக் கோதி விட்டு, சிரித்தபடி சென்றார்கள். அவர்கள் திரும்பிச் சென்ற போது செம்மணியில் தொற்று நோயால் இறந்தவர்களின் இடத்தில் நின்று செவ்வணக்கம் செலுத்தி விட்டு, தங்கள் விழிகள் சிந்திய கண்ணீரை எவருக்கும் தெரியாமல் மறைத்துக் கொண்டே புறப்பட்டார்கள்.
அப்பாலே 2026 இல் ஒரு சிறிய கிராமத்தின் மீது பாசி போல இருள் படிந்திருந்தது. மாமிக்காரரின் சுப்பர் கப் ஓசைகளாலான கனவைக் கேட்டபடி அனுங்கிக் கொண்டிருக்கும் பாட்டியின் அருகில் படுத்திருந்த இளம் பெண்ணான பேத்தி, கள்ளி வாய்க்காலில் காணாமல் போன பூனைக்குட்டி அப்பாவின் புகைப்படத்தை நெஞ்சோடு வைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள். அவளது தாய் சுவரின் விரிசல்களிலிருந்து புறப்படும் எறும்புகளைப் பார்த்துக் கொண்டு விழித்திருந்தாள். விழித்துக் கொண்டிருக்கும் அவளது கனவைத் துரத்திக் கொண்டிருப்பவற்றை இதே போல ஒளித்து வைத்து எழுத முடியாது.

