‘யதார்த்தன்’ என்ற புனைபெயரில் எழுதிவரும் எழுத்தாளர் பிரதீப் குணரத்தினம், இந்தியாவிலுள்ள தனது பதிப்பகத்தால் அனுப்பிவைக்கப்பட்ட தனது புதிய நாவலின் பிரதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அக்டோபர் 22 அன்று யாழ்ப்பாணப் பிரதான அஞ்சலகத்திற்குச் சென்றார். தனது வாசகர்களுக்காக அனுப்பிவைக்கப்பட்ட புத்தகங்களோடு வீடு திரும்புவார் என்றே அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால், அவரது புத்தகங்களைப் பாதுகாப்பு அமைச்சுக்கு ஆய்விற்காக அனுப்பிவைத்த சுங்க அதிகாரிகள், அவருக்கு ஒரு சுங்கக் கட்டணப் பற்றுச்சீட்டை மட்டுமே கையளித்தனர்.
தமிழ்நாட்டிலுள்ள ‘காலச்சுவடு’ பதிப்பகத்திலிருந்து வந்திருந்த அஞ்சல் பொதியைச் சோதனையிட்ட அதிகாரிகள், ‘தோறை’ நாவலின் பக்கங்களை மேலோட்டமாகப் புரட்டினர். ஆசிரியரின் கூற்றுப்படி, இராணுவத்தினர் மற்றும் போர் பற்றிய குறிப்புகளே அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. வன்னிப் போரின் இறுதிக்கட்டத்திலும், அதைத் தொடர்ந்து நலன்புரி முகாமிலும் ஒரு இளம் தாய் எதிர்கொள்ளும் வாழ்வியலையே இந்த நாவல் பேசுகிறது என்றும்; போர் இதன் பின்னணியாக அமைந்திருந்தாலும், புத்தகம் எந்தவித வன்முறைச் செயல்களையும் ஆதரிக்கவில்லை என்றும் யதார்த்தன் சுங்க அதிகாரிகளிடம் தெளிவுபடுத்தினார்.
நாவலின் சில அத்தியாயங்களை அதிகாரிகள் வாசித்து முடிக்கும் வரை தான் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், புத்தகங்களை விடுவிப்பதற்குப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஒப்புதல் அவசியம் என அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
நிலையில்லாத் தன்மை
யதார்த்தனைப் பொறுத்தவரை, இந்தச் சம்பவம் சுங்கத் துறையால் புத்தகங்கள் முடக்கப்பட்ட முந்தைய எழுத்தாளர்களின் கசப்பான அனுபவங்களையே நினைவூட்டியுள்ளது.
அதிகாரிகள் இரு பிரதிகளைப் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பிவைத்துவிட்டு, எஞ்சிய பிரதிகளைத் தடுத்து வைப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கான பதில் எப்போது கிடைக்கும் எனக் கேட்டதற்கு, எழுத்தாளர் கொழும்பு சென்றுதான் இதைப் பின்தொடர வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
பல இளம் எழுத்தாளர்களைப் போலவே, யதார்த்தனும் போதிய நிதியாதாரம் இல்லாதவர்; தலைநகரிலுள்ள அலுவலகங்களுக்கு அடிக்கடி சென்று வருவது அவரது பொருளாதாரச் சூழலுக்கு அப்பாற்பட்ட ஒன்று.
“என்னிடம் பணம் இல்லை. தலைநகருக்கு அடிக்கடி சென்று வருவது என்னால் இயலாத காரியம்” என்று சண்டே ஒப்சர்வர் இதழிடம் அவர் தெரிவித்தார்.
சுங்கத் துறையால் அனுப்பிவைக்கப்பட்ட புத்தகங்கள் வெள்ளிக்கிழமை (30) அன்றே அமைச்சை வந்தடைந்ததாகப் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரிகேடியர் பிராங்க்ளின் ஜோசப் தெரிவித்தார். அமைச்சின் நிலைப்பாட்டை முடிவெடுப்பதற்கு முன்னர், ஒரு தனிக்குழுவே இவற்றை பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது முதல் முறையல்ல
சமீபத்திய ஆண்டுகளில் தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் சுங்கத் துறையால் தடுத்து வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. இத்தகைய சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தபோதிலும், பொதுவெளியில் வெளியிடுவதற்கு முன்னர் ஆய்வு செய்யப்பட வேண்டிய புத்தகங்கள் குறித்து சுங்கத் துறைக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே முறையான நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard procedure) எதுவுமில்லை என்றே தெரிகிறது. தெளிவான வழிமுறைகள் இல்லாதிருப்பது எழுத்தாளர்களைக் கொதிப்படையச் செய்வதோடு, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு அவ்வப்போது சங்கடத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
2025 நவம்பரில், 1990ஆம் ஆண்டு நயினாதீவு மற்றும் மண்டைதீவுப் பகுதிகளில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து ஷோபாசக்தி எழுதிய புத்தகத்தின் பிரதிகள் யாழ்ப்பாணப் பிரதான அஞ்சலகத்தில் தடுத்து வைக்கப்பட்டன. சென்னையில் உள்ள தனது பதிப்பகம் மூலம் கவிஞர் கருணாகரனுக்கு அனுப்பப்பட்ட புத்தகங்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டதாக ஷோபாசக்தி தெரிவித்தார்.
அப்புத்தகங்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கருணாகரனுக்குச் சுங்கத் துறை அறிவித்ததாகவும், ஆனால் அவை இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும் ஷோபாசக்தி மேலும் குறிப்பிட்டார்.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’, ‘சயனைட்’, ‘இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்தான்’ மற்றும் ‘எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்’ ஆகிய நான்கு புத்தகங்கள் தடுத்து வைக்கப்பட்டன. கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஏப்ரல் 17 அன்று தன் அமைச்சகத்தில் எழுத்தாளரைச் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து, கலைப் பேரவையும் மாநில இலக்கிய உப குழுவும் அப்புத்தகங்களை மதிப்பீடு செய்தன. ‘பயங்கரவாதி’, ‘சயனைட்’ ஆகிய இரு நாவல்களும் புனைகதைகள் என வல்லுநர்களால் வகைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டன. அவற்றிற்குப் பாதுகாப்பு அமைச்சும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
அரசியல் கட்டுரைகள் மற்றும் நேர்காணல்களின் தொகுப்புகளான ‘இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்தான்’ மற்றும் ‘எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்’ ஆகிய நூல்களின் முறையே 75 மற்றும் 147 படிகளையும் விடுவிக்க வேண்டும் என 2026 அக்டோபர் 12 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) பரிந்துரைத்தது. நூல்களைத் தணிக்கை செய்வது பேச்சுரிமை மற்றும் மொழி ரீதியிலான பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்பு உள்ளிட்ட அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியது. இருப்பினும், பத்து நாட்களுக்குப் பிறகு, யதார்த்தனின் ‘தோறை’ நாவல் சுங்கத் துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர்களால் அக்டோபர் 26 அன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், எழுத்தாளர்கள் டிலுக்சன் மோகன் மற்றும் ராயாகரன் ஆகியோரின் நூல்களும் இன்னமும் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவிஞரும் எழுத்தாளருமான கிரிசாந் சிவசுப்பிரமணியம் கூறுகையில், சுங்கத் துறையால் புத்தகங்கள் தடுத்து வைக்கப்பட்டால் என்ன செய்வதென்று எழுத்தாளர்களுக்குத் தெரிவதில்லை என்றார். இத்தகைய அசௌகரியங்களைத் தவிர்க்க ஒரு புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்படும் என கடந்த ஏப்ரலில் கலைப் பேரவை ஒப்புக்கொண்ட போதிலும், இந்நிலை தொடர்கிறது.
வழிமுறைகளின்மை
எந்த மொழியிலும் எழுதப்படும் படைப்புகளைத் தணிக்கை செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், யதார்த்தனின் நூல்கள் தடுத்து வைக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமய மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தனிப்பட்ட எழுத்தாளர்களுக்காக அரசாங்கம் தலையிட்டுப் புத்தகங்களை விடுவிப்பது, அடுத்த எழுத்தாளரையும் அதே போன்றதொரு தலையீட்டையே நம்பியிருக்கச் செய்கிறது. நிறுவனங்களுக்கு இடையே பொறுப்புகளைத் தள்ளிவிடாமல், அதிகாரிகள் தாமாகவே பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.

போரைப் பின்னணியாகக் கொண்டு தான் எழுதிய ‘நகுலாத்தை’ நாவல், 2022ஆம் ஆண்டில் இதே அஞ்சலகம் வழியாக எவ்விதத் தடையுமின்றி வந்தடைந்ததாக யதார்த்தன் குறிப்பிட்டார். “புத்தகங்கள் மீதான முடிவுகள் தன்னிச்சையாக எடுக்கப்படுகின்றன என்பதற்கு இதுவே சான்று. ஒரு புத்தகம் தடுத்து வைக்கப்படுவதும் விடுவிக்கப்படுவதும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் அன்றைய மனநிலையைப் பொறுத்தே அமைகிறது,” என அவர் ஆதங்கப்பட்டார்.
அரசாங்கம் சுங்கத் துறை ஊழியர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி, எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் தடுத்து வைக்கப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாள்ருமான கிரிசாந் சிவசுப்பிரமணியம் வலியுறுத்தினார்.
“இப்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு நிர்வாகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் நண்பர்கள் சொல்கிறார்கள். மக்கள் கண்ணியத்துடனும் அக்கறையுடனும் நடத்தப்படும் ஓர் அலுவலகச் சூழலை நான் வரவேற்கிறேன். ஆனால், எழுத்தாளர்களும் அத்தகைய கண்ணியமான சூழலுக்குத் தகுதியானவர்களே. சுங்கத் துறையில் நடமாடும் யாரோ ஒருவர் ஒரு எழுத்தாளரைக் கேள்வி கேட்டு, இளக்காரமாகப் பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது;” என்றார் அவர்.
இந்தியாவை நோக்கும் தமிழ் எழுத்தாளர்கள்
சமீபகாலமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை இந்தியாவில் வெளியிடத் தொடங்கியுள்ளனர். உள்ளூரில் அச்சிடுவதற்கான அதிகச் செலவு மற்றும் பதிப்பக ஆதரவு இல்லாமை காரணமாக உள்ளூரில் வெளியீடு செய்வது சாத்தியமற்றது என யதார்த்தன் கூறினார். இந்தியப் பதிப்பகங்கள் உற்பத்திச் செலவை ஏற்றுக்கொண்டு, சந்தைப்படுத்தலையும் கவனித்துக் கொள்கின்றன. இந்த ஏற்பாடு முழுச் செலவையும் எழுத்தாளரே ஏற்கவேண்டிய சுமையைக் குறைக்கிறது. இருப்பினும், அந்தப் புத்தகங்களும் சுங்கத் துறையால் தடுத்து வைக்கப்படும் அபாயம் எப்போதும் உள்ளது.
பெரிய வணிக நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்படும் புத்தகங்கள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி வந்தடைந்து கடைகளிலும் நூலகங்களிலும் விநியோகிக்கப்படும் நிலையில், அஞ்சல் பொதிகள் மட்டும் தடுத்து வைக்கப்படுவதற்கான காரணத்தை அதிகாரிகளால் விளக்க முடிய வேண்டும் என யதார்த்தன் தெரிவித்தார்.
“இதன் பின்னணியில் ஒரு வர்க்கப் பாகுபாடும் இருப்பதாகத் தெரிகிறது,” என்றார் அவர்.
தெளிவான அறிவுறுத்தல்கள் அதிகாரிகளுக்கும் உதவும் என யதார்த்தன் நம்புகிறார். தான் சந்தித்த சுங்கத் துறை ஊழியர்கள், பிற்பாடு விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிடும் என்ற பயத்தினாலேயே புத்தகங்களை விடுவிக்கத் தயங்குவதாக அவர் கருதுகிறார். தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தால் மட்டுமே அதிகாரிகளால் சுய முடிவுகளை எடுத்துப் பொறுப்புடன் செயல்பட முடியும்.
“அமைச்சர்களின் தலையீட்டால் ஏற்கனவே சில புத்தகங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் அந்த முயற்சியை ஒரு நிலையான வழிமுறையாக மாற்ற வேண்டும். ஏனெனில், எனது அடுத்த அஞ்சல் பொதியைப் பெற்றுக்கொள்ள மீண்டும் ஒரு பகிரங்கப் பிரச்சாரம் தேவைப்படக் கூடாது,” என்று அவர் கூறினார்.
ரதீந்திர குருவித
நன்றி : Sunday observer
ஆங்கிலக் கட்டுரைக்கான இணைப்பு : Tamil books and recurringCustoms meddling – Rathindra Kuruwita

