புத்தகம் என்ன தங்கமா? – கோ. நாதன்

நண்பரொருவர் கீழ்வரும் முகநூல் பதிவை அனுப்பி வைத்திருந்தார். யாரிது எனக் கேட்டேன். ஏகத்துவன் என்றார். பெயரே பழைய பின்னநவீன கால சுடோக்குப் பெயர் போலிருக்கிறதே. ஆளின் உண்மையான பெயர் என்னவென்று கேட்டேன். எனக்கு இந்தப் பதிவை அனுப்பிய நண்பரோ இலக்கியத்தில் சர்ச்சைகளை மட்டுமே வாசிக்கும் சர்ச்சைப் பிரியர். பதிலுக்கு அவருக்கு இன்னொரு பெயர் இருக்கு என பாட்ஷா ரேஞ்ச் பில்டப் கொடுத்தார். “அது என்ன?” என்று கேட்டேன். சிரிக்கும் ஸ்மைலி ஒன்றுடன் “ஈழக்கிழவி” என்றார். ஐசா, முகநூலாளப் பெண்களுடன் இலக்கிய விவாதத்தில் ஈடுபடுவது வெங்காயத்தில் சதையைத் தேடுவது போல என நினைத்து விட்டுவிட்டிருக்கும் இந்தக் காலத்தில் ஒரு கிழவியுடன் போய் எதற்கு வம்பென்று பதிலனுப்பினேன். அதுவும் ஈழக்கிழவிகள் கொஞ்சம் புறுபுறுப்புத் தன்மை கொண்டவர்கள். எதையும் நேருக்கு நேர் சொல்லத் தெரியாதவர்கள். சர்ச்சைப் பிரியரும் இன்னொரு இரண்டு ஸ்மைலிகளுடன் அவரின் இயற்பெயர் கோ. நாதன் என அனுப்பினார். அடடா! அவரா! அவரை எனக்குத் தெரியும். ஆள், பழைய கை. ஆகவே பதிலை எழுதிவிடலாம் என இருக்கிறேன். கீழே அவரின் பதிவு.

“புத்தகம் என்ன தங்கமா? – கோ. நாதன்”

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருப்பதால், தங்கத்தின் மீதான மக்களின் நாட்டமும் ஓரளவு குறைந்திருக்கலாம்.

ஆனால் ஈழத்து புத்தகச் சந்தையைப் பார்த்தால், தங்கத்தைவிடப் புத்தகங்களின் விலைதான் அதிகமாகத் தலைசுற்ற வைக்கிறது.

தினசரி பத்திரிகைகள் வெளிவருவதைப் போல, ஈழத்தில் தினமும் நான்கு புத்தகங்களாவது புதிதாக வெளிவருகின்றன. புத்தக வெளியீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மகிழ்ச்சிக்குரியதுதான்.

ஆனால் காலக்கொடுமை என்னவென்றால், அந்தப் புத்தகங்களின் விலைதான் வாசகர்களை வாங்குவதற்கு முன்பே யோசிக்க வைக்கிறது.

(கோ. நாதன்) (பனியள்ளித் தூற்றும் கணம்)

வெறும் 50 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தின் விலை 5,000 ரூபாய் என்றால், சாதாரண வாசகன் எப்படிப் புத்தகங்களை வாங்கிப் படிப்பது?

புத்தகங்கள் வாசகர்களைச் சென்றடைய வேண்டுமே தவிர, விலைப் பட்டியலைப் பார்த்து வாசகர்கள் பின்வாங்கும் நிலை உருவாகக்கூடாது.

எழுதுவது படைப்பாளியின் உரிமை. வெளியிடுவது பதிப்பாளரின் விருப்பம். ஆனால் வாங்கிப் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்குவது யார்?

புத்தகங்கள் தங்கமாக மாறிவிட்டால், வாசிப்பு என்பது வசதி படைத்தவர்களுக்கான ஒன்றாகிவிடும்.

புத்தகங்களை வெளியிடுவதில் காட்டும் ஆர்வத்தில் கொஞ்சமாவது, அவற்றை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் காட்டலாமே!

ஏகத்துவன்

*

இந்தக் கருணைக் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. 

ஆனால் இது கோ. நாதன் அண்ணையின் பிரச்சினை மட்டுமல்ல. நேற்று புத்தகங்களை கையில் வாங்கியவுடன் முதல் நாளிலேயே எடுத்த இருபது புத்தகங்களும் தீர்ந்தன. 

வழக்கமாக புத்தகங்களை எடுத்தவுடன் அப்பாவிடம் கொண்டு போய்க் கொடுப்பது என் முதன்மையான சடங்கு. அதைச் செய்யாமல் விடவே கூடாது என நினைத்துக் கொள்வேன். ஒரு மகனாக ஐந்து சதத்திற்குப் பிரயோசனமில்லாதவனாக முப்பத்து இரண்டு வருடங்கள் வாழ்ந்து விட்டேன். மிகுதிக் காலமும் அப்படியே தான் கழியப் போகிறது. ஆனால் அவர் கல்வியின் மதிப்பை அறிந்தவர். தன் மகன் முந்தி அவையிருந்தால் மகிழ்பவர். அதன் பொருட்டெ அவனின் உலகியல் மந்தத்தை பொருட்படுத்தாதவர். அவர் என் பொருளியல் அறிவை எனக்கே உணர்த்திய நிலை அண்மையில் வந்தது. 

கையில் காசே நிலைக்கவில்லை. வாங்கும் சம்பளம் மாதக் கடைசிக்கு முதல் வாரம் என்ன கஷ்டப்பட்டேனும் தீர்ந்து விடும். பிரிந்தாவிடம் இன்னொரு பத்தாயிரம் போட்டு விடு என்று வாழ்க்கை போகிறது. ஆகவே அறச்சீற்றம் கொண்டு “எப்படியேனும் இந்தப் பொருளியல் நிலைகுலைவைச் சீராக்குவேன்” எனச் சபதம் எடுத்தேன். இலக்கியத்தில் எடுக்கும் சபதங்களை நிறைவேற்றும் பழக்கமுள்ள எனக்கு உலகியலில் நான் எண்ணுவது போல அவை நடப்பதில்லை. எதுவோ ஒரு தெய்வம் எனக்குப் புறமுதுகு கட்டியபடி வேறு எவருக்கோ ‘ததாஸ்த்து’ என வரமளிக்கிறது. 

அப்பாவிடம் போய் இந்தச் சிக்கலைச் சொன்னேன். கடையைப் பூட்டிக் கொண்டிருந்தவர் சிறிது நின்று “அதுக்கு என்ன செய்யப் போறாய்?” என்றார். “சின்னச் சீட்டுக் கட்டலாம் எண்டிருக்கிறன். உங்களுக்குத் தெரிஞ்ச ஆரிட்டையும் சேர்த்து விடுங்கோ” என்றேன். ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்து விட்டு “உனக்கது சரிவராது” என்றார். “ம்ஹ்ம். சொல்லுங்கோ” என்றேன். ஸ்ரோருக்குள் சென்று கையில் ஒரு மண் உண்டியலுடன் திரும்பி “இந்தா” என நீட்டினார். வாங்கிக் கொண்டேன். “நிரப்பிட்டு வா” என்றார். இன்று வரை அதன் கணுக்கால் கூட நிரம்பவில்லை. அவர் போட்ட ஒரு ஆயிரம் ரூபாய்த் தாள் தான் அதற்குள் விழுந்ததிலேயே மதிப்புக் கொண்டது. உணர்த்தி விட்டார். உணர்ந்து கொண்டேன். காசுக்கும் எனக்கும் இந்த ஜென்மத்தில் சுபப்பொருத்தமில்லை. 

இப்படிக் காசை அறியாமல் வாழ்பவர்கள் தான் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் என்பது என் அவதானிப்பு. கோ. நாதன் அண்ணைக்கு புத்தகங்கள் தங்கம் விலை விற்பதில் சிக்கல் இருக்கலாம். ஆனால் வேறொரு நண்பரும் நேற்றுச் சொன்னார். தன்னிடம் இரண்டு பேர் நாலாயிரம் ரூபாய் கடன் கேட்டிருப்பதாக என்று. அவர்களுக்கும் சரி கோ. நாதன் அண்ணைக்கும் சரி. இன்னும் கூட தமிழ் எழுத்தாளர்களை எலான் மஸ்க் கணக்காக நினைக்கும் பாமரக் கூட்டத்திற்கும் சரி சொல்லிக் கொள்வது ஒன்று தான். 

புத்தகங்கள் தங்கத்தையும் விடப் பெறுமதி வாய்ந்தது. நான் சொல்வது அத்தகைய விரிவு கொண்ட பெரும் படைப்புகளை. நான் அப்படியொன்றைத் தான் எழுதி விட்டு நாலாயிரம் ரூபாய் போட்டிருக்கிறேன். அதுவே மானுட சமூகம் மேல் என் உச்ச பட்சக் கருணையால் தான். வாரா வாராம் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டு திரியும் மக்களுக்கு வருடத்தில் சில புத்தகங்களை வாங்குவதற்கு இயலாதென்றால் என்ன செய்வது. வெட்டிச் செலவுகள் செய்யும் இந்தச் சமூகம் பண்பாட்டை முன்னகர்த்தும் இந்தப் படைப்புகளை லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினாலும் தகும் தான். 

ஏழை எழுத்தாளர்கள் உண்டு. ஏழை வாசகர்களும் உண்டு. ஆனால் தமிழ் கூறும் நல்லுலகின் இத்தனை ஆயிரம் ஆண்டுகால வரலாற்றில் எவராவது ஒருவர் சொல்லட்டும் ஒரு தமிழ் எழுத்தாளர் பணமின்றி நின்றிருக்கும் ஒரு வாசகருக்கு தன் நூலை காசின்றிக் கொடுக்காமல் விட்டார் என்று. அது கணக்கற்ற உறவு. முகநூலாளர்களின் காட்டுக் கூச்சல் எழுந்திருப்பது அவர்களுக்கு புத்தகம் என்றால் என்னவென்று அடிப்படை புரிதல் கூட இல்லை என்பதால் தான். என் முதல் நாளில் நாலாயிரம் ரூபாய் பெறுமதியான இருபது புத்தகங்களும் தீர்ந்து விட்டன. வெண்பாவில் ஐந்து கொடுத்தேன். என்ன நிலமை என்று தெரியவில்லை. இருந்தால் அங்கு தான் சில பிரதிகள் இருக்கும். ஆர்வமுள்ளோர் பெற்றுக் கொள்க. தங்கத்தை புண்ணாக்கு விலைக்கு விற்கிறேன். வாங்கிக் கொள்ளுங்கள். 

கிரி

தத்வமசி முன்னுரை : ஒரு தெய்வத்தை எழுப்புதல்

யாழ்ப்பாணத்தில் வாங்க : ஈழத்து வாசகர்களுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *