உடலிருளுக்குள் ஓர் சுடர்விளக்கு
“சிலையை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கண் திறக்கும் சடங்கை சந்நியாசி வந்துதான் செய்ய வேண்டும். சந்நியாசி தன்னுடைய ஆன்மாவை அச்சிலைக்குள் செலுத்துகிறான். இதுதான் ஒவ்வொரு கலைஞனிடமும் இருக்க வேண்டும். ஒரு கதையின் உயிர்த்தன்மை என்பது அதன் கருப்பொருளோ எழுதும் முறையோ மட்டுமல்ல. அக்கதையாசிரியர் தன்னுடைய ஆன்மாவை அக்கதைக்குள் செலுத்தியிருக்க வேண்டும். அத்தகைய கதைகள்தான் காலத்தைத் தாண்டி உயிர் வாழ்கின்றன.”
எழுத்தாளர் ஜே.பி.சாணக்யா
பிறழ்வுகளை எதிர்கொள்ளும் மனிதர்களின் மனவுணர்வுகளை நுட்பமாகச் சித்தரிக்கும் இலக்கியப் படைப்புகளாகத் தனித்துநிற்பவை எழுத்தாளர் ஜே.பி.சாணக்யாவின் கதைகள். தமிழ் புனைவிலக்கியம் எனும் நெடும்பரப்பில் இவரது கதைகள் உறவுச்சிக்கல்களின் உளவியலைப் பேசுவதன் வழியாக மொழியின் சாத்தியத்தை அடுக்கடுக்கான பல நுண்திசைகளில் திறந்தன. ஆனாலும் இவருடைய பல கதைகளுக்குள் ஓர் அதீத எளிமையும் குருதிநாளமாய் உள்ளோடுகிறது.
ஜே.பி. சாணக்யாவின் கதைகளை வாசிக்கையில் முதலில் நாம் எதிர்கொள்வது ஒரு உடல். அந்த உடல் வெறும் காம உடலல்ல. அது பசியுடல்; உழைப்புடல்; சாதியைச் சுமக்கும் சதியுடல்; அவமானத்தில் கூசும் நரவுடல்; ஆசைக்குத் துடிக்கும் வேட்கையுடல்; அன்புக்கு நோகும் பாரவுடல்; சில சமயங்களில் தன் மீது சுமத்தப்பட்ட எல்லா ஒழுக்கங்களிலிருந்தும் தப்பித்துச் செல்ல விழையும் எளிய விலங்கு உடல்.
‘நுண்ணிய அவதானிப்புகள்’ தான் ஜே.பி.சாணக்யாவின் கதைகளின் அடிப்படையான பலம் என்று தோன்றுகிறது. பொதுவாக, ஒரு சமூகத்தின் பிரதான வரலாறு என்பது எப்போதும் அதிகாரம் கொண்டவர்களால் எழுதப்படுகிறது. ஆனால் அந்த வரலாற்றின் விளிம்புகளில், பதிவு செய்யப்படாமல் போகும் ஆயிரக்கணக்கான சிறிய வாழ்க்கைகள் உள்ளன.
சாணக்யா அந்தச் சிறிய வாழ்க்கைகளின் எழுத்தாளர்.
அவருடைய மனிதர்கள் பெரிய வரலாற்று நிகழ்வுகளை நிகழ்த்துவதில்லை. அவர்கள் வாழ்கிறார்கள்; காதலிக்கிறார்கள்; துரோகம் செய்கிறார்கள்; உடலுறவு கொள்கிறார்கள்; பொறாமைப்படுகிறார்கள்; அவமானப்படுகிறார்கள்; வேலை செய்கிறார்கள்; குடிக்கிறார்கள்; கனவு காண்கிறார்கள்; சில நேரங்களில் தங்களுக்கே புரியாத முடிவுகளை எடுக்கிறார்கள். இவருடைய கதைமாந்தர்கள் ஒரு ஒழுக்கக் கருத்தின் பிரதிநிதியாக வருவதில்லை. அவர்கள் முரண்பாடுகளின் தொகுப்பாக வருகிறார்கள்.

ஜே.பி.சாணக்யாவைப் பற்றிய எந்தவொரு உரையாடலும் ‘ஆண்களின் படித்துறை’ கதையைப் பற்றிப் பேசாமல் முன்செல்லாது. அந்தக் கதை தமிழிலக்கியத்தில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. ‘ஆண்களின் படித்துறை’ யின் அதிர்ச்சி அதன் பாலியல் உள்ளடக்கத்தில் மட்டும் இல்லை. ஒரு பெண்ணின் உடல் ஆணின் பார்வையில் எப்படி வரையறுக்கப்படுகிறது, அந்த வரையறையை அந்தப் பெண் எவ்வாறு உடைக்கிறாள் என்பதில்தான் அதன் உண்மையான பதற்றம் இருக்கிறது.
இவருடைய ‘கனவுப் புத்தகம்’ தொகுப்பில் உள்ள ‘கண்ணாமூச்சி’ போன்ற கதைகளில் குடிசைப்பகுதி வாழ்க்கை, உறவுகளின் சிக்கல், பாலின உறவுகள் ஆகியவை ஒன்றோடொன்று கலக்கின்றன. ‘கருப்புக் குதிரைகள்’ கிராமியக் கலைஞர்களின் வாழ்க்கையையும் கலைக்கான சமூக மதிப்பையும் நோக்குகிறது என்று ஒரு விமர்சனம் குறிப்பிடுகிறது. ‘அமராவதியின் பூனை’ ஆண்மை, அவமானம், உடைமையுணர்வு ஆகியவற்றின் விசித்திரமான உறவைத் திறக்கிறது.
இதுவே சாணக்யாவின் மனிதர்களை சமூக ஆய்வின் மாதிரிகளாக இல்லாமல் இலக்கிய மனிதர்களாக மாற்றுகிறது. நம்மால் அவர்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
ஆனால் அவர்களை உணர முடிகிறது. இலக்கியத்தின் முதல் வெற்றி இதுதான்.
இவர் ஒழுக்கத்தை பிரசங்கமாக மறுப்பதில்லை. ஒழுக்கம் இயங்கும் இடத்துக்குள் ஒரு மனிதனை நிறுத்துகிறார். அப்போது அந்த ஒழுக்கத்தின் சுவர் தானாகவே விரிசல் விடுகிறது. அதனால்தான் அவரது கதைகளைப் பற்றிய வாசிப்புகளில் ‘அதிர்ச்சி’ என்ற சொல் அடிக்கடி வருகிறது. ஆனால் அந்த அதிர்ச்சி பாலியல் காட்சிகளால் மட்டும் உருவாகவில்லை. நாம் ஒரு மனிதனைப் பற்றி வைத்திருந்த முன்முடிவு உடைந்து போவதால்தான் அது உருவாகிறது.
ஒரு பெண் நாம் அனுமதித்ததைவிட அதிகமாக விரும்புகிறாள்; ஒரு ஆண் நாம் நினைத்ததைவிட அதிகமாக பயப்படுகிறான்; ஒரு ஏழை மனிதனுக்கும் அதிகாரம் வேண்டும்;
ஒரு ஒடுக்கப்பட்டவனுக்கும் பிறரை ஒடுக்க முடியும்; ஒரு கலைஞனுக்கும் காமம் உண்டு; ஒரு கணவனுக்கும் பொறாமை உண்டு; ஒரு தாய்க்கும் உடல் உண்டு… வாழ்க்கையின் இந்த எளிய உண்மைகளே சாணக்யாவின் கதைகளில் சமூக அதிர்ச்சியாக மாறுகின்றன.
இவருடைய மொழிநடையில் சில சமயங்களில் கவிதையின் ஒளி திடீரென விழுகிறது. ஆனால் அது கவிதையாக மாறுவதற்காக அல்ல; ஒரு உடலின் அசைவையோ, ஒரு முகத்தின் இருளையோ, ஒரு அறையின் வெப்பத்தையோ வாசகனுக்கு உணர்த்துவதற்காக.
இவருடைய எழுத்தில் ஓவியரின் கண் இருப்பதாகச் சொல்லலாம். அது இயல்பானதும்கூட. ஓவியத்தில் ஒரு மனிதனின் முகத்தை வரைவது என்பது அவன் முகத்தை மட்டும் வரைவது அல்ல. ஒளி எங்கிருந்து முகத்தில் விழுகிறது என்பதையும் சேர்த்து வரைவது. சாணக்யாவின் கதைகளிலும் அந்த ஒளிநிழலைக் காணமுடிகிறது.
இவரது கதைகளைப் பற்றிய ஒரு விமர்சனத்தில், “நாம் பார்த்திராத முகங்கள், அறிந்திராத நிகழ்வுகள், நம் அனுபவத்திற்கு வசப்படாத வாழ்க்கை சாணக்யாவின் புனைவில் தோன்றுகின்றன” என்று அய்யனார் விஸ்வநாத் குறிப்பிடுகிறார். இதுவே ஜே.பி.சாணக்யாவின் இலக்கிய இடத்தைப் புரிந்துகொள்ள ஒரு முக்கியமான திறவு.

உலக இலக்கியவாதி ஐசக் பாஷவிஸ் சிங்கரின் சில படைப்புகளோடும், அவருடைய எழுத்துவகையோடும் ஜே.பி.சாணக்யாவின் படைப்புகளை பொருத்திப்பார்ப்பதும் இங்கு அவசியமாகிறது. மனிதனின் சமூக முகத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அக உலகத்தை இருவரும் எவ்வாறு புனைவாக்குகிறார்கள் என்பதுதான் இவர்களுக்கிடையேயான இலக்கிய ஒற்றுமை. இருவரின் படைப்புலகிலும் மனிதர்கள் புனிதர்களாகவோ பாவிகளாகவோ முன்கூட்டியே வகைப்படுத்தப்படுவதில்லை. இருவரின் கதைகளிலும் பாலுணர்வு ஒரு அலங்காரப் பொருளாக வருவதில்லை; மனிதனை அவனுடைய சொந்த தர்க்கத்திலிருந்தே விலக்கி, அவன் அறியாத இருண்ட உந்துதல்களின் முன் நிறுத்தும் ஒரு ஆதிமூச்சாக அது வெளிப்படுகிறது.
ஆனால் இவ்விரு எழுத்தாளர்களுக்கு இடையிலான மெய்யுறவு இயல்பாக ஆழம்கொள்ளும் இடம் ஒன்றுண்டு. ஐசக் பாஷவிஸ் சிங்கர் தனது யூத உலகத்தை அதன் புனித நூல்கள், மூடநம்பிக்கைகள், பேய்கள், கடவுள், பாவம், ஆசை ஆகிய அனைத்துடனும் ஒன்றாகப் புனைகிறார்; மிக அன்றாடமான மனித வாழ்க்கைக்குள் பிரபஞ்சத்தின் படைப்பு இருளையும் அதிசயத்தையும் நுழைய விடுகிறார். சாணக்யாவிடமும் யதார்த்தம் தனியாக நிற்பதில்லை; கனவின் நிழலும், நினைவின் தடமும், சொல்லப்படாததன் அதிர்வும் அதன் மீது நதியாழச் சேறுபோல படிந்திருக்கின்றன. சாணக்யாவின் கதைகளில் வரும் உலகம் “நடந்த சம்பவங்களின் உலகம் அல்ல; நடந்துவிட முடியாமல் மனிதர்களுக்குள் தங்கியிருக்கும் சம்பவங்களின் உலகம்”.
ஆனால் இங்கே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. ஐசக் பாஷவிஸ் சிங்கர் மறைந்துபோன கிழக்கு ஐரோப்பிய யூத உலகின் நினைவையும் ஆன்மீகப் பதற்றத்தையும் தனது புனைவில் மீட்டெடுக்கிறார்; நம் ஜே.பி.சாணக்யாவின் மனிதர்கள் தமிழ்ச் சமூகத்தில் நமக்குப் பக்கத்தில் நடந்து கொண்டிருக்கும், ஆனால் இலக்கியத்தின் மையக் கண்ணுக்குப் பெரும்பாலும் புலப்படாத விளிம்புநிலை மனிதர்கள். ஆகவே, சாணக்யாவின் இலக்கிய முக்கியத்துவம் அவர் எதைப்பற்றி எழுதுகிறார் என்பதில் மட்டும் இல்லை; இலக்கியத்திற்குத் தகுதியற்றது என்று ஒதுக்கி வைத்திருந்த வாழ்க்கைப் பகுதிகளை அவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் இலக்கியத்தின் மையத்திற்குக் கொண்டுவரும் அவருடைய படைப்புகளின் வெளிப்படைத் தன்மையில்தான் இருக்கிறது.
சுந்தர ராமசாமியின் ஒரு வரியுண்டு. “என்னைப் பற்றி நான் தெரிந்து கொள்ள எழுதும் எழுத்துகள், தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உபயோகப்படும் என்று எண்ணுகிறவர்கள் என்னுடைய வாசகர்கள்” என. இலக்கியம் பிறரைப் பற்றிய அறிக்கையாகத் தொடங்கி, இறுதியில் நம்மைப் பற்றிய கேள்வியாக மாறும் தருணம்தான் அதன் ஆழம். சாணக்யாவின் கதைகளிலும் அந்த மாற்றம் நிகழ்கிறது. முதலில் நாம் அந்த மனிதனைப் பார்க்கிறோம். பிறகு அவனைப் பற்றி தீர்ப்பு சொல்ல முயல்கிறோம். பிறகு மெதுவாக நம்மையே பார்க்கத் தொடங்குகிறோம். “அவனை இப்படிச் செய்ய வைத்தது என்ன?” என்ற கேள்வி, அதன்பின், “நான் அவன் இடத்தில் இருந்தால்?” என்று மாறுகிறது. அங்கேதான் இலக்கியம் நம் அகத்தைத் தொடுகிறது.
தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றில் புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் வழியாக பல்வேறு வாழ்க்கைத் தளங்கள் இலக்கியத்திற்குள் வந்துள்ளன. தொண்ணூறுகளுக்குப் பிறகு இன்னும் பல எழுதப்படாத வாழ்க்கை முறைகள் சிறுகதையின் மையத்துக்குள் வந்தன. அந்த வரிசையில் அழகிய பெரியவன், ஜே.பி. சாணக்யா ஆகியோர்களை முக்கியமான இலக்கியப் படைப்பாளிகளென விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
1973ல் கடலூர் மாவட்டம் முடிகண்டநல்லூரில் பிறந்தவர் ஜே.பி.சாணக்யா. ஓவியமும் இசையும் பயின்றவர். திரைப்படத் துறையில் பாலுமகேந்திரா, மணிரத்னம் ஆகியோருடன் பணியாற்றியவர்; பல திரைப்படங்களிலும் திரைக்கதைப் பணியில் பங்காற்றியுள்ளார். 1998 முதல் சிறுகதைகள் எழுதிவரும் இவரது கதைகள் காலச்சுவடு, தீராநதி, தலித் உள்ளிட்ட பல இதழ்களில் வெளியாகியுள்ளன. துவக்க காலங்களில் தன்னுடைய கதைகளின் புறவுலகச் சித்திரங்கள் வண்ணநிலவன், ஜி.நாகராஜன், மண்ட்டோ, சுந்தர ராமசாமி ஆகியோரின் தாக்கத்தால் ஆனது என்கிறார் ஜே.பி.சாணக்யா.
என் வீட்டின் வரைபடம், கனவுப் புத்தகம், முதல் தனிமை ஆகிய நூல்கள் இலக்கியப்படைப்புகளென கவனம் பெற்றவை. இவரது ‘ஆண்களின் படித்துறை’ கதையானது கதா–காலச்சுவடு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. இவருடைய ‘புவியீர்ப்பு விசை’ கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Oxford University Press வெளியிட்ட தமிழ் தலித் எழுத்துத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவருக்கு இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருதும் கதா விருதும் கிடைத்துள்ளன. இச்சமகாலத்தில் நாம் இன்னமும் அதிகமாக கவனிக்கப்பட வேண்டிய, வாசிக்கப்பட வேண்டிய இலக்கிய முகம் ஜே.பி.சாணக்யா.
தமிழ்ப்படைப்புலகில் தவிர்க்க முடியாத இலக்கியப் படைப்புகளைத் தந்து, அதன்மூலம் இவ்வாழ்வின் ஆழத்தைக் காணச்செய்யும் முன்னோடி இலக்கிய ஆளுமைகளை மனமேந்தும் வாய்ப்பாகவும், சமகால இளம் வாசிப்பு மனங்களுக்கு அத்தகைய இலக்கியவாதிகளை இன்னும் அணுக்கப்படுத்தும் செயலசைவாகவும் ‘தன்னறம் இலக்கிய விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதுவரையில் எழுத்தாளர் யூமா வாசுகி (2020) , எழுத்தாளர் தேவிபாரதி (2021), எழுத்தாளர் சு.வேணுகோபால் (2022), எழுத்தாளர் பாலைநிலவன் (2023), எழுத்தாளர் ஷோபாசக்தி (2024), எழுத்தாளர் சீனிவாச ராமாநுஜம் (2025) ஆகிய படைப்பாளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இதன்நீட்சியாக, 2026ம் ஆண்டுக்கான ‘தன்னறம் இலக்கிய விருது’ புனைவெழுத்தாளர் ஜே.பி.சாணக்யா அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இருபத்தைந்து ஆண்டுகளாக இலக்கியத்தை நம்பும் படைப்பாளியாக வாழ்ந்து, இலக்கியத்தின் மீதான நம்பிக்கையை இளைய தலைமுறைகளுக்கும் ஏற்படுத்தும் படைப்பாளுமை ஜே.பி.சாணக்யா அவர்களின் மதிப்புமிகு இலக்கியப் பங்களிப்பை வணங்கி இவ்விருதைப் பணிந்தளிக்கிறோம்.
தன்னறம் இலக்கிய விருதளிப்பு நிகழ்வு வருகிற ஜனவரி மாதம், ஈரோட்டில் நிகழவுள்ளது. இந்நிகழ்வில் விருதுத்தொகையாக ஜே. பி. சாணக்யா அவர்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் வழங்கப்படவுள்ளது. மேலும், ஜே. பி. சாணக்யா அவர்கள் எழுதிய படைப்புகள் அடங்கிய புத்தகமொன்றும் இளம் வாசிப்பு மனங்களுக்கு விலையில்லா பிரதியாக (ஆயிரம் பிரதிகள்) அனுப்பப்படும். அவருடைய வாழ்வனுபங்களையும் இலக்கியப் பார்வையையும் பகிர்ந்துகொள்ளும் நேர்காணல் ஆவணக் காணொளியும் விருதளிப்பையொட்டி வெளியாகும்.
“இலக்கியம் சோறு போடுமா? போடும், நான் சாப்பிட்டிருக்கிறேன்” என்று எழுத்தாளர் கி.ராஜநாராயணன் சொன்னதிலுள்ள யதார்த்த உண்மை, “சோற்றால் பசியை வெல்ல முடியும் என்றால், பசியாலும் சோற்றை வெல்ல வேண்டும்தான்” கவிஞர் தேவதேவன் சொன்னதிலுள்ள தத்துவார்த்த உண்மை, “உண்மை என்பது பல பக்கங்களால் ஆனது. நாம் நம்பும் உண்மைக்கு நிகரான இன்னொரு உண்மையும் உண்டு” என்று சொன்ன காந்தியின் நித்திய உண்மை… இவ்வாறு மனதின் முப்பட்டகத்தில் உண்மையின் வெள்ளொளிக்கீற்று விழும்போது நிறைய நிகருண்மைகளாக நிறப்பிரிகை அடைகிறது. அவ்வகையில், உண்மையை நோக்கிய உந்துதல் விழைவும், உண்மையை உணர்ந்த ஓர் எளியமனதின் ஆழமான அதிர்வுமே ஜே.பி.சாணக்யாவின் இலக்கியவுலகம்.
ஒரு எழுத்தாளர் நமக்கு புதிய மனிதர்களை மட்டும் அறிமுகப்படுத்துவதில்லை.
நாம் அறிந்த மனிதர்களைப் புதிதாகப் பார்க்கச் செய்கிறார். ஜே.பி.சாணக்யாவின் முக்கியத்துவமும் இங்கேதான் இருக்கிறது. இவருடைய கதைகளில் நாம் ஏற்கெனவே அறிந்த உலகம்தான். கிராமங்கள், குடிசைகள், கலைஞர்கள், கணவன்–மனைவி, காதல், பசி, உடல், வறுமை, அவமானம், ஆசை.
ஆனால் அந்த உலகத்தின் கதவுகளை அவர் சற்று வேறுபட்ட திசையில் திறக்கிறார்; அதற்குள் நாம் பார்த்திராத இருள் தெரிகிறது; அந்த இருளுள் மனிதர்கள் இருக்கிறார்கள்;
அவர்கள் நம்மைப்போலவே மூச்சுவிடுகிறார்கள்; நம்மைப் போலவே ஆசைப்படுகிறார்கள்; நம்மைப் போலவே தவறுகிறார்கள்;
நம்மைப் போலவே தங்களை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள்; நம்மைப் போலவே தனியாக அழுகிறார்கள். அந்தத் தருணத்தில் சாணக்யாவின் கதை, “அவன் எப்படி வாழ்கிறான்?” என்ற கேள்வியிலிருந்து “மனிதன் இப்படித்தான் வாழ்கிறானா?” என்ற கேள்விக்குச் செல்கிறது. இங்கேதான்… இந்த மானுட மையத்தில்தான்… இவரது சிறுகதை இலக்கியமாகிறது. அக்கணம் வரை கவிழ்ந்திருந்த அடரிருளுள் ஓர் அகலொளி சுடரத் தொடங்குகிறது.
2026ம் ஆண்டுக்கான தன்னறம் இலக்கிய விருது பெறும் படைப்பாளுமை ஜே.பி.சாணக்யா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும்!
தன்னறம் விருதுக் குறிப்பு

