சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளினது உபாசகன் நான். அவரிடம் வெளிப்படும் கட்டுக்கடங்காத கவிஞனின் சாமியாடலை எப்பொழுதும் பிடிக்கும். அவன் திட்டினால் கூட தித்திப்பாய் இருக்கும். அவனது பணிவு பாவனையும் ஆவேசமான இயற்கையும் வசீகரமானது.
தமிழ்ச்சமூகம் கவிஞர்களை, அதிலும் குறிப்பாக இளம் கவிஞர்களின் சிந்தனைகளை பொருட்படுத்துவதே இல்லை. சதீஷின் மாசற்ற இனிப்பு என்ற கவிதையினை தீவிர இலக்கியப் படையில் பகிர்ந்தேன். Gen Z தலைமுறைக்கு அவரைத் தெரிந்திருக்கவில்லை. மேலும் சிலர் யாரிவன், பெரிய தலைக்கட்டா எனக் கேட்டனர். அவர்களுக்காக இந்தக் கவ்வி.
இப்படி ஒரு தீவிரமே இல்லாத தீவிர இலக்கிய நேர்காணலை செய்ய வேண்டுமென எனக்கு விருப்பமிருக்கிறது. செம்மையாகச் செய்யப்படுவது செவ்வி என்பதால், பத்து மீடியாக்கள் ஒரே நேரத்தில் மைக்கைப் பிடித்துப் பிய்த்துக் கேட்கும் பைட் கேள்விகளை கவ்வி என சொல்லலாம் என இருக்கிறேன். முதல் கவ்வியில் நான் கேட்ட கேள்விகளுக்கு சிரத்தையளித்து பதிலளித்திருக்கும் கவிஞன்களில் கற்புக்கரசனான சதீஷ்குமார் சீனிவாசனுக்கு நன்றிகள்.
*
கிரி : உங்களுக்கு பிடித்த நடிகை யார்?
சதீஷ் : சன்னி லியோன். மற்றும் சரிதா.
கிரி : உங்களுக்கு பிடித்த உணவு என்ன?
சதீஷ் : இட்லி.
நல்ல பீஃப் பிரியாணி.
கிரி : கவிஞனாக வாழ்வதா ஒரு குடும்ப ஆணாக வாழ்வதா மகிழ்ச்சியானது?
சதீஷ் : எனக்கு எப்படி வாழ்வதும் உவப்பாக இல்லை.
கிரி : உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்?
சதீஷ் : நிறைய பேர்.
நேர்மையான எல்லாரும்.
நாஞ்சில் நாடன், சாரு நிவேதிதா, மனுஷ்ய புத்திரன், பெருந்தேவி , பேராசான் கார்ல் மார்க்ஸ், அ.மார்க்ஸ், ஜி .கார்ல் மார்க்ஸ்,
எட்வர்ட் செய்யத், பிரம்மராஜன், ஆத்மாநாம் போன்றோர். நானிதை நான் தினமும் நினைக்கும் ஆசான்கள் என்ற ரீதியிலேயே சொல்கிறேன். மற்றபடி நெஞ்சறிந்த எவரும் ஆசான்தான்.
கிரி : உங்களைப் பற்றி நாலு நல்ல வார்த்தை சொல்லுங்கள்?
சதீஷ் : நல்லவன்
பண்பானவன்
பொறுக்கி
மற்றும்…

கிரி : சமூக வலைத்தளங்களுக்கு வெளியே உள்ள உங்கள் வாசகர்கள் உங்களுக்கு இன்ஸ்ரகிராம் இல்லையா எனக் கேட்டு வருகின்றனர். இணையும் திட்டமேதும் உள்ளதா?
சதீஷ் : இன்ஸ்டாவில் இருக்கிறேன்.
அதை அவ்வளவாக பயன்படுத்துவதில்லை.
கிரி : கவிதைக்குத் தேவையானவை எவை? ஒரு சின்ன மெனு சொல்ல முடியுமா?
சதீஷ் : வாசிப்பு
ஒரு குரு அல்லது சில குருக்கள் (வருணாசிரம குரு அல்ல)
தொடர்ந்து எழுதுதல்
நேர்மை
மற்றும்
நேர்மை.

கிரி : உங்களுக்கு ஆண் எழுத்தாளர்களைப் பிடிக்காது என்று சொல்கிறார்களே. அது உண்மையா?
சதீஷ் : பாதி உண்மை அது.
ஆனால் நன்றாக எழுதும் பெண் எழுத்தாளர்கள் தமிழில் நான்கைந்துபேர்தான் இருக்கிறார்கள் .
கிரி : ஒரு கவிஞனாக ஆகாமல் போயிருந்தால் என்னவாக ஆகியிருப்பீர்கள்?
சதீஷ் : அப்படியொன்றை நான் யோசித்தது இல்லை. கவிஞனுக்கு எதிர்பக்கத்தில் வைக்க என்னிடம் எதுவும் இல்லை.
நான் எழுதவந்தது மிகவும் தற்செயலான விபத்துதான். வாசிப்பதை என் கனவுபோலத்தான் பின்தொடர்ந்தேன். அதன் துர் ஆவிபோல எழுத்து வந்து சேர்ந்தது.
ஆனால் ஒன்றை நம்புகிறேன். மருத்துவர் ஆகவேண்டுமென ஒருவர் விரும்பினால், அவர் மருத்துவராக 99 சதவீதம் வாய்ப்பிருக்கிறது.
கவிதையில் அதற்கான சாத்தியம் இல்லையென்றே கூட சொல்லலாம் .
இப்படிக் கூறுவது சரஸ்வதி நாவில் எழுத வேண்டும் என்ற கருத்தை ஒட்டியதும் அல்ல. ஆனால் எழுதுவது நுட்பமானது. எவை எவையோ சேர்ந்து உருவாகும் ஒரு கலவை அல்லது ஒரு தொடர்ச்சியான ஆழ்மன ஏக்கம். அதே சமயம் மானுட பண்பாட்டு எல்லைகளுக்கு உட்பட்டதுதான் எழுதுவதும்.
மேலும் இந்த ஏக்கத்தை, நுட்பத்தை ஒருவர் நடிக்க முடியாது. வெளியிலிருந்து நமக்கு ஒரு நபரால் தரவும் முடியாது. ஒரு தற்கொலை எண்ணம்போல நாமே உருவாக்கிக் கொள்ளும் ஒன்றது.
நான் கவிஞன் ஆகவேண்டுமென்று
விரும்பியதில்லை. மற்றவற்றையும் விரும்பியதில்லை.
கிரி : உங்களுக்கும் அடுத்த தலைமுறை இலக்கியத்துக்கு வந்து விட்டது. இன்னும் ஜூனியர் எனும் உளநிலையில் அலைவதை நினைத்து கூச்சமில்லையா?
சதீஷ் : இல்லை. எழுதும்வரை உடன் எழுதும் எவரும் போட்டியாளர்தான்.
பகையாளிதான். அது எனக்கு ஊக்கமளிக்கிறது.
கிரி : மூத்தோரின் சொல் பேச்சு கேட்கக் கூடாதென்ற உங்கள் உறுதியான நம்பிக்கை எதிலிருந்து வந்தது?
சதீஷ் : அப்படியெல்லாம் இல்லை.
நான் மூத்தோர் என்று மதிக்கிறவர்களின் பேச்சை பாதிக்குப் பாதி கேட்கிற நல்ல பையன்தான்.


