போரிலன் ஆதல் : யதார்த்தன் – செவ்வி

ஈழப் புனைவுகளில் வடிவ கச்சிதத்தை அடைந்தவர் ஷோபாசக்தி. அவருடைய படைப்புகளில் நிகழ்ந்தது ஈழப் புனைவுகளின் ஓர் உச்சம். அவரது நாவல்கள் வடிவத்தால் சிறியவை. சிறு கத்தியால் கச்சிதமாக நறுக்கப்பட்டவை. ஆனால் புனைவினால் சாத்தியமான உச்ச எல்லைகளைத் தொட்டு மீளக் கூடியவை. போரின் வன்முறை, அராஜகம், அதிகாரத்தின் முன் சமானியனின் தத்தளிப்பு, நவீன அரசின் குரூரம் போன்ற தனிமனித அனுபவ எல்லைக்குள் இருந்து அமைப்பை, அதிகாரத்தை விமர்சனபூர்வமாகப் பேச அவருடைய சிறிய நாவல் வடிவங்கள் தோதானவை. அதனை இன்னுமே கூர்மையும் பகடியுமாக கையாண்டது ஷோபாசக்தியின் தனித்துவம். கொரில்லா, ம், சலாம் அலைக் போன்றன வடிவத்தினாலும் அந்த வடிவத்தினுள் இயைந்த உள்ளடக்கங்களாலும் புனைவில் செறிவானவை. ஆகவே வெற்றிகரமான முன்மாதிரிகள் ஆகக் கூடியவை. அப்படி அவை பின்னால் எழுந்த வந்த பலருக்கும் வடிவ முன் மாதிரிகளாக இருக்கின்றன. 

ஈழத்தின் செறிவான புனைவுகள் என்று  நுண்ணுணர்வுள்ள ஓர் இலக்கிய வாசகருக்கு வாசிக்கக் கிடைப்பவை இத்தகைய சிறிய வடிவங்கள் தான். லங்காபுரி ராஜா, தனி ஒரு வீடு, குடை நிழல், கோவிந்தன், நிலக்கிளி, கொரில்லா,  ம், ஆறாவடு, நஞ்சுண்ட காடு, கொலம்பசின் வரைபடம், கல்விரல், போன்றவற்றைச் சொல்லலாம். ஆனால் ஈழம் தவற விட்ட இன்னொரு வகைப் புனைவும் இருக்கிறது. பெரு நாவல்கள். வடிவச் செறிவான சிறிய நாவல்கள் ஒரு வகை என்றால், விரிந்த வாழ்க்கைச் சித்திரத்தை உருவாக்கும் பெரு நாவல்கள் இன்னொரு  வகை.  பக்க எண்ணிகையால் அல்ல,  அவை தங்கள் மொழியால் அள்ளியெடுக்கும் விரிந்த வாழ்க்கைப் பார்வையால் புனைவின் பெரு விரிவை அடைபவை. அப்படியான பெரு நாவல்கள்  ஈழத்தில் அரிது. நம் இலக்கிய முன்னோடிகளிடம் கூட பெரு நாவல் முயற்சிகள் இல்லை. காரணம் பெரும்பாலும் அவர்கள் நவீனத்துவர்கள். அதன் முக்கியமான இயல்பு தனிமனித நோக்கு. அல்லது மனிதாபிமானத்தின் குரல்.  மு.தளையசிங்கம், எஸ்.பொ போன்றவர்களின் நாவல்கள் கூட அளவிலும், வாழ்க்கை நோக்கினாலும் சிறியவை. கே.டானியல் ஓரளவு விரிவான வாழ்க்கையை எழுதியிருக்கிறார். அவருடைய நாவல்களின் எல்லை சோசலிச யதார்த்தவாதம். ஆனால் அதை மீறும் பல பாண்பாட்டு அம்சங்களும் கே.டானியலிடம் உண்டு. அது அவருடைய தனித்துவம்.

முழுமையான அர்த்தத்தில் நம்மிடம் விரிவான யதார்த்தவாத நாவல்கள் ஒன்று  கூட இல்லை. ஒரு குடும்பம் சிதைகிறது, விஷக் கன்னி, நீலகண்ட பறவையைத்தேடி. ஆரோக்கிய நிகேதனம், அரை நாழிகை நேரம், அரசின் மீதான எள்ளல் நிறைந்த தர்பாரி ராகம். அல்லது  நிகர் வாழ்வனுபவமாக எழுதப்படும் பூமணி, சோ.தர்மன், கண்மணி குணசேகரன் போன்றவர்கள் எழுதும் இயல்புவாத நாவல்கள். நம்மிடமிருக்கும் ஓரளவுக்கு பெரு நாவல் வரிசை என்றால் தேவகாந்தன் நாவல்கள், நோயல் நடேசனின் அசோகனின் வைத்தியசாலை, பின்னர் சயந்தனின் ஆதிரை. பிறகு யதார்த்தனின் நகுலாத்தை. தேவகாந்தன், சயந்தன் இருவரது நாவல்களும் யதார்த்தவாத நாவல்கள். புனைவு சிடுக்கு, படிமமாக்கல், உன்னதம் போன்ற புனைவின் அம்சங்களை விட பெரும்பாலும் சம்பவங்களால் ஆனவை. ஆனால் யதார்த்தவாதத்திற்கு வேண்டிய விரிவான புறச்சூழல், துல்லியமான நுண் தகவல்கள், விரிவான மனவோட்டங்கள், துல்லியமான கதாபாத்திரங்கள்  போன்ற அடிப்படை அம்சங்களில் குறைபாடுடையவை. அவற்றின் கதைப்பின்னல் என்பது நீள் கதையிலும் கொஞ்சம் மீறிய சம்பவங்களின் தொடர் வரிசைதான். நோயல் நடேசனின் அசோகனின் வைத்தியசாலை நல்ல நாவல். அதில் யதார்தத்தை மீறும் பல அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் அது விலங்கு மருத்துவம் என்ற தொழில் எல்லைக்குள் மட்டுப்பட்டிருப்பதால் அதில் பெருநாவலுக்கான விரிவு சாத்தியமாகவில்லை. ஆக, யதார்த்தனின் நகுலாத்தை மட்டுமே அதன் முழுமையான அர்த்தத்தில் பெரு நாவல் எனும் வகைமைக்குள் வரக்கூடியது. விரிவான வாழ்க்கைச் சித்திரம். புறச்சூழல் விபரணைகள், தொன்மங்கள், வரலாறுகள், சிறு தெய்வங்கள், நம்பிக்கைகள் என அதன் புனைவுக் கவனம் விரிந்தது. அது ஓரளவிற்கு விரிவாகவே வாழ்வை எழுதி இருக்கிறது. குறிப்பாக போர் நிலத்தின் வாழ்வை. அதன் மனிதர்களை, அவர்களின் பல்வேறு உணர்வுகளை. இதுவே ஈழப் புனைவில் யதார்த்தனின் தொடக்கம். ஈழ நாவல் தன் பரிணாமத்தில் தவற விடுபட்ட ஒரு மரபணுத் தொடர்பை தொட்டெடுத்ததே அவருடைய முதல் நாவல் முயற்சி.

நகுலாத்தையில் தொடங்கிய புனைவுகள் இப்போது தோறை வரை வந்திருக்கிறது. நகுலாத்தை மொழி வட்டார வழக்கின் பனி புகாரினுள் அமிழ்ந்திருந்தது. அதனால் அதன் எல்லைகள் குறுகியிருந்தன. குறிப்பாக தொன்மங்கள், நாட்டார் தெய்வங்கள் போன்றன சம காலத்துடன் புனைவில் இணையும் இடங்களில் வட்டார வழக்கு அவரைக் கைவிட்டிருந்தது. ஆனால் தோறையில் வட்டார வழக்கின் சத்தான கூறுகளுடன் செவ்வியல் தமிழும் கலந்து விட்டிருக்கிறது. அது புகார் கலையும் போது மின்னும் காலை வெளிச்சமாகச் சொல்முறையில் வெளிப்படுகிறது. சொல் முறை, வெளிப்பாட்டில் இருந்த வட்டாரச் சிடுக்குகள் மொழியால் களையப்பட்டதும் தோறை நாவல் சரளமாக வாசிக்க முடிகிறது. நகுலாத்தை மொத்தமாக வாழ்வைத் தொகுத்தளித்திருந்தாலும், சம்பவங்கள் என்பதற்கு அப்பாலான ஒரு புனைவுத் தருணம், நாடகீயம், அல்லது கவித்துவ உச்சம் போன்றவற்றை அடைய முடியவில்லை. காரணம்  சித்தரிப்பு மொழியின் வட்டாரச் சாய்வு. அந்தப் போதாமையைச் சரியாக இனம் கண்டு, மேலெழுந்த  இடத்தில் அவர் போரிலன் ஆகிவிடுகிறார். ஈழப் போரை அனுபவம்- பதிவு என்ற எல்லைகளைக் கடந்து புனைவின் பகுதியாக்க முடிகிறது.  இங்கிருந்தே அவரது புதிய புனைவுக் காலகட்டம் தொடங்குகிறது. கனமான ஆனால் உணர்சிகரமான இரும்புக் கூண்டை பிராயத்தனதுடன் உதறிப் பறக்கும் பரவச கணம். காய் கனிந்து காம்பிலிருந்து உதிரும் தருணம். போரை விலகலுடன் அணுகும் தன்மை. அந்த உருமாற்றத்தின் பாதையை தொகுத்தளிக்கிறது இந்த நேர்காணல்.

பழந்தமிழ் இலக்கிய வாசிப்பினூடு, நவீன புனைவு மொழிக்கான தடம் தேடும் பயணத்தில் போரின் பாடுகள் பின்னடைந்து போக, உணர்ச்சிப் பின்னணியில் அடக்கமாக இருந்த வாழ்வின் நுண்-தருணங்கள் மேலெழுந்து வருகின்றன. தோறையில் ஒரு சித்தரிப்பு. போர் முடிந்து எல்லோரும் தறப்பாள் முகாங்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மழைக்காலம். சரியாகப் பராமரிக்கப்படாத மலக்குழி தூர்ந்து, வயதான பெண் அதனுள் வீழ்ந்துவிடுகிறார். மீட்க முடியவில்லை.  முடிவில் எல்லோருமாகச் சேர்ந்து தூர்ந்த மலக்குழியின் மேல் மண்ணை அள்ளிப் போட்டு வயதானவரை மூடிவிடுகிறார்கள். மழை நீர் வடிந்தோடிய பின்னர் மலக்குழி சிறு மேடாக நீரோடிய செதில் வரிகளுடன் கிடக்கிறது. பின்னொரு நாள் கனமான மனநிலையில் நாவலின் ஓர் கதாபாத்திரமான ‘தாலிக்கொடி’ அந்தச் சிறு மேட்டைப் பார்க்கிறான். அங்கே  வெள்ளை நிறப் பூக்கள் பூத்திருக்கின்றன. பட்டிப் பூக்கள். ஓர் அவலத்தின் மேல் பூப்பரவல் அலையாகப் படர்ந்திருக்கிறது. உடல் புதையுண்ட மேட்டில் பூந் தளிர்கள். இப்படிப் பல நுண் தருணங்களை தோறையில் அவரால் தொட்டெடுக்க முடிந்திருப்பது; அவர் போரிலன் ஆகிவிட்டதாலேயே.

தர்மு பிரசாத்

03.11.2026

முழுமையான செவ்வியை வாசிக்க : போரிலன் ஆதல் – யதார்த்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *