சி. அ. யோதிலிங்கம் : அஞ்சலி

தமிழ்த்தேசியம் சார்ந்த நெடுங்கால அறிவுப் பங்களிப்பையும் களச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டவர் சி. அ. யோதிலிங்கம். அவரது தமிழ்த்தேசியம் உறுதியானது. அதை அவர் முழுமையாகவே நம்பினார். இறுதி வரை அவர் தனது நிலைப்பாடுகளுக்கென உழைத்துக் கொண்டிருந்தார். 

அவரது நூல்கள், சிறு பிரசுரங்கள் அரசறிவியலின் அடிப்படைகளையும் தமிழ்த்தேசியத்தின் சமகாலம் வரையிலான தொடர்ச்சிக்கு அதன் சிந்தனைப் பங்காளிகளாக இருந்த சமூகத்தின் அரசியல் தரப்பின் கருத்துகளின் தொடர்ச்சியாகவும் இருந்தன. மு. திருநாவுக்கரசு, நிலாந்தன் போன்றவர்களின் இன்னொரு மரபு. 

யோதிலிங்கம் அதிர்ந்து பேசாதவர். சினேகமான புன்னகையும் கனிவும் கொண்டவர். அந்தக் கால மாஸ்ட்டர் என்பதால் சீராக படிய வாரி, துணி ஜீன்சும் கசங்காத சேர்ட்டுகளும் உடுத்தியிருப்பார். 

அவரது மகள் கவிஞர் யாழினி புதிய சொல்லில் இதழாசிரியர் குழுவில் பங்காற்றினார். அவரிலும் தந்தையின் நல்லியல்புகள் சுவறியிருந்தன. யோதிலிங்கத்தை நான் சில கூட்டங்களில் பார்த்திருக்கிறேன். மகளின் கட்டுரைகள் வந்த இதழ்களை அழுத்திக் கேட்பார். காணும் பொழுதுகளில் இதழ்கள் சிலதைக் கொடுத்ததற்கு அப்பால் நானும் அவரும் எங்கும் விவாதித்துக் கொண்டதில்லை. அவர் வலிந்து மோதிக் கொள்பவரில்லை என்று தோன்றுகிறது. ஆனால் உறுதியாகத் தன் கருத்துகளை சிறு முழக்கம் போன்ற குரலால் சொல்லுவார். 

சி. அ. யோதிலிங்கம் விடுதலைப் போராட்டம் லட்சியவாதமாக எழுவதற்கு முன்னிருந்து இன்று வரை நீளும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைப் போராட்டத்தின் மூத்த குரல்களில் ஒருவர். அவருக்கு என் அஞ்சலிகள். அவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கும் ஆறுதல்கள். 

சி. அ. யோதிலிங்கம் நூல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *