சேரன் : அஞ்சலி

ஈழ விடுதலைப் போராட்டத்தின் நெருப்பையும் சாம்பலையும் அதனதன் உச்சியில் ஆர்த்தெழும் உயரத்தில் எழுதிய பெருங்கவிஞர் சேரன் இயற்கை எய்தினார். அவருடைய குரல் ஒரு காலகட்டத்தின் நெருப்பு வாள். நான் ஆரம்ப காலத்தில் அவருடைய கவிதைகளை விமர்சித்து எழுதியிருந்தேன். பின்னர் அதன் காலம், அதன் இணைவு, கவி மனத்தின் பித்து என அவரை மீண்டும் அறிந்து கொண்டேன். 

சேரன் நட்புடனும் இனிமையுடனும் பழகுபவர். அவரது குரலில் பெண்மையும் கரகரப்புமான தித்திப்பு உண்டு. இளங்குருத்துச் சிரிப்பு, கவிஞனின் மதர்த்தெழுந்த அசகாய நெஞ்சு. சில நாட்களுக்கு முன்பு சுங்கத்தின் தடுத்து வைப்புகளுக்கு எதிராக எழுத்தாளர்களின் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருந்தோம். அதில் அவரது ஒப்பம் உண்டு. முடிவடையாத ஒரு நெடும் போராட்டத்தில் தொல்காலப் பாணர் மரபிலிருந்து புறப்பட்டு வந்த நவீன கவிஞன் சேரன். இன்னும் நீண்ட நாள் வாழ்ந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. போய் வாருங்கள் பெருங்கவியே. இந்த நிலத்தின் அனைத்திற்கும் நீயொரு பாணனாய் வாழ்ந்தாய். அஞ்சலிகள் மூத்தவரே.

சேரன் கவிதைகள் பற்றி : பொன் வாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *