நான் இறந்து போகிறபோது
என்ன நடக்கும்?
அது ஒரு காலைப் பொழுதானால்
நிலவு எழும்
மாலையானால்
தேர்க்கால்கள் ஒடிந்து விழக்
காத்திருக்கும் சூரியனின்
கண்ணசைவில் காலத்தின் நிறம் பிரியும்
இரவெனில்
பறவைகள் தூக்கம் தொலைத்து விழித்தெழுந்து
பாடும்
அந்தப் பாடலின் அலைகளில்
சாக்குருவியின் இறகுகள் தீப்பட்டெரியும்.
நான் இறந்து போகிறபோது
என்ன நடக்கும்?
காற்றில்லாத போதும்
எல்லாக் கதவுகளும் சாளரங்களும்
தாமாகத் திறந்துகொள்ளும்
சங்கீதமும் அழுகையும்
ஒன்றை வெட்டி ஒன்றென மாறி மாறி எழும்
நான் இறந்து போகிறபோது
நிசப்தத்தின் உள்ளொலியில் கவிதை எழுகிறது
நான் இறந்த பிற்பாடோ
தலைவாசலை மூடாதே
கிடுகு வேலி பிரித்த மாற்று வழியும் தேவையில்லை
நான் போக
வெறும் நீரைச் சிந்தவிடு
என்னுடலில்
நான் எரிவேன்
நான் இறந்த பிற்பாடு
புற்களின் கண்ணீர்த்துளி
இருளின் குருதி
பூமியின் நரம்புகளில் துயர் மீட்ட வரும்
கடலோரக் காற்று
வெளியில் ஆடும் விளக்கு.
சேரன்
*இந்தக் கவிதையை கமலாபரன் ஞாபகப்படுத்தினார். என் மூத்தோனுக்கென அஞ்சலியாக இந்த பதிலை எழுதியிருக்கிறேன்.
ஒரு கவிஞன் இறக்கிற போது
அதுவரை அவனை மடியில் கிடத்தி
தலைகோதிய அன்னையை
அவன் தன் அத்தனை
சொற்களாலும் எழுந்து பறந்து
எச்சில் தெறிக்க ஒரு
முத்தமிடுகிறான்.
அவனது கவிதைகள் மீண்டும்
ஒரு முறை மொழியில்
விம்மிச் சிலிர்த்தெழுகின்றன.
அவனது தோழர்கள் சொற்களைக்
கட்டிக் கொண்டு அரற்றுகின்றனர்.
அவனது காதலிகள் அவனை
நினைத்து உடைந்து போகின்றனர்.
அவனது குருதியினர் நெருப்பை
இமைகளால் அருந்துகின்றனர்.
அவனது பித்தும் காதலும்
மீண்டும் ஒரு முறை காலத்தின் பேராற்றில்
நுரைத்து வெடிக்கிறது.
அவன் புன்னகையுடன் அலைகளின்
மேல் ஆர எழுகிறான்.
பனைமரங்கள் புல்நுனிகளெனத்
தாழ
அவனது கொக்குகளின் தவத்தின்
மேல் நிழல் விழ
அவனது மக்களின் மேல் கைகளை
விரித்தபடி
அவன் கூவுகிறான்
அவன் விம்முகிறான்
அவன் கனிகிறான்
அவன் பொழிகிறான்
அவனது குடியினர் திரும்பக் கூவினர்
நீ எங்களவன்
நீ எங்கள் பெரும்பாணன்
நீ எங்கள் அறம்.
(சேரனுக்கு)
– கிரிசாந்

