வாசிப்பிலிருந்து சமூக மனிதருக்கு

வாசிப்பிலிருந்து சமூகமனிதருக்கு : குமாரதேவன் என்னும் சகபயணி 

குமாரதேவனை எப்பொழுது முதன் முறையாகச் சந்தித்தேன் என்பது நினைவில் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன் என்பது மட்டும் தெரியும். அவர் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் பழகத் தொடங்கி எங்களில் ஒருவராக ஆனார். இலக்கிய நிகழ்வுகள், சமூகம் சார்ந்த உரையாடல்கள், பயணங்கள் என்று எம்முடன் சக பயணியாகத் திரிந்த அந்த மனிதனை நினைவுகூரும் நேரமிது. வேறு யாரையும் போலவோ, எங்களைப் போலவோ அல்லது அவரே கூட எதிர்பார்த்திராதது போலவோ அவர் மரணித்து விட்டார். இறுதி வரை அவர் நம்பியிருக்கவில்லை, தான் இவ்வளவு வேளைக்கு விடைபெற வேண்டியிருக்குமென்பதை. 

குமாரதேவனை எதற்காக நினைவு கூர வேண்டும்? அவரின் சமூக மதிப்பென்ன? அவரின் எதிர்காலப் பங்களிப்பென்பது என்ன? 

குமாரதேவனை எதற்காக நினைவு கூர வேண்டும்? 

குமாரதேவனை ஒரு வாசகராக இந்தச் சமூகம் அறியும். இது பிறிதொருவருக்கு நம் காலத்தில் கிடைக்க அரிதாயிருந்த இடம். வாசிப்பவர்களில் அரைவாசிப் பேர் எழுத்தாளர்கள்,  மிச்சமிருக்கும் வாசகர்களும் பத்திரிகை வாசிப்பதோடு சரி. அதற்கு மிஞ்சிய இலக்கிய, சமூக வாசிப்பென்பது ஒன்றாகக் கலந்த முதிர்ந்த வாசகர்களைக் காண்பது அரிது. இந்த நாட்டின் கடந்த காலமென்பது படுகொலைகளும் வாதைகளும் நிரம்பியது, இழப்புக்களையும் அவநம்பிக்களையும் பலருக்கும் தந்துவிட்டுப் போயிருப்பது. ஆனால் இவ்வளவற்றையும் கடந்து வந்த ஒரு முதிய மனிதர், இறுதி யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில், வாசகத் தரப்பின் முதன்மையான குரல்களில் ஒன்றாகத் தன்னுடையதை மாற்றினார். தன்னுடைய இருப்பிற்காகவோ அடையாளத்திற்காகவோ தான் அவர் இதெல்லாம் செய்தாரா என்றால், இல்லவே இல்லை. அவர் அந்தச் செயற்பாடுகளில் முற்றுமுழுதான மனதுடன் பொருந்தியிருந்தார். அதுவொரு வாழ்வு முறை. குமாரதேவன் நம் சமூக இருப்பிற்குள் நிகழ்ந்த நெகிழ்ச்சி. 

யோசித்துப் பார்த்தால், பள்ளிக்கல்வியை இடையிலே விட்டவர். கல்வி என்பது அறிதல் என்பதை உணர்ந்தவர். தீரா அறியும் ஆர்வம் கொண்டவர். குடும்பப் பின்னணியால் வியாபாரத்திற்கும் வந்து, பின்னர் நாட்டின் கலவரங்களால் விரட்டியடிக்கப்பட்டு, முப்பத்தி ஐந்து வருடங்களாக சண்முகம் கடையில் இருந்து, வாழ்ந்து, தன்னுடைய இறுதிக்காலம் முழுவதையுமே அனைத்துத் தரப்பினருடனுமான இணைவிற்கும் கருத்தைப் பகிர்வதற்குமான வாய்ப்பிற்குமாக மாற்றிக் கொண்ட ஒருவர், அவர் யாருடன் இருக்கிறாரோ அவர்களுக்கெல்லாம் பலமாயிருக்கும் முதிர்ந்த ஆத்மா அவருடையது. அவர் வழிகாட்டி மட்டுமல்ல, அவர் ஒரு சக பயணியும் என்பதே இங்கு மிக முக்கியமானது, அவர் தன்னுடையதல்லாத பிற வெளிகளையும் இணைக்கும் சக்தியாக இருந்தார். 

வயது முதிர்ந்ததும் வீட்டில் ஓய்வாக இருப்பதோ, அல்லது பழைய காலங்களை இரை மீட்டிக்கொண்டிருக்கவோ, அதைத் திரும்பத் திரும்பச் சொல்லவோ அவர் முயலவில்லை. மாறாக அவர் நிகழ்காலத்திற்குரிய மனிதர். கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு எது தேவையோ அதை மட்டும் தான் உரையாடலுக்குள் எடுத்து வருவார். அவருடனான உரையாடல்கள் எங்களை சமூகம் பற்றி வேறு கோணங்களில் இருந்து சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. அவருடைய வாதங்கள் அடிப்படை நிறைந்தவை. அதை எதிர்ப்பதென்பது உழைத்தே செய்யப்பட வேண்டியது. அவர் எந்த வாதங்களினதும்  நிலைப்பாடுகளினதும் உழைப்பை வலியுறுத்தியவர். “நீங்கள் சும்மா சொல்லிப்போட்டுப் போகேலாது தானே” என்பார். சமூகத்தில் எந்த ஒன்றை முன் கொண்டு செல்வதற்கும் தேவையான அறிவுழைப்பை அவர் கொண்டிருந்தார். தெரியவில்லை என்றால் யாரிடமும் கேட்டு அறியத்  தயங்க மாட்டார். மற்றவர்களை மதிப்பதென்பதை சடங்காகச் செய்பவரில்லை. அவரது உள்ளத்தின் இயல்பு அது. அது நம் காலத்தில் நாம் இழந்து கொண்டிருக்கும் முக்கியமான பண்புகளில் ஒன்று. புதிய தொழிநுட்பங்களும் இந்த வாழ்க்கை முறையும் பெருமளவில் மாறிவிட்டிருக்கின்ற சூழலில், ஒவ்வொரும் தனித் தனி ஆளாக மாறிக்கொண்டு வரும்போது, தனக்கென்ற தனி உலகில் மூழ்காமல் அதிலிருந்து மீண்டு கூட்டுவாழ்க்கையையும் சேர்ந்து செயலாற்றுவதையும் அவர் நம்பினார். அவர் தன்னுடைய இறுதிக்காலம் வரை ஒரு சமூக மனிதராகவே தன்னை நிறுத்திக் கொண்டார். இப்போதிருக்கின்ற காலச்சூழலில் வேறு சமூக அடையாளங்களுடன் ஒருவர் இந்த இடத்திற்கு வந்து சேர்வதற்கு பலவழிகள் இருக்கலாம். அவர் வாசிப்பின் வழியும் அறிதலின் வழியும் வந்து சேர்ந்திருக்கிறார். அதன் சமகால அடையாளமாக மாறியிருக்கிறார். 

விதை குழுமம் அல்லது புதிய சொல்லைத் தெரிய முதலே அவருக்கு வேறு பல சமூக அமைப்புகளையும், அரசியல் தரப்பினரையும் தெரியும். யாருடனும் எங்களுக்கு அருகில் இருந்து சேர்ந்து பயணித்ததை போல் அவர் செல்லவில்லை. இதில் நான் அவதானிப்பது பிற அமைப்புகளை விட  பண்பாட்டு இயக்கங்களின் மீதே அவரின் ஆர்வம் இருந்தது. அவ்வகையான செயல்கள் மீதே அவர் அதிக கரிசனத்துடன் எதிர்வினையாற்றினார். அந்த வழியில் வாசிப்பு அவரை எங்களுக்கு அணுக்கமாக்கியிருந்தது. 

மூத்த தலைமுறையினருக்கு அவருடைய இருப்பும் வாழ்வுமென்பதும், இன்னும் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பும், காலமும் இருக்கிறது என்பதைச் சொல்வதாகவே நான் பார்க்கிறேன். அவநம்பிக்கையுடன் வாழ்க்கையை அணுகுவதற்கு வாசிப்பு எங்களை நகர்த்துகிறதென்றால், நாங்கள் சரியானதை வாசிக்கவில்லை, தேர்ந்தெடுத்து வாசிக்கவில்லை, வாசித்ததைத்  திறந்த மனதுடன் உரையாடவில்லை. தன்னுடைய அபிப்பிராயங்களை மாற்றுவதற்கு தயாராயில்லை என்றே எண்ணுகிறேன். குமாரதேவன் இத்தனைக்கும் எதிரானவர், பரந்து பார்ப்பார், ஆனால் தேர்ந்தே வாசிப்பார். இன்று அநேகமான நம் பள்ளிக்கூடங்களும் கல்வி நிலையங்களும் வாசிப்பதை ஒரு கடமையாகவும், நிர்ப்பந்தமாகவும் வலியுறுத்தி மேம்போக்கான வாசிப்பையே புதிய தலைமுறையினருக்குக் கையளிக்கின்றனர். குமாரதேவன் ஏன் வாசிக்க வேண்டும் என்பதற்கு சாட்சியாக  வாழ்ந்த  ஒரு உதாரணம். அவருடைய இறுதிக்காலத்தில் முன்னெப்போதையை விடவும் அதிகமாக  பலரும் அவரின் அறிவைப் பகிர்ந்துகொள்ள அவருடன் உரையாட ஆரம்பித்திருந்தனர். ஆனாலும் கூட அவர் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. அவரை நம் குழந்தைகள் அறிய வேண்டும். இப்படி ஒருவர் வாழ்ந்தார், நிரம்ப வாசித்தார். ஜனநாயக பூர்வமாக உரையாடினார், முதுமை என்பது உடலுக்குத் தான் என்பதை நிரூபித்தார். சிந்தனையில் சமகாலத்தில் வாழ்ந்தார். தான் கற்றதை அறிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டேயிருந்தார். தான் நம்பியவற்றுக்காகச் செயலாற்றத் தயங்கவில்லை. அதற்காகத் தன்னுடைய நம்பிக்கைகளிலேயே அடைபட்டுக் கொண்டிருக்கவும் இல்லை. இப்படியாக, ஒரு நல்ல ஆசிரியருக்குரிய பண்புகள் அவரிடமிருந்து பரவிக்கொண்டேயிருந்தன. எப்படிக் கற்பது, கற்றதை எப்படிப் பயனுள்ள ஒன்றாக மாற்றிக்கொள்வது என்பதை அவர் எங்களுக்கு கற்பித்திருக்கிறார். அதை அவர் வாயால் சொல்லவில்லை. வாழ்ந்தே சொன்னார். அழுத்தும் தொனியிருக்காது குரலில், சுவாரசியம் குறையாது. தான் சொல்லும் சொற்களாகவே முழுதாக மாறி உடலும் உயிருமாக அவர் விபரிக்கும் கதைகள் சலிப்புத் தட்டுவதேயில்லை. அவரின் உடல்மொழி ஒரு நடனம் போலிருக்கும். அது உரையாடும் பெருவிருப்பின் நடனம். 

நாங்கள் உடல் களைக்கும் தூரங்களைக் கடந்து பயணம் போகும்போதெல்லாம் மனம் களைக்காத குமாரதேவன் என்ற சகபயணி எம்முடன் இருப்பது எங்கள் பயணங்களின் ஆழங்களை விரிவாக்கிக் கொண்டேசென்றது.         

குமாரதேவனின் சமூக மதிப்பென்ன? 

மேலே எழுதியிருப்பவற்றைத் தொகுத்து, ஒரு வாசகராக, மூத்த தலைமுறையினராக, அறிவையும் வாசிப்பையும் செயலையும் தனக்கானதாக மாற்றிக்கொள்ளாமல், அதனைப் பணப்பெறுமதியாகக் கணக்கிடாமல், சமூகத்திற்கானதாக மாற்றியிருப்பது அவருடைய முதன்மையான பங்களிப்பு. அவர் கைக்கொண்டிருந்த சமூக அறம் அது. மற்றவர் பயனுற வாழ்வதற்கான வாசிப்பு அது, மற்றவர்களில் தன்னைக் கண்டதன் அறிதல் அளித்த பரவசம். இப்படியொரு வாழ்வும் சாத்தியமாகியிருக்கிறது என்பதே அவர் தனது இருப்பின் மூலம் சமூகத்தில் நெகிழ்த்திய இடைவெளி. 

அவர் பணியாற்றிய இடம், குடும்பம், தனது நண்பர்கள் என்று எல்லா இடங்களிலும் அவர் தன்னுடைய வாசிப்பையும் சமூகத்தின் அசைவியக்கங்களையும் பகிர்ந்து கொண்டேயிருந்தார். பல எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் தாங்கள் பணியாற்றும் இடத்தில் ஒருவராகவும், வீட்டில் ஒருவராகவும், சமூகத்தில் இன்னொருவருமாக பிளவுண்டு வாழும் வாழ்க்கையையே வாழ நேர்கிறது. இவ்விடத்தில் இதன் மூலம் எந்த அடையாளமும் கிடைக்காதென்ற போதும் வாசகராக, சக மனிதரை நேசிக்கும், நேசத்தைப் பரப்பும் ஒருவராக தன்னுடைய எல்லா வெளிகளிலும் தன்னுடைய நம்பிக்கைகளை அவர் விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார். சண்முகம் அண்ணையுடன் கதைக்கும்போதோ அல்லது அவருடைய உறவினர்களுடன் கதைக்கும் போதோ அவர்களுக்கு அவரின் செயல்பாடுகள் பற்றித் தெரிந்திருந்தது, அவருடைய இரசனை, வாழும் முறை, சேர்ந்து திரியும் நண்பர்களின் பெயர், அவர்களுடனான சில நினைவுகள் என்று எங்களையும் அவரின் குடும்பத்துடன், பணியாற்றும் இடத்துடனும் இணைத்திருக்கிறார். இதை ஒருவர் ஒருநாளில் செய்துவிட முடியாது.  அதற்கான பயணமும் அக்கறையும் நீண்டது. என்னளவில், அவர் வாழ்க்கையின் இழைகளைப் பின்னத் தெரிந்த ஒரு நெசவாளி. சமூகத்தையும் குடும்பத்தையும் வேலையையும் பிணைத்திருக்கிறார். இதுவொரு முக்கியமான புள்ளி. இன்று இருக்கும் யாருமே, பணியையோ, குடும்பத்தையோ வேறொன்றாகவும், சமூகத்தை இன்னொன்றாகவும் அணுகும் இடத்திலிருந்து, எல்லாவற்றையும் இணைக்கும் கூட்டு வாழ்க்கையை அவர் பின்னியிருக்கிறார். அதை அவர் சாத்தியமாக்கியிருக்கிறார். நாம் அவரிடமிருந்து கற்க வேண்டிய அறிதல் அது. 

அவரின் எதிர்காலப் பங்களிப்பென்பது என்ன ? 

குமாரதேவன் மட்டுமல்ல, யாரையும் நாம் ஏன் சமகாலத்தில் நினைவுகூரவோ, ஆவணப்படுத்தவோ, அடுத்த தலைமுறைக்குக் கடத்தவோ வேண்டுமென்றால் அப்படிச்செய்வது  வழியாகவே சுகுமாரனின், “சொல்லித் தந்ததோ கற்றுக் கொண்டதோ போல இல்லை வாழ்க்கை” என்ற கவிதை வரியைப் போல், அது புதிதாக, முற்றிலும் புதிதாக வாழ்க்கையை வாழமுடியும் என்பதை வாழ்ந்து நிரூபிக்கிறவர்களை நினைவுகூர்வதனூடாக அதற்கான சாத்தியத்தினை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகவே.  அதன் மூலம் நம் சமூக அறங்களை ஒழுங்குபடுத்துகிறார்கள். விழுமியங்களை ஆழப்படுத்துகிறார்கள். அதன் மூலமாக எதிர்காலத்திற்கானவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்கிறார்கள். குமாரதேவன் அப்படி ஆகிய ஒருவர். 

வாசிப்பிலிருந்து ஒருவர் சமூக மனிதராக மாறும் பாத்திரம் அது. 

மனிதர்கள் தனித்தனி ஆட்களாகச் சுருங்கி கொண்டு போகும் காலத்தில்  குமாரதேவன் சேர்ந்து பயணிக்க அழைக்கும் குரலாயிருப்பார். மனிதர்கள் கருத்துக்களால் துருவங்களாகும் போது உரையாடலாம் என்று நம்பிக்கையளிப்பார். அறிவையும் வாழ்வின் சமூக அடைவுகளையும் பணத்தின் மூலம் அளவிடும் ஒரு சமூகத்தில்  அதற்கு மாற்றான வேறொரு வாழ்விருக்கிறது, அதற்கு மேலான கொண்டாட்டங்கள் மிச்சமிருக்கிறதென்பதன் அடையாளமாக அவர் இருப்பார். மனித சமூகம் இன்றளவும் வந்து சேர்ந்திருக்கும் எல்லா நன்மைகளின் வழியிலும் குமாரதேவன் போன்றவர்களின் பங்களிப்பும் பயணமும் இணைந்தே இருக்கிறது. அவர் ஒரு விடுபட்ட உயிரினம். தன் வாழ்வைத் தானே தீர்மானிக்கும் ஒரு நம்பிக்கை. நம் சமூகங்களிற்கு அவர் அளித்திருக்கும் பங்களிப்பை நம் வாழ்வாக ஆக்கிக் கொள்வதும், தொடர்ந்து வாசிப்பதும் செயற்படுதலும் தான் நாம்  குமாரதேவனுக்குச் செய்யும் சிறந்த அஞ்சலியாகவிருக்கும்.     

கிரிசாந் 

(2019)

குமாரசாமி குமாரதேவன் : வாசிப்பும் அறிதலும் நூல் இணைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *