தர்மு பிரசாத்தின் வண்ணச்சீறடி நாவலை வாசித்து முடித்தபோது, அதன் உள்ளடக்கம் குறித்த பல எண்ணங்கள் மனதுக்குள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன. முன்னூறு பக்கங்களைக் கொண்ட இந்த நாவலை ஒரே நாளில் வாசித்து முடிப்பேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை. ஆனால், வாசிப்பின் வேகம் என்னை அந்த நாவலுக்குள் இழுத்துச் சென்றது. வாசித்து முடித்த பின்னரும் அதன் காட்சிகளும், மனிதர்களின் வலிகளும், குறிப்பாக அதன் இறுதிப் பகுதியும் மனதுக்குள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன.
தர்மு பிரசாத்தின் சிறுகதைத் தொகுப்பான ஆணைக்கோடாரியை முன்னர் வாசித்திருக்கிறேன். அந்தத் தொகுப்பு என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆனால், அவருடைய சிறகை நாவல் முற்றிலும் வேறொரு வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. குறிப்பாக, நிலப்பரப்புகளையும் அவற்றின் இயல்புகளையும் காட்சிப்படுத்துவதில் அவர் காட்டிய நுணுக்கம் என்னைக் கவர்ந்தது. அந்த நாவலின் பலம், பலவீனங்கள் குறித்தும் அவருடன் உரையாடியிருக்கிறேன். அது தொடர்பாக முகடு இணையத்தளத்திலும் எழுதியிருக்கிறேன். சிறகைக்குப் பின்னர் வெளிவந்த வண்ணச்சீறடி, அவரது புனைவுலகில் இன்னொரு முக்கியமான நகர்வாக எனக்குத் தோன்றுகிறது.
ஈழ இலக்கியத்தில் போரை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல்களுக்கும் சிறுகதைகளுக்கும் நீண்ட வரலாறு இருக்கிறது. விடிவுக்குமுந்திய மரணங்கள் தொடக்கம் புதியதோர் உலகம், கொரில்லா, ம், இச்சா, கனவுச்சிறை, யுத்தத்தின் முதலாம் அதிகாரம், கலிங்கு, ஆறாவடு, ஆதிரை, பார்த்தீனியம், ஊழிகாலம், கொலம்பசின் வரைபடம், உம்மத், கசகரணம், போராளியின் காதலி, ஆயுத எழுத்து, விடமேறிய கனவு, நஞ்சுண்ட காடு, அப்பால் ஒரு நிலம், கரையைத் தேடும் கட்டுமரங்கள், துரோகன், யாப்பா பேக்கரி, மாபெரும் தாய், மிதுனம், நடுகல், பயங்கரவாதி, சயனைட், நகுலாத்தை, கல்விரல் எனப் பல்வேறு படைப்புகள் ஈழப்போர் அனுபவங்களை வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்திருக்கின்றன. ஒவ்வொரு படைப்பும் போரின் ஒரு பகுதியை, ஒரு மனித அனுபவத்தை, ஒரு சமூக முரண்பாட்டை அல்லது ஒரு வரலாற்றுத் தருணத்தைப் எழுந்தாளர்களின் அரசியலின்பால் நின்று பேச முயன்றிருக்கிறது.
இவ்வளவு பெரிய படைப்புப் பரப்புக்குள் ஈழப்போர் இலக்கியத்தை மதிப்பீடு செய்யும்போது, அதன் அரசியல் உள்ளடக்கத்தை மட்டும் அளவுகோலாகக் கொள்ள முடியாது. படைப்பு எந்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்து எழுதப்படுகிறது என்பது முக்கியமானது. அதே அளவுக்கு அது எவ்வாறு எழுதப்படுகிறது என்பதும் முக்கியமானது. வரலாற்றின் ஆழம், சமூகப் புரிதல், நிலம் மற்றும் பண்பாட்டின் நுணுக்கமான பதிவு, மொழியின் தனித்துவம், புனைவின் கட்டமைப்பு, கலைத்துவம் ஆகியவை இலக்கியத்தின் அடிப்படையான கூறுகள். அரசியல் சரியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது மட்டுமே ஒரு படைப்பைச் சிறந்த இலக்கியமாக மாற்றிவிடாது.
ஈழ இலக்கியத்தின் போதாமைகள் குறித்து தர்மு பிரசாத் முன்வைக்கும் விமர்சனங்களையும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஈழச் சமூகத்தின் வரலாற்றையும் அதன் பண்பாட்டையும் ஆழமாகப் புரிந்துகொள்ளாமல் எழுதப்படும் படைப்புகள், அரசியல் உள்ளடக்கத்தை முன்னிறுத்தி அழகியல் மற்றும் புனைவு சார்ந்த உழைப்பைப் புறக்கணிக்கும் படைப்புகள், மனிதர்களின் வாழ்வனுபவங்களைச் சுருக்கமான அரசியல் அடையாளங்களுக்குள் அடக்கிவிடும் எழுத்துகள் எனப் பல குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய விமர்சனங்களை முழுமையான தீர்ப்புகளாக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், ஈழ இலக்கியம் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டிய அவசியத்தை அவை நினைவூட்டுகின்றன. குறிப்பாக, தமக்குச் சாதகமான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட படைப்புகளை மட்டுமே உயர்த்திப் பேசும் மனநிலையிலிருந்து இலக்கிய விமர்சனம் விடுபட வேண்டும். படைப்பின் அரசியல், மொழி, வடிவம், கலைத்துவம், மனிதப் பார்வை ஆகிய அனைத்தையும் ஒன்றாக வைத்தே மதிப்பிட வேண்டும்.

இந்தப் பின்னணியில்தான் வண்ணச்சீறடியை அணுக விரும்புகிறேன். ஈழப்போர் நாவல்களில் பல, தத்தமது அரசியல் நிலைப்பாடுகளையும் கருத்தியல் சார்புகளையும் முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில படைப்புகள் போராட்டத்தின் நியாயங்களையும் அரசியல் இலட்சியங்களையும் மையப்படுத்துகின்றன; வேறு சில படைப்புகள் அதன் முரண்பாடுகளையும் தோல்விகளையும் கேள்விக்குட்படுத்துகின்றன. ஆனால், வண்ணச்சீறடியின் வாசிப்பு அனுபவத்தில் எனக்கு முக்கியமாகத் தோன்றியது, போரை ஒரு அரசியல் பிரகடனமாகவோ, ஒரு தரப்பின் நியாயத்தை நிறுவுவதற்கான கருவியாகவோ சுருக்காமல், அதன் அழிவுக்குள் சிக்குண்ட மனிதர்களின் வாழ்வனுபவங்களிலிருந்து அணுகியிருப்பதுதான்.
இதனை நாவலில் அரசியல் இல்லை என்றோ, அரசியல் நிலைப்பாடு இல்லை என்றோ புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக, அரசியலின் விளைவுகள் மனித வாழ்வில் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதைக் கவனிக்கிறது. போர் என்பது வரைபடங்களில் வரையப்படும் எல்லைகளோ, அரசியல் உரைகளில் முன்வைக்கப்படும் கோட்பாடுகளோ மட்டுமல்ல. அது மனிதர்களின் உடல்களிலும் மனங்களிலும் குடும்ப உறவுகளிலும் நினைவுகளிலும் பதியும் அழிவு. ஒரு மனிதனின் வாழ்வை, அவனது நம்பிக்கையை, அவன் நேசித்த மனிதர்களை, அவன் எதிர்பார்த்த எதிர்காலத்தைச் சிதைத்துப்போடும் அனுபவம். அந்த அனுபவத்தை நாவல் தனது புனைவின் வழியாக வாசகனிடம் கொண்டுசெல்கிறது.
நாவலின் தலைப்பான வண்ணச்சீறடியும் தனக்கென ஒரு குறியீட்டுப் பொருளைக் கொண்டிருக்கிறது. கண்ணகியின் பாதங்களையும், சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் பெண் உருவகத்தையும் நினைவுக்குக் கொண்டுவரும் இந்தத் தலைப்பு, ஒரு பெண்ணின் இளமைக்கால மென்மையிலிருந்து அவளது கோபம், எதிர்ப்பு, பயணம் என விரியும் உணர்வுப் பரப்பைத் தொடுகிறது. அந்தப் பாதங்களின் பயணம் ஈழத்தின் நிலத்தையும் போர்க்களத்தையும் நோக்கி நகரும்போது, தனிமனித அனுபவமும் கூட்டுச் சமூக வரலாறும் ஒன்றோடொன்று இணைகின்றன. நிலம் என்பது இங்கு வெறும் பின்னணிக் காட்சியல்ல. அது மனிதர்களின் வாழ்வோடும் பண்பாட்டோடும் போரின் நினைவுகளோடும் இணைந்திருக்கிறது.

நாவலின் முக்கியமான பலங்களில் ஒன்று, போருக்குள்ளிருந்தே கதையைச் சொல்லும் முறை. போர் முடிந்த பின்னர் அதன் விளைவுகளைத் திரும்பிப் பார்க்கும் வெளிப்புறக் குரலாக நாவல் அமைந்துவிடவில்லை. கதைக்குள்ளிருந்தே கதை சொல்லப்படுகிறது. இதனால் வாசகன் ஒரு நிகழ்வைப் பற்றிய தகவலைப் பெறுபவனாக மட்டும் இருப்பதில்லை; அந்த நிகழ்வின் சூழலுக்குள் நுழைந்து அதை அனுபவிக்கத் தொடங்குகிறான். களங்கள், நிலப்பரப்புகள், மனிதர்களின் அசைவுகள், அச்சம், பதற்றம், இழப்பு ஆகியவை காட்சிகளாக விரிகின்றன. குறிப்பாகப் போர்க்களக் காட்சிகளை விவரிக்கும் இடங்களில், வாசகனை அந்தச் சூழலுக்குள் அழைத்துச் செல்லும் எழுத்து வலிமை வெளிப்படுகிறது.
போரின் இறுக்கம் அதிகரிக்கும்போது, போருக்குள் வாழும் மக்களிடமும் போராளிகளிடமும் ஏற்படும் உளவியல் மாற்றங்களை நாவல் நுட்பமாகக் காட்சிப்படுத்துகிறது. போரின் தொடக்கத்தில் கொண்டிருந்த நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், அரசியல் உறுதிப்பாடுகள் ஆகியவை நீண்டகால அழிவுகளாலும் இழப்புகளாலும் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் புனைவு வெளிப்படுத்துகிறது. போருக்கு எதிரான மனநிலைகள் மக்களிடமும் போராளிகளிடமும் உருவாகும் தருணங்கள், தாங்களே உருவாக்கி வளர்த்த போராட்ட அமைப்பின் மீதும் அதன் போராளிகள் மீதும் மக்கள் கேள்விகளை எழுப்புகின்ற நிலைகள் என முரண்பட்ட உளவியல் வெளிகளை எழுத்தாளர் முன்வைக்கிறார்.
இங்கு கவனிக்க வேண்டியது, போராட்டத்தின் மீதான நம்பிக்கைக்கும் போரின் யதார்த்தம் ஏற்படுத்தும் நிராகரிப்புக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் மனிதர்களின் நிலை. ஒரு காலத்தில் தமது விடுதலைக்கான வழியாக நம்பிய போராட்டத்தின் நடைமுறைகள், பின்னர் அவர்களுடைய வாழ்வையே நெருக்கடிக்குள் தள்ளும் போது உருவாகும் மனப்பிளவுகளை நாவல் வெளிப்படுத்துகிறது. இதனை ஒரு தரப்பின் அரசியல் வெற்றியாகவோ தோல்வியாகவோ சுருக்காமல், மனிதர்களின் முரண்பட்ட அனுபவங்களாகச் சித்தரிப்பது நாவலின் முக்கியமான அழகியல் சிறப்பாக எனக்குத் தோன்றுகிறது.
ஈழத் தமிழ் மக்களின் மீது சிங்கள அரசின் ஒடுக்குமுறையும் இராணுவ நடவடிக்கைகளும் நிகழ்த்திய அழிவுகளை நாவல் ஆழமாக உணர்த்துகிறது. அந்த அழிவுகளுக்குள் சிக்குண்ட மக்களின் வலிகள், உடைந்த குடும்பங்கள், சிதைந்த வாழ்வுகள், எதிர்காலத்தை இழந்த மனிதர்கள் எனப் போரின் பல்வேறு முகங்கள் வெளிப்படுகின்றன. இவை வெறுமனே வரலாற்றுத் தகவல்களாகவோ அரசியல் முழக்கங்களாகவோ முன்வைக்கப்படுவதில்லை. மனிதர்களின் வாழ்வனுபவங்களினூடாக வாசகனுக்குக் கடத்தப்படுகின்றன. அதனால், போரின் கொடுமையைப் பற்றிய அறிவை மட்டும் நாவல் வழங்கவில்லை,அந்தக் கொடுமைக்குள் வாழ்ந்த மனிதர்களின் வலியை உணரச் செய்கிறது.
நாவலின் கதை அமைப்பும் கவனிக்கத்தக்கது. மூன்று கால அடுக்குகள் ஒன்றோடொன்று ஊடுபாவி நகரும் குறுக்குவெட்டுப் புனைவு முறையை எழுத்தாளர் கையாண்டிருக்கிறார். நிகழ்வுகளை நேர்கோட்டில் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிச் சொல்லாமல், வெவ்வேறு காலங்களின் அனுபவங்களை ஒன்றோடொன்று இணைப்பதன் மூலம் கதையின் பொருளை விரிவுபடுத்துகிறார். கடந்த காலமும் நிகழ்காலமும் தனித்தனியாக நிற்காமல், ஒன்றை ஒன்று விளக்குகின்றன; ஒன்றின் வலி மற்றொன்றின் அர்த்தத்தை மாற்றுகிறது. ஈழப் புனைவுலகில் இத்தகைய கதை அமைப்பை நவீனமான கதைசொல்லல் முயற்சியாகக் கருத முடியும். இது வாசகனிடமிருந்து கவனத்தையும் பங்கேற்பையும் கோருகின்றது. அதேவேளை, கதையின் வேகத்தையும் உணர்வின் ஆழத்தையும் ஒருங்கே பேணுகிறது.
தர்மு பிரசாத்தின் மொழிநடையும் நாவலின் வாசிப்பு வேகத்துக்குப் பெரிதும் துணைபுரிகிறது. வலிமையான சொற்கள், காட்சிகளை உருவாக்கும் விவரிப்புகள், விரைவாக நகரும் கதைப்போக்கு ஆகியவை வாசகனைத் தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகின்றன. வேகமாக வாசிக்க முடிகிறது என்பதற்காகவே நாவல் மேலோட்டமானதாகிவிடவில்லை. சில காட்சிகள் வாசிப்பின் வேகத்தைத் தாண்டி மனதுக்குள் தங்கிவிடுகின்றன. ஒரு காட்சியை வாசித்து முடித்த பின்னரும் அதன் உணர்வு அடுத்த காட்சிக்குள் நம்மைத் தொடர்கிறது. இதுவே நாவலின் கதைசொல்லல் வலிமையாக எனக்குத் தெரிகிறது.
குறிப்பாக நாவலின் இறுதிப் பகுதி என்னை ஆழமாகப் பாதித்தது. தன்னுடைய மனிதர்களையும் சக போராளிகளையும் இழந்து, நம்பிய அனைத்தும் சிதைந்து, இறுதியில் எதிரியின் காலடியில் சரணடைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் ஒரு போராளியின் உளவியல் நெருக்கடி மிகுந்த நுட்பத்துடன் வெளிப்படுகிறது. இங்கு சரணடைதல் என்பது ஒரு இராணுவச் செயல்பாடாக மட்டும் சித்தரிக்காமல். அது ஒருவன் தன்னுள் கட்டியெழுப்பிய நம்பிக்கைகள், அடையாளங்கள், இலட்சியங்கள், எதிர்காலக் கனவுகள் அனைத்தும் ஒரே தருணத்தில் சிதைவதைக் குறிக்கிறது. தன்னுடைய வாழ்வின் அர்த்தமாகக் கருதிய அனைத்தையும் இழந்துவிட்டு, உயிர் பிழைத்திருப்பதற்காகவே சரணடைய வேண்டிய மனிதனின் மனநிலையை நாவல் வாசகனிடம் கடத்துகிறது.
அந்த இறுதிப் பகுதிகளை வாசிக்கும்போது, நான் ஒரு நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்ற உணர்வைக் கடந்து, அந்தப் போருக்குள்ளேயே நின்றுகொண்டிருப்பது போன்ற அனுபவம் ஏற்பட்டது. போரின் இறுக்கம், மனிதர்களின் நிராதரவான நிலை, இழப்புகளின் வலி, சரணடைதலின் அவமானமும் உளவியல் நெருக்கடியும் வாசகனை அந்தக் களத்திற்குள் கொண்டு செல்கின்றன. ஒரு படைப்பு வாசிப்பவனை வரலாற்றைத் தெரிந்துகொள்பவனாக மட்டும் நிறுத்தாமல், அந்த வரலாற்றின் வலியை உணர்பவனாகவும் மாற்றுகிறது என்பதற்கு இந்த நாவலின் இறுதிப் பகுதிகள் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றன.
வண்ணச்சீறடியை ஈழ மக்களின் போராட்ட வரலாற்றின் ஒரு விமர்சனப் பார்வையாகவும் வாசிக்க முடிகிறது. கடந்தகாலப் போராட்ட அனுபவங்களிலிருந்து நாம் எவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்? அவற்றின் வெற்றிகள், தோல்விகள், முரண்பாடுகள், இழப்புகள் ஆகியவற்றிலிருந்து எத்தகைய அரசியல் மற்றும் பண்பாட்டுப் புரிதல்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்? ஒரு சமூகமாக நாம் கடந்துவந்த பாதையை எவ்வாறு மீளாய்வு செய்ய வேண்டும்? இத்தகைய கேள்விகளை நாவல் வாசிப்பின் வழியாக நமக்குள் எழுப்புகிறது. அந்த வகையில், இது கடந்தகாலத்தை மட்டும் பேசும் படைப்பாக இல்லாமல், எமது மக்களின் அடுத்தகட்ட அரசியல் மற்றும் பண்பாட்டுப் பயணத்திற்கான சிந்தனைத் தூண்டுதலாகவும் அமையக்கூடும். அந்தப் பயணம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் நூலின் வாசிப்பு நமக்குள் உருவாக்குகிறது.

அதேநேரத்தில், நாவலின் நூல் வடிவமைப்பிலும் சில குறைபாடுகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். வண்ணச்சீறடி கையில் எடுத்துச் செல்லக்கூடிய பாக்கெட் நாவல் வடிவில் அமைந்துள்ளது. நூலில் ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அந்த ஓவியங்களின் பக்கத்தெரிவு வாசிப்பின் ஓட்டத்துடன் இயைந்து, வாசகனின் பார்வையை ஈர்க்கும் வகையில் அமையவில்லை. அவை வாசிப்புக்கு மேலதிகமான அழகியல் அனுபவத்தை வழங்குவதற்குப் பதிலாக, இடையிடையே தேவையற்ற பக்கங்களைப் புரட்டிச் செல்ல வேண்டிய நிலையை உருவாக்குகின்றனவாவென்று தோன்றுகிறது.நூலின் ஓவிய வடிவமைப்பை இன்னும் கவனமாகவும் வாசிப்பு அனுபவத்தை மையப்படுத்தியும் அமைத்திருக்கலாம் என்பது எனது எண்ணம்.
போருக்குப் பின்னரான ஈழ இலக்கியம் இன்னும் பல கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் இழந்தவற்றைப் பதிவு செய்வது மட்டுமல்ல, எதனால் அவற்றை இழந்தோம், அந்த வரலாற்றின் அரசியல் முரண்பாடுகள் என்ன, சமூகத்திலும் பண்பாட்டிலும் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன, எதிர்காலத்தில் எத்தகைய மனிதநேயமும் அரசியல் புரிதலும் தேவை என்பவற்றையும் இலக்கியம் ஆராய வேண்டும். போரின் வரலாற்றை ஒரு தரப்பின் வெற்றி அல்லது தோல்வி என்ற எளிய அளவுகோலுக்குள் அடக்கிவிட முடியாது. அந்த வரலாற்றுக்குள் வாழ்ந்த மனிதர்களின் வேறுபட்ட அனுபவங்களையும் முரண்பாடுகளையும் இழப்புகளையும் பதிவு செய்யும் பொறுப்பு இலக்கியத்துக்கு இருக்கிறது.
அந்தப் பொறுப்பின் ஒரு பகுதியை வண்ணச்சீறடி நிறைவேற்றியிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். இதன் மறுபக்கமும் பேசப்பட வேண்டும்.ஆரம்ப பக்கவாசிப்பின் போது சொல்லாட்டி வாசிப்பை சற்று இடையூறு செய்தது இவ்வளவு சொல்விபரணம் தேவைதானா என்றுமிருந்தது. ஈழப்போரின் மனித அனுபவங்களையும் அதன் உளவியல் நெருக்கடிகளையும் கதைசொல்லல் முறையாலும் காட்சிப்படுத்தும் ஆற்றலாலும் வாசகனுக்குக் கடத்தும் ஒரு முக்கியமான படைப்பாக இதனைப் பார்க்கிறேன். குறிப்பாக, போராட்டத்தின் இலட்சியங்களுக்கும் போரின் யதார்த்தங்களுக்கும் இடையில் சிக்குண்ட மனிதர்களின் நிலையைப் புரிந்துகொள்ள விரும்புவோர்,போராளிகளை நேசிப்போர்,இந்த நாவலை வாசிக்க வேண்டும்.
ப.பார்தீ
நன்றி : முகடு இணைய இதழ்

