வரலாறும் கலையும் இயைந்த பிரதிகள் – ஷோபாசக்தி

தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடியும் இலங்கையின் இடதுசாரித் தலைவர்களில் ஒருவரும் சாதியொழிப்புப் போராட்டக் களத்தின் முன்னணியில் நின்றிருந்தவருமான எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் நூற்றாண்டு இது. இதையொட்டி அவரது ஆறு நாவல்களை ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகம் திருத்தமான செம்பதிப்புகளாக வெளியிட்டிருக்கிறது.

‘பஞ்சமர்’, ‘அடிமைகள்’, ‘கோவிந்தன்’, ‘தண்ணீர்’, ‘பஞ்ச கோணங்கள்’, ‘கானல்’ ஆகிய ஆறு நாவல்களதும் முதன்மைக் கதாபாத்திரங்கள் தலித்துகள். நாவல்களின் களம் தலித் மக்களின் வாழ்வியலும் வாழ்தலுக்கான போராட்டமும். இந்த ஆறு நாவல்களையும் ‘பஞ்சமர் வரிசை நாவல்கள்’ என கே.டானியல் பெயரிட்டதற்கு ஆழமான காரணமுள்ளது. ஒரு நாவல் ஒரு காலக் கட்டத்தைச் சொன்னால், அதன் தொடர்ச்சியாக அடுத்த நாவல் அடுத்த காலக்கட்டத்தைச் சொல்கிறது. ஒவ்வொரு நாவலிலும் ஒவ்வொரு தலித் சாதி மக்களின் வாழ்வு மையமாகச் சொல்லப்படுகிறது. இதன் வழியாக இருபதாம் நூற்றாண்டு இலங்கைத் தலித் மக்களது வாழ்வின் வரைபடம் வாசகர் முன்னே இருளும் ஒளியுமாக விரிகிறது.

தனது மரணம்வரை, ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் தொடர்ச்சியாகச் சாதியொழிப்புக் களத்தில் நின்றிருந்த கே.டானியல் தனது போராட்ட வாழ்வில் சாதி வெறியர்களின் துப்பாக்கிச் சூட்டையும் தலைமறைவு வாழ்வையும் சிறையையும் எதிர்கொண்டவர். யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு தலித் கிராமமாகச் சென்று, சாதியொழிப்புப் பரப்புரை செய்து மக்களைப் போராட்டக் களத்துக்கு அழைத்து வந்தவர். மக்களின் வீடுகளில் நாட்கணக்கில் தங்கியிருந்து அவர்களின் பாடுகளை நேரில் அறிந்தவர். அவரது இந்த விரிவான அனுபவங்களும் போர்க் குணமுமே இந்த நாவல்களை உருவாக்கியுள்ளன.

அதேவேளையில் போராட்ட அனுபவக் குறிப்புகளாகவோ, வெற்று அரசியல் பிரச்சாரமாகவோ இந்த நாவல்கள் தம்மைக் குறுக்கிக்கொள்ளவில்லை. நவீன யதார்த்தவாத நாவலுக்குரிய அழகியலும் சொற்கட்டும் விவரிப்புகளும் கொண்டு, அற்புதமான இலக்கிய வாசிப்பனுபவத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் பிரதிகளாகவே இவை மிளிர்கின்றன.

கல்வி மறுக்கப்பட்ட, மிகவும் அடித்தளத்துக்குத் தள்ளப்பட்டிருந்த சாதியில் பிறந்த கே.டானியல் ஐந்தாம் வகுப்புவரையே கல்வி கற்றவர். பிற்காலத்தில் மாக்சிம் கார்க்கி உள்ளிட்ட இடதுசாரி எழுத்தாளர்களைத் தனது ஆசான்களாகக் கொண்டு தீவிர இலக்கிய வாசிப்பு வழியே இலக்கியம் எழுத வந்தவர். இலக்கியத்தின் வழியே சத்தியத்தையும் சமூக மாற்றத்தையும் முன்னெடுக்கலாம் என்பதில் ஆழமான நம்பிக்கையுள்ளவர்.

இந்த ஆறு நாவல்களுமே உண்மைக் கொடுமைகளையும் உண்மை அடக்குமுறைகளையும் உண்மைப் போராட்டங்களையும் உண்மை மனிதர்களையும் கொண்டே எழுதப்பட்டவை. இந்த நாவல்களின் பாத்திரங்களான மனிதர்களில் சிலரை நேரில் சந்தித்துப் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அவர்களுடனான உரையாடல்கள் வழியே இந்த ஆறு நாவல்களின் உண்மைத்தன்மைக்கு எனக்கு ரத்தசாட்சியங்கள் கிடைத்தன.

இலங்கையில் தலித் மக்கள் அனுபவித்த தீண்டாமையையும் சாதியக் கொடுமைகளையும் அதற்கு எதிராக அவர்கள் இடதுசாரிக் கட்சிகளில் திரண்டு அணியாகி, நடத்திய வீரஞ் செறிந்த போராட்ட வரலாற்றையும் துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கும் நூல்கள் மிக மிகக் குறைவே. கே.டானியல் தனது நாவல்கள் வழியாக இதைச் சாதித்துள்ளார்.

அதேவேளையில் அன்றைய காலக்கட்டத்தின் தலித் மக்களின் வாழ்வையும் உறவுகளையும் காதலையும் இன்பத்தையும் துன்பத்தையும் வெற்றியையும் தோல்வியையும் கதைப் பிரதிகளாக நம்மிடம் கையளித்துச் சென்றுள்ளார். இந்த நாவல்கள் வரலாற்று அறிதலையும் இலக்கிய அனுபவத்தையும் ஒருசேர நம்மிடம் ஏற்படுத்திவிடுகின்றன. வாசிக்கும்போது கண்களில் கண்ணீரும் கைகளில் செந்நீரும் பிசுபிசுக்கின்றன.

ஷோபாசக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *