தர்மு பிரசாத் எழுதியிருக்கும் ‘பாலையில் பூப்பவை’ கட்டுரை முக்கியமான சில தயக்கங்களை கடந்து தொகுப்புத்தன்மையுடன் கூரிய அவதானங்களை முன் வைக்கிறது.
ரியாஸ் குரானா, இளங்கோ டிசே மற்றும் பற்றை மறைவில் அவர்களது குரல்களையொத்த கிசுகிசுப்புகளை செய்பவர்களுக்கு இவை விளங்காது. அவர்களுக்கு விளக்க நாங்கள் எழுதுவதுமில்லை. அவர்கள் முகாந்திரங்கள் மாத்திரமே என்பதை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறோம்.
இந்தக் கட்டுரையில் தர்மு பிரசாத் ஆசிரியர் – மாணவர் உறவை, தமிழ்நாட்டுடன் ஈழத்துக்கிருக்கும் தொடர்பை ‘பண்பாட்டு ஊடாட்டம்’ எனத் துல்லியமாக வரையறுத்திருக்கிறார். இவ்வளவு காலமும் கொண்டும் – கொடுத்தும் வந்திருந்தாலும், ஈழத்தின் பிரபலமான வெகுசன நம்பிக்கையைப் போல “நாமும் நமக்கென்றதோர் நலியாக் கலையுடையோம்” எனும் குரலின் மீது சம்மட்டியை ஓங்கி அடித்திருக்கிறார். அப்படியெல்லாம் உங்களுக்குப் பெரிய மேதைகள் என வழிகாட்டும் சமகால ஆளுமைகள் இல்லையெனச் சொல்லியிருக்கிறார். கட்டுரையை வாசித்து எதிர்விவாதங்கள் இருப்பின் வாசகர்கள், எழுத்தாளர்கள் எழுதி அனுப்புங்கள்.
ரியாசின் கட்டுரைக்கு எனக்கு எதிர்வினையாற்ற தோன்றாததற்கு சில காரணங்கள் இருக்கின்றன. இளங்கோவிற்கு எதிர்வினையாற்றியும் அதையே உணர்ந்தேன். அவர்களை முகாந்திரமாகக் கொண்டு சூழலுக்கு சிலவற்றை சொல்ல முடிந்தது நன்மையே என்றாலும், தர்க்கங்களுக்கு அப்பால் இவற்றை இயக்கும் விசைகளை நாம் கவனத்திலெடுத்தே உரையாட வேண்டும்.
ஜெயமோகனை ஆசிரியர் என நான் விளித்து பொதுமேடையில் உரையாற்றத் தொடங்கி இத்தோடு மூன்று வருடங்கள் முடியப் போகின்றது. ஏராளமான கட்டுரைகள், குறிப்புகளில் அதை எழுதியிருக்கிறேன். ஆனால் கடந்த சில மாதங்களாக மட்டும் ஏன் இந்த நக்கல் நையாண்டிகளும் பதைபதைப்புகளும் அறச்சீற்றங்களும் எழுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இளங்கோவுக்கோ ரியாசுக்கோ நாங்கள் ஜெயமோகனை ஆசிரியராகச் சொல்லி வந்தது பெரிய சிக்கலாயிருக்கவில்லை. ‘சின்னப் பசங்களா’ என்று கடைவாய் புன்னகையோடு கடந்து விட்டார்கள். ஜெயமோகன் தன் தளத்தில் எங்களைக் கவனப்படுத்தி எழுதியதன் பின்னர் தான் இத்தனை கொந்தளிப்புகளும் நிகழ்கின்றன. இந்த உணர்ச்சிக்குப் பெயர் பொறாமை அல்லது அடிவயிற்று எரிச்சல். அதற்கு எந்த மருந்தும் இல்லை. சித்த மருத்துவத்தில் கூட.
இச்சூழலை தமிழ் நாட்டு அடிமை மனோபாவம், பண்பாட்டுத் தற்கொலை, குய்யோ முய்யோ என எதுவாகவும் அவர்கள் விளக்கலாம். ஆனால் உள்ளே இருப்பது அச்சுப் பிசகாத வெளிச்சத்தின் மீதான நமைச்சல். நாங்கள் தீவிரமாக இலக்கியம் மட்டுமேயாக எழுதத் தொடங்கிய கடந்த மூன்று வருடங்களில் இலக்கியச் சூழல் மாறிவருவதை, அதன் மைய நீரோட்டம் குலைவதை பலரும் அவதானித்திருக்கலாம். அதை இரண்டு வகைகளில் செய்கிறோம். ஒன்று, குன்றாமல் எழுதியும் எதிர்வினையாற்றியும் சூழலைத் தொகுக்கிறோம். தீவிர இலக்கியத்தை இலட்சியவாதமாக முன் வைக்கிறோம். இரண்டு, படைப்புகளின் மூலம் எங்கள் சொற்களை நிறுவுகிறோம். மேலும் எங்களது செயற்பாடுகளினதும் வெளிப்பாடுகளினதும் தீவிரம் சூழலைத் தொற்றவும் செய்வதைப் பார்க்கிறோம். இதுவரை தான் எழுதிய புத்தகத்திற்கு மேல் எதையும் சீண்டிப் பார்க்காத பலரும் கூட ஏனைய புத்தகங்கள், இலக்கிய நிகழ்வுகள், இதழ்கள் என அனைத்தையும் கவனப்படுத்த வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறோம். இலக்கியமென்றால் என்ன உவமை என்றால் என்ன என எழுத வைத்திருக்கிறோம். வாழ்க்கையில் இலக்கியக் கட்டுரைகள் எழுதியறியாத அப்பாவிப் பிள்ளைகளைக் கூட கட்டுரை எழுது பேடியே என அடித்துத் துவைத்திருக்கிறோம். அது நல்லது. அது நிகழ்க. இவை ஒரு சூழல் விளையாட்டு மாத்திரமே.
ரியாஸோ இளங்கோவோ தமிழ்நதியோ நட்சத்திரனோ ஜெயமோகன் ஒரு சொல் அவர்கள் ஒரு முக்கியமான படைப்பாளி எனச் சொல்லி விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்து விடுவார்கள். ஆனால் இனி அது நடக்காது எனத் தெரிந்த பின்னர் அவர்களால் செய்யக் கூடியதை செய்து வருகிறார்கள்.
மீமாம்ஸகர்கள் எனும் நகைச்சுவைப் பதிவில் நான் சொல்லியிருப்பதைப் போல இங்கே அனைவரும் உள்ளூர அறிந்திருந்தாலும் வெளிப்படையாக ஒத்துக் கொள்ளாத ஒன்றிருக்கிறது. இன்றிருப்பவர்களில் ஜெயமோகன் தான் மேதை. அவரது ரசனை அழகியல் மரபின் நீட்சி தான் அடுத்த பாய்ச்சலை தமிழில் நிகழ்த்தும். அதற்கு மாற்றானவை அதற்கு இணையான உழைப்பையும் படைப்பையும் ஆக்கியாக வேண்டும். நான் அந்த சவாலை தயக்கமின்றி எடுத்துக் கொண்டவன். நான் கடந்து வெல்ல வேண்டியது ஜெயமோகனைத் தான். வேறெவரும் அந்தச் சிகரத்திற்கு முன் எனக்குப் பொருட்டே இல்லை.

