லீலி – சிறுகதை

மார்புச் சட்டையை இறக்கி குவை நடுவில் ஈச்சங்காய் குமிழ் வடிவில் தூங்கிய பெரிய முத்தைக் காட்டினேன். ஒளிரும் பொற்சங்கிலியில் கோர்க்கப்பட்டு திருவயிற்றின் கனியைப் போல. 

“என்னடி இது இவ்வளவு பெரிசா இருக்கு!” என்றார் மிர்னா சிஸ்ட்டர்.  

“உஷ்ஷ்.. சத்தம் போடாதீங்க. இவளுகள் கண்ணு முழிக்கப் போறாளுகள்” என்றேன்.  

“எவ்வளவு பெரிசு! யேசப்பா.. நான் இவ்வளவு பெரிய முத்தை பெயிண்டிங்கில தான் பாத்திருக்கிறன்” என்றார்.  

“இது என்ட அம்மா வழிச் சொத்து. இரணை முத்தெண்டு சொல்லுவினம். அதில ஒண்டு இது. எங்கட கடல் பக்கம் இதுக்கொரு கதையிருக்கு” என்றேன் ரகசியமான குரலில்.  

என் கட்டிலில் வந்து அருகில் அமர்ந்து கொண்டார். மூடிய அகன்ற சாளரங்களின் பூவேலைகளுக்குள்ளால் வேங்கை மலர்களின் மஞ்சள் பாவிய வெளிச்சம் கட்டில் விரிப்பில் விழுந்து கொண்டிருந்தது. பூ இழைகள் நிழல் போல அவர் மீது ஒட்டிக் கொண்டது. ‘சொல்லடி’ என்பது போல என் கைகளைப் பிடித்தார். குளிர்ந்த ஈரலிப்பான விரல்கள். அளைந்து கொண்டு ஆறுதலளிப்பவை. ம்ம்.. என்று விரல்களை அழுத்தினார். அவருக்கு ரகசியங்கள் பொறுக்காது.  

“ம்ம்.. சொல்லுறன். எங்கட முன்னோர் முத்தரிப்புத் துறையில முத்துக்குளிக்கிறவை. பெரிய அலையடிக்கிற கடல். சுழன்று சுழன்று புயலப் போல அலையடிக்கும்.  

அம்மாவின்ர எத்தனையோ தலைமுறைக்கு முன்னால ஒல்லாந்தற்ற காலத்தில இது நடந்தது.  

எங்கட கடல் பக்கம் காப்பிரியளும் வெள்ளைக்காரும் ஊராக்களும் சேந்து முத்து அறுவடை நடக்கும். ஒரு சீசனுக்கு தான் கடல் வாய் திறந்து முத்தை உமிழும். ஆனா எங்கட ஆக்கள விட காப்பிரியள் கன வித்தை வைச்சிருப்பாங்கள். தண்ணிக்கடியில நிறைய நேரம் மூச்சுப் பிடிப்பாங்கள். காட்டுத் தேக்குப் போல உடம்புகள் தானே.  

மூக்கில கடிவாளம் போல வெள்ளியில ஒரு நகை போட்டிருப்பாங்கள். கடலுக்கான மந்திரம் தெரிஞ்சவங்கள். எங்கட மூப்பரொருத்தர் காப்பிரியளோட ஒருக்கா முத்துக் குளிக்கப் போனார். அந்தப் பருவ அறுவடையில குடி தண்ணியில ஏதோ பிரச்சினை ஆகி நிறையப் பேர் செத்துப் போயிருக்கினம். கடலுக்குப் போன மூப்பரைக் காணாமல் கரையில எல்லாரும் கூடியிருந்திருக்கினம். கூட்டத்தை விட்டு பிரிஞ்சு போன பாய்மரப் படகு கடலுக்கு நடுவில இருந்த மேடொண்டில முட்டி நிண்டிருக்கு. ரெண்டு நாள் கடல் ஓயாமல் கொந்தளிச்சிருக்கு. வயித்தப் பிரட்டுற மாதிரி அலைகள் அடிச்சதாம். திரும்பி வந்த மூப்பரின்ர படகில அவர் மட்டும் அரை மயக்கத்தில கிடந்திருக்கிறார். ரெண்டு கையையும் பொத்தி பிடிச்சபடி நெஞ்சோட சேத்து வைச்சிருந்தார்.  

குடும்பத்தாக்கள் அவரை வீட்டுக்கு கொண்டு வந்தினம். தண்ணியை அமத்தி வெளியால எடுத்தினம்.   

அவற்ற கையள் சிப்பி திறக்கிற மாதிரி 

விரிஞ்சு இரணை முத்துகள் விழுந்திருக்கு. எங்கட குடும்பத்து ஆக்கள் அத எடுத்து மறைச்சு வைச்சினம். கடலுக்கு போய் இரணை முத்து கிடைச்சால் அவைக்கு கடலில எண்டைக்கும் சாவில்லை எண்டு சொல்லுவினம். சாதாரண முத்துகளை விட ரெண்டு மடங்கு சைசில இருக்கும். பிறகு அந்த முத்தைப் பாத்துக் கொண்டே மூப்பர் வீட்டுக்குள்ள இருந்திருக்கிறார். கடலுக்கை என்ன நடந்ததெண்டு அவர் ஒருத்தருக்கும் சொல்லேல்ல. ஆனா எங்கட குடும்பத்துக்கு மட்டும் தெரிஞ்ச கதையில அவற்ற வாயில இருந்து தண்ணிய அமத்தி எடுக்கேக்க ரத்தமும் தோலும் வந்ததாம். வேட்டைப் பல்லில ரத்தம் படிஞ்ச தடமிருந்தது. ஈருகளில சதைத் துணிக்கையள்.  

அவர் ஒவ்வொரு நாளும் இரவில கடக்கரைக்கு போறதும் கையைக் கட்டிக் கொண்டு இறுமாப்பா பாக்கிறதுமா இருந்திருக்கிறார். எங்கட குடும்பத்துக்கு அந்த வருசம் நினைச்சுப் பாக்க முடியாத செல்வம் வந்து சேந்திச்சுது. மூப்பருக்கு இரணை முத்தில்லாம ஒரு நாளுமில்லை. ஆனா அவர் மறந்தும் கடலில காலை நனைக்க மாட்டார் எண்டு சொல்லுவினம். கடலில எதையோ பாத்து பயந்திருக்கிறார். இல்லையெண்டால் கடலைப் பாத்தே பயந்திட்டார். அவர் மணலில படங்கீறுவார். வரைபடம் மாதிரி. அந்த இடங்களுக்கு அடுத்த அறுவடைகளுக்கு போனவர்களுக்கு கடல் வாய் திறந்து முத்துகளை கொட்டிச்சுது.  

ஒரு நாளிரவு மூப்பர் தவறணைக்கு போய் ஒரு சூதில இரணை முத்தில ஒண்டை வச்சிட்டார். கார்ட்ஸ் விளையாட அப்ப எங்கட சனத்துக்கு தெரியாது. வெள்ளக்காரங்கள் தான் பழக்கி விளையாடியிருக்கிறாங்கள்.  

அதப் பாத்தாக்கள் சொல்லிச்சினமாம், அவர் வைச்ச மாதிரி இல்லையெண்டு. 

மூப்பருக்க இருந்த சாத்தான் பல்லைக் காட்டிக் கொண்டு சிரிச்சபடி முத்தை எடுத்து வைக்க அவங்கள் அரண்டு போயிருக்கிறாங்கள். ஆனால் அண்டைக்கு மூப்பர் தோற்றார். அவரிட்ட இருந்து அது போகோணும் எண்டு முடிவெடுத்திருக்கு.  

மிச்சமிருந்த ஒரு முத்தை வைச்சிருந்தார். திடீரெண்டு ஒரு நாள் காணாமல் போயிருக்கிறார். மூண்டு வருசம் கழிய அவர் திரும்ப ஊருக்கு வந்தார். இடுப்பில ஒரு வெடிமருந்து குப்பி கொழுவியிருந்தார். நீள லோன்சும் பெரிய சேர்ட்டும் போட்டு ஒல்லாந்தக் கப்பலில திரும்பியிருக்கிறார். ஆனா முகம் ஓஞ்சு போயிருக்கு. வீட்டாக்கள் அந்த ஒரு முத்து சாபமெண்டும் பாவமெண்டும் சொல்லி வீட்டுக்குள்ள வைச்சு மறைச்சிட்டினம். மூப்பர் செத்த பிறகு பரம்பரை பரம்பரையா அந்தக் கதையயையும் முத்தையும் கை மாத்தி வந்திச்சினம். இப்ப என்ர கழுத்தில தான் முதன் முதலா ஏறியிருக்கு. அம்மா தான் தங்கச் செயினில ஒட்டி இதத் தந்தா” என்றேன். மிர்னாவின் முகத்தில் காலங்கள் விரிந்து மடங்கி விசிறி போல ஆடியது.  

“பிறகு?” என்றார்.  

“பிறகென்ன. இதான் கதை” என்றேன்.  

கால்களை மடித்து முழந்தாளில் மண்டியிட்டு அமர்ந்து என் செயினைப் பிடித்து முத்தை வருடினார். மார்புக் குவைகள் அந்தரமாய் நெளிந்து ஏறியிறங்கின. அவரது வாசம் இன்னதென்று அறியாத மலர்களும் வியர்வையும் கலந்து என் மீது பரவியது. அவரது விரல்களின் நுனி நகங்கள் முத்தைச் சுரண்டின. சிறிய கீறல்கள் போல தோன்றி மறைந்தன. ஈச்சங்காய் குமிழ் போன்ற தங்கக் குமிழை வருடினார். கைகளை கரையில் சேர்த்து மார்புகளை நெருக்கினேன். தாம்பாலத்தில் ஏந்தி நீட்டுவது போல என் மார்புச் சதைப்பரப்பு நீண்டது. அவரது கைகள் முத்துடன் குவைக்குள் அழுந்தியது. சிரித்தார்.  

“அம்மாவைப் பற்றி ஒரு நாளும் சொல்லுறாய் இல்ல. அப்பா அம்மா பற்றி எனக்கும் சொல்லமாட்டியா?” என அழுத்தினார்.  

சட்டென்று மார்புகள் இளகி கைகள் தளர்ந்தன. அவர் எழுந்து என்னருகில் படுத்துக் கொண்டு வெண்ணிறப் போர்வையைப் போர்த்தினார். நான் அவருக்கு முதுகைக் காட்டியபடி திரும்பிப் படுத்தேன். காது மயிரைப் பின்னால் வழித்து விட்டு “சொல்லன்” என்றார். அந்த பாரிஜாத நறுமணம் கொண்ட எச்சில் வாசம் என்னைக் கம்மச் செய்தது. குரல் இடறியது. உடலில் வேகம் கொப்பளிக்க திரும்பி அவரை அணைத்துக் கொண்டு அழுதேன். அவர் என் முதுகைத் தடவி விட்டு தட்டிக் கொண்டிருந்தார். பத்து நிமிடங்கள் அழுதிருப்பேன். மேகங்கள் விலகியது போல மனம் அடங்கித் தெளிந்தது. நிமிர்ந்து வெண்புறாக்கள் போன்ற அவரது விழிகளைப் பார்த்தேன்.  

“அத நினைக்க கூட விரும்பேல்ல சிஸ்ட்டர்”  

“ஆனா உன்ர கண்ணில கருவளையமா கிடக்கிறது அவே தான்.. சொன்னா முடியாத சோகம் ஒண்டுமில்ல”  

நிமிர்ந்து படுத்தேன். உடம்பு ஒரு படகு போல என நினைத்துக் கொண்டேன். கடல் போலக் கட்டில் அலையடிக்கத் துவங்கியது.  

என் அம்மாவின் கையில் தான் சாலமோனின் பாடல்கள் என எழுதப்பட்ட பைலை முதன் முறையாகப் பார்த்தேன். யுத்தம் உக்கிரமாக நிகழ்ந்து கொண்டிருந்த காலம். மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மாற்றாலாகி இருந்தோம். அப்பா கொழும்பில் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரது அப்பா வழிச் சொத்தான அந்த விசாலமான வீடு பிரிட்டிஷ் காலத்தையது. உயர்வதும் அடர்வதும் மூலைகளில் ரகசியான இருட்டும் கொண்டது. அகன்று தடித்த இராட்சதச் மதில்களால் வீடு காக்கப்பட்டது. மதில்களின் மேற்பரப்பில் ஆணிகளும் கண்ணாடிச் சில்லுகளும் பதிக்கப்பட்டிருந்தது.  

வீட்டைச் சுற்றியும் சோலை. புறத்து வாசலில் நீர்த்தடாகம். அம்மா மூன்று மாதுளைக் கன்றுகளை நட்டு வளர்த்தார். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டைகள் வந்தன. எனக்கு அப்போது பன்னிரண்டு வயது. அப்பா என்னை ஒரு பொருட்டாக மதிப்பவரில்லை. எனக்கு என் அம்மாவின் பரம்பரைக் குணம் என்று ஒருமுறை கோபத்தில் சொன்னார். அவரது கச்சான் போன்ற சதையுதடுகளால் எச்சில் தெறிக்க அம்மாவை ஏசுவார். சாத்தானின் கண்கள் உனக்கு என்று அடிக்கடி சொல்வார்.  

அப்பாவுக்குத் தெரியாமல் தான் அம்மா சாலோமனின் பாடல்களை வைத்திருந்தார். அதன் அட்டையில் தலைப்பும் சுற்றிலும் பள்ளத்தாக்கொன்றில் மலர்ந்து விரிந்திருக்கும் லீலி புஷ்பங்களும் வரைந்திருந்தார். லில்லி என சொல்லும் மலர்கள். பாடல்களில் லீலியென்று மொழிபெயர்த்திருந்தார்கள். அம்மா தான் எனக்கு லீலி என்று பெயர் வைத்தார். இப்படி ஒரு பெயரை ஊரில் வைப்பதில்லை என அப்பா மறுத்த போதும் அவர் உறுதியாகவே எனக்கு அந்தப் பெயரைச் சூட்டினார். அம்மாவைப் போலிருப்பதாக அப்பா என்னைச் சொல்லும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கும். அம்மா பேரழகி. பருத்த கருநாகம் போன்ற கூந்தலும் லீலி மலர் வண்ணக் கண்களும் செதுக்கியெடுத்தது போன்ற அகன்ற கருணை ததும்பும் முகமும் கொண்டவர். அதிர ஒரு சொல் பேச மாட்டார். கண்களினால் கதைக்க முடியும் என்பதை அவரைப் பார்த்து அறிந்து கொண்டேன். கடைசியாகத் தான் சொற்களைப் பயன்படுத்துவார்.  

அம்மாவின் மடியில் கிழமை முழுவதும் சாலமோனின் பாடல்கள் கிடக்கும். ஒவ்வொரு சொல்லாக உச்சரித்துக் கொண்டிருப்பார். பத்துப் பக்கங்கள் தான் வரும். ஆனால் திரும்பத் திரும்ப வாசிப்பார். கண்கள் விரிய அமர்ந்து இருட்டில் சோலையைப் பார்ப்பார். சில நேரங்களில் மாலையொளி விழும் சோலையில் பார்வையிழந்தவர் போல அலைவார். நான் பூனையைப் போல அவரைத் தொடர்ந்து நடப்பேன். அவரது நிழலில் ஒரு குளுமை உண்டு. ஒரு கட்டுங்கடாத வசீகரம். எனக்கும் அது போல நீளும் நிழலொன்று வேண்டுமென்று நினைப்பேன்.  

கொஞ்சம் கொஞ்சமாக அப்பா வருவதை நிறுத்திக் கொள்ளத் தொடங்கினார். மாதம் ஒரு முறை பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்ட தகவல் போனில் வரும். அம்மா அந்தக் காலத்தில் மிகுந்த உற்சாகமாக இருந்தார். அம்மாவுடன் ரோசி சிஸ்ட்டர் பழக்கமாகியதும் அப்போதே. அவர் எங்களுக்கு நெருங்கிய சொந்தம். ஆனாலும் தொடர்புகள் குறைவு. ரோசி சிஸ்ட்டர் ஒரு வண்ணத்துப் பூச்சி மாதிரி. அவர் எங்கள் வாழ்க்கைக்குள் சிரிப்பை அள்ளியெடுத்து வந்து வீசி எறிந்து மாயாஜாலம் காட்டினார். அம்மா சிரித்துச் சிரித்து கண்ணீர் தெறிக்க அமர்ந்திருப்பார். ரோசி சிஸ்ட்டர் வரும் நேரங்களை நான் விரும்பத் தொடங்கினேன். அம்மாவும் அவரும் சில அரிதான நாட்களில் இரவிரவாக கதைத்துச் சிரிப்பார்கள். சோலையெங்கும் நடந்த தடங்கள் விடியலில் இருக்கும்.  

ஒரு மழைக்காலம். எங்கள் வீடு இருந்த பகுதியில் வெள்ளம் ஏறியது. ரோசி சிஸ்ட்டரும் அம்மாவும் சேர்ந்து பொருட்களை உயரத்தில் வைத்தார்கள். அம்மா அப்போது அவரை ரோசி என்று மட்டும் அழைப்பார். ரோசி அதை எடு. விளையாடாதை.. இங்க வா.. யேய் காட்டடி.. என்ன அது.. சீ போ… என அவர்கள் நண்பர்களைப் போல விளையாடுவார்கள். என்னை மடியில் வைத்தபடி ரோசி சிஸ்ட்டர் மழையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா தேநீர் கொணர்ந்து தந்தார். 

“இன்னும் எத்தினை நாளைக்கு பாத்துக் கொண்டிருக்கப் போறாய்.. அவன் உன்னை ஒரு நாளும் ஏற்க மாட்டான். சரியான கோழை” என்றார் ரோசி சிஸ்ட்டர்.  

“இருட்டு இல்லாமல் ஒளி இல்லை. எனக்கு இந்தக் காதல் போதும். அதுக்கு மிஞ்சி எனக்கு பெரிய கனவொண்டும் வாழ்க்கையில இல்லை”  

“உன்னால இப்பிடி தொடர்ந்து இருக்கேலா. லீலி வளர்ந்திடுவாள்” என மெல்லிய குரலில் சொன்னார் ரோசி சிஸ்ட்டர்.  

என் கால் விரல்களை நீவி விட்டபடி “அவள் என்னை விளங்கிக் கொள்ளுவாள்” என்றார் அம்மா.  

பிறகு அம்மா அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்களால் எதையோ சொன்னார். சிஸ்ட்டருக்கு விளங்கியது. என் நெஞ்சில் கைகளை வைத்து ரோ ரோ சொன்னார். நான் அயர்ந்து உறங்கத் தொடங்கினேன். இடையிடையில் இடிச் சத்தங்களுக்கு உறக்கம் கலைந்தது. மின்னல் வெளிச்சத்தில் வீடு நீல வெண் ஒளியில் தோன்றித் தோன்றி மறைந்தது. கனவும் நனவும் கலைந்து ஒன்றெனத் தோன்றியது. மூப்பர் எங்கள் சோலையிலிருந்த தடாகத்தின் கரையில் நின்று வீட்டையே பார்க்கிறார். இரண்டு கைகளையும் மடக்கி வைத்திருக்கிறார். என்னை பெருங்குரலில் அழைத்து ஒரு கையை நீட்டுகிறார். 

“லீலி புஷ்பமே.. பெண்களுக்குள் பேரழகியே.. உனக்குத் தெரியாதெனில் மந்தையின் கால்சுவடுகளில் நீ தொடர்ந்து போ 

இடையர்களின் கூடாரங்களுக்கு அருகினிலே உன்னுடைய ஆட்டுக் குட்டிகளை மேய்த்திடு..” 

நான் அவரைத் தாண்டி ஓடுகிறேன். கனவிலா நனவிலா தெரியவில்லை. சோலைக்குள் அம்மாவும் ரோசி சிஸ்ட்டரும் கைகளைப் பிடித்துக் கொண்டு மழையில் நனைகிறார்கள். அம்மாவின் முகத்தில் விழும் மழைத் துளிகளின் தொடுகையில் அவர் மெய் மறந்திருக்கிறார். நான் “அம்மா.. அம்மா” எனக் கத்துகிறேன். குரலே இருக்கவில்லை. அழுதபடி அவர்களை நோக்கி ஓடுகிறேன். கால்கள் அசையாமல் சுழல்கின்றன. கைகளை நீட்டிப் பிடிக்க முயன்றேன். உறைந்து பனிச்சிற்பம் போல மாறினேன். திக்கித்து கால்களை உதறி விழித்தேன். இது கனவு, கனவு என கண்களை கசக்கியபடி எழுந்தேன்.  

வெள்ளம் வீட்டு போர்ட்டிக்கோவை நிறைத்திருந்தது. சோலையில் மரங்கள் நீரில் கால் தெரியாமல் நின்று கொண்டிருந்தன. தடாகத்தைக் காணவில்லை. மழை நிற்காது பொழிந்து கொண்டிருந்தது. அம்மாவின் அறைக்குள் சென்றேன். சாலமோனின் பாடல்கள் இருந்த பைலை நெஞ்சில் வைத்தபடி படுத்திருந்தார். ரோசி சிஸ்ட்டர் போர்வைக்குள் சுருண்டு கிடந்தார். நான் போய் அம்மாவிற்கு பக்கத்தில் படுத்தேன்.  

திரும்பக் கண் விழித்த போது முழுவதுமாக நனைந்த அப்பா அம்மாவை அடித்து கட்டிலில் தள்ளினார். நான் கெலித்துப் போய் கால்களை குறண்டிக் கொண்டு “வேண்டாமப்பா.. வேண்டாமப்பா” என்று கத்தினேன்.  

அம்மா அழவில்லை. ரோசி சிஸ்ட்டரைக் காணவில்லை. அப்பா அவரை ஏசினார். அம்மா எழுந்து திரைச்சீலையை விலக்குவது போல சாதாரணமாக அவரை விலத்திக் கொண்டு ஹோலுக்குள் போனார். அப்பா வெறிவந்தவர் போல கட்டிலில் கிடந்த சாலமோனின் பாடல்களை எடுத்து சுக்கல் சுக்கலாக நகங்களால் கீறி கிழித்தபடி ஹோலுக்குப் போனார். நான் இறங்கிப் பின்னால் ஓடினேன். அம்மா போர்ட்டிக்கோவில் இறங்கி நின்றார். தடாகத்து திசையில் சென்று அதற்குள் இறங்கிய போது கழுத்து வரை நீர் நிறைந்தது. மழை கொட்டியது. சிலிர்த்துச் சிலிர்த்து நீந்தினார். மரங்களில் காற்று ஓலமிட்டது. மலர்கள் நீந்திச் சுழன்றன.  

அப்பா சாலமோனின் பாடல்களை நீரில் எறிந்தார். துளித் துளிச் சொற்களாக அவை நீந்தி சோலையெங்கும் பரவின. அவரால் பொறுக்க முடியாமல் பற்களைக் கடித்தபடி அலைந்தார். வீட்டிற்குள் சென்றார். அலவாங்குடன் திரும்பி வந்து மழையைக் கிழித்தபடி தடாகத்தை நோக்கிச் சென்றார். அம்மாவைக் காணவில்லை. திடீரென்று நீரினடியிலிருந்து தோன்றினார். நீரைக் கைகளால் அளைந்தபடி மீண்டும் மூழ்கினார். எனக்கு உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. “அம்மா.. அம்மா” வென்று கத்தினேன். இப்போதும் என் குரல் எழவில்லை. காற்றுப் போல இருந்தது. நிகழவிருக்கும் ஒன்று நிகழ வேண்டுமென முடிவெடுத்து விட்டால் அதை எவராலும் தடுக்க முடியாது. அது தான் விரும்பியது போலவே நிகழும். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கரை மீனைக் குத்திப் பிடிப்பதைப் போல அப்பா அலவாங்கால் நீரில் குத்தினார். அம்மா சிரித்துக் கொண்டே அவருக்குப் பின்னால் சென்றார். அப்பா ஆக்ரோஷமாக கைகள் வலிக்க எல்லாத் திசையிலும் அலவாங்கை வீசினார்.  

நான் பார்த்தேன். ஒரு கணம் நீரிலிருந்து கையடித்து விரித்து மூப்பர் தோன்றினார். பல்லாயிரம் முத்துக் குமிழ்களாக மழை கொட்டியதை நீல மின்னல் வெளிச்சம் காட்டியது. மறுகணம் கைகளை நடனம் போல அசைத்து அம்மா தோன்றினார். கருநாகக் கூந்தல் இழை இழையாகப் பிரிந்து காற்றில் திரையென விரிந்தது. வெறி வெள் விழிகள் சிவந்து கோடுகள் காட்டின. ஆடையைக் கழற்றி வீசினார். நிர்வாணமாக அலையடிக்க சோலைக்குள் நீந்தினார். அம்மாவின் சிரிப்பால் சோலை நீர் சிலிர்தது. மரங்களில் குயில்களின் பாடல் போலக் குரலெழுப்பினார். இனிமையான பாடல் ஒலித்தது. அவை அந்த வரிகள்.. அவை அந்த அந்தரிப்பு.. அப்பா அதைக் கூர்ந்து கேட்டார்.  

“சாரோன் சமவெளியில் உள்ள காட்டு மலர் நான். பள்ளத் தாக்குகளில் காணும் லீலி மலர் 

முட்புதர் நடுவில் லீலி மலர் போல மங்கையருள் இருக்கிறாள் என் அன்புக்குரியவள்”  

அப்பா ஆவேசமாக அலவாங்கை தேடினார். ஊன்றி எடுத்தபடி அம்மாவின் குரல் வந்த திசையை நோக்கி நீந்தினார். அலவாங்கு மின்னல் தண்டு போல படபடத்தது.  

மாதுளை மரத்தை நோக்கி அலவாங்கை வீசினார். பேய் போலச் சிரிப்புடன் மாதுளையிலைகள் நீர் தெளித்துக் கொட்டின.  

அம்மா இருட்டில் ஒளிர்வுடன் தோன்றினார். அத்தனை பேரழகுடன் ஒரு மாபெரும் முத்தைப் போல. அவர் கையிலிருந்த குறுங்கத்தி அப்பாவைக் கீறியது. அப்பா விலகி ஓடினார். அலவாங்கை எடுத்து மீண்டும் வீசினார். அம்மா நீரலை போல விலத்தினார். கண்களில் விளையாட்டுச் சிரிப்பு. தடாகத்தை நோக்கி நீந்தி வந்து மூழ்கினார். திரும்பவும் சில கணங்களில் எழுந்து என்னைப் பார்த்துச் சிரித்தார். 

வலக்கையில் குறுங்கத்தி கொம்பு போலிருந்தது. ஓங்கிய குரல்களில் தோன்ற முடியாத மாய இனிமையுடன் பாடினார்.  

“மங்கையரே.. கலை மான்கள் மேல் ஆணை! வயல்வெளி மரைகள் மேல் ஆணை! உங்களுக்கு நான் கூறுகிறேன்.. காதலைத் தட்டி எழுப்பாதீர்.. தானே விரும்பும் வரை அதைத் தட்டி எழுப்பாதீர்.. அதைத் தட்டி எழுப்பாதீர்..”  

அம்மாவின் வலது மார்பைப் பிளந்து கொண்டு அலவாங்கு இரத்தச் சீறலுடன் வெளியே வந்தது. ஒரு கணம் உறைந்து மறுகணம் வெட்டிய மின்னலில் திடுக்கிட்ட அம்மா குறுங்கத்தியை திருப்பி அப்பாவைப் பார்த்து கழுத்தில் குத்தினார். அப்பா திகைத்தார். சொல்லின்றி நீரில் விழுந்தார் அம்மா. இருவரும் தடாகத்தில் சில கணங்கள் தத்தத்தளித்தனர். நான் விறைத்துப் போனேன். கால்கள் மரத்து அப்படியே இருந்தன.  

பின்னர் ரோசி சிஸ்டர் என்னை மடத்தில் சேர்த்தார். கதையைச் சொல்லி முடித்த போது எல்லாம் அடங்கியது போலிருந்தது.  

மிர்னாவின் கண்கள் நீர் ததும்ப என்னைப் பார்த்துக் கொண்டிருந்தன.  

என்னைக் கட்டியணைத்தார். நெற்றியில் முத்தமிட்டார். நான் அவரது காது முடியைக் கோதி விட்டுச் சொன்னேன், “காதலைத் தட்டி எழுப்பாதீர்.. தானே விரும்பும் வரை அதைத் தட்டி எழுப்பாதீர்”. அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். முத்து வரிசை போன்ற பற்கள் ஒளிர்ந்தன.  

“என் லீலி புஷ்பமே..” என்றார்.  

“என் முத்தே” என்றேன். குனிந்து என் குவை நடுவில் தூங்கிய முத்தைக் கொஞ்சினார். ஆறுதலாக மூச்சை இழுத்தபடி கண்மடல்களை மூடினேன். அலையடித்துச் சுழன்று தெறிக்கும் முத்தரிப்புத் துறையின் கடற்கரையில் அம்மாவும் மூப்பரும் கடலையே பார்த்துக் கொண்டிருந்தனர். அருகே சிறுமியாக நான் நின்று கொண்டிருந்தேன். கடலில் பெய்து கொண்டு மழை எங்களை நோக்கி நீந்தி வந்தது. உடல் சிலிர்க்கிறது. லீலியென ஒரு குரல் வந்தறைந்து காதைக் கூசச் செய்கிறது. அத்தனை ஆவேசமான முத்தத்தை என் இதழ்கள் அறிந்ததில்லை. பதிலுக்கு அத்தனை வெறியுடன் எழுவேன் என்பதை எதிர்பார்க்காத மிர்னாவின் இதழ்கள் படபடப்புடன் தழுவித் தழுவி பற்ற விழைந்தன. என் லீலி விழித்துக் கொண்டாள்.   

நன்றி – ஜீவநதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *