கோட்டில் கேட்கும் சங்கீதம் – பிரிந்தா

ஈழத்தின் மூத்த காண்பிய படைப்பாளிகளின் நேர்காணல் தொடரொன்றை ‘எழுநா’வில் பிரிந்தா தொடங்கியிருக்கிறார். முதலாவதாக தா. சனாதனனின் நேர்காணலின் முதற் பகுதி வெளிவந்திருக்கிறது. ஒவ்வொரு நேர்காணலையும் அவர்களது வாழ்க்கை, அனுபவங்கள், படைப்புகள் அவை பற்றிய அவர்களின் சொந்தப் பார்வைகளென விரிவாக பதிவு செய்ய இருப்பதாக பிரிந்தா சொன்னார். 

‘சக்கரவியூகத்தில் சிக்குண்டிருக்கும் நானும் எனது வீடும்’ என்ற சனாதனனின் நேர்காணலில் மிக விரிவாக அவரது இளமை, படைப்பு பற்றி எழுதியிருக்கிறார். புனைவெழுத்தாளர்களுக்கு இத்தகைய நேர்காணல்கள் ஓவியத்தினை ஆக்கும் மனம் உருவாகி வரும் வரைபடத்தினை அளிக்கக் கூடும். அதன் நுண்மைகள், தனி அனுபவங்கள் படைப்பில் எழும் இடங்கள். இன்னொன்றாக மாறும் நிலை என்பன முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கதையை வாசிப்பதைப் போல இந்த நேர்காணலை வாசிக்க முடிகிறது. மிக முக்கியமான தொடக்கம். 

(தா. சனாதனன்)

மூத்தவர்களின் அனுபவம், படைப்பு பற்றிய பார்வைகள் இளைய படைப்பாளிகளுக்கு முக்கியமானவை. கலை மனம் எப்படி உருக்கொள்கிறது, தொந்தரவை அடைகிறது. அது கலையில் எப்படி வெளிப்படுகிறது என்பன விரிவாக எழுத்தில் இருக்க வேண்டியது. பிரிந்தா முற்குறிப்பில் சொல்லியிருப்பதைப் போல சமூகத்தின் நுண்ணுணர்வு மிக்க மனங்களின் உணர்கொம்புகள் எங்கனம் தன் காலத்தை உறிஞ்சுகின்றன என்பது கவனிக்க வேண்டியது. 

சனாதனனின் காண்பியப் பங்களிப்பு தனியே அவருடைய படைப்புலகு சார்ந்ததல்ல. அவரை வெட்டியும் ஒட்டியும் வேறொன்றாக ஆகியுமே ஈழத்து நவீன காண்பிய உலகு உருவாகியிருக்கிறது. அவரது ஓவியங்களில் மரபான தொன்மங்கள் மீண்டும் இன்னொரு அர்த்தமும் அழகியலும் கொண்டு உருவாகி வந்திருக்கின்றது. உதாரணத்திற்கு, நூறு பிள்ளைகளையும் போருக்குக் கொடுத்த காந்தாரி வேறொருத்தியாக ஈழ நிலத்தில் பெருஞ்சோகம் சுமப்பவளாகிறாள். பேரன்னையென நூறு மகவுகளை ஈன்றவளின் உடலிலிருந்து குருதிக் கறை வண்ணங் கொண்ட நில வரைபடத்தின் மீது வாளுடன் எழும் புரவி வீரர்களின் ஓவியம் ஒரு நாவலுக்கான விரிவு கொண்டது.

அவர் ஒரு படைப்பாளி என்பதுடன் அசலான ஒரு அக்கடமிக். அறிவுஜீவி. அவரிடம் பயின்ற ஏராளம் மாணவர்களை அறிவேன். அவரது துறையில் புடம் போடப்பட்டவர்கள் அதற்கு முன்னிருந்த அவர்களது ஆளுமையை தொகுத்துக் கொண்டு முன்னகர்ந்திருக்கிறார்கள். நீண்டதொரு இளம் ஓவியர்களின் நிரை அவரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நேர்காணல் அவரின் அகச்சித்திரத்தை விரிவாகத் தொகுத்து அளிக்கிறது. 

‘சக்கரவியூகத்தில் சிக்குண்டிருக்கும் நானும் எனது வீடும்’ – தா. சனாதனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *