இன்றிலிருந்து சரியாகப் பத்து வருடங்களுக்கு முன்னர் புதிய சொல்லிற்கென ஒரு உரையாடலை நானும் ஹரி ராசலெட்சுமியும் தர்மு பிரசாத்தும் யாழினியும் செய்திருந்தோம். தற்செயலாக அந்த உரையாடல் பற்றிக் கதை வந்த போது அதை எடுத்து வாசித்துப் பார்த்தோம். வேடிக்கையும் சிரிப்புமாய் இன்றைக்குத் தோன்றும் பதில்கள். அபரிமிதமான என் ஆணவம் இப்பொழுதும் வியக்க வைக்கிறது. இந்த பதில்களை எழுதிக் கொண்டிருந்த போதும் புதிய சொல் இதழை நடத்திக் கொண்டிருந்த பொழுதும் எனக்கு இருபத்தி இரண்டு வயது என்பதை நம்பக் கடினமாய் இருக்கிறது. சரியாகச் சொன்னால் ஒரு புழுத்திச் சிறுவனைப் போல இருந்திருக்கிறேன். எப்படித் தான் என்னைத் தாங்கிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.
இன்று இதை வாசிக்கும் பொழுது எத்தனை கருத்துகளில் குட்டிக்கரணமிட்டு தலைகீழாய் வந்து சேர்ந்திருக்கிறேன் என்பதின் வரித்தடங்கள் தெரிகின்றன. தர்மு பிரசாத்திடன் உள்ளார்ந்த தெளிவு இருந்திருக்கிறது. புதுமைப்பித்தனின் வாரிசுகளுக்கு அப்படியிருக்கலாம். ஆனால் என்னிடம் தெரிவது விட்டேற்றித் தனமும் மித மிஞ்சிய அறிவாணவமும் அலட்சியமும்.
ஆனால் ஆச்சரியகரமான ஒரு விசயத்தை கவனித்தேன். பதிலொன்றில் அப்பாவைப் பற்றிச் சொல்லும் ஒரு பந்தியில் கொடிறோசின் சுருக்கம் மிகச் சரியாக எழுதப்பட்டிருக்கிறது. நாமே அறியாமல் நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என உள்ளிருந்து அறியும் ஒன்று தான் குட்டிக்கரணம் அடிக்கிறதா!
- இலக்கியத்தில்/கலையில் உங்களுடைய ஈடுபாடு எங்கனம் ஆரம்பித்தது? காலப்போக்கில் அது எவ்வகையான மாற்றங்களைச் சந்தித்தது? உங்களுடைய தற்போதைய செயற்பாடுகளில் செல்வாக்குச் செலுத்துகிற போக்குகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் சிலரைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

தர்மு பிரசாத்: வீட்டிலிருந்த ஒரேயொரு செல்லரித்த மகாபாரதப் பிரதியினுள் இரண்டு பனையோலைகள் எப்போதும் செருகப்பட்டிருக்கும். கிழிந்து பக்கங்கள் இடம்மாறியிருந்த பின்னவீனத்துவப்பிரதியது. எங்கிருந்து எப்படி வாசித்தாலும் அதில் ஒரு தொடர்ச்சியிருந்தது. அய்யாவும், அம்மம்மாவும் அதைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருப்பார்கள். கேட்டால் பாரதம் பல கதைகளின் விதைநிலம் என்பார்கள். வாழ்வில் அனைத்திற்கும் அவரிடம் பாரதத்திலிருந்து ஒர் உதாரணமிருக்கும். மகாபுருசர்களாக பாரதம் முழுவதும் விரவியிருந்த பாண்டவர்கள், சுவர்க்கம் செல்லும் வழியில் ஒவ்வொருவராக இறந்து வீழ்வதும் , தருமருடன் வந்த நாயும் இறந்து விட தருமர் தனித்திருந்த சித்திரம் நெடுங்காலம் வரை என்னை தொடர்ந்து வந்தது. மகாபாரதத்துடன் ஆரம்பித்ததாலோ என்னவோ எல்லோரும் பதின்பருவங்களில் விதந்தோதிய வரலாற்றுப்புனைவுகள் (கல்கி, சாண்டில்யன் முதலான), எதார்த்தவாதவாதக் கதைகள் என்னை ஈர்க்கவில்லை அவற்றில் ஒருவித சலிப்பே எஞ்சியது. இருப்பதை, அல்லது அடையவேண்டியதை அப்படியே சித்தரித்து விடுவதில் என்ன இருக்கிறது. அடுத்து, போர் குறித்த சித்திரமும், இரணுவ வெற்றிகள் குறித்த பெருமிதங்களும் மிகுந்திருந்த நாட்களவை. அந் நாட்களின் வெம்மையில் ஒரு நாள் சிவரமணியின் கவிதையை ’கற்றதும் பெற்றது’மில் சுஜாதா பகிர்ந்திருந்தார். அதிலிருந்துதான் என் இலக்கிய வாசிப்புத் தொடங்கியது எனலாம். அக் கவிதைவரிகள், அது சுட்டிய பொருள்கள் திரும்ப, திரும்ப பல கிளைகளாக விரிந்து கொண்டிருந்தது. அதன் பின்னர் சிவரமணி குறித்து வாசித்தவையும் என்னுள் பல தாக்கங்களைச் செலுத்தியது. உயிர் குறித்தும், கவிதை குறித்தும், போர் குறித்தும் , விடுதலை குறித்தும், பெருமிதங்கள் குறித்தும் அறிந்து கொண்ட நாட்களவை. பின்னர் நடந்த புலப்பெயர்வு வாசிப்பின் பல வாசல்களைத் திறந்து விட்டன. அதனால் இலக்கியத்தில் ஒருவித தீவிரத்தை எதிர்பார்க்கத் தொடங்கினேன். எதார்த்தத்தை முன்வைக்கும் படைப்புகளை விட அகச்சிக்கல்களை புனைவாக முன்வைக்கும் படைப்புகளை நெருக்கமாக உணரக்கூடியதாக இருக்கின்றன. விளிம்புகளை உள்ளீர்க்கும் பின் – நவீனத்துவ கருத்தாக்கங்கள், எழுத்து அதிகாரம் குறித்து வாசித்துக் கொண்டிருந்த போது கம்யூவின் அந்நியன் திரும்பவும் இருத்தலியம் நோக்கி திரும்ப வைத்தது.
இப்போது என்னை முழுவதுமாக உள்ளிழுத்திருப்பது அல்பெர் கம்யூவின் படைப்புகள். அவை குறித்தே அதிகமும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவரின் அல்ஜீரிய அடி குறித்தும், அல்ஜீரிய விடுதலைப்போராட்டக் கருத்து நிலை குறித்த பதிவுகளும் என்னுடன் பலவாறு பொருத்திக் கொள்ளமுடிகிறது. விடுதலைக் கருத்தியல் எல்லாவற்றிலும் மேலெழுந்திருப்பது உயிர் வாழ்தலுக்கான இச்சையே. ஓர் உயிரின் இறப்பில் இன்னொரு உயிரின் விடுதலை என்பது எங்கனம் சாத்தியமாகிறது, அதை எப்படி உன்னதம் எனவும், வீரம் எனவும் இறுதி இலட்சியமெனவும் எம்மால் கொண்டாட முடிகிறது ? இப் பெருமிதங்களும், உணர்ச்சிவசப்படல்களும் – கம்யூவை வாசித்ததன் பின்னர் – அபத்தமானவையாகத் தோன்றுகிறது. போலிக் கற்பிதங்களின் அபத்தம் குறித்து எழுதுவதே இப்போது வந்தடைந்திருக்கும் இடம்.
ஆதர்சங்கள், பாதித்த எழுத்தாளர்கள் குறித்த பட்டியல் நெகிழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பிட்டு இவர்கள் தான் என சுட்டிட முடியவில்லை. அப்படி சுட்ட முடியாது போலிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வையைச் சிந்தனையைக் கொடுத்திருக்கிறார்கள். தலித்தியம், விளிம்புநிலை உரையாடல்கள் பரவலாக்கும் ஆர்வம் மிகுந்திருக்கிறது, தன்னிலையை ஊதிபெருப்பிக்கும் நவீன தமிழ் நாவல்கள் குறித்து காட்டமான விமர்சனமிருக்கிறது.
கிரிசாந்: பத்து வயதுக்கு முன் அம்புலிமாமாவும் கொமிக்ஸ் புத்தகங்களும் தான். பத்து வயதில் நூலகத்தில் காட்டுச் சிறுவன் நீலன் என்ற கதைப் புத்தகத்தைப் படித்தேன், அதன் வசீகரமான வாழ்க்கை என்னை உள்ளீர்த்துவிட்டது, பின் பாரதியார் கவிதைகள். அதன் பின்னர் ஆன்மிகம், இல்லை,சரியாகச் சொன்னால் மந்திர தந்திரத்தில் வந்த ஆர்வத்தில் மனோவசியம், மன ஆற்றல் பெருக வேண்டுமா? என்ன செய்யலாம் மெஸ்மரிசம் , ஹிப்னாட்டிசம் … என்று தலையணை அளவு புத்தகங்களை படித்துக் கொண்டேயிருப்பேன். பின்னர் அவற்றை பயிற்சி செய்தேன். தியானம் செய்யும் பழக்கம் அப்படி வந்தது தான். பின்னர் மூன்று வருடங்கள் தமிழில் வந்த அத்தனை கவிதைப் புத்தகங்களையும்( புதுக்கவிதைகள் ) படித்து விடும் வெறியில் வாசித்தேன், இல்லை. வாழ்ந்தேன். கடைசி வரை கவிதை எழுதும் எண்ணமே எனக்கு கிஞ்சித்தும் கிடையாது. எழுதுவதில் அப்போது ஆர்வமும் இருக்கவில்லை. என்னுடைய வீட்டில் இருந்து கொஞ்சம் தள்ளி, தூண்டி பதிப்பக உருவாக்குனர், தி. செல்வமனோகரனுடைய வீடு இருந்தது, அதை வீடு என்று சொல்வதை விட, லைப்ரரி என்றே சொல்லலாம், அவ்வளவு புத்தகங்கள்.
ஒரு தடவை அவர் தந்த புத்தகம் ஒன்றை தொலைத்து விட்டேன். அதன் பின் அவர் இரண்டு வருடங்கள் எனக்கு புத்தகங்கள் தரவில்லை. அந்த நிகழ்வு என்னை மீண்டும் நூலகங்களுக்கும், பரிந்துரையின்றி அல்லது முன் அனுமானங்களின்றி புத்தகங்களின் புதிர் நிறைந்த அடுக்குகளுக்குள்ளும் நுழைய வைத்து விட்டது. பிற மொழி இலக்கிய மொழி பெயர்ப்புக்கள் சிறிது காலம் வசீகரமாய் இருந்தன. கலீல் ஜிப்ரான் என்னுடைய விருப்பத்திற்குரிய ஒருவராக இருந்த காலமது. 19 வயதுக்குப் பின் முகநூலுக்கு வந்தேன். எல்லோரும் எழுதித் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அட, இதை விட என்னால் எழுத முடியும் என்று, விளையாட்டாக எழுத ஆரம்பித்தேன், தினமும் ஒரு கவிதை எழுதி நண்பர்களைச் சாகடித்தேன் . ஆனால் எனது நண்பர்கள் பலர் என்னை ஊக்கப்படுத்தினார்கள், ரசித்தார்கள் .
உதாரணமாக, மீனவர்கள் பற்றி இப்படி எழுதினேன், “இரவினிலே தொழில் என்பதால், கனவுகள் வருவதில்லை. பகலிலே உறக்கம் வரும், பகல் கனவு பலிப்பதில்லை” என. இது வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதை ஒன்றின் தாக்கத்திலிருந்து எழுதப்பட்டது. அதனால் என்ன,அவர்கள் ரசித்தார்கள், நான் எழுதினேன், அவ்வளவு தான்.
2012இல், இலக்கியக் குவியம் என்ற அமைப்பு யாழ்ப்பாணத்தில் உருவாகியிருந்தது. அதில் வேலணையூர் தாஸ், இளையவர்களை தேடித் பிடித்து சேர்ப்பதில் ஆர்வமாக இருந்தார். அதில் நான், ஆதி பார்த்திபன் , மதுஷா மாதங்கி, பிறைநிலா, வினோத், மதி போன்றவர்கள் இயங்கினோம், அது புதிய வகை உரையாடலை தோற்றுவித்தது. பின்னர் எனது முதலாவது கவிதை கல்கியில் பிரசுரமானது. கொஞ்ச நாள் கழித்து எனக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்து செல்வமனோகரன் மீண்டும் புத்தகங்கள் தரத் தொடங்கினார், நானும் அள்ளி அள்ளி வாசித்தேன், ரஷ்ய நாவல்களில் பைத்தியம் பிடித்து அலைந்தேன், பின்னர் தான் தமிழ் நாவல்கள். கோட்பாட்டு அடிப்படையிலான புத்தகங்களும் எனக்கு மிகப் பிடிக்கும், அமைப்பியல் தொடங்கி பின்நவீனத்துவம் வரை இன்னமும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
என்னை பாதித்த எழுத்தாளர்கள், தமிழில் (எல்லாக் கருத்தியல்களையும் அல்ல,எல்லா வகையான வடிவங்களையும் உள்ளடக்கி), ஷோபாசக்தி, யோ .கர்ணன், சயந்தன், இராகவன், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், சுதாகர் சந்திரபோஸ், சிவரமணி, என்.ஆத்மா, ரியாஸ் குரானா, ஜெயமோகன், சாருநிவேதிதா, கோணங்கி,மனுஷ்ய புத்திரன், தேவதேவன், கு.அழகிரிசாமி… என்று நீளமான பட்டியல் உண்டு. பிற மொழியில், தாஸ்தவேஸ்கி, டால்ஸ்டோய், வைக்கம் முகமது பஷீர், ஜியாங் ரோங், ஹருகி முரகாமி, யசுனாரி கவாபட்டா, போர்ஹெஸ், அந்துவான் சு எக்ஷுபரி, சிங்கிஸ் ஐத்மாத்தவ் … என்று மிக நீளமான பட்டியலே உண்டு. யார் எப்படி எந்தளவு என்னில் பாதிப்பை நிகழ்த்தினார்கள் என்பது இப்போது வரை மாயமே. இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, என்னைப் பற்றி நானே எவ்வளவு மறந்துவிட்டிருக்கிறேன் என்று தெரிகிறது, மறதிக்குள் சென்றவை தான் இந்த நினைவுகளை உருவாக்குகின்றன. அதை நினைக்க அச்சமாயும், அடுத்த வரியில் ஆறுதலாயும் இருக்கின்றது. மேலும் என்னை பற்றி ஒன்று, நான் ஓஷோவின் பெரிய ரசிகன்.
- எழுத்து என்பது என்ன? ஏன் எழுதுகிறோம்? எழுத்துச் செயற்பாட்டின் சமகால நிலவரம் என்ன?
கிரிசாந்: எழுத்தாளன் இறந்து விட்டான் என்ற அறிவிப்பை முக்கியமானதொன்றாகவே பார்க்கிறேன், இந்த “எழுத்து” என்பது ஒரு செயல் நிலை, சொற்களை மனதின் இயந்திரத்திடம் கொஞ்சம் நிரப்பி விட்டால், கொஞ்ச காலத்தில் அது தனக்குள் உள்ள வெற்றிடங்களை, அந்த மனதின் அனுபவங்களுக்கு ஊடாக வெளிப்படுத்த தொடங்கி விடும், நான் எழுதுபவர்கள் என்றே குறிப்பிட விரும்புகிறேன், ஆள்பவர் என்பது தேவையற்ற சேர்க்கை. ஆகவே எழுத்து செயல்பாடாகிறது. அது எதைச் செய்ய விரும்புகிறதோ அது ஆகாயத்தில் இருந்து குதிப்பதல்ல, அது ஏற்கனவே இருந்ததுதான், ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி அதை எழுத்து செய்து காட்டுகிறது, அதற்கு அரசியல் உண்டு, பலஹீனம் உண்டு, அழகுண்டு, வெறுப்புண்டு, அது ஒரு தூய செயற்பாடு அல்ல.
நான் ஏன் எழுதுகிறேன் என்பதை மட்டுமே நான் பேசுகிறேன், நான் எழுதுவது வேறு யாருக்கேனும் பயன்படுமா அல்லது உதவுமா என்று தெரியாது, அதனால் எந்த பயனும் இருப்பதாக தெரியவில்லை. எல்லா எழுத்துக்களும் கடந்து விட வேண்டியது தான், நான் யாரையும் காவிக் கொண்டு திரிய விரும்பவில்லை. எளிமையாகப் பார்த்தால் இது ஒரு பொறுப்பற்ற பதில் போல் தோன்றும், ஆனால் இது தான் எனது எழுத்து. நான் என்னைக் குழப்பும் மொழியின் சிக்கலில் இருந்து, என்னைத் தினமும் அடக்கிக் கொண்டிருக்கும் மனித அடக்குமுறையிலிருந்து வெளிவரும் போது தான் எழுதுகிறேன், காதல் கவிதைகள் கூட அடக்குமுறையிலிருந்து வெளிவருதல் என்ற செயற்பாடாகவே கருதுகிறேன்.

இலக்கியத்தையோ அல்லது எந்த கலை வெளிப்பாட்டையோ மானுடனை உயர்த்த அல்லது விடுவிக்க வந்த வெளிப்பாடுகளாக நான் பார்க்கவில்லை, அது அதனளவில் ஒரு இயங்கியல் தேவையைக் கொண்டிருக்கிறது. மனிதனின் உருவாக்கங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சிந்தனைத் தொடர்ச்சி உள்ளது, மனிதன் ஒரே மாதிரி சிந்திக்கிறான், வேறு வேறு சொற்களில், நமது நாட்டை எடுத்துக் கொண்டால், என்ன எழுதிக் கொண்டிருக்கிறார்கள், எல்லாமே சொல்லப்பட்ட கதைகளை நிகழ்ந்த சம்பவங்களில் பிரதியீடு செய்து, வேறு மாதிரி சொல்லிப் பார்ப்பது தான்.
நாங்கள் உரையாடுவதை நிறுத்தி வெகு காலமாகிறது, நாங்கள் சொல்லிக் கொண்டிருப்பது நமது முன்னோர்கள் சொன்னவை தான். அதே சொற்கள், வேறு வேறு எண்ணற்ற அர்த்தங்கள், எதையும் புதிதாக நிகழ்த்த முடியாத ஒரு செயல்பாடாகவே எழுத்துச் செயலை நான் பார்கிறேன், வேண்டுமானால் வித்தியாசமாகச் செய்து பார்க்கலாம்.
தர்மு பிரசாத்: என்னை இன்னும் வசீகரித்துக் கொண்டிருப்பது இந்த மொழிதான். அதன் சிக்கலினுள் அமிழ்ந்து என்னை மீட்டுவிட முடியுமென வெகுவாக நம்புகிறேன். நீண்ட தொல்மரபுடைய மொழியில் நானும் எழுதுகிறேன் என்ற போது பெருமிதமாக இருந்தது. ஆனால் தீவிர வாசிப்பின் பின்னர் இந்த மொழி, இனம் குறித்த பெருமிதங்கள் வரலாற்றில் ஈ பறப்பது போல ஓர் எளிய நிகழ்வாகியது. இந்த மொழி வெறும் தொடர்பாடல் கருவிதான் என்றும் / இல்லை இது ஆயிரம் ஆண்டுகளின் எச்சம் அதில் தேங்கியிருக்கிறது எனவும் எண்ணத்தலைப்பட்டேன். ஆனால் இந்த மொழியைக் கைகளால் அளைந்து கொண்டிருப்பதே சுகமாகவிருந்தது. இங்கு வந்த நாட்களில் சதா புத்தகங்களோடு ஒடுங்கிப்போய்விடும் என்னை நண்பர்கள் ஒரு அபூர்வ ஜந்துவைப்போல பார்த்தார்கள். அது ஒருவித கிளர்ச்சியைக் கொடுத்தது. கூடவே அறிமுகமாகிய வலைப்பூக்களும், அதில் எழுதப்பட்ட எளிய அனுபவக்குறிப்புகளும் இனிவரும் இலக்கியம் இப்படிச் சாமானியர்களின் பக்கம் நகர்ந்து விட்டதாகவும், கோட்பாட்டுச் சட்டகங்களும், மதிப்பீடுகளும் நெகிழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது எல்லாம் சில காலம் தான். வலைப்பூக்களில் நீண்ட கட்டுரைகளில் முன்வைத்தவைகள் பேஸ்புக்கில் சில பந்திகளில் சுருங்கிப்போனது. இந்த எளிய அனுபவக் குறிப்புகளை எழுதுவதனால் என்னவாகிவிடப் போகிறது, இந்த அனுபவங்களிலிருந்து இந்த சமூகம் எதனைக் கண்டடையப் போகிறது, சமூக மாற்றத்திற்கான எழுத்துகள் என்பது எல்லாம் வெறும் சொற்களாகிவிட்டன என்றால் மறுபுறம் சிக்கலான மொழியில் புரிந்து கொள்ள முடியாமல் முன்வைக்கப்படும் படைப்புகள் ஒன்றுமே இல்லை என்றாகிவிடுமா? இல்லை இன்னும் ஆயிரம் ஆண்டுகளின் பின்னால் வரும் வாசகனுக்காக எழுதிக் கொண்டிருக்கிறார்களா? இல்லை தாம் கொண்ட கோட்பாடுகளின் அடிப்படையில் இலட்சியவாதமாக முன்வைக்கப்படும் படைப்புகள் எல்லாம் எவ்வகையான சலனத்தை சமூகத்தில் நிகழ்துகின்றன ? அவை வெறும் ஆசைகள் என்றளவில் சுருங்கிப்போய்விடுகின்றனவா?
நான் எழுதுவதன் மூலம் என்னைக் கண்டடைந்து கொள்ளலாமா என்றால் அது இன்னமும் அபத்தமாகவே இருக்கிறது.
எழுத்தும் ஒரு அதிகாரத்தின், பெருமிதத்தின், தன்னை முன்னிலைப்படுத்துவதன் குறியீடாகிவிடுகிறது. எழுதியவற்றை பத்திரிகைகள், புத்தகங்களில் எதற்காகப் பிரசுரித்துக் கொள்ளவேண்டும், யாருக்கு நிரூபிப்பதற்காக முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறோம் அல்லது இலக்கியப்பிரதியில் நாம் எதனைத் தேடிக் கொண்டிருக்கிறோம் அதன் நுட்பமான மொழியையா, அல்லது அழகியலையா, அது முன்வைக்கும் அனுபவத்தையா, அது உணர்த்தும் வாழ்வையா என்ற கேள்வி நெடுநாளாக என்னை தொந்தரவுபடுத்துகிறது. சமீபத்தில் வாசித்த ’ஓநாய் குலச்சின்னம்’ என்னை அந்த மேய்ச்சல் நில வாழ்வின், வேட்டையாடுதலின் இன்பத்தில் தொலைந்து போகவைத்தது. இந்த தொலைந்து போதல்தான் வாசிப்பின் மீதான பிடிமானமாக எனக்கிருக்கிறது. சலிப்பூட்டும் இயந்திர வாழ்வின் நெருக்கங்களிலிருந்து ஒருவிதத்தில் தொலைந்து போகவே முனைகிறேன். ஆனால் முற்றாக விடுபடமுடியவில்லை இந்த கலாசாரமும், பண்பாடும் இட்டுவைத்திருக்கும் சட்டகங்களிலிருந்து வெளிக்குதித்தோடிட முடியவில்லை அது கொடுக்கும் குற்றவுணர்வே மீண்டும், மீண்டும் வாசிப்பு/எழுத்தினுள் அமிழ்ந்திருக்க வைக்கிறது. எனக்கு இந்த குற்றவுணர்விலிருந்து விடுபட்டுக் கொள்வதே சுதந்திரமாகப்படுகிறது.
எழுதுவது குறித்த அயற்சி பெரும் பாரமாக அழுத்துகிறது. இங்கே வாசிப்பவர்களே எழுதுபவர்களாகவும், எழுதுபவர்களே வாசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
தம் உடல் ,பொருள் ,ஆவி எல்லாம் இழந்து இந்த எழுத்தில் தம்மை முன்வைத்தவர்கள் எல்லாம் என்னவானார்கள். அவர்களினால் நிகழ்ந்த மாற்றம் என்ன? உடனடியான விளைவுகள் என எதனையும் என்னால் பட்டியலிட முடியவில்லை. பத்தாண்டுகளிற்கு முன்னர் சாதாரணமாக பெண் `கற்பழிப்பு` என்று எழுதிவந்த பத்திரிகைள், இப்போது `வல்லுறவு` என்று எழுதுமளவுக்கு மாறிவிட்டன. இது சிறுபத்திரிகைகளிலும், சிறு சிறு இலக்கிய வட்டங்களிலும் முன்வைக்கப்பட்டு வந்த விவாதங்கள் சமூக மேல்மட்டத்தை வந்தடந்ததற்கான எளிய உதாரணம் என நினைக்கிறேன். ஒரு கருத்து விவாதமாகவும், விவாதங்கள் செயற்பாடுகளாகவும் மாறுவதற்கான காலம் மிக நீண்டதாகவிருக்கிறது.
ஆனால் சமீபகாலங்களில் மேலெழுந்து வரும் சாதீய, இனரீதியான பெருமிதங்கள் குறித்த அச்சம் நாம் இதுவரைகாலமும் முன்வைத்த சமூக மதிப்பீடுகளினைக் கேள்விகுறியாக்கியிருக்கிறன. இது நாம் வந்தடைந்த இடம் குறித்த அச்சம்.
- விடுதலை என்றால் என்ன? சுதந்திரம் என்றால் என்ன? எதிலிருந்து/எவற்றிலிருந்து விடுதலை அவசியமாயிருக்கிறது?
கிரிசாந்: நான் அடைவதா. நான் உணர்வதா. நான் அழிவதா.
எது சுதந்திரம். எதிலிருந்து சுதந்திரம்.
எனது கேள்வி எனது கேள்வி தானா? இது ஏற்கனவே கேட்கப்பட்டுக் கொண்டிருக்கும் கேள்வி, நான் இந்த கேள்வியை கேட்கும் படி எனது சமூகத்தால் தள்ளப் பட்டிருக்கிறேன். இதற்கு பொறுப்பான பதிலையும் அதே சமூகம் எதிர்பார்க்கிறது.
எல்லா ஞானிகளும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் தத்துவவியலாளர்களும் கலைஞர்களும் தங்களது சொந்தக் கேள்விகளையும் பதில்களையும் பொதுமைப்படுத்தி விடும் அபாயம் நடந்து விட்டது, மற்ற மனிதர்கள் அவர்களின் கலையிலும் வார்த்தைகளிலும் ஆறுதலடைந்து விடுகிறார்கள். அவர்கள் எதையும் புதிதாக உருவாக்குவதிலிருந்து, அல்லது தங்களை புதிதானதாக உணருவதிலிருந்து விலகி விடுகிறார்கள். நானும் நீங்களும் அப்படித் தான். இயற்கையின் அமைப்பில் எதுவுமே ஒரே மாதிரி இருப்பதில்லை, அதற்கு முன்னர் அது இருப்பதில்லை, அதன் ஒவ்வொரு படைப்புமே புதியது. ஆனால் மனிதர்கள் சிந்திப்பதால் பல்லாயிரம் ஆண்டு கால தமது வாழ்வின் முறையை, கலாசாரத்தை என் மீது திணித்துள்ளார்கள். நான் அந்த வடிவமைப்பிலிருந்து அல்லது தொடர்ச்சியிலிருந்து விடுபட விரும்புகிறேன். புதிதாக இருப்பது தான் சுதந்திரமாக இருப்பது. கலாசாரத்திலிருந்து விடுபடுவது தான் விடுதலை.
- சமூகம் மீதான அக்கறைக்கு இலக்கியத்தில்/கலையில் இருக்கக்கூடிய இடம் என்ன? அறம், அரசியல் சார்ந்து இலக்கியம்/கலையில் ஈடுபடுவதை எங்கனம் புரிந்து கொள்கிறீர்கள்?
கிரிசாந்: பலர் அறங்களின் மையங்களாக கலைகளையும் இலக்கியங்களையும் உருவாக்கி விட்டு ஞானிகளாக வலம் / இடம் வருகிறார்கள், அவர்களை நாம் எல்லா இடங்களிலும் பார்க்கிறோம் அவர்களை மனிதர்களை ஏமாற்றுபவர்களாகவே பார்க்கிறேன். ஆனால் நமக்கு முன் எழுதியவர்களில் பலர் அப்பாவிகள் என்றே தோன்றுகிறது, அவர்களிடம் எஞ்சியிருந்த மனிதர்களின் மீதான நம்பிக்கையை என்னிலும் பார்க்கிறேன், ஆனால் வேறு விதமாக, உதாரணமாக கலை இலக்கியத்தை வளர்க்கவோ அல்லது உயர்த்தவோ இந்த இதழில் நான் பங்களிக்கவில்லை, முடிந்தால் நமது காலத்தோடு, அதன் அப்பாவித்தனமான செயற்பாடுகளை கைவிட்டு விடச் சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன், பொதுவாக, வாசிப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன், எல்லோரும் தங்களைத் தாங்கள் எழுத்துக்களில் பார்த்துக் கொள்கிறார்கள், அல்லது எழுத்து உருவாக்கும் யாரையோ பார்த்து சந்தோசமோ அழுகையோ கொள்கிறார்கள், எதற்காக இந்த நிலைமை, நமது நிலைமையைப் பார்த்தீர்களா, நண்பர் நீட்ஷே முதல் தெரிதா வரை, எல்லா வகையான இறப்புக்களையும் அறிவிக்க வேண்டி வந்திருக்கிறது, நமது காலத்தில், இலக்கியத்தையும் கலைகளையும் கருணைக் கொலை செய்து விடலாம், அவை பாவம். அதற்கு அறம் என்ற மனித நம்பிக்கையை கொடுப்பதென்பது, வெறும் சொல் அளவில் அதை நிறுத்தி விட்டிருக்கிறது. நாம் அதனை ஒரு சுயமைதுனக் கருவியாகவோ, அல்லது நாம் நல்லவர்கள் என்று நம்மை நம்பவைக்க பயன்படுத்தும் ஒரு மனிதக் கண்டுபிடிப்பாக வைத்திருக்கலாம், மானுடனின் புனைவுகளை எனது மனம் கைவிடட்டும். அதுவே அற மையங்களை தகர்த்து விடும். அல்லது அவை போலி என்பதை அறிவிக்கும் வழியை நான் புனைய இந்த சொற்களை அதன் தூய நிலை என்ற கற்பனையில் இருந்து விடுவித்து எனது அரசியல் நிலைப்பாட்டை சொல்ல வேண்டும், அதுவே நான் இந்த சமூகத்தின் மீது அக்கறையாயிருக்கும் நிலை என்று நினைக்கிறேன்.
எனக்கும் அது உடன்பாடே, நான் பார்க்கும் நமது நிலத்தின் இலக்கியம் என்பது ஒரு அந்தஸ்து நிலை, நான் கவிதை ஏன் எழுதத் தொடங்கினேன் தெரியுமா? எனது காலத்தில் எழுதும் யாருடைய கவிதையும் எனக்கு பிடிக்கவில்லை, ஆகவே நான் எனக்காக எழுதினேன், இந்த மானுடப் பெருங்கனவு என்ற போதை தரும் புனைவுக்கு ஆட்பட்டு மனிதர்களுக்காக நான் கவிதைக்குள் சிலுவை சுமப்பதாகவோ அல்லது அவர்களை விடுதலை செய்வதாகவோ பாவனை செய்யத் தொடங்கினேன், பிறகு அதுவே பழக்கமாகி, என்னை மேலான ஒருவனாக கற்பனை செய்யத் தொடங்கினேன். பிரசங்கிக்கத் தொடங்கினேன். இப்பொழுது நான் எதைக் கவிதை என்று பார்க்கிறேன் என்று சொல்கிறேன், இதை மீண்ட நிலை எனக் கொள்வேன் அல்லது ஒரு உறக்கம் கலைந்து எழுவது போன்றது எனலாம், பிறகு உறக்கம் வரலாம், கனவுகள் காணலாம். ஆனால் இப்போதைக்கு இது தான்:
எனது அப்பா வீட்டில் பூமரங்களை வளர்க்கிறார், அவர் ஒரு மகா பக்தர், மனைவியை இழந்தவர், நான் ஒரு சோம்பேறி மகன், புத்தகங்கள் படித்துக் கொண்டும், உறங்கிக் கொண்டும் இருப்பேன், இது தான் நான் செய்யும் முழு நேர வேலை, ஒரு வேலையும் செய்வதில்லை. வேலைக்கும் போவதில்லை. படிப்பதும் ஊர் சுற்றுவதும், சமூக செயற்பாடுகள் எனும் போதை நிலையில் சிலுவை சுமக்க எத்தனிப்பதுமாக திரிபவன். ஆனால், அவர் அமைதியாக இருப்பார். சாப்பாடு தருகிறார், இருக்க இடம் தருகிறார், ஒரு பூமரத்தை போல என்னை பராமரிக்கிறார். என்னை நானாக விட்டுவிட்டார், யாரும் கேட்டால், அவர்களுக்குத் தெரியும் அவர்கள் வாழ்க்கை என்பார். இந்த கடைசி வரிகள் தான் நான் கேட்ட, முதல் கவிதை என்று கருதுகிறேன்.
தர்மு பிரசாத்: வாழ்வு குறித்த கேள்வியிலிருந்தே என் இலக்கியம் ஆரம்பித்திருக்கிறது. சமூக மாற்றத்திற்கான கலை/இலக்கியம் என்பன எல்லாம் போன தலைமுறையின் சொத்துகள். அவர்களிடமிருந்த தீவிரம் இப்போது எழுதுபவர்களிடம் இல்லை. அல்லது அதற்கான தேவை குறைந்துவிட்டது. வாழ்வை அதன் அனைத்துச் சிக்கல்களோடும், கசடுகளோடும் எதிர்கொள்ளும் தலைமுறை எழுத்துகள் உருவாகிவருகின்றது. எழுத்து, வாசிப்பும் உன்னதங்களாக கருதப்பட்ட காலங்கள் கடந்துவிட்டன. அது பரவலாக்கப்பட்டு நீர்த்துப்போயிருக்கிறது. சிறு குழுக்களிலிருந்து விவாதிக்கப்பட்ட இலக்கியம் விரிவான தளத்தில் நிகழ்வதாகத் தோன்றினாலும் அவை மலினப்படுத்தப் பட்டுவிட்டன. ஊடகங்களின் பெருக்கம் இந்த திடீர் எழுத்துகளிற்கான தேவையைக் கோரி நிற்கின்றன. காலம் தான் முழுவதையும் வடிவமைத்துக் கொள்ளுகிறது. நவீன யுகத்தின் மந்தமான காலமிது. புதிய எழுத்துகளோ, புதிய சிந்தனைகளோ உருவாகாத ஒரு வறட்சியான காலத்தில் பழையதைப் பிரதியெடுத்து எழுதிக் கொண்டிருக்கிறோம். தனிநபர் / விடுதலை குறித்துக் குவிந்திருந்த சிந்தனை மையம் சூழல் குறித்து திரும்பியிருக்கிறது. இந்தத் தேக்கம் பல தளங்களிலும் விரவிக்கிடக்கிறது. முதல் தலைமுறைக்கு விடுதலை குறித்த தேவையிருந்தது, அவர்கள் அதை இலக்கியத்தில் பிரதியெடுத்தார்கள், அதற்கு முந்திய தலைமுறைக்கு பழமையிலிருந்து விடுதலை வேண்டியிருந்தது; அவர்கள் அதனை இலக்கியத்தில் பிரதியெடுத்தார்கள். ஆனால், எம்மிடம் எதைக் குறித்தும் தீவிரமாக இயங்க முடியாத தேக்கமிருக்கிறது. அல்லது அதற்கான தேவை அற்றிருக்கிறது. அமைப்பாக தம்மை பிணைத்துக் கொண்டு அதன் பின்னால் இயங்குவதற்கான தேவை இப்போது இல்லை.

