விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் ஊடாக ஜேகேயின் புதிய நாவல் ‘கடலின் அடுத்த பக்கம்’ வெளிவர இருக்கிறது. விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் ஊடாக வெளிவருகின்ற ஈழத்தமிழ் எழுத்தாளரின் முதல் நூல் இது. வாழ்த்துகள் ஜேகே. அனல் வாதம், புனல் வாதங்களை வென்று நீரெதிர்த்தேறுக.
கிரி
*
ஜேகேயின் அறிவிப்பு
வணக்கம் நண்பர்களே,
‘கடலின் அடுத்த பக்கம்’ எனும் என்னுடைய புதிய நாவல் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகிறது.
இப்பொழுதில் நீண்ட நெடு பயணத்தின் பின்னரான ஆசுவாசமும் திளைப்பும் உணர்ச்சிமீதமுமே என்னுள் திரண்டுகிடக்கின்றன. கடந்த சில வருடங்களாக இந்நாவலில் என்னுடன் கூட வளர்ந்து தம்மை எழுதுவித்த மாந்தர் அனைவரும் இறக்கை முளைத்த கதைகளாகி பறப்புக்குத் தயாராகிவிட்டனர். எனக்கிருப்பதோ மரப்பாவையின் மனநிலை.
இந்நாவலின் முன்னுரையிலிருந்தான ஒரு துளி.
“சாலையோரங்களில், கோயில் திருவிழாக்களில், பூங்காக்களில், பேருந்துகளில், விமான நிலையங்களில், எங்கெலாம் மனிதர்களைக் காண்கிறேனோ அங்கெலாம் எனக்குப் பலவாய் வியாபித்துக்கிடக்கும் சக்திதான் தெரிகிறாள். துகள்களாய்ச் சிதறிக்கிடக்கும் என்னையே நான் அவர்களிடத்தில் காண்கிறேன். ஆயினும் தாம் உணரா கால வெளியில் இத்துகள்கள் எல்லாம் ஒன்றிலிருந்து மற்றது விலகி வெகு தொலைவாகச் சென்றுகொண்டிருப்பதையும் உணர்கிறேன். உடனிருந்த உறவு அயலாகி, ஏதிலராகி, அந்நியமாகி, நாமே உணராப்பொழுதில் விரோதியுமாகிவிடுகிறது. புறத்தினின்றும். அகத்தினின்றும். இப்புவியின் நிலங்கள்போல. இவ்விடம் கடல் நிலங்களைப் பிரித்து வைத்திருக்கிறதா? அல்லது இணைத்து வைத்திருக்கிறதா?”

இந்நாவலின்மீது நம்பிக்கைகொண்டு, மிக நேர்த்தியாக இதனை வடிவமைத்து வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கு பெரு நன்றி. இப்பயணம் முழுதும் எனக்குத் துணை நின்ற என் உள்ளமார் அனைவரையும் இக்கணம் நினைவுகூர்கிறேன்.
வாசக நண்பர்களே, தகுமெனக் கருதின் அன்புகூர்ந்து இந்நாவலின் வருகையை அனைவருக்கும் பறைசாற்றுங்கள்.
இனி ‘கடலின் அடுத்த பக்கம்’ தனக்கான வாசகர்களைக் கண்டடைந்து கரைகளைத் தாண்டிய தன் பயணத்தை மேலும் தொடரட்டும்.
அன்புடன்
ஜேகே

