இலக்கிய நூல்கள் பல வகைகளிலும் வாசகர்களால் அறியப்படுவதுண்டு. எழுத்தாளரின் பிரபல்யத்தால், சூழலில் நிலவும் தற்செயலான கொதிநிலைகளால், சர்ச்சைகளால், தடைகள் அல்லது தடுப்புகளால், வெளியீட்டு நிகழ்வின் பிரமாண்டத்தினால், சமூக வலைத்தளங்களினால் என பல வகைகளிலும் அவை வெகுசனச் சூழலுக்குச் செல்லும்.
அதற்கு அப்பால் தீவிர இலக்கிய வாசகர்களிடம் ஒரு நூல் தாக்கம் செலுத்தவோ சென்றடையவோ உள்ள வழிகள் வேறு விதமானவை. குறுக்கு வழிகள் அற்றவை. அண்மைய உதாரணம் யதார்த்தனின் புதிய நாவலான தோறை. யதார்த்தனின் நாவல் தடுப்பினால் அதிகளவிலானோர் அறியும் வகையில் வழக்கமான வாசிப்பு வட்டத்திற்கு அப்பால் பெயர் சென்றுள்ளது. ஆனால் அப்படி சர்ச்சையும் பெயரும் அறியும் நூறு பேரில் நூறு பேருமே கூட அந்த நாவலை வாங்கி வாசிக்கப் போவதில்லை என்பது தான் உண்மை.

சர்ச்சைகளோ பெயரறிதலோ ஒரு புத்தகத்தை தீவிர வட்டத்திற்குள் நுழைக்க முடியாது. அப்படி ஏதும் வந்தால் தீவிர இலக்கிய வட்டங்கள் கொஞ்சம் சுதாகரித்துக் கொண்டு அந்த நூலைக் கொஞ்சம் ஆறப் போடும். தோறையின் வாசகர்கள் நகுலாத்தையிலிருந்து உருவாகி வருபவர்களாக இருக்கிறார்கள். அதற்கு மேல் தொடர்ச்சியாக இலக்கியம் பற்றி யதார்த்தன் எழுதிவரும் கட்டுரைகள் விவாதங்களால் உருவாகிய வாசகர்கள் அதை வாங்குவார்கள். அதுவே மெய்யோட்டம். சமூக வலைத்தளங்களில் உலவும் மூடநம்பிக்கை போல் சர்ச்சைகளால் புத்தகங்கள் தமிழில், குறிப்பாக தீவிர இலக்கிய நூல்கள் விற்பனையாவதில்லை.
எனது நான்காவது புத்தகமான தத்வமசி வெளிவந்து முதல் நாளிலேயே எடுத்த இருபது புத்தகங்களும் கொடுக்கப்பட்டு விட்டன. பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே முற்பதிவு செய்திருந்தார்கள். என் முதலாவது புத்தகமான வாழ்க்கைக்குத் திரும்புதல் ஒப்பீட்டளவில் அதிகமாக விற்பனையாகியிருக்கிறது. தோராயமாக இருநூறு புத்தகங்களுக்கு மேல். கொடிறோஸ் மொத்தமாக ஒரு நூற்றி ஐம்பது. கல்விரல் இலங்கையில் முப்பத்து ஐந்து நாவல்கள் எடுத்தேன். என்னிடம் கூட இப்போது பிரதிகள் இல்லை. மீண்டும் எடுக்க வேண்டும். அண்ணளவாக ஒரு வருடத்தில் ஒரு புத்தகம் ஐம்பது விற்பது சாதனை. என் நூல்களின் விலையும் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது இருக்கும். தத்வமசி நாலாயிரம் ரூபாய். புத்தகத்தின் அச்சுச் செலவுகள், பார்சல் செலவுகள், வரி கழிவு என்பன கணக்கிடப்பட்டு எழுத்து ஊதியமும் சேர்த்தே விலையை போடுவேன். அவை எதிர்காலத்திற்கு முக்கியமானவை. இலக்கியத்திற்குச் செல்வது அடுத்த தலைமுறைக்காவது பஞ்சப் பராரிகளின் கூடாரத்திற்குள் நுழைவது போல இருக்கக் கூடாது. உலக அளவில் எழுத்தாளர்களின் சொல்லுக்கு இருக்கும் மதிப்பு, அந்த இருப்பிற்கு உள்ள பெறுமதி ஒரு தமிழ் எழுத்தாளருக்கும் வேண்டும். அவை விற்பனை ரீதியாகவும் மேம்பட வேண்டும்.

நண்பரொருவர் ஒரு கணக்குச் சொன்னார். ஈழத்தமிழ் புலம்பெயர்ந்தோர்கள் நூறு பேர் ஒரு நூலை பத்து யூரோ கொடுத்து வாங்கினால் ஒரு எழுத்தாளர் நிதி நெருக்கடி இன்றி எழுத முடியுமென்று. கிட்டத்தட்ட மூன்றே முக்கால் லட்சம். அப்படி ஒரு பிரபலமானவருக்கு ஆயிரம் பிரதிகள் விற்குமென்றால் அவர் வேலையை விட்டுவிட்டு இலக்கியமே எழுதிக் கொண்டிருக்கலாம். பல மொழிகளிலும் அப்படி எழுத்தாளர்கள் உளர். ஆனால் ஷோபா சக்தியோ ஜெயமோகனோ அவர்களின் முதல் பெருந்தொகைகளை சினிமாவிலேயே ஈட்டுகிறார்கள். ஜெயின் நூல்களின் விற்பனையும் சிறப்பாகவே இருக்கிறது. இருந்தும் எழுத்தை நம்பி வாழ்வு எனும் நிலைக்கு தமிழ்ச்சமூகம் இன்னுமொரு நூற்றாண்டு வளர வேண்டியிருக்கிறது.
புத்தகத்தை அச்சுக் கோர்த்த தாளுக்கும் மைக்கும் இருக்கும் பெறுமதி கூட தன் வாழ்நாளின் நூற்றுக்கணக்கான மணித்தியாலங்களை செலவழித்து எழுதி, செம்மையாக்கி, சரவை பார்த்து, மூட்டை தூக்குவது போல நூல்களைச் சுமந்து செல்லும் எழுத்தாளருக்கு இருக்கக் கூடாது என நினைப்பது ஒரு தமிழ் நியாயம்.

இலக்கியமென்பது தனியே அறிவுழைப்பு மட்டுமல்ல. அதுவொரு ஆக்கச் செயல்பாடும். அதற்கு மேலதிக மதிப்பு உண்டு. அதை நான் கோருவேன். யாரேனும் வாசித்தால் போதும் என்ற கழிவிரக்க மனநிலை எனக்குக் கிடையாது. நான் விற்கும் பொருளின் விலையை அதன் தரத்தைக் கொண்டு நிர்ணயிக்கும் உரிமை உண்டு. வாங்கி வாசிக்க இருப்போர் அதை மனதில் கொண்டே வாங்க வேண்டும். எந்த சலுகையும் தேவையில்லை. வாசித்தால் உங்கள் நுண்ணுணர்வும் அறிதலும் மேம்படும். அதற்கு இன்று வேறு வடிவங்கள் மிகக் குறைவு. இலக்கியமே தொகுப்புத் தன்மையும் கற்பனை விரிவும் கொண்டது. ஏற்கெனவே சொன்னது போல தங்கத்தை புண்ணாக்கு விலைக்கு விற்கிறேன்.
தமிழ்ச்சூழலில் அண்மையில் நான் கவனிக்கும் சில நல்ல குறிகளையும் சொல்லியாக வேண்டும். ஏனெனில் தீவிர இலக்கிய வாசிப்பு ஒரு சமூகத்தில் ரகசியச் சடங்கைப் போலவே உண்மையில் நிகழ்கிறது. இலக்கியம் வாசிக்கும் பலரும் சமூக வலைத்தளங்களில் இல்லை. குறிப்பாக இளம் தலைமுறையினர், இன்றைக்கு இருபதினர், இல்லை. அதுவொரு நல்ல அம்சமே. அவர்கள் மூத்தோர் சொல்லைக் கவனிக்கிறார்கள். எழுத்தாளரின் இலக்கியம் பற்றிய புரிதல், மொழி நடை, பார்வைகள், நம்பிக்கைகள், வாழ்க்கை, தீவிரம் என பல சிக்கலான ஊடுபாவுகளின் வழி தன் வாசிப்பை கூர்மையாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் வாசிப்பதை ஒரு கண்காட்சியாக நிகழ்த்துவதில்லை. அது ஓர் அந்தரங்க ஆன்மீகம். ஒரு புனைவும் தானும் அமர்ந்து தன் வாழ்வை செறிவாக்கிக் கொள்ளும் தியானத்தில் இருத்தல். அவர்களது எதிர்காலமும் மேம்பட வேண்டும். அதற்கு இலக்கியம் எப்பொழுதும் பராரிகள் புரமாய் இருக்கக் கூடாது. வாசகர்கள் புத்தகங்களை பணம் கொடுத்து பெறுவது முக்கியம். யாராகவும் இருக்கலாம். அது வெற்றிச் செல்வியோ தமிழ் நதியோ, ஜெயமோகனோ ஷோபா சக்தியோ எவரது நூலாக இருந்தாலும் தான் தொடர விரும்புபவர்களின் புத்தகங்களை வாங்கி வைப்பது வீட்டில் நகை நட்டு வாங்கி வைப்பதைப் போன்ற செல்வம் பெருக்கும் செயல்.

குறிப்பு : தத்வமசி நாவலுக்கான ஒளிப்படங்களை திவ்யா எடுத்து அனுப்பியிருந்தார். மதிப்புரைகளில், கடிதங்களில் பயன்படுத்துவதற்கு. அடுத்த தலைமுறை தன் கண் வழியே புத்தகங்களைப் பார்க்கும் ஒரு நோக்கு.

