யாருடைய புனைவு எழுத்திற்குள்ளும் நுழைய முடியாமல் இருக்கிறது. எந்தக் கதையும் இரண்டாவது பக்கத்தில் சலிக்கிறது. முதன்மையாக அவர்களது மொழியின் மீதான பிடிப்பின்மை. எத்தனை கூர்மையான வாழ்க்கை தொடர்பான அவதானங்கள் இருந்தாலும், அந்த அவதானங்களும் மானுட சுபாவங்கள் மோதிக் கொள்ளும் நடனமும் அசைந்து நடக்கிற யானையின் மீது சிலை பொழித்தது போல அமரவில்லையென்றால் மனம் தொடர விரும்பாமல் கிடக்கிறது.
கவிதைகளை எப்பொழுதும் வாசிக்க முடிகிறது. கவிதைகளில் மொழியம்சம் முதன்மையானது என்பதால் அதில் குழப்பங்கள் இல்லை. திருக்குறளை திரும்ப வாசிக்கிறேன். சங்கக் கவிதைகள், பக்தி இலக்கியங்கள், நவீன கவிதைகள் என்று எதையும் ஆழ்ந்து விரும்பி வாசிக்க முடிகிறது. அவை மொழி வைரப் பட்டையின் மீது ஊரும் ஒளி போல வசீகரமாக இருக்கின்றன.
கட்டுரைகளையும் வாசிக்க முடிகிறது. இலக்கியம், வாசிப்பு, ஏன் எழுதுகிறார்கள் போன்ற கேள்விகளுக்கு முன்னோடிகள் அளித்த பதில்கள், கட்டுரைகளை வாசிக்கிறேன். அவையும் சுவாரசியமாக இருக்கின்றன.
புனைவு தொடர்பில் இந்தக் குழப்பம் கொஞ்ச நாட்களாகவே மனதை நெருடிக் கொண்டிருந்தது. ஜெயமோகனுக்கு கடிதம் எழுதிக் கேட்கலாமா என நினைத்தேன். எனக்கு அவருடைய புனைவுலகுக்கு அப்பால் ஒன்றும் அத்தனை அபாரமான ஈர்ப்பை அளிக்கவில்லை. பிரமாண்டமான புனைவுலகம் அவரது. ஆட்கொண்டதைப் போல அவரது புனைவுலகம் மட்டுமே என்னை பீடித்து வைத்திருக்கிறது. அவரது புனைவுலகின் தாக்கத்தை என் மீது தவிர்ப்பதற்கு என்றல்ல, பிறரையும் வாசிக்க வேண்டும் எனும் விழைவினால் பிறரைத் தொடர விரும்பினேன். கொஞ்ச நாள் மூச்சுப் பிடித்து உள்ளே போனால் போய் விடலாம் என்று முட்டி மோதிக் கொண்டிருந்தேன். ம்ஹூம். யாராலும் அவரிடத்தை நிரப்ப முடியவில்லை.
தஸ்தவேஸ்கியின் மீது எனக்கு பெரும் பித்து இளவயது முதல் இருக்கிறது. ஆகவே அவரை வாசிக்கலாம் என்று குற்றமும் தண்டனையும் திரும்ப வாசிக்க ஆரம்பித்தேன். ஆச்சரியகரமாக, அவரது புனைவு நகரும் முறை என்னை வெளித்தள்ளிக் கொண்டேயிருந்தது. நிறுத்தி விட்டு டால்ஸ்டாயை ஆரம்பித்தேன். அவரிடம் புனைவுத் திறன் தாஸ்தவேஸ்கியை விட அதிகமாக இருக்கிறது. ஆனால் அது நத்தை வேகம் கொண்டது. ஞானத்தால் என்றுமுள்ளது ஆயினும் புனைவுலகின் தன்மையால் என் அகம் கோரும் தீவிரத்திற்கும் பண்பாட்டு வெளிக்கும் நனவிலிக்கும் வெளியே இருந்தது.
கவிதைகளைப் பிடித்துக் கொண்டும் சில்லறை விவாதங்களுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டும் காலத்தை நகர்த்தி வந்தேன். ஒரு நாவலை எழுத ஆரம்பித்து நான்கைந்து அத்தியாயங்கள் வந்தவுடன் மூன்று முறை நிறுத்தி விட்டேன். எதுவோ வழக்கமாக வந்தமரும் ஒன்று இம்முறை வரவில்லை. மயிர் நுனிகளில் கூச்சமென உணரக் கூடிய ஒன்று அது. அது இம்முறை எழுந்தருளவில்லை. திரும்பவும் சலிப்பு.
நேற்று இது தொடர்பில் யதார்த்தனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஜெயமோகனுக்கு கடிதம் அனுப்ப போகிறேன் என்றேன். இந்தக் கேள்விக்கு அவர் ஏற்கெனவே பதிலளித்திருக்கிறார். எழுதுக நூலில் இருக்கிறது என்றார். உடனே தேடினேன். தளத்தில் கடிதத்தின் இணைப்பு கிடைத்தது. ஒரே ஆசிரியரை வாசித்தல் எனும் கடிதம்.
ஜெயமோகனுக்கு நான் ஏன் கடிதங்கள் எழுதுவது குறைவு என்பதற்கு முக்கிய காரணம், பெரும்பாலும் எனக்குள் காலந்தோறும் எழும் கேள்விகளுக்கு அவர் பலமுறை விரிவாகவே பதிலளித்திருப்பார். அவை இலக்கியத்தில் என்றுமுள்ள கேள்விகள்.
அதில் என் சிக்கலுக்கும் சேர்த்து அவர் விரிவாக பதிலெழுதியிருக்கிறார். தன்னை அப்படி டால்ஸ்டாய் தாஸ்தவெஸ்கி இருவரும் எப்படி ஐந்தாண்டுகள் ஆட்கொண்டிருந்தார்கள் என்று எழுதியிருக்கிறார். அவர்களை வேறு வேறு மொழிகளில் வாசித்தல், வாசிப்பது பற்றி நீண்ட கட்டுரைகளை எழுததுவதென்று படிப்படியாக அவர்களைத் தனக்குள் தொகுத்துக் கொண்டிருக்கிறார். அப்படித் தொகுத்துக் கொண்டிருந்த பின்னும் இன்று வரை அவர்களை வாசித்துக் கொண்டும் இருக்கிறார். நான் தவறவிட்ட இடம் அது தான். என் பதினேழு வயதிலேயே ஜெயமோகனை வாசிக்க ஆரம்பித்து விட்டேன். பெரும்பாலும் அவரது விஞ்ஞானப் புனைகதைகள், உலோகம், குமரித்துறைவி, கன்யாகுமரி போன்ற சில படைப்புகளைத் தவிர அனைத்தையும் வாசித்திருக்கிறேன். வெண்முரசையே நான் முழுமவதுமாக மூன்று முறைமுறை வாசித்திருக்கிறேன். ஆனால் ஒரு படைப்பைப் பற்றியும் ஒரு கட்டுரை கூட எழுதவில்லை. வாயால் கதைத்துக் கதைத்தே என் ஆற்றலை செலவழித்திருக்கிறேன். எழுத்தாளராக ஆசைப்படும் ஒரு இளையவர் தன் வாயை விட அதிகமாக பாவிக்க வேண்டியது கை தான். என் பிழை அது.
அவரை எழுத்தில் முழுமையாகத் தொகுத்துக் கொள்ளவில்லை என்றால் என் மனம் எப்பொழுதும் அவரது புனைவுலகை நோக்கியே தன் தீ நாக்கை நீட்டியபடி தளதளத்துக் கொண்டிருக்கும். அவரது மொத்தப் புனைவுலகையும் திரும்ப வாசித்து வாசக அனுபவமாக ரசனைக் கட்டுரைகளை எழுதப் போகிறேன். இளவயதில் வாசித்தவையிலிருந்து தொடங்குகிறேன். கொற்றவையில் தொடங்கலாம். அப்படியே மனம் போன போக்கில் அவரது புனைவுலகில் மூழ்கலாம். எந்த வகையிலும் ஊக்கம் அகலாது என்பதற்கு எந்த புறச்சான்றும் தேவையில்லை. நான் அங்கேயே கூடு கட்டி வாழ்ந்து விடக் கூடியவன்.
தமிழ் மொழியில் மொழிக்கூர்மையும் தரிசனமும் நுண் அவதானங்களும் பெரும்படைப்பாளுக்குரிய கொடு முடியும் என மூவரைச் சொல்லலாம். கம்பன், வள்ளுவன், ஜெயமோகன். மூவரிலும் இந்த மொழி தன் உச்சங்களை உயர்த்திக் கொண்டது. மூவரும் அவரவர் கால எல்லைகளை பலமடங்குகள் மேலே தள்ளியவர்கள். கம்பனும் வள்ளுவனும் விரிவாக ரசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் இன்றுள்ள பெரும்படைப்பாளி. ஒரு பெரும் படைப்பாளி தன் காலத்தின் பெருஞ்சுவரை மாபெரும் மத்தகத்தினால் மோதித் திறக்கும் பெருவேழம் போன்றவர். அது அவரது சமகாலத்தை நிம்மதியிழக்கச் செய்யும். அதனாலேயே அவர் எதிர்ப்புகளின் மீது அமர்ந்திருப்பார். தீயின் மீது ஈக்கள் அமர முடியாது. இன்னொரு தீயே இணைந்தெரிய இயலும்.

அவரை முழுமையாகத் தொகுப்பது அவரது காலத்தில் அவரது பங்களிப்பை தொகுத்து மதிப்பிடுவது அவசியம். புனைவுக்கு அப்பாலே புனைவை விட அதிகமாகவே அவர் விமர்சனங்கள், பண்பாட்டு கருத்துகளை எழுதிக் குவித்திருக்கிறார். அவரது வாசகர்களும் எதிர்த்தரப்பினருமே கூடச் சொல்வது போல எழுத்து ராட்சதர். இப்பொழுது என்னால் அபுனைவு எழுத்துகளை அவ்வளவு ஊக்கத்துடன் தொடரும் உளநிலை இல்லை. புனைவே என்னை மாயக்கல் போல இழுத்துக் கொண்டிருக்கிறது. பெருஞ்செயல் தான் எனினும். எழுதி விடலாம்.
அடுத்த தலைமுறை இளையவர்களை நோக்கி பெருஞ்செயல் புரிக என அறைகூவல் விடுப்பவரின் பிரமாண்டமான புனைவுலகை முழுவதும் மீள வாசித்து எழுதித் தொகுப்பதும் அத்தகைய பெருஞ்செயலே. அதை புரிவது எனக்கு என்னளவில் மிக மிக முக்கியமானது.
இன்றைய உளநிலை இனிதாக இருக்கிறது. தெளிந்த நீர் போல உள்ளங்கையில் கிடக்கிறது. அத்தனை குரூரமான ஒன்றைச் செய்கையில் உருவாகும் ஆழமான வேட்கையைப் போலவும் அத்தனை மேன்மையான ஒன்றைப் புரிகையில் உருவாகும் ஈடிணையற்ற முழுவிசையைப் போலவும் நெஞ்சு சிக்கனெப் பிடிக்கும் ஒரு பெருஞ்செயலை இந்த நாளில் தொடங்குகிறேன்.

