கம்பவாரிதி ஜெயராஜும் இலக்கியச் சீண்டலும்

கம்பவாரிதி ஜெயராஜ் அண்மையில் மேடை நிகழ்வொன்றில் தெரிவித்த இரண்டு கருத்துகளுக்காக  சமூக வலைத்தளங்களில் கைக்கு வந்தபடி தாக்கப்படுகிறார் என நண்பர்கள் சொன்னார்கள். அவர் சொன்ன கருத்தை சிறிய காணொலி ஒன்றில் பார்த்தேன். என்ன எதிர்வினையாற்றுகிறார்கள் என்று சாம்பிள்கள் பார்த்தேன். வழக்கம் போல முகநூல் சராசரிகளின் அறிவாளிகளே சும்மா இருங்கள் கூப்பாடு.  

காணொலியில் ஜெயராஜ் இரண்டு கருத்துகளை சொல்கிறார். அவை கடுமையான எதிர்வினைகளை உருவாக்கக் கூடியது என அறிந்தே அதைச் சொல்வதாகச் சொல்கிறார். அதுசரி, இத்தனை ஆண்டுகாலம் இந்தச் சமூகத்திற்கு முன் கம்பனை சொல்லில் முன்னிறுத்தி அந்த அழியாக் காவியத்தின் தூதுவனாக நின்று ஆயிரத்திற்கும் மேலே கூட்டங்கள் சொற்பொழிவுகள் ஆற்றியிருப்பார். நம் மக்களின் சுரணை வேலை செய்யும் வகைகளையும் எதற்குச் சிரிக்கிறார்கள், எதற்கு உறங்குகிறார்கள் என்றும் அறியாமலா பிரபலமான பேச்சாளராக இருப்பார். அவருக்கு இந்தச் சமூகத்தின் நாடி தெரிந்திருக்கிறது. ஆகவே தான் முற்குறிப்புச் சொல்லியிருக்கிறார். 

பிறகு இரண்டு விடயங்களை தமிழர்கள் மறக்க வேண்டும் என்கிறார். முதலாவது மறக்க வேண்டியது கடந்த காலப் போராட்டம். ஏனென்றால் அதைச் சொல்லிச் சொல்லியே உங்களைக் கொதிநிலையிலேயே வைத்து தங்கள் வாழ்வை வாழப் பார்க்கிறார்கள் சிலர். ஆகவே மறவுங்கள். 

இரண்டாவது, என்றைக்குப் புலம்பெயர்ந்த நாட்டு மக்களின் செல்வம் நாட்டிற்குள் வருவது நிற்கிறதோ அப்போது தான் நம் இனம் உருப்படும். 

இந்தக் கருத்துகளினை இணைய மந்தர்கள் எதிர்வினையாற்றக் காரணம், அவர்களின் பொதுவான சராசரித்தனம் தான். ஜெயராஜ் விடுதலைப் போராட்டம் தொடர்பில் பல்வேறு கருத்துகளை முன்னரும் சொல்லியிருக்கிறார். இப்போது இணையம் இருக்கிறது, இரண்டாவது, இந்த வாரம் சமூகவலைத்தளம் கொதிநிலை அடைய வேறு இலகு இலக்குகள் இல்லை. அப்படியே தமிழின விடுதலைப் போராட்டத்தை அணுதினமும் சுவாசித்து, போராடும் மக்களுக்காக தினம் தோறும் களம் சென்று மீள்பவர்களைப் போல ஒரு போராளி நடிப்பு. வரலாற்றைக் கடத்துவதென்றால் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் முகநூல் சழக்கர்கள்? 

ஜெயராஜ் கையாண்டது ஒரு உத்தி. சீண்டலை உருவாக்கி கவனிக்க வைப்பது பொதுவாக மேடைப் பேச்சுகளிலும் இலக்கிய விவாதங்களிலும் பயன்படுத்தப்படுவது. அது விவாதத்தை உருவாக்குவற்காக செய்யப்படுவது. சிந்தனையை சாட்டையால் அடிப்பது. மக்களிடம் அரசியல் உசுப்பேற்றல்கள் செய்து பிழைப்பவர்களை விமர்சிக்க ஒரு சாட்டையடி கருத்தைச் சொல்லி கவனத்தை ஈர்த்தல். அவருடைய உத்தி வெற்றிகரமானது என்பதால் தான், அவர் மீதான தாக்குதல்களுக்கும் விவாதத்திற்கும் அது வழி வகுத்திருக்கிறது. ஆனால் அவர் இத்தனை வயசுக்கு மேலே எனக்கு எதிர்ப்பு வந்தால் என்ன விட்டால் என்ன, தூக்கிப் போட்டு விட்டு நடப்பேன் என்கிறார். கம்ப காவியத்தை உணர்ந்த வாயல்லவா, அப்படித் தான் சொல்வார். 

புலம்பெயர் தமிழர்களின் செல்வம் ஒரு பகுதி பண்பாட்டு மற்றும் தனிமனித தேவைகளுக்கு பகிரப்படுவது குறித்து எனக்கு சிக்கலில்லை. ஆனால் அவை மக்களில் பெரும்பகுதியினரை சோம்பேறிகள் ஆக்கியிருக்கிறது, செல்வம் உழைத்து அடையும் போது உருவாகும் பக்குவம் வெளியிலிருந்து வரும் பணத்தில் இல்லை. அது நன்மையளவுக்கே தீமையும் புரிகிறது. அடுத்த தலைமுறை மிக மோசமான புலப்பெயர்வு மனநிலையை அடைந்ததற்கு முக்கிய காரணம் அங்கிருக்கும் பணக்கவர்ச்சி தான். குறிப்பாக வன்னி மாவட்டங்களில் உள்ள அடுத்த தலைமுறை சிறுவர்கள், இளைஞர்கள் புலப்பெயர்வை பண மதிப்பிற்காகவே தீர்மானிக்கிறார்கள். அது அவர்களை நாட்டிற்குள் உள்ள நடைமுறைகளை கொஞ்சமும் மதிக்காதவர்கள் ஆக்கியிருக்கிறது. கல்வியில் ஆர்வமற்றவர்களாகவும் மதிப்பற்றவர்களாகவும் உருவாக்கியிருக்கிறது. 

அத்தகைய டிப்பிரசன் குழந்தைகளின் எதிர்காலம் நம் முன் இருக்கிறது. புலம்பெயர் பணத்தின் உள்வருகையினால் இரண்டு உப விளைவுகள் இருக்கின்றன. 

ஒன்று, உள்வரும் செல்வம் உருவாக்கும் சமநிலைக் குலைவான சமூக அடுக்குகளுக்கு இடையிலான மோதல்கள். அடுத்து, அறம் சார்ந்த மதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்து பண முதன்மை எண்ணம் அவர்களிடம் வலுவாக ஊன்றியிருக்கிறது. 

புலம்பெயர் தமிழர்களும் பெருமளவு செல்வத்தை அவர்கள் பண்பாட்டுச் செயல்கள் என நம்பும் கோயிலுக்கு மணி வாங்கிக் கொடுத்தல், சும்மா இருக்கும் சுவரை நாலடிக்கு உயர்த்துதல், பெயிண்ட் அடித்தல், காணி வாங்கி தென்னந்தோப்பு வைத்தல், யானையும் குதிரையும் பல்லக்கும் செண்டையும் வைத்து சாமத்திய வீடு வைத்தல், நெஞ்சு நிறைய நகை அணிந்து சும்மா இருப்பவனை திருடனாக்குதல், 

ஆளில்லாத உயர்ரக வீடுகளுக்கு சிசிடிவி பூட்டுதல், ஊரில் நாலு பாட்டுக் கோஷ்டி நடத்துதல், ஊதாரி இளைஞர்களுக்கு பைக்கும் போனும் வாங்கிக் கொடுத்து சாகடித்தல் என எப்படியெல்லாம் உதாரித்தனம் செய்யலாம் என சீரியசாகச் சிந்தித்து பல வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

பொதுவாகவே நம் மக்கள் கலைப் புரவலர்கள் அல்ல. அவர்களது வெகுசன விருப்பிற்கும் ரசனைக்கும் ஏற்பவே அவர்கள் பணத்தை செலவழிப்பார்கள். அதற்காகத் தான் தீவிரமான கலை, இலக்கியமென்றால் என்ன? அவை ஏன் ஒரு சமூகத்தால் புரக்கப்பட வேண்டும் என விரிவாக எழுதுகிறேன். கலை, இலக்கியத்தில் எதை ஒரு சமூகம் முன்வைக்கிறது என்பது அதன் ரசனை சார்ந்த நுண்ணுணர்வின் வெளிப்பாடு. ஒரு பொது விவாதத்தை எப்படி புரிந்து கொள்கிறது என்பதிலும் அது வெளிப்படும். ஒரு முதன்மைக் கருத்தைக் கவனிக்க வைக்க நிகழ்வது சீண்டல் என்பதை ஒரு சமூகத்தில் நுண்ணுணர்வும் அறிவும் மிக்க சிலராவது உணரவே இந்தக் குறிப்பு. முகநூல் சராசரிகளுக்கு இதை விளங்கப்படுத்த முடியாது. அவர்கள் பிடிக்கும் முயல்களுக்கு கால்களே இருப்பதில்லை. புதிதாக ஒரு கோணத்தை அறிந்து அப்பால் ஒரு அடி ஒரு விவாதத்தில் முன்னேறுவேன் என்பதை அவர்களால் கற்பனை கூடச் செய்ய முடியாது. 

இந்தச் சராசரிகள் தொடர்ச்சியாக இலக்கியவாதிகள் மேல் நிகழ்த்தும் சுண்ணாம்புத் தாக்குத்தல்கள் அவர்களது அறிவீனத்திலிருந்து பிறக்கின்றன. இவர்களுக்கு இன்று முகநூலில் ஒரு கூட்டுக் குரல் உருவாகியிருப்பதால் அது சரியென்று நினைக்கிறார்கள். அரசியல் சரிநிலையுடன் எவரும் புண்படாமல் பேசவும் எழுதவும் வேண்டுமெனக் கண்ணீர்க் கோரிக்கைகள் வைக்கிறார்கள். ஏனெனில் புண்படுவது இந்தக் கும்பல் தான். மூளைச் சோம்பேறிகள் ஆளுமைகளைச் சும்மா இருக்கச் சொல்லும் ஒரு காலம் இதற்கு முன்னர் இருந்ததில்லை. கற்க மாட்டோம், செயல் புரிய மாட்டோம். அன்றாடம் தின்று முகநூலில் கழிந்து,  மண்டைக்குள் ஒட்டியிருக்கும் எங்கெங்கோ பிய்த்தறிந்த பிச்சைக்காரச் சத்திகளை ஓலமிட்டு எழுதியே காலம் கழிக்கிறார்கள். அவர்களை யாராவது வந்து சமூகத்தைப் பற்றிச் சிந்தி, நீ போகும் வழி சரியில்லையென்று சொன்னால் புட்டத்தில் கட்டி முளைத்தது போல நிலைகொள்ளாமல் அலைகிறார்கள்.

இவர்கள் ‘கடத்த விரும்பும்’ போராட்ட வரலாறு கூட ஒரு தலைப்பட்சமானதாக மட்டுமே இருக்கும். உள்ளே கொஞ்சம் டீட்டெய்லாக விவாதித்தால் வளைக்கு நெருப்பு வைத்தது போல இந்த முகநூல் எலிகள் ஓடிவிடும். 

இந்த எதிர்வினைகளில் ஜெயராஜ் படித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகம் இதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டுமென்ற கூப்பாட்டையும் பார்த்தேன். நானும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் தான் படித்தேன். அங்கிருக்கும் பல வகையான ஆளுமைகளைப் பார்த்திருக்கிறேன். முகநூல் சராசரிகள் நினைப்பது போல யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்த ஒரே ஒரு கிறுக்கு ஜெயராஜ் மட்டுமல்ல. அப்படி அதன் வழியில் பல்வேறு முரண்களை கொண்ட பல நூறு கிறுக்கு ஆளுமைகளை உருவாக்கிய பாடசாலை அது. அங்கு இருப்பது ஒரு அறிவுக் கலாசாரம். எல்லோரும் ஒரு குடைக்கீழ் என எந்த அரசியல், மத உரையாடலும் அங்கு இல்லை. தீவிரமான எதிர் விசைகளும் இழுவிசைகளும் கொண்ட பாடசாலை. 

அது, ஜெயராஜைப் போல, யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் எனும் துணிச்சலுடன் எந்தச் சபையிலும் வாதிடக் கூடிய ஆயிரக்கணக்கான ஆளுமைகளை உருவாக்கியிருக்கிறது. ஒரு வகையில் எனது பள்ளிக்கூடத்தை ஒரு சராசரி ஏசுவதற்கு ஏதுவான காரணம் அது மட்டும் தான். அவர்களால் மூளைச் சோம்பேறிகள் தாக்கப்படுகிறார்கள். அது நல்லது. அது நிகழ்க. அதுவொரு பண்பாட்டு அறுவைச் சிகிச்சை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *