ஈழத்து நாட்டார் தெய்வங்கள்-தி. செல்வமனோகரன்

எழுநா இதழில் தி. செல்வமனோகரன் எழுதிய ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் தொடர் நூலாக்கம் பெற்றிருக்கிறது. நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்திருந்த ஒரு நூல். தற்போது விற்பனைக்குக் கிடைக்கிறது.

இந்த நூல் இரண்டு வகையில் முக்கியமானது. ஒன்று, நவீனத்துவமும் போர்ச்சூழலும்  உண்டாக்கிய பண்பாட்டின் மீதான கண்மூடித்தனமானதும் மேற்கோள்வாதப் பகுத்தறிவினாலும் ஆன வெறுப்பு ஈழத்தமிழ் அறிவுச் சூழலின் பெரும் பகுதியைப் பீடித்திருக்கிறது. நானும் அந்தக் குட்டையில் குளித்துக் கரையேறியவன் தான். ஈழத்து ஆய்வு மரபில் கைலாசபதியும் சிவத்தம்பியும் உருவாக்கிய தீவிர இடதுசாரிக் கருத்துகளினது வீச்சை இன்றுவரை தொட்டுணர முடியும். அதேபோல சூடோ பகுத்தறிவு, போலி முற்போக்கு எனவும் பலவகைகளில் நம் தெய்வங்கள் அந்நியமாதலுக்கு உட்பட்டு வந்து கொண்டிருந்தன. அறிவுச் சூழலில் ஒன்று பொருளிழக்கும் பொழுது, மெல்ல மெல்ல அது பண்பாட்டுச் சூழலிலிருந்து அழிவடையும். இன்று நம் தெய்வங்களுக்கு மறுவாசிப்பும், தொகுப்பும் அவசியம். அந்த வகையில் நாட்டார் தெய்வங்கள் எனும் சொல் எழுந்ததும் உடனே நினைவுக்கு வரும் ஆளுமை தொ. பரமசிவன். பண்பாட்டு ஆய்வுகளில் அவர் பகுத்தறிவு சார்ந்து புதிய கோணங்களைத் திறந்தவர். 

ஈழத்தில் நாட்டார் தெய்வங்கள் பற்றிய என் வாசிப்பில் பொ. இரகுபதியின் வல்லியக்கனும் வல்லிபுர நாதரும் நூல் ஒரு முன்னோடி ஆய்வு. சுவாரசியமானதும் கூட.  அத்தகைய நுட்பமான ஆய்வுகளின் தொடர்ச்சியாகவும் வேறொரு வடிவம் கொண்டதாகவும் செல்வமனோகரனின் ஆய்வுத் தொடர் அமைந்தது. இதழில் வெளிவரும் காலத்தில் உடனுக்குடன் வாசித்தேன். ஈழத்தின் உள்ளூர்ப் பண்பாட்டை நுணுக்கமாகப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு அதைச் செய்பவருக்கு அதற்கான நோக்கு இருக்க வேண்டும். எவை பதிவு செய்யப்பட வேண்டுமென்ற புரிதலுக்கு செல்வமனோகரனின் இலக்கியப் பரிட்சயம் அவருக்கு உதவியிருக்கிறது. நுட்பமான தகவல்களின் அருமையை இந்த நூலில் உணரலாம். 

(தி. செல்வமனோகரன்)

இரண்டாவது, புனைவெழுத்தாளர்களுக்கு இத்தகைய நூல்கள் புதிய களங்களைத் திறக்கும். போரை வைத்தே பொச்சடித்துக் கொண்டிருக்கும் நம் படைப்பாளிகள், கொஞ்சம் பண்பாட்டின் பக்கமும் திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதுவே நம் நனவிலியின் ஆறு சுரந்து கொண்டிருக்கும் ஊற்று. அங்கிருந்து நீண்ட தொலைவிற்கு புனைவின் மூலம் செல்லலாம்.  

இன்றுமுதல் எழுநா அலுவலகத்தில் நேரடியாகவும், தபால் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறார்கள். ஆர்வமுள்ளோர் வாங்கி வாசித்து விரிவாக உங்கள் பார்வைகளை எழுதுங்கள். 

தொடர்புகளுக்கு:

எழுநா, 63, சேர். பொன். இராமநாதன் வீதி, கலட்டி சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம். 

தொ. பே. இல. +94 777 975 029

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *