குட்டி இளவரசன்

குட்டி இளவரசனை வாசிப்பதென்பது நவீன இலக்கிய வாசகர்களுக்கான பால பாடங்களில் ஒன்றாகவே ஆகியிருக்கிறது. அந்துவான் து செந்த் எக்சுபெரியின் இந்த நூல் அதனளவில் விதை போன்றது. பல்லாயிரம் காடுகள் உறங்கும் ஒற்றை விதை. எஸ் ராமகிருஷ்ணனின் உரையின் பல சாளரங்களின் வழி படரும் இளங் காற்றினூடாக குட்டி இளவரசனை அணுகலாம்.

ஒளிர்ந்து கொண்டேயிருக்கும் நட்சத்திரம்

எஸ் ராமகிருஷ்ணன் எழுத்தாளர்கள் குறித்து உரை நிகழ்த்தும் பொழுது பெரும் கேளிக்கையுடன் தன் விளையாட்டுப் பாவையை உலகிற்கு அறிமுகம் செய்யும் குழந்தை போலாகிவிடுவார். அவரது பேச்சுகளின் வழி அந்த எழுத்தாளரின் வாழ்வு ஒரு தொன்மக் கதை போலாகிவிடும் அழகியல் கொண்டவர். தாஸ்தவெஸ்கி பற்றிய இந்த உரை என் மனதுக்கு நெருக்கமானது. எஸ் ராமகிருஷ்ணன் தாஸ்தெவஸ்கியையோ செக்காவையோ அல்லது டோல்ஸ்டோயையோ கொண்டாடும் பொழுது ரஷ்யாவின் பெருமலையொன்று பனிப்பொழிவில் நனைவது போன்று தோன்றுகிறார்.