92: மணநாள்
பனிக்காற்று முன்முகப்பின் கருங்கல் வளைவுகளில் தாவியார்த்து மேவியது. அரண்மனையின் காவல் கோபுரங்களில் தீப்பந்தங்கள் நாவடக்கத் தொடங்கின. சத்தகனை நோக்கியபடியே “என்னவென்பதை அறிக இளையோனே. அவள் உன் களித்தோழியென உடனிருக்க வேண்டுமென என் அகத்தில் வண்டொன்று சுற்றிப் பறக்கிறது. உனது நெடுங்காலத் தனிமையை நான் விரும்பியிருக்கவில்லை என்பது மெய்தான். எனிலும் இவளில் உள்ள எதுவோ ஒன்று உன் அகத்தை இட்டு நிரப்புமென்ற எண்ணம் நீர்க்குடத்தில் காற்றலைக்கும் ததும்பலென நிறைவு தாளாது துள்ளுகிறது” …
