ஒரு பட்டிப் பூச்செடி

நாங்கள் காதலிக்கத் தொடங்கி அது தான் பிரிந்தாவின் முதல் பிறந்த நாள். நானும் அனோஜன் பாலகிருஷ்ணனும் எங்கேயோ இலக்கிய சம்பந்தமாகச் சுற்றி விட்டு அவனுடைய சுப்பர் கப்பில் பலாலி வீதியால் திரும்பிக் கொண்டிருந்தோம். திடீரென்று கெற்றப்போல் சந்தியடியில் வைத்து “இண்டைக்கு உன்ர கேர்ள் பிரண்டின் பேர்த் டே” எனச் சொன்னான். திடுக்கிட்டு விழித்தது மூளை. எனக்கு எண்களை நினைவு வைத்துக் கொள்வதில் இருக்கும் அசமந்தம் வேறு எதிலும் இருப்பதில்லை. பிறந்த நாட்களை நினைவு வைத்துக் கொள்ளும் சிக்கலைத் தவிர்ப்பதற்காகவே பிறந்த நாட்கள் எல்லாம் மேற்குலகின் வியாபாரத் தந்திரம் என கொள்கை விளக்கம் அளித்து வந்தேன். ஆனால் நிகர் வாழ்க்கையில் காதலிக்கத் தொடங்கி முதலாவது பிறந்த தினத்தை மறப்பது கொடிய பாவம் எனும் அடிவயிற்று ஞானம் கொள்கையைக் எரித்தது.

என்ன வாங்கலாம் என்பதுடன் கையில் எவ்வளவு காசு இருக்கிறதென்றும் பார்த்துத் தான் எதையாவது வாங்கும் நிலமை. மலர்கள் மேல் அப்பாவிற்கு இருக்கும் தொற்று நோய் எனக்குமிருக்கிறது. அடுத்த வளைவிலேயே பூச்செடிகள் விற்கும் கடையொன்று அங்கு அதற்கென்றே திறந்திருந்தது. பைக்கை அனோஜன் நிறுத்தவும், குதித்தேன். உள்ளே போய் ஆற அமர நோட்டமிட்டு கைக்காசுக்கு இணக்கமான பூச்செடியொன்றை வாங்கினேன். ஊதா நிறத்தில் மலர்கள் விரிந்திருந்தன. என்ன பூவென்று எனக்குப் பெயர் தெரியவில்லை. அதுவே அது அரிதான ஒரு பூ என்ற எண்ணத்தை அளித்தது. 

அனோஜன் என்னை இறக்கி விட்டு போய் விட்டான். பிரிந்தாவிடம் கொண்டு போய் “உன் பிறந்த நாளை மறக்கவில்லை. இதோ உயிருள்ள பரிசொன்றைக் கொண்டு வந்திருக்கிறேன்” என எனக்கு வரவே வராதென்று இன்று வரை உறுதியாகத் தெரிந்த ரொமான்சைச் செய்தேன். “அதுக்கெதுக்குடா பட்டிப்பூவை வாங்கிக்கொண்டு வந்தாய். சுடுகாட்டுப் பூ” என கொதித்து விட்டாள். தின்னவேலி மயானத்துக்கு அப்பால் சுடுகாடும் இடுகாடும் தெரியாது வளர்ந்த பிள்ளை நான் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. மன்றாடி, செடியை தூங்கும் தொட்டியுடன் வீட்டின் முன்னால் கொழுவினேன். காதல் தான் முக்கியம். பூவா முக்கியம் என தர்க்கமும் சொன்னேன். 

பிறகு இப்பொழுது வரை எத்தனையோ தடவைகள் பட்டிப் பூச்செடிகளைப் பார்த்திருக்கிறேன். முன்னமும் என் கண்களால் அவற்றைப் பார்த்திருந்தேன். ஒன்று பெயராக நம்முள் நுழையும் வரை அது ஒரு எண்ணமாக நினைவாக மாறுவதில்லை. கடற்கரைகளை நிறைத்துப் பரந்திருக்கும் வெண்ணிறமும் ஊதா வண்ணமுமான பட்டிப் பூச்செடிகள். சுடுகாடுகளின் வெண்மணல் பெருக்குகளின் மீது பூத்திருப்பவை. ஒரு முறை வித்யாவின் புதைமேட்டின் மீது பூத்திருந்த ஊதா நிறப் பட்டிப் பூச்செடியையும் பார்த்தேன். சிறிய வெண் அணை போன்று மணல் மூடியிருந்த அவளின் எலும்புகளின் மேல் பட்டிப் பூ மலர்ந்திருந்தது. 

பட்டிப் பூச்செடிகளை நகரத்து வீடுகள் வளர்ப்பதில்லை. கவிதைகளிலோ கதைகளிலோ கூட அவை வளர்வதில்லை. அதற்கு எந்த முக்கியமும் எங்கள் சிறுநகர வாழ்க்கையில் அழகு சார்ந்து அளிக்கப்படவில்லை. அது ஒரு சுடுகாட்டுப் பூ. கடற்கரை மணலில் அசைந்தாடும் சிறு செடித் தோட்டம். கைவிடப்பட்ட வீடுகளின் வெடிப்புகளில் மலரும் செடி. 

அது பெயரற்றும் பொருளற்றும் மலர்ந்திருந்த அழகினாலும் என் அனுபவத்தின் சுருக்கத்தினாலும் அரிதானதென்று நான் கருதிய ஒரு பரிசு. சூடக் கொடுத்த மலர். 

பெயர்களை அறியாதவையின் அழகுக்கும் ஒரு அழகுண்டு. அர்த்தங்கள் கொடுக்கப்படாத போதும் கூட அழகே அழகென்றாகும் அழகு. அர்த்தங்களின்றி அழகென நிகழும் ஒவ்வொன்றும் எது? தன்னை அறியாதவற்றின் முன்னும் அழகெனத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது எது? அழகு தான் சுபாவமா? அழகின்மை அர்த்தங்களின் சுமைச்செருகல்களா? அறிவு அழகையும் அழகின்மையையும் கூர்க்கிறது, அழிக்கவும் செய்கிறது. 

ஒரு கணம் ஒன்று போலவும் மறுகணம் இன்னொன்று போலவும் மயக்கும் ஒன்று. அழகின் காலாதீத மாயையை அழிப்பதற்காகத் தான் அர்த்தங்களைப் பெருக்கிக் கொள்கிறேனா? அர்த்தமின்மையின் மாயையில் அவிழும் பூ காதலே தானா! ஞானத்தின் மணலின் மேல் ஒரு பட்டிப்பூச்செடியைப் போல. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *