112: ஒருகணம்
விண்ணென்பது இளங் கருமையின் மாபெரும் வதனமெனத் திரண்டிருந்தது. சாம்பலின் கருமை தலைப்பட்டினத்தின் மீது அகண்ட காளான்களின் மலைக் குவைகளெனக் கவிழ்ந்து கொட்டிக் கொண்டிருந்தது. இளமழையின் தூவல்கள் வெளிநோக்கி நிலைத்திருக்கும் இளங் காதலியின் விழிமயக்கென எண்ண இயலாத தழைவில் விழுந்து கொண்டிருந்தது. முகம் வெண்ணிறமாகி மேனி பொன்மணலென கத்திகளின் அடுக்குத் தோலெனச் சிறகை விரித்துப் பருந்தொன்று மேகத்தில் மெல்லிய காற்று வட்டத்தை உண்டாக்கி அப்பாலிருந்த சூரியனின் துண்டொளியில் மினுங்கிக் கொண்டு இறங்கியது. …
