கவனச் சிதறல் பற்றி..

நம் காலத்தில் சலிப்பினாலும் பொருளற்ற வெற்றுக் கேளிக்கைகளாலும் தொடர்ந்து தங்கள் கவனிக்கும் திறனை இழந்து வரும் நூற்றுக்கணக்கானவர்களை நானும் அறிவேன். நானும் கூட இந்தச் சிக்கல் கொண்டவன். கடந்த பத்து வருடங்களுக்கு மேல் சமூக வலைத்தளங்களை தொடர்ச்சியாக கவனித்ததின் வழி என் மன அமைப்பில் உண்டான நுண்ணிய மாறுதல்களை கடந்த பத்து மாதங்கள் அவற்றை விட்டு நீங்கிய பின்னர் வெகுவாக உணர்கிறேன்.

முதலில் எதையும் கருத்தூன்றிக் கவனிப்பதில் தொடர்ந்து சில மணித்தியாலங்கள் ஒன்றை வாசிப்பதிலோ எழுதுவதிலோ முழுதாக மூழ்கித் திளைத்தலை இடைவெட்டும் எண்ணங்களின் துணிக்கைகள் அதிகரித்திருந்தன. பின்னர் நான் என்னை மீட்டு இயல்பான கவனித்தலை நோக்கி வர தியானம் மட்டுமே உதவுகிறது. சமூக வலைத்தளங்கள் நச்சு வெளிகளாக மட்டுமில்லை. ஒருவர் அதில் எந்தப் பங்களிப்பும் ஆற்றாமல் வெறும் பார்வையாளராக இருப்பதினாலேயே இந்த உரையில் ஜெயமோகன் குறிப்பிடும் Anxiety நிலையை அடைந்து வருகிறார்கள். இந்த கும்பல் மன நிலைகளுக்கும் கவனச் சிதறல் நெருக்கடிக்கும் மாற்றாக தியானமும் யோகமும் பயனளிக்கும் என்பதே எனது எண்ணமும். நான் யோகம் பயின்றவனோ பயில்பவனோ அல்ல. ஆனால் தியானம் குறித்து உறுதியாக பரிந்துரைக்கலாம். அதுவே உளத்தை அறியும் முதன்மைப் பயிற்சி.

இந்த உரை மிக முக்கியமான சமகால உளவியலைச் சுட்டிப் பேசுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *