Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

போல்தேயஸ் : ஒரு புதிர்முடிச்சை அவிழ்த்தல்

Posted on May 1, 2025May 1, 2025 by Kiri santh

யாழ்ப்பாணப் பட்டினத்திற்கு வந்த முதல் டச்சு பிரிடிகென்டின் பெயர் பிலிப்பஸ் போல்தேயஸ். இவரது பெயரையும் இவர் பற்றிய கதையையும் முதன்முதலில் எனக்குச் சொன்னது என் துணைவி பிரிந்தா. அவரது ஆய்வுக்காக யாழ்ப்பாணம் தொடர்பிலான முதல் ஓவிய வழியிலான ஆவணங்களை அவர் ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது போல்தேயசின் பெயரையும் அவரது நூலில் உள்ள ஓவியங்களே யாழ்ப்பாணம் தொடர்பில் நமக்கிருக்கும் முதல் காட்சி ஆதாரங்கள் எனச் சொல்லியிருந்தார்.

2019 இல் இலங்கையில் சுவரோவியங்களை வரைவது ஓர் அலையென எழுந்து தீவின் நான்கு திசைகளிலும் பெருமெடுப்பில் வீதிகளெங்கும் தங்கள் போர் வெற்றிகளையும் பவுத்த வாழ்வியலையும் சிங்களப் பகுதி வரைந்து தள்ளவும் தமிழ்ப்பகுதிகளிலும் தங்கள் பண்பாடு, கலாசாரங்களை வரையும் போக்கு நிகழ்ந்து கொண்டிருந்தது. அவ்வேளையில் வரலாற்றை அதன் பெருமிதங்களுடன் மட்டுமே முன்வைக்காது விமர்சனபூர்வமாக அணுக வேண்டுமென எழுதியதால் யாழ்ப்பாணத்து வாலிபர்களால் இணையவெளியில் அர்ச்சிக்கப்பட்டேன். அவ்வேளையில் பருத்தித்துறையில் உள்ள நண்பர்கள் சிலர் சுவரோவியங்களை வரைவது பற்றி உரையாடலை நிகழ்த்தி எண்ணக்கருக்களை விவாதித்து மெருகேற்றலாம் எனச் சொல்லினர். நானும் அந்த விவாதங்களில் பங்குபற்றிய போது போல்தேயஸ் பருத்தித்துறையிலிருந்த மாபெரும் புளியமரத்தின் கீழ் பிரசங்கம் ஆற்றும் காட்சியை வரைவதைப் பற்றி பிரிந்தா எனக்கு ஆலோசனை வழங்கினார். பண்பாடு, கலை, கலாசாரம் என்று ஊரே ஒரே பாட்டுக்காய் ஓடிக்கொண்டிருக்கையில் காலனித்துவ ஒடுக்குமுறையின் ஒரு காட்சியை வரைய வேண்டுமா என பிரிந்தாவைக் கேட்டேன்.

வரலாறு எப்பொழுதும் பெருமைகளால் ஆனதல்ல. ஒவ்வொரு நகரங்களும் பல்வேறு ஊடும் பாவினதும் பின்னல்களால் உண்டாகும் ஓர் ஆடையென விளக்கினார். காலனித்துவ வரலாற்றை அறிவது அல்லது அதற்கு முந்தைய மெய்வரலாற்றை அறிவது வரலாற்றை விமர்சனபூர்வமாக அணுகும் வாய்ப்பை சாமானியர்களுக்கும் அளிக்கும். அதன் ஒரு நுழைவாயில் போன்ற ஓவியங்களை வரைவதே விவாதங்களை உண்டாக்கும் என்றார். காலனித்துவமே நமது நவீன பட்டினங்களை உண்டாக்கியது. அதுவரையான சமூக ஒழுங்கை அன்னியர்களே உருமாற்றினார்கள். கொண்டும் கொடுத்துமே மாற்றங்கள் நிகழ்ந்தேறின என வாதிட்டார். எனக்கு அத்தகைய புரிதல்களை அவ்வேளை உண்டாக்கினார். அதன் விளைவாகப் பருத்தித்துறை நண்பர்களுடன் உரையாடி அங்கு வரைந்தவற்றில் அந்த மாபெரும் புளியமரம் எங்கு உண்மையில் நின்றிருந்ததோ அதற்கு அருகிலே உள்ள சந்தைச் சுவரில் இன்றும் அந்த ஓவியம் நின்றிருக்கும் வண்ணம் வரையப்பட்டது. இத்தகைய விரிவான வரலாற்றுப் புரிதல்களை விவாதிக்கும் பலரும் பருத்தித்துறையில் இருந்தமை முக்கியமானது என்றே இப்பொழுது தோன்றுகிறது. பருத்தித்துறையின் முதுசங்களில் ஒருவரான பா. இரகுவரன் அவர்கள் எங்களது ‘தொன்ம யாத்திரை’ எனும் மரபுரிமை செயற்களங்களிலும் உடனிருந்தவர், பருத்தித்துறையின் வரலாறு தொடர்பில் பல நூல்களை எழுதியிருப்பவர். அவரது குரல் மூத்தோர் சொல்லென அன்று நின்றிருந்தமையையும் நினைவு கூர்கிறேன்.

பிரதீசன் என்ற இளம் ஓவியன் சந்தைச்சுவரில் வரையப்பட்ட ஓவியத்தின் பிரதான தூரிகையாக நின்றார். அவரது ஆர்வமூட்டும் வரைகையை நானும் பிரிந்தாவும் நாட்கணக்காக நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். நாக்கைச் சுழித்து மடித்தபடி தூரிகையைத் தொட்டு ஒற்றும் சிறுவனின் கரத்திலிருந்து ஒரு காலகட்டத்தின் வரலாற்றுச் சட்டகமொன்று விரிந்து தோன்றியது.
தீசனின் நண்பர்கள் பலரும் இணைந்து அந்த ஓவியத்தைப் பூர்த்தி செய்தபோது மிக நிறைவாய் இருந்தது. அதனருகே “சிறுநண்டு மணல் மீது படமொன்று கீறும்..” எனும் மஹாகவியின் கவிதையையும் எழுதி அதன் கீழ் போல்தேயஸ் பற்றிய குறிப்பை எழுதியிருந்தோம். பருத்தித்துறையில் உள்ள கடைகளின் வணிகர்களிடமும் பலதரப்பட்டவர்களிடமும் இருந்து நண்பர்களின் மூலம் உண்டியலில் நிதிசேகரித்து அதன் மூலம் அவர்களது வரலாற்றின் துண்டுகளில் முதன்மையான ஒன்று வரையப்பட்டு முடிந்தது.

(பிரதீசன்)

பின்னரான காலங்களில் நான் அதிகமும் போல்தேயசை மறந்திருந்தேன். எனது முதல் நாவலுக்கான வேலைகளை இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஆரம்பித்த பொழுது மீண்டும் போல்தேயசை கண்டடைந்தேன். இம்முறை நானே தனித்துச் சென்று அவரை அறிந்தேன். கதை நிகழும் காலகட்டம் 1658 இல் ஆரம்பிக்கிறது. அதை போல்தேயசின் வருகையிலிருந்தே தொடங்கினேன். அவர் 1671 இல் மரணிக்கிறார். அதுவரையான பதின்மூன்றாண்டுகள் தான் கதையின் பருவம். ஆகவே ஒவ்வொரு அணுவாக போல்தேயஸ் எழுதியவற்றையும் அவரைப் பற்றி பிறர் எழுதியவற்றையும் அவரது காலகட்டத்தின் முன்னும் பின்னுமான வரலாற்றுக் குறிப்புகளையும் ஆவணங்களையும் ஓவியங்களையும் ஆராய்ந்தேன். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் முழுநேரமும் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தேன். நாவலின் இறுதிப்பகுதியை இப்பொழுது எழுதியும் திருத்தியும் வருகிறேன்.

இக்காலத்தில் எழுநாவில் எழுதப்பட்டு வரும் இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்களின் கட்டுரைத் தொடரை வாசித்தேன். அது ஒரு மிகமுக்கியமான தொடர். நானூறு வருட யாழ்ப்பாண நகர உருவாக்கம் பற்றிப் பல சுவாரசியமானதும் அடிப்படையானதுமான தகவல்களைக் கொண்டிருக்கும் ஒரு தொடர். எனது வாசிப்பில் அறிந்த தகவல்களை ஒருவகையாகத் திரட்டிக்கொள்ள உதவியாய் இருந்தது. அதில் போல்தேயசின் நூலில் உள்ள ஓவியங்கள் அவரால் வரையப்பட்டது தானா எனும் சந்தேகத்துடனேயே அவர் தொடரை எழுதி வருகிறார். அவரது வாதங்கள் நியாயமானவை. யாழ்ப்பாணத்தின் நிலத்தோற்றத்தை அறிந்த ஒருவர் போல்தேயசின் உருக்களை மெய்யானதாகக் கருத முடியாது. மலைகளும் குன்றுகளும் கூட யாழ்ப்பாணத்தில் உண்டெனும் வகையில் அந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

எழுநா 33 ஆவது இதழில் சச்சிதானந்தம் சுகிர்தராஜா அவர்கள் மேலுமொரு தொடரை ஆரம்பித்திருக்கிறார். அதன் முதல் கட்டுரையில் ஒல்லாந்தர் காலகட்டத்தில் போல்தேயசினால் மொழிபெயர்க்கப்பட்ட ஆரம்பகாலத் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பற்றியும் அவரது பங்களிப்பைப் பற்றியும் விபரித்திருக்கிறார். அவர் அக்கட்டுரையில் போல்தேயஸ் ஒரு திறமையான நிலவரைபடக் கலைஞர் என முன்வைத்திருக்கிறார். மேலும் அவரது கட்டுரையில் சில இடங்களில் போல்தேயஸ் பற்றிய பார்வைகள் மிகையான அழுத்தங்களுடன் வருவதாகத் தோன்றியது. அது அவருடைய வரலாற்றுப் பார்வை எனும் நோக்கில் அதில் எனக்கு சிக்கலில்லை.

பிரதானமாக இந்தக் குறிப்பை எழுதுவது என் புனைவுக்கென நான் வாசித்த பொழுது அடிப்படையில் அறிந்து கொண்ட சிலவற்றை வரலாற்று விவாதத்தின் பகுதியாக முன்வைப்பதே. நான் ஒரு வரலாற்று ஆய்வாளன் அல்ல. புனைவெழுத்தாளன் என்பதே எனது பாத்திரம். அதற்கான வரையறைகளுடனும் எல்லைகளுடனும் எனது வாசிப்பிலிருந்து சில தருக்கங்களைத் தொகுத்துச் சொல்வது முக்கியம் எனக் கருதுகிறேன். மயூரநாதனின் சந்தேகமான நடையும் சுகிர்தராஜாவின் உறுதியான நடையும் இரண்டு வேறு வேறு வரலாற்று உசாவல்களின் விளைவுகள் எனப் பார்க்கிறேன். ஒரு புனைவெழுத்தாளனாக எனக்கு வரலாறு ஒரு ஓவியச்சட்டகம் மட்டுமே. உள்ளே எனது விவாதத்தை நிகழ்த்தக் காலத்தைப் பயன்படுத்துகிறேன். ஆகவே புனைவுச் சுதந்திரத்தின் பெயரில் நான் மெய்மாந்தர்களின் உளங்களை வேறு வேறு தளங்களில் சித்தரிக்க முடியும். ஆனால் வரலாற்று எழுத்து அப்படி நிகழ்வதில் இடர்கள் உண்டு.

எனது வாசிப்பின்படி பிலிப்பஸ் போல்தேயஸ் அவரது நூலில் உள்ள ஓவியங்களை வரையவில்லை என்றே கருதுகிறேன். அதற்கான தருக்கங்களாகப் பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கிறேன்.

1. அவரைப் பற்றிய உத்தியோகபூர்வமான / நம்பத்தக்க எந்தக் குறிப்பிலும் (எனது வாசிப்பிற்கு உட்பட்டு) அவர் ஓவியம் அல்லது நிலவரைபடம் வரைபவர் என்பது குறிப்பிடப்படவில்லை. அவரது எழுத்துக்களிலோ அல்லது அவரைப்பற்றிய சமகாலக் குறிப்புகளிலோ அவர் ஓர் ஓவியர் என்பதற்கான எந்தத் தடயமுள்ள ஒரு வரியும் இல்லை.

2. ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும் பல ஆய்வுகளிலும் கூட அவரால் வரையப்பட்டது (By Baldaeus) எனக் குறிப்புகள் இல்லை. அவரது நூலின் மூலம் (from Baldaeus) என்றே குறிப்பிடுவதுண்டு.

3. அக்காலத்தில் இத்தகைய நாடுகாண் பயணங்களையோ அல்லது தாம் சென்று திரும்பிய நிலங்களைப் பற்றியதான குறிப்புகளை எழுதி நூலாக்கும் பொழுது ஓவியங்களுடன் நூல்களை ஆக்கும் போக்கு நிலவி வந்தது. அதற்காகப் பதிப்பாளர்கள் பதிப்போவியர்களை (Engravers) பயன்படுத்துவதுண்டு. இவர்கள் எழுத்தாளரின் குறிப்புகளின் உதவியுடன் கீழைத்தேயம் பற்றிய அவர்களது மனப்பதிவுகளையும் இணைத்து ஓவியங்களை வரைவதுண்டு. அப்படித்தான் யாழ்ப்பாணத்தில் மலைகள் முளைத்திருக்க முடியும். நேரிலே யாழ்ப்பாணப் பட்டினத்தில் வாழ்ந்த ஒருவர் மலைகளையும் ஊர்முழுவதும் ஓடித்திரியும் குதிரைகளையும் வரைய முடியாது.

அங்கனம் அவரே அந்த ஓவியங்களை வரைந்தார் என எண்ணுவதற்கான வாதமாகத் தனது கம்பெனி கைப்பற்றிய நிலம் பற்றிய மிகையான மதிப்பீடுகளை தனது அரசுக்கு வழங்க எண்ணியிருக்கலாம் என்பது மட்டுமே அதன் நேர்க்காட்சித் தன்மை பற்றிய சந்தேகத்துக்கு நியாயமான வாதம். அவரது எழுத்துகளில் சீர்திருத்தக் கிறிஸ்த்தவத்தைச் சேர்ந்த மக்களின் தொகையென முன்வைக்கும் மிகையான எண்ணிக்கையும் அத்தகைய சந்தேகத்திற்கு வலுச்சேர்ப்பவை. பட்டினத்தின் மக்கள் அனைவரையும் கிறிஸ்த்தவர்களாகப் பார்க்கும் பார்வை அவரிடம் நிலவியிருந்தது என்பது மெய். ஆனால் அதற்காக அவர் ஓவியங்களை மிகையான கற்பனையுடன் வரைந்தார் என்பதை அவரது எழுத்துகளின் ஊடாக உய்த்துணரல் வழி மூலம் என்னால் ஏற்க முடியவில்லை. ஓவியம் தொடர்பில் அவை பதிப்போவியர்களின் மிகைப்படுத்தல்களாகவே இருக்கும் என்பதே எனது எண்ணம்.

மேலும் போல்தேயசின் நூல் வெளிவந்தது 1672 இல். போல்தேயஸ் மரணித்தது 1671 இல். அக்கால வழமையின்படி நூல்களை எழுதியவர்கள் பதிப்போவியர்களுடன் இணைந்து அவற்றை உண்டாக்குவதுண்டு. ஆனால் போல்தேயஸ் அப்படி பங்களிப்பாற்றி அந்த நூல் வெளிவந்ததா எனத் தகவல்கள் இல்லை.

இறுதியாக எனது வாசிப்பில் R. K. De Silva வும் W.G.M. Beumer உம் தொகுத்த Illustrations and views of dutch Ceylon (1602 – 1796) எனும் நூலில் மிகவிரிவாக அக்காலத்தின் ஓவியங்களைப் பற்றிய குறிப்புகளுண்டு. குறித்த நூல் டச்சு ஆவணக்காப்பகத்திலிருந்து பல மெய்ப்பிரதிகளை மீள்பதிப்பாகத் தந்திருக்கின்றது. அதில் யாழ்ப்பாணம் பற்றிய பகுதிகளில் போல்தேயசின் படங்கள், குறிப்புகளின் உதவியுடன் பதிப்போவியர்களின் வழியோ அல்லது போல்தேயஸ் வைத்திருந்த சில அடிப்படையான ஓவியக் குறிப்புகளின் உதவியுடன் கற்பனையும் கலந்து வரையப்பட்டிருக்கலாம் எனவோ குறிப்பிடுகிறார்கள். ஆனால் அவை போல்தேயசால் வரையப்பட்டவை என ஆதாரங்கள் இல்லை.

ஒரு புனைவின் மையக்கதாபாத்திரம் ஓர் ஓவியனாக அமைவது எழுத்தாளரைப் பொறுத்த வரையில் கொண்டாட்டமான ஒரு செய்தி. ஆனால் வரலாற்று நாவல் எனும் அடிப்படையில் குறைந்தபட்சம் அவர்களது இயலுமைகள் குறித்து சுட்டிப்பான அம்சங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும். ஏனெனில் ஓர் ஓவியரின் அகத்தை அவருக்கு அளிக்கும் பொழுது அவர் முற்றிலும் பிறிதொருவராக ஆகிவிடுவார். அவரது இயல்புகளில் நடை உடையில் பழக்கங்களில் பார்வைகளில் அவை பெரியதொரு தாக்கத்தை நிகழ்த்தும். ஆகவே தான் அவர் ஓவியரா அல்லது நிலவுரு வரைஞரா என்பதை உறுதிப்படுத்த பல்வேறு மூலங்களையும் உய்த்துணரல் எனும் கருவியையும் பயன்படுத்தி அவர் ஓர் ஓவியர் இல்லை எனும் முடிவுடன் நாவலை எழுதி முடிக்கும் நிலையில் உள்ளேன்.

மயூரநாதனின் கட்டுரைகளில் அவருடையதா எனும் சந்தேகம் ஒருநாளில் அவருடையதென்று மாறினாலோ சுகிர்தராஜாவின் கட்டுரையில் இருப்பது போல அவர் ஓவியர் என மாறினாலோ அவர்களது உழைப்பில் ஒருபகுதி செழுமையடைய வாய்ப்புண்டு. எனது நாவலும் அப்படியே. அவர் ஓர் ஓவியராக இருந்தால் எனது நாவலில் வெளிப்படும் அவரது அகம் பிறிதொரு தன்மையை வெளிப்படுத்த வேண்டும்! ஆயினும் இந்த மூன்று நிலைகளில் போல்தேயஸ் அணுகப்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. வரலாறு எனும் புதிர்முடிச்சை அவிழ்ப்பதன் சுவாரசியம் அது. யாழ்ப்பாணப் பட்டினத்தின் முதல் நிலவுரு எது எனும் கேள்வியுடன் எழும் விவாதத்தை நோக்கி இது நகர்வது ஆரோக்கியமானது. மேலும் போல்தேயஸ் தான் அவற்றை வரைந்தார் எனும் ஆதாரங்கள் ஏதேனும் எங்கேனுமிருந்து பிறரால் முன்வைக்கப்படுவதும் நல்லதே. அது நிகழ்வதாக.

இணைப்பு :

இ. மயூரநாதனின் கட்டுரைத் தொடர்

சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் கட்டுரை

வாசித்தவர்கள் : 361

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,150)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,996)
  • காதலின் முன் பருவம் (1,968)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,902)
  • விடுதலையில் கவிதை (1,881)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme