Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

கொடிறோஸ் – குறுநாவல் ஒரு பார்வை

Posted on May 25, 2025May 25, 2025 by Kiri santh

கொடிறோஸ் என்ற குறுநாவல், ஈழத்து எழுத்தாளர் கிரிசாந்தின் இரண்டாவது படைப்பாக ஆட்காட்டி வெளியீடாக வெளிவந்துள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு, ஈழத்தமிழ் இலக்கியச் சூழலில் மீண்டும் உரையாடலுக்குரிய ஒரு கதை உருவாகியுள்ளது. கடந்த காலங்களில் பேசப்பட்ட ‘புலி எதிர்ப்பரசியல் – புலி ஆதரவரசியல்’ என்ற இருபாதையான அரசியல் அணுகுமுறைகள் இலக்கியத்தில் பிரதிபலிக்கப்பட்டன. ஆனால், அவை புனைவுலகில் புதிய மொழியை உருவாக்கவில்லை. அந்தப் படைப்புகள் பெரும்பாலும் பக்கச்சார்பான விமர்சனங்களோடு மட்டும்தான் அணுகப்பட்டன. இதன் விளைவாக, ஈழத்தமிழ் இலக்கியப் பரப்பே ஒரு உடைந்த வண்டியாகவே இருந்து வந்தது.

இது ஒரு போதாமை. மக்களின் வாழ்வையும், அவர்கள் நிலமும் பண்பாடும் பேசாத இலக்கியங்கள், அவர்களின் காலத்தையும் வாழ்க்கையையும் எவ்வாறு சரிவர பதிவு செய்ய முடியும் என்ற கேள்வி, எப்போதும் எனக்குள் எழும்.

இந்த நாவலின் வாசலில், பதிப்பாசிரியர் குறுநாவல் பற்றியும், ஈழத்தமிழ் இலக்கிய சூழல் பற்றியும், கிரிசாந்தின் எழுத்துக்கள் பற்றியும் குறிப்பிட்டு, வாசகனை ஒரு திசையில் முன் தயாரிக்கிறார். ஆனால், நான் எப்போதும் புத்தகம் படிக்கும்போது முன்னுரையை வாசிப்பதில்லை. ஏனெனில், வாசகனை இவ்வாறு தயார்ப்படுத்த வேண்டிய தேவை பதிப்பாளர்களுக்கு இல்லை. பதிப்புகள் வாசிப்புக்குப் பிறகு உரையாடலைத் தூண்டும் வகையிலேயே அமைய வேண்டும். அதில் வாசகனும், எழுத்தாளனும், பதிப்பாளரும் இணைந்து உரையாட வேண்டும்.

கொடிறோஸ் குறுநாவல் எழுத்தாளரின் முதல் முயற்சி பிரதி என்றால், இது உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது. இந்தக் குறுநாவல், ஒரு யாழ்ப்பாண நடுத்தர குடும்பத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ளதோடு, யாழ்ப்பாணத் தமிழ் வாழ்வியலை வெறும் தத்துவார்த்தச் செருகுதலாக அல்லாமல், இயல்பான மொழியில், வாசிப்பை ஈர்க்கும் விறுவிறுப்புடன் வழங்குகிறது. இதில் மொழிச்சிக்கல்கள் இல்லை. கதையையும், கதாபாத்திரங்களையும், உணர்வுகளையும், சூழலையும் உயிருடன் காணச் செய்கிற வகையில், எழுத்தாளர் தனது மொழியை நன்கு கட்டுப்படுத்தியுள்ளார்.

(பார்தீ)

மேலும், கதாபாத்திரங்களின் சமூகப் பின்னணி, அவர்களது வர்க்க, இன, பாலின அடையாளங்களை வெளிப்படுத்தும் விதத்தில், இவரது மொழி மக்கள் குரலிலிருந்து எழும் அதிகார எதிர்ப்பாக இயங்குகிறது. வாசகனின் எண்ணங்களை விரித்து நகர்த்தும் விதத்தில், இந்தக் குறுநாவல் செயல்படுகிறது.
இந்தக் குறுநாவலில், யாழ்ப்பாணத் தமிழ் வாழ்வில் நிலவும் அப்பா–மகன் உறவுநிலையும், கணவன்–மனைவி உறவிலுள்ள காமத்தைத் தாண்டிய காதலும் அக்கறையும் மிக அழகாகவும் ஆழமாகவும் பேசப்பட்டிருக்கின்றன. உறவுகளில் அன்பும் வலியும் ஒத்துழைப்பும் மட்டுமின்றி, தாய்மண்ணின் உடைந்த வாழ்வியல் இடைநடப்புகளும் பிரதிபலிக்கப்படுகின்றன.
இதைவிடச் சிறப்பாகக் கூற வேண்டுமானால், மக்களின் அரசியல் பங்களிப்பும், அரசியல் விடுதலையின் தேவை, உற்பத்தி பொருளாதார அடித்தளத்தில் வாழ்வுமுறைகள், பண்பாட்டு சூழல் சிதைப்பு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த மொழியிலிருந்து உருவாகும் உணர்வாகவே நாவல் தோன்றுகின்றது.

ஒப்பிட்டு பேச பல படைப்புகள் இருக்கலாம். ஆனால், எழுத்து என்பது தொடரும் இயக்கம். அது காலத்தையும் மக்களையும் பிரதிபலிக்கும் கண்ணாடி. இளைய எழுத்தாளர்கள் இதை நன்கு புரிந்து கொண்டு எழுதுவது இலக்கியத் தொடர்ச்சிக்கே வழிவகுக்கும். இந்தக் குறுநாவலில் சில இடங்களில் என் பார்வையில் தகவல் பற்றாக்குறை இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு வாசகனும் அதனைத் தாம் அனுபவித்து, தேடி நிரப்ப முடியும். அப்படி செய்தால், இந்த வகை படைப்புகள் வாசிப்பை செழுமையாக்கி மக்களை நகர்த்தும்.

கொடிறோஸ் என்பது எந்த கட்சி வேறுபாடும், அரசியல் சாயமும், தனிமனித முரண்களும் இல்லாமல், அனைவரும் வாசித்து உரையாட வேண்டிய ஒரு பொது இலக்கியமாக அமையட்டும். இப்படியான எழுத்துகள் தீயாய் பரவட்டும்.

ப. பார்தீ
23. 05. 2025

(முகடு இதழில் வெளியாகியிருக்கும் குறிப்பு)

முகடு

வாசித்தவர்கள் : 551

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,169)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,999)
  • காதலின் முன் பருவம் (1,997)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,907)
  • விடுதலையில் கவிதை (1,889)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme