109: அன்னைக்கடல் : 02
ஆழியை விழிகளால் அணைத்தபடியிருந்த இளநீலனின் அருகில் அவனது முதல் தனுசு பாணங்களற்றுத் தனித்திருந்தது. குழல் காற்றில் மெல்ல விசிறும் மழையில் இலைத்தழைப்புகளென ஆடின. இளஞ் செவிகளில் குண்டலங்கள் மொட்டு உலகுகளெனச் சுழன்று கொண்டிருந்தன. இடையாடையை முழங்கால் வரை உயர்த்திக் கொண்டு கால்களை ஆமைத் தலையென மண்ணுள் புதைத்தபடி எல்லையற்ற ஆகாயத்தில் ஒளிப்பதக்கமென மினுங்கிக் கொண்டிருந்த சூரியனை நோக்கிக் கொண்டிருந்தான். சூரியனை நோக்குவதில் அவன் இணையற்ற உவகை கொண்டிருப்பதை அன்னை அறிவாள். …
