Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

மூன்று ஆசிரியர்கள்

Posted on July 29, 2026 by Kiri santh

இந்த நாள் போல ஒன்று எனக்குத் திரும்ப நிகழ முடியாது என்று தோன்றுகிறது. அரிதாகவே தன் கல்லுதட்டை இளக்கும் ஒரு தெய்வம் என்னைத் திரும்பிக் கூர்ந்து பார்த்துப் புன்னகைத்தது போல ஒரு நாள்.

காலையில் எழுந்த போது வட்ஸ் அப்பில் தர்மு பிரசாத் ஒரு லின்கை அனுப்பியிருந்தார். ஜெயமோகன் தளத்தில் என்னைப் பற்றிய தமிழ் விக்கி குறிப்பை பகிர்ந்திருந்தார். ‘கிரிசாந்’ என்கிற பிரகிருதி தமிழ் இலக்கிய உலகில் வாழ்கிறான் என ஒருமுறையாவது அவர் அறிந்ததே நல்லூழ் தான் என்பதாக தர்மு பிரசாத்திற்கு பதிலனுப்பினேன்.

ஜெயமோகன் என்னுடைய இலக்கிய ஆசிரியர். ஆனால் அவருக்கு நான் மின்னஞ்சலில் கடிதம் எழுதுவதில்லை. அவருடைய நூல்களைப் பற்றி எங்கும் ஒரு குறிப்பு எழுதியதில்லை. ஆனால் அவரை எண்ணாத, அவரைப் பற்றிப் பேசாத ஒரு நாள் கூட கடந்த ஐந்து, ஆறு வருடங்களில் இருந்திருக்காது. அவர் எப்படி என் இலக்கிய ஆசிரியர் ஆனார் என்பதை என்னுடைய கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் விரிவாகச் சொல்லியிருக்கிறேன். அவருடன் உரையாடமல் இருப்பது, உரையாடத் தொடங்காமல் இருப்பது குறித்து எனக்கு பல மனத்தடைகள் இருக்கின்றன. அதில் முதன்மையானது, அவர் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள் என முன் வைத்திருக்கும் புனைவெழுத்தாளர்கள் குறித்து எனக்கு பெரும் ஒவ்வாமை உண்டு. என்னைக் குறிப்பிடாமலோ கவனிக்காமலோ இருப்பதால் அவ்வாறு கருதுகிறேன் என்பதல்ல. நான் புனைவுகள் எழுதத் தொடங்கி இரண்டு வருடங்கள் தான் ஆகின்றன. இன்னும் உடம்பு பிரட்டாத குழந்தை போன்ற பச்சிளம் எழுத்தாளர் நான். ஆகவே அவர் என்னைக் கவனிக்க எந்தத் தேவையுமில்லை. அது தான் சரியென்றும் நினைக்கிறேன். நம் இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்ட கவனமும் ஏற்பும் அவர்களைத் தள்ளாடச் செய்து கொண்டிருக்கிறது என்பது என் அவதானிப்பு. அவர்கள் இலக்கியத்தை எழுதிக் காட்டுவதை விட சொல்லிக் காட்டுகிறார்கள் என நினைக்கிறேன்.

அண்மையில் பரிசல் கிருஷ்ணா செந்தில் ஜெகன்னாதனை எடுத்த நேர்காணலை பார்த்தேன். அதில் பரிசலின் நினைவில் நிற்கும் செந்திலின் உவமைகளைச் சொன்னார். இதெல்லாம் எந்த உலகத்தில் நல்ல உவமையென்று சொல்கிறார்கள் என வியப்பாய் இருந்தது. குடித்து தள்ளாடி வரும் அப்பா நிலவில் நடப்பது போல வந்தார் என்று சின்னப் பிள்ளைகள் எழுதலாம். முதற்பரிசும் கொடுக்கலாம். அதற்குக் காரணம் அந்தச் சின்னப்பிள்ளைக்கு உவமையென்ற ஒன்று கதையில் இருக்கிறது என அவன் அறிந்ததும், அதை பயன்படுத்த முயற்சித்தமைக்கும் பாராட்டலாம். இதெல்லாமா நினைவில் நிற்கும் நல்ல உவமை. இன்னொரு கிளாஸிக் உவமை சொன்னார். இப்படி நீ எழுதக் கூடாது என்பதற்கு வேண்டுமானால் அதை உவமையாகவோ உதாரணமாகவோ சொல்லலாம். அதாகப்பட்டது, அவனுக்குள் அவள் எப்படி நுழைகிறாள் என்றால், “நோய் எதிர்ப்பு சக்தியில்லாதவனின் உடலுக்குள் கிருமி பரவுவது போல” என்றொரு ஒப்புமை. இதையெல்லாம் கொஞ்சம் கருணை கூர்ந்து இளம் எழுத்தாளர்கள் தவிர்ப்பது நல்லது என்றே தோன்றுகிறது.

இன்று நிகழ்ந்த இன்னொரு அற்புதத்தையும் சொல்லி விட்டு மிகுதியை சொல்கிறேன். இன்று கவிதைக்கான என் ஆசிரியர் சுகுமாரனைச் சந்திக்கும் நல்லூழ் வாய்த்தது. யாழ்ப்பாணத்தில் நிகழ்கின்ற யாழ்ப்பாணக் கவிதைத் திருவிழாவில் அவர் பங்கேற்க வந்திருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை போனில் பேசினோம். காதலிக்கும் ஆரம்ப காலத்தில் அப்படி நான் போனில் குழைந்து கதைத்தேன் என பிரிந்தா சொன்னார். அன்று கால்களிரண்டும் மேகங்கள் ஆனது போல மிதந்து சுற்றிக் கதைத்தேன். ஆசிரியர் மாணவர் உறவு, இலக்கியத்தில் விந்தையான முறையில் மட்டுமே சரியாக நிகழ முடியும். ஒருமுறை போனில் கதைத்த பின்னர் இன்று தான் சுகுமாரனை நேரில் முதல் முறை பார்த்தேன். அவர் வருவது தெரிந்ததும் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தேன். மூத்தவரே என விளித்து. அவரை அப்படித் தான் எப்போதும் நினைத்திருக்கிறேன். ஒரு மூத்தவர். ஆசிரியர். தன்னியல்பால் அவர் அங்கிருக்கிறார். நான் கற்றுக் கொள்கிறேன். ஜெயமோகனுக்கும் எனக்குமான ஆசிரியர் மாணவர் உறவும் கூட அப்படி விந்தையானது தான். அவர் எங்கிருந்தோ சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் என்னால் அருகில், என் தொடு தொலைவில் இருந்து கேட்டுக் கற்றுக் கொள்ள முடிகிறது. நாம் அறிதல் பகிர்வின் பொற்காலகட்டத்தில் வாழ்வது போலிருக்கிறது. மானுட வரலாற்றில் இதற்கு முன்னில்லாத அளவில் தொலைவு பற்றிய குழப்பமில்லாத காலகட்டமிது. மிக அருகில் பெரும்பாலானவற்றை அறிய முடிகிறது. ஆனால் இதுவே மிகத் தொலைவாக அறிதலுக்கான வேட்கை குன்றிய காலகட்டமாக இருக்குமோ என ஐயமும் இருக்கிறது. அறிவு விடுதலையானால் அது மனிதரை விடுதலை செய்யும் என நம்பிய காலகட்டம் நமக்கு முந்தையது தான். ஆனால் விடுதலை செய்யப்பட்ட அறிவு கேட்பாரற்று அலைகிறது. மனிதர்கள் சொகுசுக்கும் மொண்ணைத்தனத்திற்கும் வேக வேகமாகச் செல்கிறார்கள். நுண்ணுணர்வு நோக்கி நகர்ந்திருக்க வேண்டியது, பின்னோக்கி அல்லாடுகிறது.

தொண்ணூறுகளின் தலைமுறை தொடக்கம் இன்று வரை தமிழ்க் கவிதையில் தாக்கம் செலுத்தி வரும் கவிஞர் சுகுமாரன். அவரைக் காண்பவர்கள் ஹாய், ஹலோ சொல்வது போல உங்கள் கவிதைகள் வாசித்து நான் கவிதை எழுத வந்தேன் எனச் சொன்னார்கள். நானும் ஓம், ஓம், ஓம் எனச் சொல்லி ஒத்துக் கொண்டேன்.

 

யாழ்ப்பாணக் கவிதைத் திருவிழாவில் என்னுடைய இன்னொரு ஆசிரியரான நிலாந்தன் சுவரில் கவிதை வரிகளைத் தொகுத்து ஒரு காண்பியக் காட்சியை எடுத்தாளுகை செய்திருந்தார். அதற்கான கவிதைகளைத் தேர்வதில் அவருக்கு உதவினேன். காலையில் சென்று அந்தக் கவிதை வரிகள் எழுதப்பட்ட சுவரைப் பார்த்தேன். தா. இராமலிங்கம், மஹாகவி தொடங்கி ஆதி பார்த்திபன், பிரியந்தி, நான் வரை நீளும் ஒரு பெருஞ்சுவர். அதை அவரது உரையில் பல்வகமைச் சுவர் எனச் சொல்லி முன் வைத்தார். அதில் நாற்பந்தைந்து கவிஞர்களின் ஐம்பதிற்கும் மேலான கவிதை வரிகள் இருந்தன. தோராயமாக எல்லாத் தரப்பும் கணக்கில் எடுக்கப்பட்டிருந்தது. பெண் கவிஞர்கள், முஸ்லிம்கள், மலையகம், தமிழ் தேசியம், ஆதரவு எதிர்ப்பு, விமர்சனம் என கொள்கைகள், அடையாளங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருந்தன. ஆன்மீகம், இயற்கை, அரசியல் என வேறு வேறு கருப்பொருள்கள் கவனப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் சுவரைப் பார்க்கும் பொழுது என்னில் எழுந்தது திகைப்புத் தான். என் முன்னால் ஈழத்தின் மொத்த நவீன காலகட்டத்தின் கைப்பிடியளவு எஞ்சும் வரிகளைப் பார்த்தேன்.

முதன்முறையாக சில வரிகள் தான் எடுக்கலாம் என நிலாந்தன் கேட்ட போது, சரியென்று சொல்லி விட்டு யோசிக்கத் தொடங்கினேன். முதற் குழப்பம், நம்மில் எத்தனை கவிஞர்கள் ஒளி கொள்ளும் மூன்று நான்கு வரிகளில் ஒரு தரிசனமோ காலாதீதமோ வெளிப்படும் வரிகளை எழுதியிருக்கிறார்கள்? அந்தச் சுவரில் இருப்பவர்களின் பெயர்களையெல்லாம் எடுத்து விட்டு வாசித்தால், சின்னச் சின்ன வேறுபாடுகளுடன் அனைத்தும் ஒருவரே எழுதியதாகச் சொல்லி விடலாம். சிறிய நுணுக்கங்களாலேயே கலை வேறுபாடு கொண்டது எனினும், அந்தச் சுவரை ஒரு காலத்தின் முதுகென எண்ணிக் கொண்டேன். பூச்சுப் படர்ந்த சுவர். அதில் படபடப்புடன் ஒட்டிக் கொண்டிருக்கும் கவிதை வரிகள். காலமெனும் மிக மெதுவான காற்று பூச்சை மெல்ல மெல்ல அரிக்கிறது. வரிகளை உதிர்க்கப் போகின்றது. எஞ்சப் போகிறவை எவை? அவை எதனால் எஞ்சப் போகின்றன? ஒரு மொத்தக் காலகட்டத்தையுமே ஒரு தெய்வம் வந்து பிடித்தாட்டியது போல, அது ஒவ்வொரு கவிஞரின் வாயிலும் வேறு வேறாகச் சன்னதம் கொண்டு ஆடியதைப் போல. ஆடி முடித்து படுத்திருக்கும் கலையாடியின் வியர்வையைக் குளிர் நீர் ஊற்றித் தெளித்ததன் பின் விழித்து எங்கிருக்கிறேன் என பார்ப்பதைப் போல அந்தச் சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைத் தொந்தரவுக்கு உள்ளாக்கியது அந்தக் கேள்வி தான், எஞ்சப் போவது எது?. அல்லது, எதுவுமே எஞ்சாமலும் போகலாம். காலத்தை வெல்லும் வரிகளை எழுதுவேன் எனும் மதர்ப்புடன் எழுந்த குரல்கள் எல்லாம், ஈவிரக்கமற்ற நுண்ணுணர்வினால் வடிகட்டப்படும். தேர்ந்து நகரும். முன்னே மட்டும் தான் நகர முடியும் எனும் விந்தையான நெறிமுறை கொண்டது கலை நுண்ணுணர்வு.

செவ்வியல் பற்றிய டி. எஸ். எலியட்டின் புகழ்பெற்ற உரையில், செவ்வியலுக்கான மொழியை ஒருவர் அடைவதற்கு அந்த மொழி எத்தனை தூரம் மொழியில் பயின்று வர வேண்டும் என்பதை பற்றி சொல்லியிருப்பார். ஒவ்வொரு காலகட்டத்தை சேர்ந்த கவிஞரும் ஈவிரக்கமில்லாமல் வடிகட்டப்பட்டு மொழியின் நுண்மை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் இடத்தை அடைவது செவ்வியலுக்கான மொழியை உருவாக்கும். ஈழத்தில் அதற்கான காலகட்டம் இது தான். ஒரு பெரும் கவிதை வெளி, புனைவுத் திரையில்லாமல் கண்ணில் தெரிய மாட்டேன் என்கிறது. கோபுரக் கலசங்கள் மண்ணிலிருப்பதைப் போல கீழே கிடக்கின்றன. என் நாவலான கல்விரல் அஸ்வகோஷின் கவிதையொன்றிற்கான பின்னணித் திரை மட்டும் தான். அதை எழுதிய போது தான் உணர்ந்தேன். ஒரு ஆடியைக் காட்டி அதில் தெரியும் பிம்பத்தை பார்ப்பது போன்றது தான் கவிதையை நாவலில் வைத்துப் பார்ப்பது. ஒரு உக்கிரமான தெய்வத்தை நேரில் பார்க்க முடியாதென்று நீரில் பிம்பமாக்கி பார்ப்பது போல என்றும் சொல்லலாம்.

மாலையில் சுகுமாரனைப் பார்க்கும் ஆர்வத்தில் நிகழ்வு நடக்கும் இடத்திற்கு போனேன். வாசலில் திரும்பியதும் என் இனிய கவிஞர் சுவரை அண்ணார்ந்து பார்த்தபடி நின்று கொண்டிருந்தார். ஒரு மிகச் சரியான நாடக மேடையில் சரியான கோணத்தில் திரும்பி நிற்கும் கதாபாத்திரம் போல நின்று கொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஒருவருமில்லை. உள்ளம் உற்சாகமானது. ‘மூத்தவரே! வணக்கம்!” எனச் சற்றுச் சத்தமாகவே அழைத்திருந்தேன் என்பதை பிறகு பிரிந்தா சொன்னார். “ரெண்டு நாளா ஆளக் காணம்” எனச் சொல்லி மகிழ்ச்சியாக கைகுலுக்கிக் கொண்டார். வழக்கப் பேச்சுகளை பேசினோம். சிரித்தோம். அந்தச் சுவரின் முன் ஒரு ஒளிப்படம் எடுக்க வேண்டும் எனக் கேட்டேன். ஒளிப்படத்திற்கு முன் போஸ் கொடுக்கும் பொழுது உங்கள் கைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டேன். கைகளைப் பற்றிப் பிடித்தார். கைக்குழந்தையின் உள்ளங்கால் போன்ற வெம்மையும் குளிரும் கொண்ட கைகள் அவருக்கு. அவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது நிலாந்தன் வந்தார். என்னுடைய இரண்டு ஆசிரியர்களுடனும் ஒளிப்படம் எடுக்க வேண்டுமெனக் கேட்டு அழைத்து எடுத்துக் கொண்டேன்.

பிறகு நிகழ்வு நடந்து முடிந்த பின்னர் கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டிருந்தோம். கதைக்க, கதைக்க அவர் சிறுவனாகிக் கொண்டே வந்ததைப் பார்த்தேன். நெடுநாள் கையில் இறுக்கிக் கொண்டிருந்த மோதிரம் ஒன்றை கழற்றி வைப்பது போல மனம் இளகிக் கொண்டிருந்தது. நான் எண்ணியது போலவே என் மூத்தவர் இவர் தான் என ஐயம் திரிபற நிரூபித்தார். வேடிக்கையும் சிரிப்புமாக என் இலக்கிய அவதானிப்புகளை ஸ்லிங் ஷொட்டில் அடித்தார்.

இளம் எழுத்தாளர்கள் பலரும் இலக்கியம் பற்றி சிறப்பாக பேசுகிறார்கள், ஆனால் இலக்கியத்தில் அப்படி ஒன்றும் வரவில்லை என்றேன். கண்களைச் சுருக்கி விரித்துச் சிரித்தபடி, சினிமா விமர்சகர்கள் சினிமா எடுப்பதைப் போல என அந்தச் சித்தரிப்பை விரிவாகச் சொன்னார். என்னுடைய எழுத்திற்கு இருக்கும் பதிப்பகச் சிக்கல்களைப் பற்றிப் புலம்பினேன். சிலர் காலத்தை நீட்டுகிறார்கள், சிலர் அரசியல் சரிநிலைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். நான் ஜெயமோகன் சிந்தனைப் பள்ளி, அதிலும் குறிப்பாக என் மொழியில் அவரது தாக்கம் பலமாக இருக்கிறது என்பது பலரும் முன் வைக்கும் ‘குற்றச்சாட்டாய்’ மாறியிருக்கிறது. ஆனால் அவரும் என்னை அந்தப் பக்கம் சேர்த்துக் கொள்ள மாட்டார். சுனில் கிருஷ்ணன் தொடங்கி அனோஜன் பாலகிருஷ்ணன் வரை நான் வம்பிழுக்காத ஆட்கள் குறைவு. ஆகவே அந்தப் பக்கமும் எதிர்ப்பு பலமாய் இருக்கும். நான் என்ன செய்வது, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதிப்பகமாக ஒரு ரவுண்ட் வரலாம் என இருக்கிறேன் என என் திட்டத்தைச் சொன்னேன். ஏன் எல்லாரும் என்னை இப்படி குழப்பமான ஆளாய் பார்க்கிறார்கள். சொல்லுங்கள் எனக் கேட்டேன். கொஞ்சம் கூட யோசிக்காமல், பொய்க்கோபத்துடன் முகத்தைக் கூராக்கி “இவ்வளவு தொல்லை செய்து கொண்டு இருக்கிற உங்கள எப்பிடி விடுறது” எனச் சாரப்பட அவரது பாணியில் நாடகீயமாக பதில் சொன்னார். விழுந்து விழுந்து சிரித்தேன். வேடிக்கையான சிறுவர்களிடம் எழும் அபாரமான தன்னுணர்வு அவரிலிருந்தது. அந்தக் கணத்தை பிறிதொரு கோணத்திலிருந்து அதிர எறிந்து விழுத்தி வெடிக்கச் செய்வதில் ஆர்வமுள்ளவர்கள். என் மூத்தவர் அப்படித் தானிருந்தார். என் மனக் குமுறல்களையெல்லாம் கேட்டபடியிருந்தார். அவரிடம் கொட்டியது மனதை மிகவும் லேசாக உணரச் செய்கிறது. நட்சத்திரங்கள் ஒளிரும் இருள் வானத்தின் கீழ்
நான் என் வாழ்நாளில், சுகுமாரனைச் சந்திப்பேன் என்று கற்பனை கூடச் செய்ததில்லை என்று சொன்னேன். ஓவியரும் கவிஞருமான யோகி அவரிடம் அவரைச் சந்தித்த மகிழ்ச்சியை சொன்ன பொழுது, “உங்களையெல்லாம் உங்கள் நிலத்தில் பார்க்க முடிந்ததே மகிழ்ச்சி” எனச் சொன்னார். அந்த வசனத்தை சொல்லிய பின்னர் அவரது முகம் ஒருகணம் இருட்டில் அமிழ்ந்து எழுந்தது. சிறிய மெளனமான ஆழ்ந்த அமைதி எங்களுக்கிடையில் சில கணங்கள் உறைந்து நின்றது.

இன்றைய நாளில் இந்தச் சின்ன உரையாடல் ஒரு வாழ் நாளிற்கான நிறைவைத் தந்தது. விடைபெற முன்னர் அருகில் நின்று கொண்டிருக்கும் பொழுது முதுகில் கை வைத்து மெல்லிதாக தழுவினார். கேட்கத் தயங்கிய ஒரு அணைப்பை அவரே கொடுத்தார். எப்படியும் ஆசிரியர் மாணவரை அறிவர் என எண்ணிக் கொண்டேன்.

இடையில் நண்பர்களுடன் ஒளிப்படம் எடுத்த போது என் இன்னொரு அவதானத்தையும் சொன்னேன். அவரது ஒளிப்படங்களில் இருப்பதைப் போல அவர் கடுமையான தோற்றமுள்ள ஆள் இல்லை. நீங்கள் நேரில் கியூட்டாக இருக்கிறீர்கள் என்று சொன்னேன். சிரித்தார். சற்று நேரத்தில் மூத்தவரிடமிருந்து விடைபெற்றேன்.

திரும்பிய போது இந்த நாளை எண்ணிக் கொண்டேன். எந்த விஷேசமான முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு நாளில் என் மூன்று ஆசிரியர்களிடமும் ஒரு சொல்லும் அணைப்பும் கிடைத்திருக்கிறது. இது போல ஒன்று இனி திரும்பக் கிடைக்காது. முதல் முறை என்பதன் அழகே அது ஒருமுறை என்பது தான். அரிதானது என்பது தான். திரும்ப அப்படியே அந்த ஒழுங்கில் நிகழ முடியாது என்பது தான். இத்தனைக்கும் பின் இப்பொழுது என் மூளையைக் குடையும் கேள்வி ஒன்று தான், “இனி ஊழை நம்புவதா, விடுவதா?”.

வாசித்தவர்கள் : 59

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,171)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,008)
  • காதலின் முன் பருவம் (1,999)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,910)
  • விடுதலையில் கவிதை (1,890)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme