என் மூன்று ஆசிரியர்களின் ஆசி பெற்ற அந்த நாள் வியாச குரு பூர்ணிமா என அடுத்த நாள் யதார்த்தன் மெசேஜ் அனுப்பியிருந்தார். ஒவ்வொரு வருடமும் வரும் வைகாசி முழு நிலவு நாளை வியாசரின் பிறந்த நாளாக, குரு பூர்ணிமாவாக கொண்டாடுகிறார்கள். ஜெயமோகனின் வெண்முரசு நிறைவடைந்த பின்னர் ஆண்டு தோறும் வெண்முரசு நாளாகாவும் அது கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய ஒரு நாளில் இத்தனை ஆசிகள் கிடைத்திருப்பது முதலில் மகிழ்ச்சியாகவும் இப்பொழுது பொறுப்பாகவும் உணரச் செய்கிறது. ஆசிரியர்களின் ஆசியென்பது செயல் புரிக. வென்றமைக எனும் இரண்டுக்குமானது. ஏனெனில் அவர்கள் தங்கள் மாணவர்கள் வழியாகவே தங்கள் வாழ்வை நீட்டித்துக் கொள்கிறார்கள். தம்மில் ஒரு பகுதியை அவர்களுக்கு அளிக்கிறார்கள்.
மூன்று ஆசிரியர்களின் தொடுகை பெற்ற நாளைப் பற்றி நான் குக்கூ சிவராஜ் அண்ணனுக்கு அனுப்பியிருந்தேன். அவர் பதிலுக்கு மூதன்னை கிருஷ்ணாம்மாள் ஜெகன்னாதன் கொடிறோஸ், குறுநாவலை வைத்திருக்கும் ஒளிப்படம் ஒன்றை அனுப்பியிருந்தார். முன்னர் அவர் வாசித்த போது எடுத்ததாக இருக்கும் என்று நினைத்தேன். அவரது குரல் பதிவில் சொன்னார், உலக சமாதான நூலக வேலைகள் நடந்து கொண்டிருந்த பொழுது பாட்டி கையில் கொடிறோசை வைத்திருந்திருக்கிறார். அதைப் பார்த்தவர், “நீங்கள் ஏற்கெனவே இந்த நூலை வாசித்து விட்டீர்கள்” என்று சொல்லியிருக்கிறார். அதற்குப் பாட்டி, “இல்ல.. ரெண்டாவது தடவ வாசிக்கலாம்னு எடுத்திருக்கிறன்” என்று சொல்லியிருக்கிறார். அந்தக் கணம் ஒரு அருளல் என உணர்ந்ததாக சிவராஜ் அண்ணன் சொன்னார். நானும் அதுவாகவே உணர்கிறேன். அந்த நூல் அதன் பணியை முழுவதுமாக நிறைவேற்றிக் கொண்டு விட்டது எனத் தோன்றுகிறது. ஒரு மூதன்னை இரண்டாம் முறை தொடும் நூல் என்னைப் போன்ற எளியவனின் சொல் அல்ல. அது வேறொன்று வந்தமர்ந்து சொல்லிச் சென்ற பனுவல். இந்த உணர்வு மனத்தை இன்னும் லேசாக உணரச் செய்கிறது.
காலமென முன் நின்றிருக்கும் ஆசிரியர்கள் அளித்திருக்கும் ஆசிகளைக் கையில் வைத்துக்கொண்டிருப்பது முதலில் இனிமையாக இருக்கிறது. ஆகாயத்தில் ஒரு மேகக் கொத்தென மிதக்கச் செய்கிறது. ஆனால் அந்த ஆசிகளின் உட்பொருள் தெளியத் தெளிய, ஒவ்வொரு கணமாக எடை கூடிக் கொண்டிருக்கிறது. அற்புதங்களை நிகழ்த்தி உவகையை அளிக்கும் தெய்வம் அத்தனை குறும்புடன் பார்த்துச் சிரிப்பது இதனால் தானா!