23: வெறியாட்டன் உரைத்தது
ஆடுக ஆடுக பேய்க்களியொன்றைதேடுக தேடுக வெம்மார்பொன்றைதீயினில் கருக செந்நாவென்றைவேலினில் கூரிய கருநாவொன்றைஆடுக ஆடுக வெறியாட்டொன்றைதேடுக தேடுக குறுவாளென்றைகுருதியில் மலரச் செம்பூவொன்றைகுருதியில் மலரக் கரும்பூவொன்றை. வெறியாட்டன் சூர்விற்பன் வனக் கொற்றவையின் கற்சிலையில் நீண்டிருந்த தளிர் நாக்கை நோக்கியிருந்தான் சத்தகன். அவள் பேயுருக் கொண்டு ஆடும் தோற்றத்தில் அந்த நாவு மட்டும் சிறு கருணையின் முனையென நீண்டு தழைத்திருப்பதாகத் தோன்றியது. செஞ்சாந்துகளும் மஞ்சளும் குழைத்துப் பூசிய கருங்கல் மேனியில் கூந்தல் நெளிநாகங்களென அலைந்துறைபவை. …
