121: ஆழிசூடிகை
தன் மெய்யாற்றல் எதுவென அறியாதவர் பெருங்களங்களை வெல்ல இயலாது. எத்தனை சிறியவையாய் இருந்தாலும் அறிந்து கணித்துப் பெருக்கிக் கொண்ட விசையே பெருவுருவென்றாகும். அதுவே களம் வெல்லும் படைக்கலம். வேறுகாடார் அகன்ற மார்பில் வெண்பாசியென மயிர்கள் இளமழைச் சாரலால் நனைந்திருக்க கூகை விழிகளால் இருதியாளை நோக்கியிருந்தார். இருவரும் புலிப்படையிலிருந்து சிலகாதங்கள் விலகியிருக்கத் தொடங்கி ஆறு பருவங்கள் பெயர்ந்து விட்டன. ஒரு அணுக்க உறவெனும் வகையில் நீலரிடமும் புலிப்படையினருடனும் அவர்கள் அணுகியமைவது உண்டு. …
