Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

அரிக்கன்லாம்புச் சூரியன்

Posted on January 5, 2024February 22, 2024 by Kiri santh

எழுந்துவரும் புதிய எழுத்தாளர்கள் இன்று எதிர்கொள்ளும் முதன்மையான சிக்கல்களில் ஒன்று தயக்கம். ஈழத்து இலக்கியச் சூழலில் 2009 க்குப் பின்னர் எழுத வந்த முதற் தலைமுறை எழுத்தாளர்களில் பலர் தங்கள் எழுத்தால், அதன் மீதுள்ள தீராத ஆர்வத்தால் இன்று கவனிக்கப்படுபவர்களாக ஆகியிருக்கிறார்கள். தர்மு பிரசாத், அனோஜன் பாலகிருஷ்ணன், அகரமுதல்வன், யதார்த்தன், ஆதி பார்த்திபன் என்று ஒரு வரிசை உருவாகி வந்திருக்கிறது. நானும் இவர்களின் சமகாலத்தில் இலக்கியத்தில் எழுத வந்தவன்.

இன்று பத்தாண்டுகளில் இலக்கியத்தில் இவர்களது இடத்தை உருவாக்கிய முக்கியமான அம்சம், பண்பாட்டில் தன்னுடைய இடம் ‘எழுத்தாளர்’ என்றவர்கள் உணர்ந்தமை. வேறு எதுவுமில்லை நாங்கள் சொல் அமைந்தவர்கள் என்பதை உணர்ந்து தயக்கமின்றி இந்தச் சூழலை எதிர்கொண்டு இன்றவர்கள் எழுத்தினால் தங்களுக்கான இடங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

இன்று வருவபவர்களிடம் ஒரு விதமான தயக்கம் நிலவுவதை அவர்களின் எழுத்துகளில் அவதானிக்கிறேன். அது தேவையற்றது. இலக்கியத்தைப் பொறுத்தவரை அவர்களின் முன்னகர்வை மிகவும் தாமதப்படுத்திவிடக் கூடிய அம்சம் அது. எழுதிப் பயின்று உரையாடியே இலக்கியம் முன்னகர முடியும். யாரும் யாரையும் தடுக்கவோ வரையறுக்கவோ முடியாது. எழுத்தின் மீதுள்ள குன்றாத ஆர்வமே ஒருவரை கவிஞராகவோ புனைகதை எழுத்தாளரோ ஆக்குகின்றது.

*

கவிஞர் நேதாமோகனின் இலை பெய்யும் காலம் என்ற கவிதைத் தொகுப்பு தாயதி பதிப்பக வெளியீடாக அண்மையில் வெளிவந்துள்ளது. 2015 இல் துணிச்சல்காரன் என்ற முதற் தொகுப்பு வெளியானது. நெடுந்தீவைச் சேர்ந்த இவரது பெயர் நெடுந்தீவு நேதாமோகன் என்றே பெயரிலேயே பரவலாக அறியப்பட்டிருந்தது.

இலை பெய்யும் காலம் என்னளவில் முக்கியமான தொகுப்பு, மேற் சொன்ன காலகட்டத்தின் தொடக்கத்தில் இவரது முதற் தொகுப்பு வந்திருந்தாலும் இலக்கிய மதிப்பீட்டில் இவருடைய எழுத்துகள் கவனத்தை உண்டாக்கவில்லை. ஆரம்ப நிலை கவிஞராகவே கருதப்பட்டார்.

நேதாமோகன் தன் மகனுடன்

இலை பெய்யும் காலம் தொகுப்பில் அவரது வளர்ச்சியை கவனித்து உரையாடியே ஆக வேண்டிய இடத்திற்கு நகர்ந்திருக்கிறார். கவிதையில் தாகத்தோடும் எழுதும் ஓர்மத்தோடும் தொடர்ந்து முன் சென்றால் நேதாவால் தனக்கான இலக்கிய இடத்தினை உருவாக்கிக் கொள்ள முடியும். இந்தத் தொகுப்பில் உள்ள சில வரிகள் அவரது மனம் கொள்ளும் விரிவை, கவிதை தன்னை மறந்து அவரில் நிகழ்வதை வெளிக்காட்டுகிறது.

ஒரு கவிதை இப்படித் தொடங்குகின்றது,

‘ இருளும் அமைதியும் நிறைந்த
பள்ளத்தாக்கில் இருந்து கத்துகிறேன்
ஒரே ஒரு வெளிச்சத்தின் துளிக்காக..

தொடர்ந்து அவ்விருளில் நிகழும் காட்சிகளை விபரித்தபடி சென்று இறுதி வரிகளில் சொற்கள் இப்படிக் கவிதையாகின்றன.

‘ ஓர் ஒளிமுகத்தின் தீச்சுடர்
இருவிழிகளில் கிரகணம் அள்ளி
எப்போதும் வரும் என் இருட் குகைக்குள்’.

ஒரு கவிதை காய்ந்த சருகுக் குவியலிலிருந்து முதற் புகையென எழுந்து மேகம் வரை நீளும் கனவு போல் ஆக வேண்டும். அதன் விரிவே அதன் மதிப்பை உருவாக்குவது. இத்தகைய விரிவு கொள்ளும் வரிகளினாலேயே அவரது கவிதை மனம் நம்மைத் தொடுகின்றது.

இன்னொரு அம்சம் கவிதைக்குள் நிகழும் கதை. கதையைக் கவிதை எதிர்கொண்டு கவித்துவத்தை அடையும் தருணத்தினால் அதை எரியும் சோகமாகவோ அல்லது உதட்டில் அலைபுரளும் புன்னகையாகவோ மாற்றும். மழை நாள் என்றொரு கவிதை,

நேற்று முளைத்த செடி
ஒன்றிற்குப் புயலை எதிர்க்க
கற்றுக்கொடுக்கிறது தாய்மரம்

புற்றுக்குள் இருந்து
ஒரு தொகை மண்ணை வெளியேற்றி
அவசரமாக இடம் மாறுகின்றது எறும்புக்கூட்டம்

வேலைக்குச் செல்லும் கணவனை
புயலையும் தீராத மழையையும் காரணம் காட்டி
காதலிக்க அழைக்கிறாள் மனைவி

மின்சாரத் தடங்கலுக்காக
அடிக்கடி சினந்து கொள்கிறான் மகன்

என் நண்பன் தொலைபேசியில் அழைத்து
இந்த அடைமழைக்கு
தேநீரும் சிகரெட்டும்
குடித்தால் நன்றாய் இருக்கும்
என்று நலம் விசாரிக்கிறான்

நானோ
அம்மா சிறுமியாக இருக்கும் போது
அடித்த புயல்பற்றிய கதையினை
ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

இக்கவிதையின் இறுதி வரிகளுக்கு வந்து சேரும் போது புயல் ஒரு புன்னகையென இதழில் அடிக்கிறது.
இத்தகைய கதையம்சங்கள் கொண்ட கவிதைகளில் அவருடைய அவதானிப்புகள் வளர்ச்சியடைந்திருக்கிறது.

அரிக்கன்லாம்பு எனும் கவிதையும் இத்தகைய கதைத்தன்மை கொண்டது. அரிக்கன் லாம்புக்காலங்களைக் கடந்து விட்ட பின்னரும் அந்த வெளிச்சம் விரட்டாத இருள் இன்றும் எம்முடன் வாழ்கிறது என்று தொடங்கும் அந்தக் கவிதை

‘ இருளின்மேல் ஒளியாய்
எழுந்த லாம்பு
நம் வாழ்க்கைச்சுழற்சியின் சூரியன்’ என்று தன் கவித்துவ கணங்களைச் சென்று சேர்கிறது. அரிக்கன்லாம்பிலிருந்து எழும் ஒளியை சூரியனாகக் காணும் கண்களிற்கு கவிதை இன்னும் உதிக்கும்.

வெட்டியான் எனும் இன்னொரு கவிதையின் இறுதி வரிகளில்,
‘ கண் நனைத்தபடியே ஒருவருக்குச் சொன்னான்
என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கூட
நான் சவக்கிடங்கு தோண்டியிருக்கலாம்
ஒவ்வொரு புதைகுழிக்குள்ளும் என் ஆத்மாவையும்
கண்ணீரையும் அவர்களுக்குத் துணையாய்
போட்டு மூடிவிடுகின்றேன்’

இந்தக் கவிதை வரிகளுக்கு ஒருவர் சென்று சேர அதற்கான அனுபவம் வாய்க்க ஒரு வாழ்க்கை இருக்க வேண்டும். நேதாவின் கண்கள் வாழ்வை உள்ளும் புறமும் பார்க்க ஆரம்பித்துவிட்ட மகிழ்ச்சியை இத் தொகுப்பு அளிக்கிறது. நமது சூழலில் கவனிக்கப்பட்டு உரையாடி வளர்த்தெடுக்கப்பட வேண்டிய கவிதைக்குரலை அவர் கொண்டிருக்கிறார். இத் தொகுப்பில் உள்ள அரசியல் கவிதைகளும் கவனிக்கத்தக்கவை. குமுதினி மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பில் எழுதப்பட்டுள்ளவற்றில் உள்ளோடும் அவதானிப்புகளும் சித்தரிப்புகளும் முக்கியமானவை.

*

இந்தத் தொகுப்பில் உள்ள நேதாவின் உரையில் ஒரு குறிப்பு உள்ளது. ‘எனது கவிதைகள் தமிழ்க்கவிதை இலக்கியத்தில் எந்தத் தாக்கத்தையும் செலுத்தப்போவதில்லை. எந்தச் சிறப்பையும் எந்தச் செழிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. அதற்கு அவசியமுமில்லை.’ என்று சொல்லுமவர் இதனால் என்ன லாபம், இதுவெல்லாம் இலக்கியத்தை வளர்த்து விடவா போகிறது என்ற கேள்விகளையும் தான் எதிர்கொண்டதாகச் சொல்லி நான் என் ஆத்ம திருப்திக்காக இவற்றைப் பாடிக்கொள்கிறேன் என்று சொல்கிறார்.

இது மிக அடிப்படையாக ஒரு கவிஞர் அல்லது அறிவுத் தரப்பு வெகுசன வெளியிலிருந்து எதிர்கொள்ளும் கேள்விகள். இவை குறித்து பணிவோ தன்னடக்கமோ விலகலோ கொள்வது எவ்வைகையிலும் செய்யக்கூடாதது. நான் இக்காலத்தின் கவிஞன் என்னை நீங்கள் கவனித்தே ஆகவேண்டும் என்ற தரப்பை வலிமையாக முன்வைக்க வேண்டியது நேதாவின் குரலாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். இலக்கியம் பற்றியோ அறிவுச் செயல்பாடுகள் பற்றியோ புரிதலற்ற எளிய கேள்விகளின் முன் தயங்கி நிற்பதென்பது அவர்களின் அறியாமையை நியாயப்படுதிவிடக் கூடும். இலக்கியம் ஒரு தன்மருந்து மாத்திரமல்ல.

அதை ஒரு சுடராக ஏந்தி மானுட வரலாறு முழுக்க அதன் இருளான காலங்களைக் கடக்க வைத்த பெருமரபில் இன்று நாமும் எழுதுகிறோம். செயற்படுகிறோம். ஆகவே நாம் பணிவு கொள்ளலாகாது.

வெகுசனத் தரப்பின் இலவச ஆலோசனைகளைத் தாங்கிக் கொண்டு ஒருவர் இலக்கியத்தில் முன்னகர முடியாது. என்ன லாபம் என்று நாம் வாழ்ந்து தான் நிரூபித்தாக வேண்டும்.

எந்தத் தயக்கமின்றி நான் எழுத்தாளர், நான் கவிஞர் நான் இந்தப் பண்பாட்டின் அக விரிவை உருவாக்குபவர். ஆறுதலோ தேறுதலோ தந்து எழுத வைக்கும் சூழலில் நான் இல்லை என்ற நிலை உணர்த்தபட வேண்டும். எமக்கு அடுத்து வந்த தலைமுறையில் உள்ள பலரிலும் இதே மனநிலை இருப்பதையிட்டுக் கவலையாக இருக்கிறது. யாரும் இடம் தர, வாய்ப்புத் தர இது ஓர் அமைப்பல்ல. வாசியுங்கள், உரையாடுங்கள், எழுதுங்கள் முன் செல்லுங்கள் எதுவும் அல்லது யாரும் இங்கு ஒருவருக்கான இடத்தை மறுத்து விட முடியாது. எழுத்தாளர் அல்லது அறிவுத்தரப்பு என்பது கொடுக்குமிடத்தில் இருப்பவர். அதன் தன்னிலையை உணர்ந்து கொள்ள வேண்டும். எளிய உலகியல் மதிப்பீடுகளை அவ்வுணர்வால் வென்று தங்கள் எழுத்தால் நிமிர்வு கொள்ள வேண்டும்.

வாசித்தவர்கள் : 721

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,170)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,006)
  • காதலின் முன் பருவம் (1,997)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,908)
  • விடுதலையில் கவிதை (1,890)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme