ஈழத்து வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கான இதழான எழுநாவின் ஐம்பதாவது இதழ் வெளியாகியிருக்கிறது. ஈழத்துச் சூழலில் வரலாறு, பண்பாடு, அரசியல், சூழலியல் என பல துறைசார் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். தொடர்ச்சியாக ஓர் ஆய்விதழ் இயங்குவதற்கான புறச்சூழல் அரிதாக இருக்கின்ற பின்னணியில் இத்தகையதொரு தொடர் முயற்சி ஒருவகை சாகசப் பயணமே.
சில முக்கியமான தொடர்களாக நான் கருதுபவை, மயூரநாதனின் வரைபடங்கள், கொலனித்துவ காலம் தொடர்பிலான கட்டுரைகள். தி. செல்வமனோகரனின் நாட்டார் தெய்வங்கள் குறித்த தொடர், மலையகம் சார்ந்த கட்டுரைகள், கார்த்திகேசு இந்திரபாலாவின் வேந்தர் இல்லா வையகம் தொடர் போன்றன.
முழு இதழையும் நான் வாசிப்பதில்லை. சில கட்டுரையாளர்களின் மீது வெகுவான ஐமிச்சம் உண்டு. தேர்ந்தெடுத்தே வாசிப்பேன். குறிப்பாக இடதுசாரிப் பின்னணியில் எழுதுபவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? எதையாவது புதிதாகச் சொல்கிறார்களா என்றால் “ம்ஹூம்”, அடம்பிடித்து பழைய நீத்துப்பெட்டியில் பழைய மாவையும் புதிய மாவையும் கலந்து புட்டுக் கொத்துவது போன்ற எழுத்துகள்.
எழுநாவில் வெளிவருகின்ற கட்டுரைகளுக்கான ஆய்வு நோக்கிலான துறைசார் விவாதங்கள் இணையச் சூழலில் நடைபெறுவதில்லை. வாட்ஸ் அப் வரலாறுகளைப் போல சந்தேகமின்றி, விவாதமின்றி அக்கட்டுரைகள் விரிவான வாசகப் பரப்பை அடைகின்றன. இந்த வகையில் ஈழத்து வரலாறு எனும் பெயரில் எழுதும் பெரும்பாலான கட்டுரைகளில் அடிப்படையான வரலாற்று நோக்கோ, சொந்தப் பர்வையோ இல்லை. அத்தகைய பார்வைகளும் நோக்குமே எனக்கு முக்கியமானவை. இதுவரையான பெருமளவான கட்டுரைகள், நம் ஆய்வுப் போதாமையின் வெளியிலிருந்து “அடிப்படைகளை” தொட்டுக் காட்டுதல் எனும் வகையிலேயே இருக்கின்றன.

ஊக்கமான விவாதச் சூழலே எந்த இதழையும் மேம்படுத்தும் என்பது அனுபவப் பாடம். எழுத்தாளனாக எனக்கு வரலாறும் ஆய்வுகளும் எவ்வளவு தேவையோ அவ்வளவே நான் பின் தொடர்வது.
ஐம்பது இதழ்கள் என்பது ஒரு பெரிய வட்டம். தொடர்ந்து விரிவடைய வாழ்த்துகள்.
*

சவுத்பவுண்ட் எனும் பெயரில், ஆங்கிலத்தில் தென்னிந்திய இலக்கியத்தையும் பண்பாட்டையும் முன் வைக்கும் வார இதழ் தமிழ்நாட்டிலிலிருந்து தொடங்கப்பட்டிருக்கிறது. ஜெயமோகனும் அவரது நண்பர்களும் இணைந்து இந்த முன்னெடுப்பை செய்திருக்கிறார்கள்.
முதலாவது இதழ் வெளியாகியிருக்கிறது. இந்திரா பார்த்தசாரதியின் நேர்காணல் வெளிவந்திருக்கிறது. ஜெயமோகனின் ஓலைச்சிலுவையின் மொழிபெயர்ப்பும் வந்திருக்கிறது. மேலும் சில கட்டுரைகளும் மதிப்புரைகளும் வந்திருக்கின்றன.
ஈழத்து எழுத்தாளர்களும் இதழில் பங்களிக்கலாமென ஜெயமோகன் தனது தளத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆர்வமுள்ளோர் பங்களிப்புச் செய்யுங்கள்.
நீண்ட பயணங்களின் முதற் காலடிகளுக்கே உண்டான விசை ஆசிரியர் குழுவிற்குக் கிடைக்கட்டும்.

