நடைக் கவிதைகள்

தேவதேவனின் புதிய கவிதைகளை அவரது வலைப்பூவில் வாசித்துக் கொண்டிருந்தேன். சிறு பிள்ளையின் கவிதைக் கொப்பி போல எளிமையான சொற்களும் வியப்பும் கொண்டவை. பலநூறு முறைமுறை சொல்லில் அமையப் பெற்றவை. ஆனால் அவை ஒரு நடைப் பழக்கம் போல அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எனக்கு உவப்பானதாக இரண்டு கவிதைகள் நடைவழியில் புதுமலர்களெனத் தோன்றின.

*

நடைப்பயிற்சி

எண்ணங்களை விலக்கியபடி
எண்ணங்களற்ற வெளிநோக்கி
அவன் நடந்துகொண்டிருந்தான்

இப்போது அவன்
எண்ணங்களற்ற வெளியில்
நடந்துகொண்டிருந்தான்

மரங்கள் நடுவே நடந்து செல்லும்
ஒரு மனிதனைப் போலவே!

*

காற்றில் நனைந்தபடி

காற்றில் நனைந்தபடி நடந்து செல்கையில்
காதலில் மிதந்து செல்வது போலில்லை?

எந்த ஒரு அன்பர்-அறிஞர்- எதிர்ப்பட்டாலும்
உங்கள் நடை தடைப்பட்டுவிடாதவரை
ஒரு பிழையும் நிகழ்வதில்லையல்லவா?

எல்லா அறிவுகளும்
விரல் தொடுகையில் எளிதாகவே
அடையக் கூடியதாகவே இருக்கிறது
அன்பு ஒன்றுதான் மிக அரிதாக
இருக்கிறதாய் உணர்கிறீர்கள்?
அதுவும் எத்துணை எளிதான ஒன்று
அனைத்து அறிவுகளையும்
ஒரு சுட்டுவிரல் விலக்கி நிற்கையில்!

அணைய வேண்டியதை அணைவதற்குத்தானே
விலக்க வேண்டியதெல்லாம் விலக்கப்படுகிறது
தொட்டுவிட்டாலே அன்பும் அறிவாகிவிடுகிறதெண்ணி
தொடுகையையும் விலகலையும் தொட்டுவிடாத, விட்டுவிடாத
அன்பின் இரகசியத்தை அறிந்ததுவாய்
தென்றலாய் விரல்கள் வருடிச் செல்கின்றன!
நடந்து செல்கிறான் அவனும்!
நடந்து செல்கிறீர்கள் நீங்களும்!

தேவதேவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *