16: ஈச்சி எழல்
வெஞ்சுரம் நெஞ்சில் உலைய உடலை அசைக்காமல் இருண்ட குடிலின் கூரையை நோக்கியிருந்தாள் நிலவை. அவள் இக்குடிலுக்கு வந்து அரைப்பருவம் சென்றோடி விட்டது. இருளிலே இருந்து இருளிலே எழுந்து இருளிலே விழிகளைப் பார்த்து நாளெலாம் அமர்ந்திருப்பாள். நாளைக்கு ஒருவேளை கிழங்குகளோ புல்லரிசிக் கஞ்சியோ கொணர்வாள் மாதுமியாள். அவளைத் தவிர வேறு ஒருவருடனும் அவள் ஒரு சொல்லும் பேசுவதில்லை. அதிகாலையில் மாதுமியாள் வந்து அவளைக் காலைக்கடனுக்கும் குளிப்பதற்கும் அருகிலிருந்த குளத்திற்கு அழைத்துச் செல்வாள். …
