Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

சினிமாவா இலக்கியமா

Posted on January 18, 2026January 18, 2026 by Kiri santh

சினிமாவா இலக்கியமா சரியாக ஒரு விடயத்தை கடத்தும். இது அரசியல் கேள்வி தான். தமிழர்களின் தேசநிலைப்பாட்டை இலக்கியங்கள் வாயிலாக நிறுவுவதா இல்லை சல்லியர்கள், மேதகு போல சினிமாக்களினால் விளங்கப்படுத்துவது சரியாக அதை கடத்துமா. தணிக்கை தடைகளை கடந்து உண்மை தாங்கும் அல்லது உணர்வு தாங்கும் பணி எதில் சரியாக அமையும்.

Rtr Kirishanth


*

வணக்கம்,

இலக்கியம் தான். அதில் மாற்றம் என்றும் நிகழ முடியாது. இலக்கியம் மொழியின் ஊடாக கற்பனையையும் சிந்தனைத் திறன், தொகுக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டு மானுடத்தை முன்னகர்த்துகிறது. சினிமா காட்சிகளாலானது, சில நல்ல அனுபவங்களை அளிக்கக் கூடியது, எளிய அரசியல் சராசரி எண்ணங்களை திருப்திப் படுத்தவோ எரிச்சலூட்டவோ கூடியது. நிகரில் காணும் வாழ்க்கையை விடக் கற்பனை வாழ்க்கையில் நாம் நிகழ்வுகளையும் வாழ்க்கையையும் செறிவாகவும் நுண்மையாகவும் அறிகிறோம். அதுவே நம்மைப் பண்படுத்துகிறது. ஆகவே சினிமாவை விட இலக்கியம் அந்தரங்கமாக ஒருவரின் ஆழத்திடம் உரையாட முடியும்.

ஈழத்துச் சூழலை எடுத்துக் கொள்ளலாம். நமது வரலாறென்பது மாபெரும் குழப்பங்கள் நிறைந்த புயல் சூழுலகு. இங்கு இலக்கியமும் சரி சினிமாவும் சரி பெருமளவுக்கு ஒரே ரகம் தான். ஈழத்து எழுத்தாளர்களுக்கு இலக்கிய வாசிப்புக் கிடையாது. வாசித்தாலும் அவர்களுக்கு ‘இலக்கியம் வாசிக்கத்’ தெரியாது என்பது அவர்கள் உதிர்க்கும் கருத்து முத்துகளை வாசிக்கும் பொழுது தெரிகிறது. இலக்கியத்தில் சனம்/ மக்கள் எனும் திரளை நோக்கி பேசுவதில்லை. மனிதர் என்ற பண்பாட்டு விளைச்சலுடனே உரையாடுகிறது. நம்மாட்களோ சனத்தின் துக்கங்கள் தாளாமல் எழுத வந்தவர்கள்.

ஒரு எழுத்தாளர் சாமானியரை விட மேம்பட்டவரா என்றால் குடி நெறிகளுக்கு அவர் கட்டுப்பட்டவரல்ல. அவர் மேலானவர் அல்ல, ஆனால் நமது பண்பாட்டின் கூர் மிக்க முனை ஒன்று அவரில் விழித்திருக்கிறது. ஆகவே அவரை நாம் கவனிக்க வேண்டும். அத்தகையவர்களின் ஊடாகவே நாம் பண்பாட்டில் வாழ்கிறோம். அவர்கள் உருவாக்கி அளிப்பதே நாம் வாழ்வென வாழ்ந்து கொண்டிருக்கும் பெருங்கதை.

ஆகவே தான் ஈழத்துச் சூழலில் நாம் பொருட்படுத்தும்படி வகையில் நம் பண்பாடு எழுதி எடுக்கப்படவில்லை எனச் சொல்கிறோம். அண்மையில் தர்மு பிரசாத் இது பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இந்த வகையான இலக்கியத் தற்குறி எழுத்தாளர்களிடம் சிக்கிக் கொண்டவர்கள் முதன்மையாகத் தமிழக வாசகர்களே. அவர்களில் பலரும் ஈழமென்றால் கரைந்து விடுவார்கள். அவர்களது குற்றவுணர்வின் நீண்ட முனையொன்று இந்தச் சிறு தீவையும் தொட்டிருப்பது. நாம் தான் அவர்களில்லையா! ஆகவே அங்கு இவர்களுக்கு கவனம் நிகழ்கிறது. ஏற்பு நிகழ்வதில்லை.

மாஸ்டர்ஸ் எனச் சொல்லத் தக்கவர்கள் எவர்? ஒரு பட்டியலுண்டா? அவர்களிடம் கற்றுக்கொள்ளவும் சொல்லவும் வாழ்க்கை குறித்தோ பண்பாடு குறித்தோ வரலாறு குறித்தோ சொந்தக் கருத்து ஏதேனும் உண்டா? ஒரு சுக்கும் இல்லை.

சரி அவ்வளவு பெரிதாய் வேண்டாம். குறைந்த பட்சம் தாம் ஆழத்தில் நம்பும் அரசியல் வரலாற்றையாவது இலக்கியத் தகுதியுடன் முன் வைக்கலாம் இல்லையா?

செய்யமாட்டார்கள். காரணம், இலக்கியம் குறித்த கல்வியின்மை. நான் மரபான கல்வி முறைகளைப் பற்றிச் சொல்லவில்லை. வீட்டுக் கல்வியாகவேனும் கற்றிருக்கவே வேண்டும். சும்மா ஏதோ நான் பாட்டுக்கு என் மனம் பாட்டுக்கு என்று அலாப்ப ஏலாது. கம்பனும் வள்ளுவனும் ஜெயமோகனும் வாழும் மொழி. இங்கு ஒரு சிட்டிகை அழகைத் தன்னும் கொடுக்க வேண்டும். இல்லையா? ஒரு துண்டு வாழ்க்கை!

அவை இலக்கியத்திலே கூட இன்னமும் நிகழவில்லை. பிறகெப்படி சினிமா. சினிமா காட்சியூடகம், ஆகவே அதன் எல்லைகள் மட்டுப்பட்டவை. சினிமா ஒரு சின்ன அலையை உண்டாக்கலாம். இலக்கியமே வடிவங்களில் முதன்மையானது. அதன் அறிவார்ந்த தன்மை எதிர்காலத்துக்குரியது. ஆகவே தான் அத்தனை நுண்மை கோரப்படுகிறது. அத்தனை எதிர்பார்ப்பு இருக்கிறது. வரலாற்றை சரியாகக் கடத்துவது இலக்கியத்தின் பணி அல்ல. வரலாறு இயங்கும் போக்கையும், சில விசை முனைகளையும், அதன் கருணையற்ற இயக்கத்தையும் பற்றி இலக்கியம் சித்தரிக்கிறது. அதன் வழி நாம் வரலாற்றை கற்பனை செய்கிறோம். அதனூடாக நாம் வரலாற்றின் ஆதாரமான விசைகள் தனி மனிதர்களிலோ அல்லது சில நிகழ்வுகளிலோ இல்லை என்பதை அறிகிறோம். என்றுமுள்ள வாழ்வு எனும் பெருநதி தழுவிச் செல்வதே காலமெனும் படுக்கை.

வரலாறு ஒரு சதியல்ல. வாழ்க்கையும் ஒரு சதியல்ல. இங்கு நிகழும் பல்லாயிரம் மனித வாழ்க்கைகளின் மோதலே பொருட்டானது. மானுடர் வரலாறெங்கும் எப்படி உருமாறி வருகிறார்கள் என்பதை இலக்கியம் வடித்துக் காட்டுகிறது. ஆகவே செறிவானது. அதே நேரம் சாரமுள்ளது. வாசிப்பை நோக்கி அடுத்த தலைமுறை வருவதை விட வேறெந்த சாத்தியமான நல்ல வழிகளும் வரலாற்றை அறிவதற்கு இல்லை.

கிரிசாந்

தர்மு பிரசாத்தின் கட்டுரை : புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்

வாசித்தவர்கள் : 204

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,151)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,996)
  • காதலின் முன் பருவம் (1,969)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,903)
  • விடுதலையில் கவிதை (1,882)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme