Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

கல்விரல் – குறிப்பு

Posted on February 11, 2026February 11, 2026 by Kiri santh

கல்லெடுத்தான் குளம் என்ற ஊரில் இருக்கும் மொட்டு என்றழைக்கப்படும், அரும்பி என இயக்கப்பெயரும் கொண்ட துளசி மற்றும் பொற்புதிர் அவளுக்கும் வீட்டுப்பெயர் தங்கம், இன்னொரு புனைப்பெயர் பெற்றி பூர்ஷ்வா அவர்களையும், போர் மற்றும் போருக்கு பிறகான கல்வி நிலையத்தை மையமாக கொண்டது தான் கிரிசாந் எழுதிய கல்விரல் நாவல்.

போருக்கு பிந்தைய கல்லெடுத்தான் குளத்தின் முதன்மை எதிரிகள் நால்வர். காட்டையொட்டி இருப்பதால் யானை, பாம்புகள், குரங்குகள். நாலாவதாக இருப்பது பப்பரக்கொப்பான்கள் என அழைக்கப்படும் தேனீக்கள். துளசிக்கு அது மனிதன் மறக்க விரும்புகின்ற நினைவுகள் தான் பப்பரக் கொப்பான்களாகப் பிறக்கின்றது என்றொரு எண்ணம்.

சிறிய நாவல்தான் ஆனால் கனமனதாக இருப்பது அதன் விவரணைகளும் ஒவ்வொன்றுக்கும் இருக்கும் உவமைகள் தான்.

மொத்தமே ஐந்து அத்தியாங்கள் தான். முதல் அத்தியாயத்திலேயே அரும்பியின் இயக்கம், போர் குறித்த கதைகள் முடிந்துவிடுகிறது. பிஸ்ரல் குறித்த அவளது விருப்பம், தனிக்கொலைகளை அவள் விரும்புவது அதன் மூலமாக அவளை புரிந்துக்கொள்ள முடிகிறது. போரில் ஒருவர் மாற்றி ஒருவர் சுட்டுக்கொள்வது ஒரு சலிப்பான விஷயமாக இருக்கிறது என்பது புதிய கோணமாக இருக்கிறது, போர் குறித்த நாவல் எதிலும் போர் ஒரு சலிப்பான விஷயமாக இருப்பதை நான் வாசித்த வரையில் போருக்கு பிந்தைய நாட்களில் வருமே தவிர, போர் காலத்திற்குள்ளாக வருவது இதில்தான் காண்கிறேன்.

அதற்கடுத்த அத்தியாயம் பொற்புதிர் மற்றும் போருக்கு பிந்தைய எல்லாம் இழந்த துளசியின் (அரும்பி) மகன் சின்னவன் குறித்தது, அவன் விட்டேத்தியாக இருக்கிறான். பள்ளிக்கு செல்வதை விரும்பாமல், களவு செய்கிறான். அவனை ஹாஸ்டல் விடுதிக்கு அனுப்புவது தான் சரி என்கிறார்கள். பொற்புதிர் குறித்த அத்தியாங்களில் சரிபாதி சின்னவன் மற்றும் கல்வி குறித்தது தான்.

பொற்புதிர் ஒரு கம்யூனிஸ்ட்டின் மகள், ஆலய நுழைவு போரட்டத்தை வெற்றிகரமாக முடித்த ஒரு சித்தாந்த கடைப்பிடிக்கும் போராளியின் மகள் குறித்தது ஆனால் அவளுக்கு காதலே வராத நொடியில் குழைந்தும் அழுகும் பெண்ணவள். ஆனால் சித்தாந்த தெளிவும் கொண்டவள்.

துளசியிடம் ஏன் போராடீனீர்கள்? இப்போது தோற்று போனவள் என்று உணர்கிறீர்களா? என கேட்பதும் அதற்கு அரும்பியின் பதில்களும் இடம்பெறும் அத்தியாயம் கிரிசாந் தொடர் வாசிப்பில் இருக்கிறார், அவர் கதாபாத்திரத்தின் பார்வையில் அதை கவனிக்க வைக்குமளவுக்கு நேர்த்தியாக எடுத்து சொல்கிறார் என்பது தெரிகிறது.

நாவலில் வரும் உப பாத்திரமாக நினைவில் நிற்பது சின்னமுத்து ஆச்சி மற்றும் அவளின் இறக்கும்போது நாமும் பதற்றபடவைக்கும் தருணங்கள் இருக்கிறது. ஆனால் பொற்புதிர் குறித்த அத்தியாயங்களில் வரும் ஆசிரியர்கள் மற்றவர் யாரும் நினைவில் நிற்கவில்லை. அங்கு நிலவும் பள்ளிக்கல்வி அமைப்பு குழப்புகிறது.

விவரணைகள் நாவலை மிகுந்த நெருக்கமாக்குகிறது. மொட்டு புணர்ச்சியின் உச்சத்தில் இருக்கும்போது அது “கற்றாளையின் சதையைத் தடவுவது போல உடம்பு நொளநொளக்கும்” என்பாள்.

“நிழல்கள் மென்மையானவை மனிதர்களைவிட”

“புலிகளுக்குப்போனால் ஆட்கள் மாறிவிடுவார்கள் என்று அடிக்கடி எங்காவது கேள்விப்படுவதுண்டு……எல்லார்க்குள்ளும் எது பிறக்கையில் இருக்கிறதோ அது மாறாது இருக்கவே செய்கிறது. ஒரே அச்சில் வார்ப்பது போல வரிச்சீருடையும் தொப்பியும் சப்பாத்துகளும் அணிந்து ஆயுதங்களை ஏந்துவதால் மனிதர்கள் மாறுவதில்லை. கூர் இயல்பு மேலும் கூர்மையுடன் அதிகாரத்தோடு வெளிப்படுகிறது.

இப்படி நிறைய இடங்களில் அடிக்கோடிடாமால் வாசிக்கமுடியாது.

” ஒரு பெருங்காவியத்தின் நாயகியாக இருந்து கொண்டிருந்தவர் ஒரு நொடியில் சாதாரணமான அம்மாவாக ஆனார்” மொத்த நாவலும் இதைத்தான் பேசுகிறது.

இது கிரிசாந்துடைய இரண்டாவது நாவல். முதல் குறுநாவலை வாசிக்கவில்லை என்றாலுமே இது போர் மற்றும் அதற்கு பிந்தைய வாழ்வை சொல்லிச்செல்லும் நாவலாக தனித்து நிற்கிறது. அது கிரிசாந் அவர்களின் வெற்றி. முந்தைய படைப்பான கொடிறோஸ் நாவலையும் வாசிக்க வேண்டும்.

நிஜந்தன்

வாசித்தவர்கள் : 193

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,150)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,996)
  • காதலின் முன் பருவம் (1,969)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,903)
  • விடுதலையில் கவிதை (1,882)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme