Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

அகழ் : ஒரு கண்டனம்

Posted on February 24, 2026February 24, 2026 by Kiri santh

காலையிலேயே நண்பரொருவர் அகழில் வெளியாகியிருக்கும் ‘ஆண்பால் உலகு’ என்ற நாவல் குறித்த நட்சத்திரன் செவ்விந்தியனின் அபிப்பிராயக் குறிப்பொன்றை அனுப்பியிருந்தார். வாசித்தேன். வழக்கமான நட்சத்திரன் செவ்விந்தியன் வகையறாக் குறிப்பு.

தொண்ணூறுகளில் வெளியான வசந்தம் 91 எழுதிய நட்சத்திரன் செவ்விந்தியன் எனும் இளம் கவிஞன் மீது இன்றும் மதிப்பிருக்கிறது. ஆனால் அவர் எழுதும் புலனாய்வுகள் எந்த வகையிலும் பொருட்படுத்தத்தக்கதாக இருந்ததில்லை. அல்லது அவர் சர்ச்சையால் அடையும் பேஸ்புக் கவனயீர்ப்புக்கு அப்பால் எந்த ஒரு பொருட்படுத்தும் கருத்தையும் எழுதவில்லை. இப்போது சிக்கல் அகழ் குறித்தது, நட்சத்திரன் தன் வன்முறையை பல நூதனமான வகைகளில் முன் வைப்பவர். இந்தக் குறிப்பில் அவர் தலித் எழுத்தாளர்களென ஒரு பட்டியலை வழங்கியிருக்கிறார்.

இதில் சிக்கலுக்கும் கண்டனதுக்கும் உரியது என்னவென்றால் தன்னைப் பொதுவிலோ, படைப்பிலோ தலித் என முன்வைக்காதவரை தலித் என முத்திரைகுத்தி வெளிப்படுத்தியிருக்கிறார். ஒருவரை அவர் படைப்பில் அவர் முன்வைப்பில் வெளிப்படும் ஒடுக்கப்படும் சாதி சார்ந்த விடயங்களில் இருந்து மதிப்பிட்டு அறிந்து கொள்வது வேறு, அவர்களாக வெளிப்படுத்தாத சாதி அடையாளத்துடன் முத்திரை குத்துவதென்பது வேறு. முன்னையது படைப்பை படைப்பாளியை புரிந்துகொள்ள இருக்கும் வழிகளில் ஒன்று. பின்னையது அப்படி அல்ல அது ஒரு நிகழ்த்தப்படும் சாதிய அநீதி. ஒருவரின் சாதியைப் பொதுவில் முன்வைப்பது என்பது கண்டனத்துக்குரியது. அவர்களாக முன்வைக்காத பட்சத்தில். அதுவும் தலித் சாதி அடையாளத்தை. அது மிகவும் அநீதியானது. பட்டியலில் இருக்கும் ஒரு சிலர் தம் சாதியடையாளத்தை முன்வைத்து இயங்கிவர்கள் அல்ல. அதனைப் பொதுவில் வெளிப்படுத்தியவர்களும் அல்ல.

குயரென்று தன்னை வெளிப்படுத்த விரும்பத ஒருவரை அந்த அடையாளத்துடன் முன்வைப்பது எப்படி ஒரு வன்முறையோ இதுவும் அதே வகையானது. அவர்கள் சமூகத்தில் தங்களுக்கென உருவாக்கியிருக்கும் அடையாளங்களை சிக்கலான அடையாளங்களுடன் பிணைத்து உரையாடலுக்கு எடுத்து வருவது வன்முறை மட்டும் தான்.

இந்த அறம் நட்சத்திரனுக்கு இல்லாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை. அகழுக்கு எங்கே போனது புத்தி?
அகழ் இதழின் ஆசிரியர் குழுவில் பொறுப்பாசிரியர்களாக அனோஜன் பாலகிருஷ்ணனும் விஷால் ராஜாவும் இருப்பதை அறிவேன். அனோஜன் ஈழத்தவர். அவர் ஈழம் சார்ந்த கட்டுரைகளில் வெளிப்படும் இத்தகைய சிக்கல்களை கவனிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார். ஒரு பேஸ்புக் குறிப்பிற்கும் இதழில் வெளியாவதற்கும் அடிப்படை வேறுபாடுகள் உண்டு. அதை அவரும் அறிவார். ஏற்கெனவே புதிய சொல்லில் நாங்கள் சில காலம் இணைந்து பணியாற்றி இருக்கிறோம்.

அண்மையில் தான் சயந்தன் அகழ் தன்னுடைய சொத்து என அறிவித்திருந்தார். இப்போது போய் பார்த்தேன், அகழ் பற்றிய ஆசிரியர் குழுக் குறிப்புகளுக்குக் கீழ் நிறுவனராக அவரது பெயர் போடப்பட்டிருக்கிறது. அகழைத் “தான் தான் உந்தப் பெடியளை வைச்சி செய்யிறன்” என தன் புது நாவல் வரும் வேளையில் அவர் கிளெய்ம் செய்தது உள்ளபடியே அருவருக்கத்தக்க செயல். அனோஜனினதும் விஷால் ராஜாவினதும் சுரேஷ் பிரதீப்பினதும் உழைப்பை ஒரு பண்ணையார் அறுவடை செய்வதைப் போன்றது. ஆகவே இனி அகழில் எழுதுவதில்லை எனத் தீர்மானித்திருந்தேன். ஆனால் ஒரு அறிவுச்சூழலாக என் சமகால எழுத்தாளர்களான அனோஜன் போன்றோரது இதழை வாசிக்க வேண்டுமென தொடர்கிறேன்.

நட்சத்திரனின் இந்தக் குறிப்பை முகநூலில் எழுதியிருந்தால் என் பார்வைக்கே வந்திருக்காது, வந்திருந்தாலும் பொருட்படுத்தியிருக்க மாட்டேன். இதழியல் அறம் தவறும் பொழுது அதைச் சுட்டிக்காட்ட வேண்டியது சக எழுத்தாளனாக என்னுடைய இடம். மேலும் இப்படியொரு சிக்கல் எழும் பொழுது பேசும் அறிவோ திராணியோ இல்லாத ஈழத்து எழுத்தாளர்களின் கூட்டத்தில் பேசியே ஆக வேண்டியது காலக்கடன்.

வாசித்தவர்கள் : 451

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,147)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,991)
  • காதலின் முன் பருவம் (1,964)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,897)
  • விடுதலையில் கவிதை (1,875)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme