Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

கல்விரல் – குறிப்பு 3

Posted on March 13, 2026March 13, 2026 by Kiri santh

கிடாயில் அமர்ந்திருக்கும் பிசாசொன்று போரின் வடுக்களை மேய்கையில் அலையுறும் பெண் மனம் இந்நாவல்.

போருக்குப் பின்னான ஒரு நிலத்தில், செல்லடித்து விழுந்து கிடக்கும் ஒரு பனை மரத்தில், தனது கூட்டைத் தொலைத்துவிட்டு தேரிக்காடெங்கும் தேடியலைகிற தூக்கணாங் குருவியொன்று அதன் குஞ்சுகளின் அவலத்தை கழுகுகளுக்கும் பாம்புகளுக்கும் முன் நின்று பாடுவதாய் ஒரு நாவலை எழுதி முடித்தல் கடினமானது.

இயக்கத்தில் இருந்த போரளிகள் குறித்து பிற்காலச் சூழலில் எழுதப்பட்ட கதைகள் வெகு குறைவாகவே இருந்திருக்கின்றன. பெரும்பாலும் புலம்பெயர் நாடுகளில் அவர்களது அவலத்தையும், புலம்பெயர்தல் தரும் கடினமான சூழலையும் ஷோபாசக்தி, சயந்தன் போன்றவர்களும் அவர்களது உளவியல் சிக்கல்களை ஆகிதம் போன்ற படைப்புக்களில் நவமகன் போன்றவர்களும் எழுத, ஈழத்திற்குள் இருந்து கொண்டு இனமுரண், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருணாகரன், கருணை ரவி போன்றோர் எழுத முன்னாள் போராளிகள் தொடர்பில் புலிப்புராணத்தையும் சேர்த்து தீபச்செல்வன் புகழ்ந்தோத, மக்களின் கையறு நிலையை கதைகளில் பாடுவார் யாருமில்லை தான் போலும். இதில் தீபச்செல்வன் காவலன் என்கிற சிறுகதையில் ஊனமுற்ற போராளி காவலாளியாக மாறியிருப்பதை பதிவு செய்ய, யாழில் இருந்து இஸ்லாமியர்கள் விரட்டியடிக்கப்பட முன்னர் புளட் போன்ற இயக்கங்களில் இணைந்திருந்த முஸ்லிம் போராளிகள் குறித்து ஹசீன் ஆதம் போன்றவர்கள் எழுதியிருக்கின்றனர்.

ஷோபாவின் இச்சா ஆலாவையும், தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலையும், புஷ்பராணியின் அகாலத்தையும் போரோடு நினைவு படுத்தும் இன்னுமொரு பெண் போராளியாகிய துளசி/ அரும்பி / மொட்டு எனும் மூன்று பெயர்களில் அலைபவளின் சரிதமே இந்நாவல்.

இந்த நாவலை கிடாயில் அலைகின்ற பிசாசும், கிரிசாந்தும் சேர்ந்தே எழுதியிருக்கிறார்கள். எடுத்த எடுப்பில் காட்சிப் படிமத்தை தருவிக்க வேண்டி கதைச் சூழலை மிகையாக வர்ணித்து கதையைத் தொடங்கும் கிரிசாந்தின் உத்தியை நான் மீளவும் மறுதலிக்கிறேன். கொடிறோஸ் போன்ற குறுநாவலில் அழுத்தமாக கதை சொல்லப்பட வேண்டிய இடத்தில் ஒன்றரைப் பக்கங்களிற்கு ஒரு வீட்டின் மண்டபத்தை சிலாகித்து விபரித்துக் கொண்டிருப்பார். அப்போதே அது தேவையற்றது எனக் கூறினேன். கதை மாந்தர்களூடாகவே கதை சொல்லக்கூடிய திறனுள்ள ஒருவர் அஃறிணைகளை அதிகம் ஆராதிப்பது வாசகனுக்கு அயர்ச்சியை உண்டு பண்ணுகிறது. அதே மாதிரி இங்கும் இடத்தை நிலைநிறுத்த அவர் எழுதித் தள்ளுவது போதுமென்றாகி விடுகிறது. பின்னர் முதல் பாகம் பிசாசின் கைகளுக்கு கொடுக்கப்படுகிறது. அரும்பி/ அரும்பியின் குடிகாரத் தகப்பன்/ அம்மா/ அம்மாவின் அம்மா என அடுத்தடுத்து பாய்கிறார். கிடாயொன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக புல் மேய்வதை போல நாவலை இழுத்துக் கொண்டு ஓடுகிறார். மீளவும் பொற்புதிர் என்கிற தங்கம் தன்பாட்டிற்கு தாவுகிறார். எல்லாம் ஒரு கட்டத்தில் பப்பரக் கொப்பானாக அலையும் சின்னவனில் வந்து அமைதியாகிறது. இப்போது அரும்பியின் மகன் சின்னவனைப் பற்றி அழகாக கதை செய்கிறார் கிரிசாந். மேலும் அந்தக் கிராமத்தின் நான்கு எதிரிகளை அவர் முன்வைப்பதெல்லாம் அபாரமாக இருக்கிறது. சின்னவன் மட்டும் இல்லையென்றால் இந்த நாவல் எப்போதோ கதையளவில் சலிப்பிற்குள் நின்றுவிடும். நாம் ஈழத்தின் நிலையை அறிந்திருப்பதும், கதை வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும் விதமும், மொழி வளமும் நம்மை ஈர்ப்பதால் உவன் சின்னவன் வரும் வரை வாசகனை நிற்க வைக்க முடிகின்றது.

அப்பா வெள்ளாளர் ஆனால் கம்யூனிஸ்ட் என்பதால் வீட்டில் ஓரளவு பெண் சுதந்திரமுள்ளது என்று பொற்புதிர் சொல்கிறாள். அப்படியென்றால் ஏனைய வெள்ளாளர்களது வீட்டில் பெண் சுதந்திரம் இல்லையா என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார். மேலும் வழக்கமான வடக்கின் சாதியை நளவர், சக்கிலியர், வெள்ளாளர் என அடிக்கோடிடுவதும் நடக்கிறது. இந்த சாதிக்கு இந்தக் குணம் தான் இருக்கும் என்பது போல கதைக்குள் ஒரு Narrative set பண்ண முயல்வது தெரிவதாக எனக்குப்படுகிறது. நளவன் கள்ளிறக்கி குடிப்பான், வெள்ளாளன் பெண்ணிற்கு சுதந்திரம் வழங்க மாட்டான். படித்தவனாக இருப்பான். நளவனுக்கு கோபம் வந்தால் தன் மனைவியைக் கூட சக்கிலி என்று இன்னுமொரு சாதியின் பெயராலே விளிப்பான் என்பதெல்லாம் இயல்பா அல்லது இதை தேர்வு செய்யப்பட்டு புகுத்தப்பட்டதா தெரியவில்லை. ஆனாலும் தில்லையின் தாயைத்தின்னி நாவலில் இருக்கிற உயிர்ப்பு இந்நாவலிலும் இருக்கிறது. இதில் சனல்- 4 ஆதாரம் வருவது போன்ற ஒரு காட்சியில் சிங்கள இராணுவ வீரன் பறத்தெமிழா என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறான். இது சாதிய இழிவுச் சொல் அல்ல. பறையன் ஒருவனை இப்படி விளிப்பதாக எடுக்க கூடாது. அது வெளியான் என்கிற அர்த்தத்தை தருவதாகும். என்.சரவணன் இதை தெளிவாக ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தமிழ் பாத்திரங்கள் ஓயாது சாதிய வசவை பேசியபடி அலைகிறது. இதில் கிரிசாந்தை தவறு எனக் கூறவே முடியாது அதுவே யதார்த்தம் என்பதால் அதை வெளிப்படையாக எழுதிய அவரை பாராட்டித்தான் ஆக வேண்டும். எமது சமூகத்தை நினைத்து வருந்தவும் வேண்டும்.

கல்விரல் என்பது ஒரு கடவுளின் பூடகமாகும், மரத்தடியில் அது இருப்பதாகவும், அவர்களின் குல தெய்வம் ஐயனாராகவும், ஆனால் யதார்த்தனின் கதைகளில் வருவது போல கண்ணகி தெய்வமாகவும் காட்டப்படும் பகுதிகள் நாவலுடன் ஒரு சமூக இணைவை வாசகனுக்கு கடத்துகின்றது. இதில் கண்ணகி தொடர்பில் சொல்லப்படும் வாய்வழிக் கதைகள் மட்டக்களப்பில் ஏராளம். அதிலும் வெள்ளாவி நாவலில் விமல் குழந்தைவேலும் தூமைச்சீலையைத் தொடர்புபடுத்தி ஒரு கதை சொல்லியிருப்பார். இங்கு ஆண் குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லப்படுகின்றது. ஆனால் இதே கண்ணகியை ஆறுமுகநாவலர் இழித்துப் பேசியது நாவலில் வராமல் நல்லூர் தேர் இருப்பின் முன் ஆடு பலியிட்டதும், நல்லூர் ஆலய நுழைவுப் போராட்டமும் கதைக்குள் வருகின்றது. இவை இதனை போரைத்தாண்டிய மாற்று அரசியல் பிரதியொன்றாகவும் காட்ட முயல்கிறது.

சின்னவனை நிறுத்திவிட்டு இன்னுமொரு மூத்த போராளி, அரும்பியின் நண்பி மட்டக்களப்பு போராளி என கதைபோக அவளுக்கு சூனியம், வசியம் வைக்கத் தெரியும் என்று இன்னுமொரு Narrative set பண்ணுகிறார் கிரிசாந். கதையின் போக்கில் இவை வருகின்றது என வாதாடினாலும் அவை நாவலுக்குள் உறுத்திக் கொண்டு நிற்பவையே.

கொடிறோஸ் நாவலில் அபத்தமாக இருந்த விடயம் ஒரு மரணத்துடன் நாவலை முடித்தது தான். ஆனால் ஒரு நாவலுக்கு என்ன முடிவு என்பதை அந்த ஆசிரியன் தான் தீர்மானிக்க வேண்டும் என்கிற விதியில் உடன்பட்டு அதை கூறி நிறுத்தினேன். ஆனாலும் இங்கும் ஒரு மரணத்தை முன்வைத்தே இந்த நாவல் முடிவடைய போவதும் அத்தோடு தேய்வழக்காக ஒரு முடிவு வருவதும் இந்த நாவலை சற்று கீழே இறக்கிவிட்டது. கிரிசாந்திடம் தேர்ந்த முடிவுகளை வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பெரும்பாலான இடங்கள் கட்டுரைப் பாணியில் இருப்பதும். இறுதிப்பகுதியில் முன்னர் நடந்தவற்றையெல்லாம் சுருக்கமாக கூற விளைவதும் கட்டுரையின் சாயலே. கவிஞராக தன்னை அடையாளப்படுத்தும் கிரிசாந் கவிதைக் கூறுகள் அற்றதும், உரையாடல் பெரிதாக அற்றதுமான நாவலைத் தந்திருப்பது நாவலுக்குள் ஒரு வெறுமையை ஏற்படுத்துவதாக அமைகிறது என்பது என் தனிப்பட்ட கருத்தாகும்.

கிரிசாந், தனது மண் சார்ந்த சொற்களை பயன்படுத்துவதும் மற்றும் மண் சார்ந்த மொழி நடையை லாவகமாக கையாண்டிருப்பதும் இந்த நாவலின் வெற்றி. சின்னவன் இந்த நாவலின் ரத்தினக்கல், இடையில் வரும் அரசியல் துணுக்குகள் ஈழத்து வாசகனை இறுக்கிக் கொள்பவை. இவை தவிர பிசாசு எழுதியவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை. ஒவ்வொரு வரியாக எடுத்துப் பேசுவதானால் நிறையப் பேச வேண்டும். உடனடியாக மனதில் தோன்றியவையே இவை.

இறுதியாக, இனி கிரிசாந்திற்குள் இருக்கின்ற கவிஞன் தன்னுடைய கவிதை மொழியைப் புகுத்தி நிதானமாக ஆயிரம் ஆயிரம் பப்பரக் கொப்பான்களையும், சின்னவனையும், யானைகளையும், மயில்களையும், கண்ணகியையும் தனது பேனாவாலே எழுத வேண்டும். பிசாசு செத்துப் போகக் கடவது.

அன்புடன்
நீலாவணை இந்திரா

வாசித்தவர்கள் : 163

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,150)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,996)
  • காதலின் முன் பருவம் (1,969)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,902)
  • விடுதலையில் கவிதை (1,882)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme