தீபச்செல்வன் : ஒரு கண்டனம்

தீபச்செல்வன் : ஒரு கண்டனம்

“நேற்றைய நாளில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தமையால் மிகவும் மனவேதனைக்கு உள்ளானேன். நடுகல், பயங்கரவாதி, சயனைட், எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன் போன்ற எனது நூல்கள் இந்தியாவில் இருந்து கப்பலில் பொதியாக வந்தவேளையில், ‘இலங்கையின் ஒற்றுமைக்கு பாதிப்பானவை’ என்று காரணம் கூறப்பட்டு இலங்கை சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டன.

கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கும் பட்சத்திலேயே புத்தகங்கள் விடுவிக்கப்படும் என்று சுங்கப் பிரிவு அறிவித்திருந்தது.

ஒருபுறம், எமது இனத்தின் வாழ்நிலை மிகவும் நெருக்கடியும் போராட்டமும் கொண்டது எனில், மறுபுறம் அதனை எழுதுவதும் புத்தகமாக அவை பரிமாறப்படுவதும்கூட போராட்டமாகியதை உணர்கையில் மிகுந்த வேதனையும் அயர்ச்சியும் அடைந்தேன். ஈழ மண்ணில் ஒரு எழுத்தாளனாக வாழ்வது என்பது மிகவும் நெருக்கடியானது என்பதை மீளவும் மீளவும் எதிர்கொள்ள நேரிடுகிறது.

எனினும் இந்த நிலையில் எனது எழுத்தின் நியாயத்தை உணர்ந்த சிங்கள நண்பர்கள், தமிழ் எழுத்தாளர்கள் இச் சூழலில் விரைந்து எனக்கு ஆதரவு அளித்தனர்.

அவர்கள் வழியாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினேன். விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரிடம் இருந்து உடன் தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனும் எனது இல்லத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் அவர்களுக்கு எழுதிய கடிதம்

“நான் ஒரு எழுத்தாளன். கிளிநொச்சியில் வசித்து வருகிறேன். போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்று தற்போது ஆசிரியராகப் பணியாற்றுகிறேன்.

போரால் எங்கள் வாழ்வும் காலமும் அழிக்கப்பட்டது. போரில் எனது சகோதரன் ஒருவர் வீரராக சாவடைந்தார். கடந்த கால அனுபவங்கள், நினைவுகளை எதிர்காலத்திற்கான பாடமாக அமைய வேண்டும் என்பதற்காக நாவல்களாகவும் கவிதைகளாகவும் எழுதி வருகிறேன்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து அனுப்பட்ட எனது புத்தகங்கள் 360 சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாக காரணம் கூறப்பட்டுள்ளது.

இவை நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக ஒருபோதும் எழுதப்பட்டவையல்ல. அத்துடன் எந்தவொரு அமைப்பையும் மீளமைக்கும் விதத்தில், நான் புத்தகங்களை எழுதவில்லை. கடந்த போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், குழந்தைகள் மற்றும் முன்னாள் போராளிகள் பற்றிய கதைகளையே எனது நாவல்களில் எழுதியுள்ளேன். அவற்றை வெளிக்கொணர்ந்து போரால் பாதிக்கப்பட்ட சமூகத்தை வளப்படுத்துவதற்கு ஒரு படைப்பாளியாக என்னாலான எளிய பங்களிப்பை எழுத்தில் வழங்குகிறேன்.

கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கில் தமிழ் மக்கள், படைப்பாளிகள் மாத்திரமின்றி புத்தகங்களும் தண்டனைக்கும் விசாரணைக்கும் உள்ளாகின. ஆனால் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் ஆட்சியில் நாம் முழுமையான சுதந்திரத்துடன் வாழவும் எழுதவும் முடியும் என்ற நம்பிக்கையை இன்னுமும் பற்றிக் கொண்டுள்ளோம்.

எனது எழுத்துக்கள் மிகுந்த நியாயம் கொண்டவை என்பதால் சிங்கள மக்கள் மத்தியிலும் எனக்கு நிறைய வாசகர்கள் உள்ளனர். இப்போது தடுத்து வைக்கப்பட்ட எனது நூல்களில் சில சிங்களத்திலும் வெளியாகி உள்ளன. அவற்றைப் படித்த சிங்கள மக்கள் எனது வீடு தேடி வந்துள்ளனர். எழுத்தில் வழியாக இரண்டு இனங்களுக்கும் இடையில் பரஸ்பர உணர்வுப் பரிமாற்றத்தை ஏற்படுத்தி நல்ல புரிதலை ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும்.

கவிதை, எழுத்து, கலைகள்மீது மிகுந்த ஈடுபாடும் மதிப்பும் கொண்டுள்ள தாங்கள், நல்லெண்ணம் கொண்டு செயற்படும் எனது நூல்களை, விடுவிக்க ஆவணை செய்யுமாறு தங்களை பணிவுடன் வேண்டுகிறேன்.”

இத் தருணத்தில், உடனிருக்கும் உறவுகளுக்கு அன்பும் நன்றியும்”

தீபச்செல்வன்

*

இந்தக் குறிப்பினை நண்பரொருவர் அனுப்பியிருந்தார். இதற்கெல்லாம் கண்டனம் தெரிவிக்க மாட்டீர்கள் தானே. அவர் ஒரு தமிழ்த்தேசிய எழுத்தாளர், நீங்கள் அவரது எழுத்துகளை முன் வைப்பதில்லை என்ற தொனியில் அவரது மெசேஜ்கள் போய்க் கொண்டிருந்தன.

உள்ளபடியே ஒருவரது நூலை உட்கொணர அனுமதி மறுக்கும் சுங்கம் கண்டிக்கப்பட வேண்டியது. எனது கண்டனங்கள்.

அண்மையில் ஷோபா சக்தி தொகுத்த லைடன் தீவு படுகொலைகள் தொடர்பான நூல்களும் தபால் நிலையம் கடந்து வந்து சேரவில்லை. ஆகவே கண்டிக்கலாம், இந்த அரசு போட்டிருக்கும் முகமூடியைச் சற்றே விலத்திக் காட்டலாம்.

ஆனால் தீபச்செல்வனின் பதிவு ஒரு குமாஸ்த்தா எழுத்தாளரின் பதிவு. அவர் ‘பஞ்சத்துக்குப் புலியென’ அடிக்கடி நினைவு படுத்துகிறார். எந்தக் கொம்பன் அரசணையில் இருந்தாலும் ஒரு எழுத்தாளன் பணிவுடனும் வேண்டுதலுடனும் அவனிடம் கோரிப் பெற ஒன்றும் இருக்கப் போவதில்லை. ஆகவே தான் தீபச்செல்வனின் பதிவின் தொனி என்னை எரிச்சலூட்டியது. இப்படித் தான், தன் புத்தகத்தை வெளியிட விடுகிறார்கள் இல்லையென அருளினியன் மகாலிங்கம் என்றொருவர் சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய போது கொதித்துப் போய் ஆதரவு தெரிவித்திருந்தேன். ஆனால் அந்தப் பிரகிருதி முதுகெலும்புக்கு பதில் புழு முளைத்தவர். மகிந்த ராஜபக்சவிடம் போய் ஒப்பாரி வைத்து ஒரு போட்டோவும் போட்டிருந்தார். அன்று முதலாகவே அதிகாரத்துக்கு கையடித்து விடும் எழுத்தாளர்களின் கைகளை அலட்சியமாக புறம் தள்ள வேண்டும் என மனநிலை கொண்டிருக்கிறேன்.

தீபச்செல்வன் எழுதுவதன் இலக்கியத் தகுதி பற்றி எனக்கிருக்கும் விமர்சனங்கள் வேறு. அவை இலக்கியம் இல்லையா ஓமா என விவாதிக்கும் களம் இது இல்லை. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனைக் கூப்பிட்டு விழா எடுப்பது முதல் அவர் பல சந்தர்ப்பங்களில் அதிகாரத் தரப்போடு நல்ல பிள்ளை வேடங் கட்டி இருப்பது தான் சிக்கல். இப்படி ஒரு நாட்டின் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை ஆதரவு தரும், வீடு தேடிச் செல்லும் ஒரு ஆபத்தான எழுத்தாளரை, அரசுகளை அஞ்ச வைக்கும் எழுத்தாளரை என் வாழ்நாளில் கேள்விப்பட்டதில்லை.

பதிவு நெடுகிலும் “நான் ஒண்டும் அடிக்கேல்லை சேர்” என்று வியாக்கியானம் சொல்லும் எரிச்சலூட்டும் மாணவனின் தொனியே இருக்கிறது.  போர்.. போர் எனக் கடிதத்தில் சொல்லிக் கொண்டு பொதுவான பதிவில் போராட்டம் எனச் சொல்வது எத்தனை அயோக்கியத்தனம்.

நான் எங்கள் மக்களின் போராட்டத்தை எழுதியிருக்கிறேன். விட முடியுமா? முடியாதா? என்று ஆணவத்துடன் மட்டும் தான் அதிகாரத்தின் முன் ஒரு எழுத்தாளன் நிற்க முடியும். அதை விட்டுவிட்டு அரசுக்கு வாலையும் மக்களுக்கு புலி முகத்தையும் காட்டக் கூச்சமிருப்பதில்லையா?

இப்படி ஒரு எழுத்தாளன் கெஞ்சுவதும், நடிப்பதும், அரசின் ஆலாபனைகளை விதப்பதும், ஒரு படி மேலே போய் “கவிதை, எழுத்து, கலைகள்மீது மிகுந்த ஈடுபாடும் மதிப்பும் கொண்டுள்ள தாங்கள், நல்லெண்ணம் கொண்டு செயற்படும் எனது நூல்களை” என கையடித்து விடுவதும் மானங்கெட்ட செயல். அதற்கு ஒரு சக எழுத்தாளனாக கண்டனம் தெரிவிக்கலாம். வேறென்ன சொல்ல, எழுத்தாளன் அரசின் முன் குனிந்து விட்டால் மொத்த சமூகமும் போய் மண்டியிட்ட மாதிரியென்று யாராவது அவருக்குச் சொல்லி புரிய வையுங்கள். குடுக்க முடியாதென்று அரசு சொல்லட்டும், விட முடியாதென்று சுங்கம் சொல்லட்டும், இலக்கியம் இவர்களையெல்லாம் கடந்து வந்து நிற்கும். அது தான் இலக்கியம், அதை எழுதுபவன் தான் எழுத்தாளன்.

TAGS
Share This