ஒளியிலே தெரிவது : சிறுகதை

ஒளியிலே தெரிவது : சிறுகதை

நாங்கள் ஒரு கூட்டமாக அந்த மைதானத்தின் கரையிலிருந்த வாகை மரத்தின் வேர்ப்புடைப்பில் அமர்ந்திருந்தோம். தின்னவேலிச் சந்தைக்கு அருகிலிருந்த பாடசாலையின் மைதானம் அது. வெறும் புழுதி நிலம். உச்சி வெய்யில் நடு மைதானத்தில் உள்ளங்கை போலத் தெளிந்து கிடந்தது.

பிரகாஸ் தனது காற்சட்டையின் சிப்பை திறந்து ஆண் குறியை வெளியே எடுத்து பிடித்தபடி “என்ர சாமான் எவ்வளவு பெரிசெண்டு பார்த்தியளேடா” என்றான். எல்லோரும் புதினமாக அதைப் பார்த்தோம். கப்பல் வாழைப் பழம் போலிருந்தது. “ஒவ்வொரு நாளும் எண்ணை போட்டு மினுக்கிறனான், உலக்கை மாதிரியெல்லே கிடக்கு, டேய் இங்க வா பிடிச்சுப் பார்” என என்னை அழைத்தான். அய்யோ என தலையை அசைத்து வெட்கத்துடன் மறுத்தேன்.

“சரி, எல்லாரும் காட்டுங்கடா, நான் என்ரையக் காட்டிட்டன்” என்றான்.

“போடா புண்டை, உன்னை ஆர் காட்டச் சொன்னது. உனக்கு விசரெண்டால் நாங்களே சுன்னியக் காட்டுறது” என்றான் தீபன். அவனது கறுவல் முகத்தில் சிவந்த முட்கள் போல பருக்கள் துடித்துக் கொண்டிருந்தன.

“போடா பேயா, உனக்கு சாமான் எலிக்குஞ்சு மாதிரித் தானிருக்கும். அதான் பம்மிறாய்” என்றான் பிரகாஸ்.

மொத்தமாக ஏழு பேர் இருந்தோம். என்னையும் லச்சுமியையும் தவிர மிகுதிப் பேர் ஒரு வகுப்புக் கூட. நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். விளையாடுவது போக அங்கங்கே அமர்ந்து அவர்களது ஜில்மாக் கதைகள் கேட்பதும் மாஞ்சான்கள் பற்றி விவாதிப்பதை வாய் பிளந்து பார்ப்பதும் வழமை.

ஊரில் உள்ள அடிசரக்கெல்லாம் வரிசையாகப் பட்டியலிட்டு ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை சமிக்ஞை அளிப்பது பிரகாஸின் சமூகத் தொண்டு. அவன் அதற்குப் பிரபலமானவன். ஒருவன் புதிதாகக் காதலிக்கிறேன் என்று சொன்னால் அந்தப் பெண்ணைப் பற்றி பிரகாஸிடம் ஒரு அருள் வாக்குக் கேட்க வேண்டும். அவன் கலை வந்த பூசாரியைப் போல புட்டுப் புட்டு வைப்பான். அவனது வாக்கின் படி சாமத்தியப்பட்ட எங்களூரின் பெண் பிள்ளைகளில் அநேகமானவர்கள் மாஞ்சான்கள், இல்லையென்றால் அடிசரக்குகள். அவனது வாக்கை மீறியும் எவனாவது காதலில் ஈடுபட்டால் அவர்களது பெயர்களை ஊர்ச்சுவர்களில் எழுதி இரு எலும்புக் கூடுகள் புணர்வது போல படம் வரைந்து நீதியை வெளிப்படுத்துவான். அப்படி பெயர் வந்த பெண்களை வீட்டிலும் பெடியள் அவளது அண்ணன்மார்களால் ஒழுங்கை முடக்குகளிலும் வைத்து வெளுக்கப்படுவார்கள்.

பிரகாஸ் தான் இதைச் செய்யும் ஒரே துணிச்சல்காரன் என அறிந்தவர்களும் கூட அவன் செய்வது சமூகப் பணியெனவே கொள்வார்கள். அவனது அப்பா அவனை விட ஒரு படி மேல். அவரது காலத்தில் அவர் பிரகாசை விட மேலான சமூகப் பணிகளைச் செய்ததை எங்களிடம் விளக்குவார். அவரொரு தச்சர். மரங்களை அளந்தபடியோ அரிந்தபடியோ தன் சாகசங்களைச் சொல்லிக் கொண்டிருப்பார். ரோட்டால் செல்லும் அன்ரிமார் யாரையேனும் காட்டி “இவளுக்கு நான் வாழத் தோட்டத்துக்கை வைச்சு ஓத்தனான், பிண்டை சும்மா தக்காளிப் பழம் போல இருக்கும்” எனச் சொல்வார். இல்லையென்றால் யோனிகளின் வாசனையின் வகை பற்றி விளக்குவார். “பிண்டை நாத்தம் பிண நாத்தம்” என அவர் சொல்லியது முதல் எனக்கு ஓங்காளிப்பு இருக்கிறது.

இப்படி அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதுகளில் அவரது மனைவி சாதாரணமாக அங்கும் இங்கும் வீட்டிற்குள் சமையல் வேலைகள் செய்து கொண்டிருப்பார். அல்லது உடுப்புக் காயப் போடுவார். மீனின் முகம் போல விறைத்த உணர்ச்சியே இல்லாத அதே முகத்துடன் தான் அவரை எங்கும் கண்டிருக்கிறேன்.

பிரகாஸ் தன் தந்தையின் பெருமைகளைப் பேசுவதில்லை. தனக்கென சொந்தமாக உருவாக்கிக் கொள்ளும் தீவிரம் தான் அவனில் துடித்துக் கொண்டிருக்கும். நியாயம் தான். தர்மப்படி, வரலாற்று நியதிகளின் படி தந்தையரை வெல்வதை மகன்கள் செய்து தான் ஆக வேண்டும். அவன் அதற்கான சரியான சந்தர்ப்பங்களுக்காக ஒரு வேட்டைக்காரனைப் போலக் காத்திருந்தான். அவனது பெரிய உருண்டையான கண்களும் அரும்பிய புல்நுனி மீசையும் அகன்ற தோள்களும் நாளும் பொழுதும் அவனை அந்தக் கனவை நோக்கி வளர்த்துக் கொண்டிருந்தன.

முன்னொரு பகற்பொழுதில் போஸ்ட்டல் ஐசிக்கென படம் எடுக்க போன போது போட்டோ ரமேஷ் அவனது பூர்வீகத்தின் கதையைச் சொன்னார்.

“டேய் அவனோட சேராதை. அவங்கள் என்ன ஆக்களெண்டு தெரியுமே? உன்ர கொப்பருக்குத் தெரிஞ்சால் உன்னைக் கொல்லிப் போடுவார்”

“அவங்கள் ஆசாரிமார் தானே, எனக்கு ஆசாரிப் பெடியள் பிரண்ட்ஸ் என்று வீட்டில தெரியும்”

“சும்மா கதைக்காத, அவங்கள் ஆசாரிமார் இல்லையாடா. தலையைச் சொத்தியா வைக்காத நேரா வைச்சிரு”

நான் விறைத்து நேராகப் பார்த்தேன். போட்டோக்கு அடிக்கும் பிளாஷ் லைட் படும் பொழுது கண்ணை மூடாமல் இருப்பதற்காக முழுசிக் கொண்டிருந்தேன்.

“அப்ப என்ன ஆக்கள்?”

நீலத்திரை என் பின்னால் தொங்கியது. தோளைப் பிடித்து நேராக்கி தலையைச் சரி செய்வது போல கமெராவை சீர்படுத்திக் கொண்டிருந்தார். பிறேம் இல்லாத கண்ணாடிக்கு மேலால் புருவங்களைத் தூக்கி மேற்பார்வை பார்த்து விட்டு “வேர்வையத் துடை” என்றார்.

மாடு தோளில் முகத்தை உரஞ்சுவது போல சாய்த்து முகத்தை துடைத்தேன்.

“அவங்கள் என்ன நாசமோ தெரியாதடா. ஆனா ஆசாரி இல்லையெண்டு தெரியும். உந்தாள் எங்கையோ கொஞ்ச நாள் உதவிக்கு நிண்டு போட்டு இங்க வந்து ஆசாரி எண்டு சொல்லுது. ஊரில் ஆசாரிமார் ஆரும் உவருக்குச் சொந்தமே, யோசிச்சுச் சொல்லு”

நான் முழுசிய கண்ணை குறைக்காமலே யோசித்தேன். உண்மை தான். தின்னவேலித் தச்சர்கள் என்றில்லை, பெரும்பாலான சாதிகளைப் போலவே எங்குமே அவர்கள் அவர்களுக்குள் தான் திருமணம் செய்து கொள்வார்கள். தச்சுப்பட்டறை ஒரு கூட்டுக் குடும்பம். அங்கு மாமனும் மச்சானும் தான் இருப்பார்கள். கையில் இருந்து கைக்கு மாற்றும் தொழில். கண் பார்க்க கை செய்யும் கலை. அவனது அப்பா மரங்களை அரிவார். யன்னல்கள் செய்வார். நுணுக்கமே இல்லாத மலட்டுக் கைகள். கோயில் வாகனம் செய்தோ தேர் செய்தோ பார்த்ததில்லை. கோயில்களில் சின்ன வேலைக்குக் கூட அவரைக் கூப்பிட மாட்டார்கள்.

“இல்லை. இப்ப விளங்குது” என்றேன்.

“ம்ம். ஆசாரின்ர பிள்ளை உளியத் தான்ரா பிடிப்பான். அவனுக்கு அது கண். கமெரா மாதிரி. உவன் உளியே பிடிச்சுக் கொண்டு திரியிறான். ஒரு நாள் நெத்தில சூடு வாங்கப் போறான்”

கிளிக். பிளாஷ் லைட் ஒளிப்பிழம்பாகி அடங்கியது. கண்களில் புள்ளிகள் தோன்றிக் கலங்கின.

மைதானத்தின் மறுகரையில் ஒரு சிறிய அம்மன் கோயிலிருக்கிறது. சுற்றிலும் சிறை போலக் கம்பிகள் அடைக்கப்பட்டது. அப்பால் இன்னொரு வைரவர் கோயில். மார்க்கெட்டிற்கு அருகில் கழிவுகள் கொட்டப்பட்டு நாறும் ஒழுங்கை இருக்கிறது. நாற்றத்தின் நேரியாய் இருக்கும் முடக்கு அது.

“வாங்கடா” என்றான் பிரகாஸ். நாங்களும் புதினமான ஒரு வால் போல அவனின் பின்னே சென்றோம். அம்மன் கோயிலின் வாசற்கதவில் பித்தளை வண்ணப் பூட்டுப் போடப்பட்டிருந்தது. சண்டைக் காலம் என்பதால் கேர்பியூக்களுக்கும் தின்னவேலியில் நிற்கும் ஆமிக்காரன்களுக்கு அஞ்சியும் சனநடமாட்டம் அப்பகுதியில் குறைவு. நாய்கள் உலாத்திக் கொண்டிருந்தன. அரைப்பகுதி சுவர் எழுப்பியிருந்த கோயிலின் மிச்சம் கம்பியால் வேலியிடப்பட்டிருந்தது. பயமே வராத அம்மனின் படம் படு கேவலமாக வரையப்பட்டிருந்தது. அதன் மூக்கும் அதன் முளியும், ஒரு சின்னக் குழந்தை கூடப் பயப்பிடாது. அந்த அம்மனை ஆதரித்து வந்த குடும்பத்தின் ஆட்களை எனக்குத் தெரியாது. கண்ணிலே எத்துப்படாமல் வாழ்ந்தார்கள்.

பிரகாஸின் உயரத்திற்கு அவன் சுவருக்கு மேலால் உள்ளே பார்த்து “எடியேய் மாப்பிளை வேசை, புண்டை, என்னடி செய்யிறாய்” என யாரையோ சொன்னான். ஆர்வம் தாங்காத நாங்கள் எட்டி எட்டிப் பார்த்தோம். துண்டு துண்டாக ஒரு உருவம் ஒவ்வொரு துள்ளலிலும் தெரிந்தது. முதல் பார்வையிலேயே கிழிந்த உடையும் பரட்டையான தலைமுடியும் கொண்ட ஒரு பெண் இருப்பது தெரிந்தது. பிறகு சங்கிலிகள் அரைபடும் ஒலியெழுந்தது. அழுகிய கத்தரிக்காய் வண்ணச் சேலை அணிந்த பெண் என்பதை மனதில் ஒட்டிக் கொண்டேன்.

“வாவன்ரி புண்டை ஓப்பம்” என அவன் சிரித்துக் கொண்டே கேட்டான். அப்போது அவன் காற்சட்டையுடன் சேர்த்து தன் ஆண்குறியைப் பிடித்துக் கொண்டிருந்தான்.

சிறிய மூசல் ஒலிகள் உள்ளே கேட்டன. எனக்குப் பயம் எப்படி வந்தது எனத் தெரியவில்லை. கால்கள் வியர்க்கத் தொடங்கின. சன்னமாகத் தூசணங்களால் அப்பெண்ணை அவன் ஏசினான். காதெல்லாம் கூசியது. சட்டென்று ஒரு கணத்தில் கம்பிகள் அதிர்ந்து நொறுங்குவது போல அப்பெண் எழுந்து அறைந்தாள். கிளைமோரொன்று காலடியில் வெடித்தது போல அஞ்சி விலகினோம். அவன் சிரித்துக் கொண்டே கம்பிகளை ஓங்கி அறைந்து அவரைப் பயமுறுத்தினான். அவருக்குக் கண்களே இருக்கவில்லை என பார்த்தேன். இரண்டு பூழைச் சட்டிகள் தான் முகத்தில் இருந்தன. இரத்தக் காயக் கோடுகள் கொண்ட முகம். முழுதாக அந்த முகத்தை பார்க்க முடியவில்லை. இளங்கருமை நிறம் என்பது மட்டும் ஒரு கணம் மனத்தில் மின்னி மறைந்து தேகம் குளிர்ந்தது.

தீபன் “வாடா போவம், வீட்டுக்காரர் வந்துடுவினம்” என்றான்.

“இரவைக்கு வரட்டேடி சாமான்” என இடையறாது அவன் கேட்டுக் கொண்டிருந்தான். அவர் சுவருக்குள் சுருண்டு விழுந்தார். என்னதென்று விவரிக்க முடியாது துர்மணம் மூச்சை நெருக்கத் தொடங்கியது.

“வேசை, பீயோ மூத்திரமோ தூமையோடி குண்டி” என குழந்தையைச் செல்லம் கொஞ்சும் குரலில் அவன் கேட்டான். ஓசையே இல்லை. துர்மணம் அடர்ந்து வெடுக்குப் பரவியது.

நான் நடந்து விலகி நின்றேன். அப்பா பார்த்தால் செத்தேன் எனும் நினைப்பு மட்டும் ஓடிக் கொண்டிருந்தது.

“உவாக்கு என்னடா நடந்தது?” என்றான் தீபன்.

“கலியாணத்தண்டு மாப்பிளை ஓடிப் போட்டானாம். உதுக்கு விசர் வந்திட்டு. ஏன்ரா மாப்பிளை போனா என்னடா மயிர், ஊரில சுன்னியா இல்லை” என்றான் பிரகாஸ்.

“உம்மையாவோடா?” என்றான் லச்சுமி.

“ஓமடா சாமான், உவளுக்கு எத்தினை அரிப்பிருந்தால் அவன் ஓடினதுக்கு மூளை கலங்கியிருக்கும்”

“வேற ஏதும் இருக்கும்” என்றான் தீபன்.

“வேற என்ன? அவன் ஓத்ததில மண்டை கிழிஞ்சதே”

“நீ சும்மா வெடிக்காதை” என சுறுக்கென்று சொன்னான் லச்சுமி.

எட்டிக் காதாவடியைப் பொத்தி லச்சுமிக்கு ஒரு அறை விழுந்ததும் அமைதியானோம். கோயிலுக்குள் இருந்து மூசலும் நறநறப்பும் கேட்டது. நாய்கள் கோபத்தில் உறுமுவதைப் போன்ற சத்தங்கள்.

எல்லோரும் ரியூசனுக்குத் திரும்பினோம். தகரங்கள் போட்ட கோழிக் கூடுகள் போன்ற வகுப்புகள். இன்று சரஸ்வதி பூசைக் கடைசி நாள் கொண்டாட்டம். ஒரு சிங்களப் பாடலுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெடியளும் பெட்டையளும் வகுப்பின் மேசைகளில் அமர்ந்து குழுக்களாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். ரியூசனின் டிரக்றர் பிரகாசைப் பார்த்து ஏதோ முசுப்பாத்தி விட்டார். அவன் செக்கி அக்காவைக் காட்டி “கறுத்த தக்காளி மணம் போல” எனச் சொல்லி எங்களைத் திரும்பிப் பார்த்தான். செக்கி அக்கா அங்கிருந்து விலகிச் சென்று வகுப்புகளுக்குப் பின்னால் மறைந்தார்.

பாடலில் ஒரு வெறிகாரன் சாறமும் துண்டும் அணிந்து ஆடுவது போன்ற ஒரு கட்டம் வரும். அதில் போன வருடம் எவரோ ஆடிய போது பார்வையாளர்களின் கூச்சலும் ஆரவாரமும் கொப்பளித்தது. அன்றைக்கே தீர்மானித்தபடி பிரகாஸ் இம்முறை தானே அந்த வேடத்தை ஆடுவதாக சொல்லி வைத்திருந்தான். அவனை மீறி யார் தான் ஆட முடியும். அவன் ஒத்திகையை வேடிக்கை பார்த்தான்.

“எனக்கெல்லாம் ஒத்திகை எல்லாம் தேவை இல்ல. நேரில பாருங்கடா ஆட்டத்தை. இண்டைக்கு கமறப்போகுது” என்றான்.

லச்சுமியும் நானும் எங்கள் வகுப்பிற்கு போனோம். நாடகம் பழகிக் கொண்டிருந்தார்கள். நான்கு பெட்டைகள் ஒரு காதல் பாடலை மகா கேவலமாகப் பாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் யமுனாவை ஒரு தலைக் காதல் புரிந்து கொண்டிருந்த சுதா வாத்தி காதல் பார்வையால் அவரது கன்னியை ஈர்க்க முயன்று கொண்டிருந்தார். அவளும் பல்லைக் காட்டியும் சொண்டைக் கடித்தும் குறுகுறுப்பான தன் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமலும் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு அருகே குரலில் சுரத்தே இல்லாமல் கெளசி மிலாந்திக் கொண்டிருந்தாள். அதே பச்சை ரீசேர்ட்டும் கறுப்புப் பாவாடையும் இன்றும் அணிந்திருந்தாள். அவளிடம் இரண்டு ரீசேர்ட்களும் ஒரு கறுப்பு பாவாடையும் இருப்பது எல்லோருக்குமே தெரியும். ஒவ்வொரு நாளும் வண்ணம் மங்கி மங்கிப் போவதால் புதிய சட்டை போட்டிருக்கிறாளா எனச் சந்தேகம் வரும். ஆனால் தூரத்திலிருந்தே அவள் தான் வருகிறாள் எனச் சொல்லி விடுவார்கள். ஆமிக்காரி என்பது அவளது பட்டப்பெயர். யூனிபோர்ம் போல ஒன்றையே அணிவதால் அப்படி வைத்திருந்தார்கள். அவளது முகத்திலும் இளம் பருக்கள் தோன்றியிருந்தன.

கெளசியின் வீடு ரியூசனிலிருந்து நான்கு ஒழுங்கைகள் தள்ளியிருந்தன. பூட்டும் ஒரு பெடல் கட்டையும் இல்லாத சைக்கிள் வைத்திருந்தாள். மூன்றாவது ஒழுங்கை கடந்ததும் பிறேக் அடித்தால் ரியூசனில் வந்து தான் நிற்கும். அவளது ஒட்டலும் ஓரலுமான முகமும் உடம்பும் அவளை எங்களை விடச் சிறியவள் போலக் காட்டும். கட்டைச்சி. அவளது அப்பா சந்தியிலிருந்த சைக்கிள் கடையில் உதவியாளர். குமார் அண்ணை என்று நாங்கள் அழைப்போம். கடைக்கு வருவோர் கெந்தல் குமார் எனச் சொல்வார்கள். வலக்காலின் பாதம் மடங்கியிருக்கும். கிங்கொங் குரங்கைப் போல நடப்பார். சைக்கிள் ஒட்டச் செல்லும் பொழுது ஒருநாள் அவரை முதலாளி ஸ்கூட்ரைவரால் அடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

“பெண்டுகள் வந்தால் சாமானத் தூக்கிக் கொண்டு ஒட்டப் போயிருவியோடா செம்மறி” என ஏசினார். அவர் இரண்டு கைகளாலும் முகத்தை மறைத்தபடி “இல்லையண்ண, இல்லையண்ண” எனக் கெஞ்சிக் கொண்டிருந்தார். புதினம் பார்க்கக் கடையடியில் நின்றவர்களில் பிரகாஸின் அப்பாவும் இருந்தார்.

“அண்ணை, போட்டுப் பிடியுங்கோ, கெந்திக் கெந்தி நடந்து கொண்டு சேட்டையைப் பார்த்தியளே பூனா மோன். அண்டைக்கு என்ர மனிசியும் இவருக்குச் சேர்ட்டிபிக்கேட் குடுத்தவா, குமார் அண்ணை நல்ல மனுசனாம். சைக்கிளுக்குக் காத்துப் பாத்தனியோ பூந்து பாத்தனியோடா பூனா” என்றார்.

“அய்யோ அண்ணை, மானம் போகுது. உப்பிடியெல்லாம் பேசாதையுங்கோ, அக்கா நல்லவா” என்றார் கெந்தல் குமார்.

“நல்ல சாம்பிராணி தான். பார்த்தியளோண்ணை உந்தப் பூனா மோன் என்ர மனுசி நல்லமெண்டுறான். உன்னாணைச் சொல்லுறன் உவன்ர மனிசிக்கொருக்கா நான் காத்துப் பார்க்க வேணும்”

கடையடியில் சிரிப்பொலிகள் இரைந்தன. நான் காற்றை அடித்து விட்டுத் திரும்பிய போது கெளசி சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். பக்கத்தில் பானுவும் யமுனாவும் கைகளில் கொப்பிகளைப் பிடித்து நெஞ்சோடு அழுத்திக் கொண்டு வந்தார்கள். நான் சைக்கிளை எடுத்து வேகமாக உழக்கிக் கொண்டு ரியூசனுக்குப் போனேன். கொஞ்ச நேரத்தில் கெளசி வந்தாள். காவேரியும் பானுவும் பேயடித்தது போல முழுசிக் கொண்டிருந்தார்கள்.

கெளசியை வாசலில் மறித்த செக்கி அக்கா “பீஸ் கட்டேல்ல, நாலு மாசம் ஆகுது, சேர் உள்ள விட வேண்டாம் எண்டவர்” என்றார்.

அவள் ஸ்ராண்டைத் தட்டி விட்டு பக்கத்தில் நின்றாள். அவளுக்கு சின்னஞ் சிறிய கண்கள். கலங்கிச் சேறு போல இருந்தது. கொப்பிகளை நெஞ்சோடு பிடித்தபடி அழுதாள்.

“உதிலை நிண்டு அழாதை, சேர் வரட்டும் விடுவார். பொறு” என்றார்.

சைக்கிளை அடுக்கி விட்டுக் கொண்டிருந்த பெடியளுக்குள் ஏதோ முறுகல் நடக்கவும் சைக்கிள்கள் சடசடவெனச் சரியத் தொடங்கின. பெல்கள் மோதும் ஒலிகள், அடேய் புடேய் கத்தல்கள். கெளசி சைக்கிளைப் பிடிக்க கொப்பியை நழுவ விட்டுப் பாய்ந்தாள். அவளது ஊதா நிற உள்ளாடை பின்மேலால் தெரியவும் யாரோ கூக்காட்டினார்கள். அவள் “அம்மா..” எனக் கத்திக் கொண்டு மடங்கி நிலத்தில் இருந்தாள். செக்கி அக்கா ஓடி வந்து “வாடி” என இழுத்துக் கொண்டு அவரது சிறியத் தகர அறைக்குள் சென்றார். டிரக்றர் வந்து அதில் நின்று கொண்டிருந்தவர்களைக் கொய்யாத் தடியால் விசுக்கு விசுக்கென்று விளாசி “வகுப்புக்குப் போங்கோடா” எனக் கலைத்தார்.

அவளிடம் பீஸ் வாங்காமல் இலவசமாகப் படிக்கட்டும் என்று விட்டார்கள். சுதா வாத்தியின் காதலுக்குக் கெளசி உடந்தை என்ற கதை இருந்தது. அவளது வீட்டில் கிளி வாங்கப் போவோம் என அவர் தான் என்னையும் லச்சுமியையும் கூட்டிக் கொண்டு சென்றார். அவளைப் போலவே மெலிந்த ஒட்டலான தென்னையில் நார் நொய்ந்த பொந்திருந்தது. இரண்டு குஞ்சுகள் இருந்தன. தாய்க்கிளி கத்தியபடி தன் சிவந்த கத்திச் சொண்டுகளால் எங்களைக் கொத்த முயன்று கொண்டிருந்தது.

கெளசியின் அம்மா ஒரு ஊதா வண்ணச் சோட்டியும் அதன் மேல் சோட்டியை விடப் பழைய துண்டும் கட்டியிருந்தார். நரை முடைந்த தலை. ஈரில்லாச் சிரிப்பு. வெற்றிலைக் காவி படிந்த பற்கள். அம்மா வெளியே வந்து எங்களைப் பார்த்துச் சிரித்தார். மூன்று பேரும் தான் அந்தக் கொட்டிலில் இருந்தார்கள். எங்கள் ரியூசனின் இரண்டு வகுப்புகளின் அளவில் ஒரு வீடு. சுற்றியடைக்காத திறந்த கிணறு. ரோட்டால் போவோர் சும்மா திரும்பினாலே தெரியும்படி இருந்தது. வாசலில் இரண்டு கனகாம்பரங்கள் காவிக் கொத்துகளென முகை திறந்திருந்தன.

“இவங்களுக்குக் கிளி வேணுமெண்டு சொன்னாங்கள் அம்மா, அதான் கூட்டியந்தன்” என்று பச்சைப் பொய் சொன்னார் சுதா வாத்தி. அவர் வாங்கித் தரப் போகும் சாலினி கடைக் கொத்திற்காக அமைதியாய் உண்மை என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு நின்றோம்.

“ஓம் தம்பி பிடிச்சுக் கொண்டு போங்கோ” என வாத்தியைப் பார்த்துச் சொன்னார். கோப்பைகளை அலம்பிய தண்ணீர் கரி வண்ணத்தில் அவரின் கைகளிலிருந்து சிந்திக் கொண்டிருந்தது. மேற் துண்டால் துடைத்தார்.

சுதா வாத்தி எங்களைப் பார்த்தார். எங்களுக்கு மரம் ஏறத் தெரியாது எனத் தலையை ஆட்டி மறுத்தோம்.

“நான் பிடிச்சுத் தாறன் சேர்” என்றாள் கெளசி.

லச்சுமிக்கு சினம் ஏறவும் மாரிப்பொக்கான் மரமேற முயல்வது போல நான்கு கால் மேலே ஏறி அய்யோ என்று முதுகடி பட விழுந்தான்.

கெளசி வீட்டிற்குள் போய் தகப்பனின் கிறீஸ் பிரண்ட காற்சட்டையைப் போட்டுக் கொண்டு வந்தாள்.

“என்ன தம்பி, கவுசி நல்லாப் படிக்கிறாவா? ஒரே பிள்ளை. கொஞ்சம் கவனியுங்கோ” என்றார் அம்மா.

“ஓமம்மா, அவா கெட்டிக்காரி. ஓயலில நல்ல ரிசல்ஸ் எடுப்பா. நீங்களும் வீட்டை கவனியுங்கோ”

அம்மா ஒரு செல்லச் சிரிப்புச் சிரித்தபடி கெளசியைப் பார்த்தார்.

“ஓம் சேர், நான் சொன்னால் உவா நம்ப மாட்டன் எண்டிறா”

வகுப்பில் வாயே திறக்காத கெளசி வீட்டில் சத்தமான குரலில் றாங்கியாகக் கதைப்பது புதினமாய் இருந்தது.

இடுப்பில் கையை வைத்தபடி அம்மா தாய்க்கிளியைப் பார்த்தார்.

“கவனமடி, தாய்க்கிளி கொத்திப்போடும். கிளியெண்டாலும் தாய்” என்றார் அம்மா.

“ஓமணை, நீ சும்மா இரு. சேர் சொல்லுறார் நான் ஏறப் போறன்”

“இல்லைக் கவுசி, நீ விழுந்தால் எங்களுக்குத் தான் கரைச்சல்” என்றார் வாத்தி.

“நீங்கள் வேறை சேர், நான் உந்த மரத்தில உச்சத்துக்கே ஏறுவன். உவாக்குத் தெரியும். சும்மா நடிக்கிறா”

சொல்லிவிட்டு தென்னையின் அடியில் போய் நின்று வானத்தைப் பார்த்தாள். தாய்க்கிளி காற்றில் சுழன்று அரணெழுப்பிக் கொண்டிருந்தது. காற்றில் கீச்சல்கள் கொத்திக் கொத்தி விழுந்தன. குஞ்சுகளும் தாயின் சீற்றத்தை வாங்கித் திரும்பிக் கத்தத் தொடங்கின. அவள் கையின் வியர்வையைக் காற்சட்டையில் துடைத்து விட்டு ஏறத் தொடங்கினாள்.

நானும் வாத்தியும் அவள் விழுந்து விடாமல் பிடிப்பதைப் போல கையை விரித்தபடி கீழே நின்றோம். லச்சுமியின் கையில் ஒன்றிரண்டு சிராய்ப்புகள் புழுதியுடன் இருந்தன. கெளசியின் அம்மா தண்ணியை கிண்ணத்தில் கொணர்ந்து கழுவி விட்டுக் கொண்டே எங்களைப் பார்த்து “அவள் தேரை தம்பியாக்கள். ஏறிப் போடுவாள். நீங்கள் விடுங்கோ” என்றார். உண்மை தான், சரசரவென்று ஏறினாள்.

தாய்க்கிளி அவளைக் கொத்த பருந்தைப் போலக் குத்தி இறங்கியது.

“அங்கால போ” என அதட்டினாள். விலகிப் பறந்து திரும்பவும் வேகமாக ஊசி பாய்வதைப் போல அவளது முதுகுப்பக்கம் பறந்து வந்தது.

காலால் எத்தினாள். தாய்க்கிளி ஓலமிட்டு விலகிப் பறந்து மரத்தைச் சுற்றியது.

கரண்டியால் வழுக்கலைத் தோண்டுவது போல பொந்திற்குள் கையை விட்டு குஞ்சொன்றை எடுத்தாள். கொஞ்சமும் பிந்தாமல் சுவரிலிருந்து பாம்பு விழுவது போல வழுக்கிக் கொண்டு வந்து இறங்கினாள். லச்சுமி அதைப் பார்க்காமல் காயத்தைத் தடவிக் கொண்டு வெளியே போனான். தாய்க்கிளி பொந்திற்குள் திரும்பியது. கத்தல் நிற்கவில்லை.

அவளது கையிலிருந்த சின்னக் குஞ்சு அலகுகளைத் தீட்டி ஆவென்றது. வேலியில் கிடந்த பச்சைக் கொவ்வையொன்றைக் கடிக்கக் கொடுத்தாள். நன்னியது. நன்றி சொல்லி விடை பெற்றோம். அவள் தூசுகளைத் தட்டிவிட்டு வாத்தியைப் பார்த்து வெட்கச் சிரிப்புச் சிரித்தாள். வாத்தி பல்லைக் காட்டினார்.

சிங்களப் பாடலின் ஒலி துள்ளலாய் ஒலித்துக் கொண்டிருந்தது. வகுப்பிற்குள் வெய்யில் மடிந்து பரவியது. யமுனா உதடுக்குள் சிரித்தபடி வரிகளைப் பிழையாகப் பாடிக் கொண்டிருந்தாள். கெளசி தன் சின்னக் கண்களால் முழுசி முழுசிப் பாட்டுக் கொப்பியின் வரிகளைச் சரியாகப் பாடினாள். ஆனால் குரலில் ராகமில்லை. தன்னையும் தான் வாத்தி பார்த்துச் சிரிக்கிறார் என நினைத்தவள் போல அவளும் அவரது கன்னியைப் போல நாணிக் கோணினாள். கால்களால் இலங்கைப் பூச்சி போலக் கோலங்கள் போட்டாள்.

லச்சுமியைப் பார்த்து “போவமடா” என்றேன். அவனோ உச்சி பிளந்து சூரன் வெளிவந்தது போல கனன்று கொண்டிருந்தான். விதியின் விளையாட்டு என்னவென்றால் லச்சுமிக்கும் வாத்தியின் கன்னி மீது கண். அவள் இவனைக் குண்டன் என ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இந்தக் காட்சிகள் அவனை மேலும் வருத்துமென “விடு மச்சான்” என தோளில் தொட்டு ஆறுதல் படுத்தினேன். அவனது கண்கள் கலங்கியிருந்தன. ஒருதலைக் காதலுக்கு இவ்வளவு சீன் கூடாது என நினைத்தேன். ஆனால் அவனுக்கு சொல்ல முடியாது. அவனது உடம்பைப் போலவே மூளையும் வீங்கியது. எடுத்த மாத்திரத்தில் அடித்து விடுவான். அந்த விசயத்தில் பிரகாஸின் தம்பி போல.

வெளியே வந்து நின்று மேடையைப் பார்த்தேன். டிரக்றர் வாழை மரங்களை இரண்டு புறமும் கட்டி நேர் பார்த்துக் கொண்டிருந்தார். நாளைக்குச் சாகப் போகும் கிழவிகளைக் கட்டித் தூக்கியிருப்பதைப் போல நைந்து இலை துவண்ட வாழை மரங்கள். அவை பிரகாஸின் அப்பாவின் அன்பளிப்பு. சரஸ்வதி படத்திற்கு கற்கண்டு வைத்திருந்தார்கள். அருகில் லட்சுமியும் துர்க்கையும் படங்கள். செக்கி அக்கா தன் மார்புக் குவையைப் பொத்தியபடி தண்ணீரை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார். சைக்கிளின் பின் கரியரில் அமர்ந்தபடி பிரகாஸ் அந்தக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தான்.

பின்னேரம் ஐந்து மணி வரை அங்கே சுற்றி விட்டு வீட்டுக்குப் போய் உடுப்பு மாற்றிக் கொண்டு திரும்பினேன். இருட்டு மெல்லக் கரைந்து வந்தது. வெறிச்சோடிய ஒழுங்கைகளால் வருவது எனக்குப் பிடிக்கும். சூரிய ஒளி சரிந்து ஊரின் ஒழுங்கைகள் பொன்னிறம் பெறும். மரங்களிலும் இலைகளிலும் மலர்களிலும் பொன் கசியும். ஊரிற்குள் சில பழங்கால வீடுகள் இருந்தன. ரீயூசனிலிருந்து கொஞ்சத் தூரத்தில் இரண்டு மாடி கொண்ட பெரிய தடித்த சுவர்கள் வைத்த வீடொன்று இருந்தது. இரண்டு பெரிய மூடிய கண்களைப் போன்ற அந்தக் கால யன்னல்கள் மேலே இருந்தன. பேய் வீடென்று சொல்வார்கள். புல்லும் கொடியும் படர்ந்த பெரிய வீடு. ராட்சதன் போல எடை கொண்டது. அதன் முன்னே ஒரு அரளிப்பூ மரம் நின்றது.

மிச்ச வீடுகளிலும் மனிதர்கள் இருப்பதே தெரியாது. நிழலைப் போல நடமாடுவார்கள். அன்றும் எனக்குப் பிரியமான அந்த ஒழுங்கையால் வேடிக்கை பார்க்கப் போகும் உற்சாகத்துடன் ஆடிக் கொண்டே வந்தேன். வருசத்துக்கு எடுத்த காற்சட்டையும் மண்ணிற ரீசேர்ட்டும் போட்டிருந்தேன்.

ஒழுங்கையின் முடக்கில் ராட்சத வீட்டின் அரளிமரத்தின் பக்கத்தில் கெளசியின் சைக்கிளை மறித்துக் கொண்டு சறமும் துண்டும் போட்டு பிரகாஸ் நிற்பது தெரிந்தது. அவள் “விடடா, விடடா” என ஊமை போலக் கத்தினாள். அவளது நெஞ்சைப் பிடித்து அமத்திக் கசக்கிக் கொண்டு நின்றான். சைக்கிளையும் இரும்புப் பிடி பிடித்திருந்தான். அவள் திரும்பிச் சுற்றையும் பார்த்தாள். ராட்சத வீட்டின் மேல் யன்னல்களை பார்த்தாள். அங்கே யாரைத் தேடுகிறாள் என நானும் அண்ணார்ந்தேன். பின்னால் பார்த்தவள், என்னைக் கண்டதும் கண்ணீர் தெறிக்க விசும்பினாள். அவனைப் பார்த்து “நோகுது, விடுங்கோண்ணா” என அழுத்தமாக மூசினாள். என் கால் முதல் தலை வரை நடுங்கத் தொடங்கியது. உடம்பு அன்ரனா போல உலோகமாகியது. நடக்க முடியவில்லை. திரும்பி ஓடி விட நினைத்தேன். நடுங்கி நடுங்கி முன்னால் நடந்தேன். நான் கிட்டப் போனால் விட்டு விடுவான் என நினைத்தேன். அவளின் கண்களில் நீர் சொட்டச் சொட்ட என்னைப் பார்த்தாள். முள்ளுச் சப்பாத்துப் போன்ற ஒழுங்கையின் தார் ரோட்டில் அவளது கண்ணீர் விழுவது தெரிந்தது.

“டேய் இங்க வா” என அதட்டினான்.

“இந்தா பிடி” என என்னை அழைத்தான். நான் வேண்டாம் என உடனே மறுத்தேன்.

“டேய் புண்டை, பிடியடா, இறுக்கி விட்டுறுவன்” என்றான்.

எனக்கு பயத்தில் அழுகை முட்டியது. சிறு துளி மூத்திரம் தொடையில் சிந்தி காற்சட்டை ஈராமாகியது. எவராவது பெரிய ஆட்கள் வந்து விடுவார்களா எனத் திரும்பிப் பார்த்தேன்.

“அம்மாணை இறுக்கு வாங்கப் போறாய் நீ” என்றான்.

தொடவே கூடாத ஒன்றைத் தொடுவதைப் போல கைகள் நடுங்க கிட்டப் போனேன். அவன் என் வலக்கையைப் பிடித்து அவள் நெஞ்சில் வைத்தான். வெஸ்ட்டிலும் ரீசேர்ட்டிலும் இறக்கி வைத்த கேத்தல் போன்ற சூடு தெரிந்தது. காய்ச்சலில் தொண்டை போல என் கை சுட்டது. கண்ணை மூடிக் கொண்டேன். அதை நான் பிடிக்கவே இல்லை என்பது போல கையை வைத்திருந்தேன். அவளது இமையால் நீர் கசிந்து துளி திரண்டு முத்துப் போல் ஒளிர்ந்தது. பிறேக்கைக் கைகளால் இழுத்துப் பிடித்து காலை நிலத்தில் உதைத்தாள். கறுப்புச் செருப்பு அதிர்ந்தது. அவளது இதயம் அடிப்பது என் கையில் கேட்டது. தடக் தடக். தடக் தடக். என் நரம்பில் அந்த ஒலி தாளம் போல பற்றி எரியத் தொடங்கியது. மூச்சை இழுத்துப் பிடித்து கையால் என் கையைத் தட்டினாள். சட்டென்று அவளுக்குள் ஒரு பைத்தியம் வெடித்தது போல. சருகுகளை உடம்பால் உதறிச் சீறியோடும் அரணையென இருவரையும் உதறி ஒரே தாவலில் சைக்கிளை உருவிக் கொண்டு ஓடினாள். என் கை பாஸ்கெற்றில் அடித்து விலகியது. நெஞ்சு நடுக்கம் ஏறி வந்தது. நிற்க முடியாதவை போல கால்கள் துவண்டன.

அவன் பெரிதாகச் சிரித்து “பேக்கொத்தடா நீ, அவள் ஒரு மாஞ்சான்” என்றான். அவனது நிழலில் கூடத் தொடாது நடந்து ரியூசனுக்குப் போனேன்.

நிகழ்வுகள் நடந்தன. கெளசி அதே பச்சை ரீசேர்ட் அணிந்து மேடையில் நின்றாள். கசங்கல்களை அழுத்திச் சீராக்கியிருந்தாள். நான் அங்கு இருப்பதிலேயே இருட்டான மூலையில் ஒளிந்து நின்றேன். அவள் அந்தக் காதல் பாடலைப் பாடப் பாட எனக்கு புல்லரித்துக் கொண்டு இருந்தது. நடுக்கத்தை போக்கும் அம்மாவின் அணைப்பென ஒரு குரல். அதில் அவள் பாடுவது மட்டுமே எனக்குக் கேட்டது. நான் அவளைக் காதலித்து கலியாணம் கட்டுவது வரை அந்தப் பாடல் ஒலித்து நின்றது. அவளது முகம் நீர்விடாத சாடிச் செடியெனச் சோர்ந்து வாடியிருந்தது. அவளது முகம் அப்படி இருப்பது ஒன்றும் புதிதில்லை என்பதால் அவளை யாரும் கேட்டிருக்கப் போவதில்லை. ஆனால் ஒரு சத்தியம் போல எனக்குள் கூவினேன் “கெளசி, ஐ லவ் யூ”.

நூற்றுக்கணக்கான மாணவர்களும் ஊர்க்காரர்களும் அமர்ந்தும் நின்றும் நிகழ்ச்சிகளைப் பார்த்திருந்தனர். சாம்பிராணியும் வியர்வைகளும் வாசனையெனக் கலந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. மேடையில் குவிக்கப்பட்டிருந்த வெளிச்சம் சுற்றை இருட்டாக்கி மங்கல் ஒளியில் முகங்கள் தெரிந்தன. ரியூசன் வாசலுக்கு அருகிலிருந்த சுவரின் ஓரத்தில்
கெந்தல் குமார் அண்ணை கண்களில் நீர்கோர்த்திருக்க மகளின் பாடலைப் பார்த்து விட்டு கைகளை நெஞ்சுக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு நின்றார். அவரது சறமும் சேர்ட்டும் மடங்கலின்றி உரப்பாய் நின்றன. வாசலில் ஒதுங்கி மூலையில் தலை நீட்டும் ஒரு புல்லைப் போல அவரது உடம்பு வளைந்து நின்றது. கெளசி கிட்டப் போகவும்
“கெட்டிக்காரி” எனச் சொல்லி முகமெல்லாம் பூரித்த சிரிப்பாக இருந்தார்.

அவள் முகம் முற்றிலும் மாறியிருந்தது. என்ன வடிவென்று மனம் கூவியது. அப்பாவுக்கு முன்னால் நிற்கும் மகளுடைய வடிவை இதற்கு முன் நான் பார்த்ததில்லை. அவளது முன் நெற்றியில் வளைந்த ஒரு கீற்றுப் போல தலைமயிர்க் கற்றையொன்று சுருண்டு கொழுக்கி போலிருந்தது. வெளிச்சமான நெற்றி. முகத்தின் பருக்கள் ஒளியில் மினுங்கின. அவள் பாடிய பாடலை சட்டென்று நினைவு கூர்ந்தேன். “ஒளியிலே தெரிவது தேவதையா” என்ற பாடல். சுதா வாத்தியின் வேலை என்று நினைத்ததும் சிரிப்பு வந்தது. எதுவோ ஒன்று உள்ளே அறுபட்டது.

சிங்களப் பாடலுக்கு பிரகாஸ் வெறிகாரன் போல ஆடினான். அவன் மேடையில் தோன்றியதுமே பார்வையாளர்கள் கூச்சலிட்டனர். அவனது அப்பா உண்மையான வெறியில் சிரித்துக் கொண்டே கையைத் தட்டி ஆடினார். எங்கும் சிரிப்பொலிகள் எழுந்து கலகலத்தன. எனக்கு சங்கிலிகள் உரசும் ஒலி காதில் ஒலித்து ஒலித்து நெருங்கி வர பற்கள் கூசின. வேகமாக நடந்து வெளியேறி வாசலில் வந்து நின்றேன்.

கெளசியும் கெந்தல் குமார் அண்ணையும் வெளியே போனார்கள். அவளது ஒற்றைப் பெடல் சைக்கிளில் அப்பாவைக் கரியரில் ஏற்றிக் கொண்டு போனாள். அவர் சிரித்தபடி சீற்றைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். காதல் என்னுள் நடுங்கிக் கொண்டிருந்தது. இரத்தம் உடம்பெங்கும் தங்கம் போல ஓடியது. அவள் சென்று மறைந்தாள். சுதா வாத்தி “காதல் வந்தால் சொல்லி அனுப்பு..” என்று பாடுவது கேட்டது. நல்ல குரல்.

சங்கிலிகள் புரளுமொலி அழைத்தது போல மைதானத்தை நோக்கி கால்கள் நடந்தன. ஒரு நாயைத் தவிர அந்த ஒழுங்கையில் எவரையும் காணவில்லை. அம்மன் கோயிலுக்கு அருகில் போனதும் உள்ளே பார்க்க வேண்டும் என உந்தல் வந்தது. பொங்கலுக்கு வைத்திருந்த கரி படிந்த மூன்று கற்கள் முன்னால் கிடந்தது. அதை எடுத்து அடுக்கி சுவரில் பிடித்து ஏறி உள்ளே பார்த்தேன். அவர் உள்ளே ஒருக்களித்துப் படுத்திருந்தார். எங்கிருந்தோ நிலவின் தோகை வெளிச்சம் உள்ளே விழுந்திருந்தது. பாதி ஒளியில் அவரது முதுகு தெரிந்தது. அவரைக் கூப்பிட வேண்டும் போலிருந்தது. அமைதியாக நின்றேன். வாகை மரங்களின் காற்று விசிறிக் கொண்டிருந்தது. வாசலின் கம்பிகளில் யாரோ வந்து நின்றார்கள். “பிள்ளை..” என்றது ஒரு பெண் குரல். அவரில் ஒரு அருட்டலும் இல்லை. சங்கிலியின் ஒரு துண்டு ஒளியில் மினுங்கியது.

அலுமினியத் தட்டொன்று நெருப்புப் பெட்டியில் குச்சி உரசுமொலியுடன் சீறியபடி அவரது கால்வரை வந்து நின்றது. தண்ணீர் போத்தலொன்று சிந்திச் சிதறியபடி எறியப்பட்டது.

“சாப்பிடம்மா” என்றது இரக்கம் கோரும் குரல்.

கொஞ்ச செக்கன்களில் சருகுகள் மிதிபடும் ஒலி கேட்டு அடங்கியது. அவர் எழுந்து அமர்ந்தார். கையைக் கழுவாமல் சோற்றை உருட்டி வாயில் வைத்தார். விரல்களில் இலைகளின் விளிம்பில் தெரியும் ஒளியின் வெளிச்சம். நீண்டு வளைந்த மயில் கால் போன்ற விரல்கள். தலைமயிரை பாதியாக விலக்கி விட்டார். சோற்றுப் பருக்கைகள் மயிரில் ஒட்டித் தூங்கின. இலை நுனியில் தூங்கும் பனித்துளியின் ஒளி. மெத்தையில் குழந்தை நடப்பது போல மார்பு ஏறி இறங்கியது. இலையானைக் கலைப்பது போல மணிக்கட்டுடன் தூங்கிய சங்கிலியை உதறினார். மீண்டும் சோற்றைக் குழைத்து வாயில் வைத்தார். மேலுதடு சிறிய குங்குமச் சிமிழின் மூடி போலத் திறந்து வெளிறிய உப்புப் படிந்த நாக்கு வந்து சோற்றை அள்ளி வாயில் நிறைத்து. பற்கள் அசைபோடுவது போல அரைத்தன. பூக்களின் வாசனை மூக்கில் நுழைந்து கொண்டிருந்தது. கோயிலின் கரைமதிலில் மல்லிகையின் பந்தலொன்று பூநிறைந்து தாழ்ந்திருந்தது.

மயிரொன்று காற்றுப் பட்டு வாயில் புகுந்த போது ஓங்காளித்தபடி துப்பினார். இன்னொரு வாய் வைத்தார், பிறகு மேலும் இரண்டு. தண்ணீரைக் குடித்தார். சங்கிலி உரச எழுந்து சென்று மூலையில் கால்களை விரித்தபடி மூத்திரம் பெய்தார். தலையைச் சொறிந்தார். சேலையைப் போர்வையாக்கி மூடியபடி நான் நின்ற பக்கம் திரும்பிப் படுத்தார். தலைமயிர் பிசிறுகள் சரிந்து பின்னால் விழுந்து புரண்டது. குழந்தையின் களங்கமற்ற கன்னம். கீறிக் காய்ந்த சில இரத்தக் கண்டல்கள். தோட்டுத் துளையில் ஒரு வேப்பங் குச்சி. குமிழ்ந்த மூக்கில் மெல்லிய துடிப்பு சுழித்துச் சுழித்து எழுந்தது.

நான் கம்பிகளைப் பிடித்தபடி உடல் பதற அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பார்வையின் அருட்டல் விழுந்தது போல தன் கண்மடல்களை உரசித் தேய்த்து விட்டார். இமைகளில் ஒரு ஒளி நடுக்கம். பாம்பின் தோலில் விழும் வெளிச்சம் போல. ஒரே ஒரு கணம், இமை விலக்கி என்னைப் பார்த்தார். அவ்வளவு கூர்மையான ஒளி பொதிந்த தெளிந்த கண்களை அதன் பிறகு நான் எவரிடமும் பார்க்கவில்லை.

TAGS
Share This